
வாழ்கை குறிப்பு
மூஸா இப்னு ஷாகிர் அப்பாஸிய கிலாபத் காலத்தில் வாழ்த்த ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரர். பின்னாட்களில் கலீபா ஹாரூன் ரஷீதின் மகன் கலீபா மாமூனின் நட்பால் பாக்தாத்தில் இருந்த பைத்துல் ஹிக்மாவில் வானியல் துறையில் பணியாற்றினார். இவரின் மூன்று மகன்களே “பனூ மூஸா சகோதரர்கள்” என்று வரலாற்றில் அடையாளப் படுத்தப்படுகின்றனர்.
மூஸாவின் மரணத்திற்கு பின்பு அவர்களின் மூன்று மகன்களை பராமரிக்கும் பொறுப்பை கலீபா மாமூன் ஏற்றுக்கொண்டார். மூவரையும் பைத்துல் ஹிக்மாவில் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். பின்நாட்களில் மூவரும் இதே கல்வி நிறுவனத்தில் கிரேக்க நூல்களை மொழிபெயர்ப்புச் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இது மட்டுமின்றி பல ஆய்வுகளை மேற்கொண்டு பல்வேறு துறைகளில் கோலோச்சினர்.
முஹம்மது இப்னு மூஸா
மூஸா இப்னு ஷாகிரின் முதல் மகன் முஹம்மது. கிபி 803 ஆம் ஆண்டு பிறந்த இவர் வானியல், பொறியியல், வடிவியல், இயற்பியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார்
அஹமது இப்னு மூஸா
மூஸா இப்னு ஷாகிர் அவர்களின் இரண்டாவது மகன் அஹமது. கிபி 803 ஆம் ஆண்டு பிறந்த இவர் பொறியியல், இயந்திரவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார்
அல் – ஹசன் இப்னு மூஸா
மூஸா இப்னு ஷாகிர் அவர்களின் மூன்றாவது மகன் அல் – ஹசன். கிபி 810 ஆம் ஆண்டு பிறந்த இவர் பொறியியல் மற்றும் வடிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார்
இவர்கள் மூவரும் வேறுவேறு துறைகளின் பங்களிப்பு செய்திருப்பினும் கண்டுபிடிப்புகளில் பனூ மூஸா சகோதரர்கள் என்ற பெயரே பொதுவாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது
தானியங்கியல்
பனூ மூஸா சகோதரர்கள் தானியங்கியலில் நூற்றுக்கும் மேற்பட்ட இயந்திரங்களை கண்டுபிடித்துள்ளனர். அவைகளில் சுமார் 73 கண்டுபிடிப்புகள் மாயாஜால இயந்திரங்கள். மாயாஜால இயந்திரம் என்று இவர்களின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பினும் இவைகள் அனைத்தும் இயற்பியலின் விதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவையே என்பது குறிப்பிடத்தக்கது.
இவை மட்டுமின்றி பனூ மூஸா சகோதரர்கள் தானியங்கி இசை இயந்திரத்தினை கண்டுபிடித்தனர். இதுவே உலகின் முதல் தானியங்கி இசை இயந்திரமாகும். இது அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் அலாரமாக பயன்படுத்தப்பட்டது.
இவை அனைத்தையும் கண்டுபிடித்தது மட்டுமின்றி இவற்றை செய்யும் வழிமுறைகளையும் தங்களுடைய புத்தகமான கிதாப் அல் – ஹைலில் வரைபடத்துடன் விவரித்துள்ளனர். இவர்களது படைப்புகளில் சிலது மட்டும் ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டதன் காரணமாக இன்று வரை பாதுகாப்பாக உள்ளது.
மாயாஜால இயந்திரம் – 1
இரண்டு தலைகளுடன் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட குடுவை போன்ற அமைப்பு. அதில் ஒன்றில் தண்ணீறும் மற்றொன்றில் வேறு ஏதேனும் பழச்சாறும் ஊற்றப்பட்டால், இரண்டு திரவங்களும் கலக்காது. பின்னர் பாட்டிலிலிருந்து திரவங்கள் வெளியே ஊற்றப்பட்டால், பழச்சாறு ஊற்றப்பட்ட தலையில் இருந்து தண்ணீர் வரும், தண்ணீர் ஊற்றப்பட்ட தலையில் இருந்து பழச்சாறு வெளியில் வரும்
செயல்படும் விதம்
இரண்டு தலைகளிலும் ஊற்றப்படும் திரவம் குடுவையினுள் தனித் தனி அறைகளில் சேமிக்கப்படுகிறது. குடுவையின் மத்திய பகுதியில் தட்டு போன்ற அமைப்பு திரவங்களை ஒன்றுடன் ஒன்று கலக்காத வண்ணம் பார்த்துக்கொள்கிறது. திரவத்தினை வெளியில் ஊற்றும் பொழுது மத்தியில் இருக்கும் தட்டில் இணைக்கப்பட்டுள்ள குழாய் ஒரு அறையில் இருக்கும் திரவத்தினை மற்றொரு தலையில் வெளிவர வைக்கிறது
மாயாஜால இயந்திரம் – 2 (சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜாடி)
நீர் நிரப்பப்பட்ட ஒரு குடுவை. அதிலிருக்கும் பைப்பை திருப்பினால் குறிப்பிட்ட அளவு நீர் மட்டுமே வெளியில் வரும். பின்னர் அந்த பைப் தானாக மூடிக்கொள்ளும். நீரின் அவசியத்தினை கருதி பனூ மூஸா சகோதரர்கள் இந்த குடுவையை வடிவமைத்துள்ளனர். இது தற்காலத்தில் மேற்கத்திய கழிவறைகளில் பயன்படுத்தபடும் ஃபிளஷ் இயக்க முறையை ஒத்தது இந்த ஜாடி.
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் முஸ்லிம்களின் கண்டுபிடிப்பு நீரை சேமிக்க பயன்படுகிறது. மேற்கத்திய கண்டுபிடிப்பு நீரை வீணடிக்கிறது.
செயல்படும் விதம்
குடுவையினுள் இரண்டு கோப்பைகள் காணப்படுகின்றன இரண்டிலும் நீர் உள்ளது. இரண்டின் வடிவமும் சற்று வித்தியாசப்பட்டு காணப்படுகிறது. இரண்டு கோப்பைகளுள்ளும் ஒரு பித்தளை குழாய் வைக்கப்பட்டுள்ளது. சிறிய கோப்பையில் நீர் தேவைப்படும் போது பெரிய கோப்பையில் உள்ள தண்ணீர் புவி ஈர்ப்பு விசையின் மூலம் வருகிறது. பைப்பை திருப்பும் போது சிறிய கோப்பையில் உள்ள நீர் வெளியேறுகிறது. அதில் உள்ள நீர் முடிந்தவுடன் நீர் வருவது தடைபடுகிறது. மீண்டும் பெரிய கோப்பையில் இருக்கும் நீர் ஈர்ப்பு விசை மூலம் சிறிய கோப்பைக்கு வருகிறது. இது சுழற்சியாக நடைபெறுகிறது.
மாயாஜால இயந்திரம் – 3
ஒரு கோப்பையில் மூன்று விதமான திரவத்தினை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றுகின்றனர். ஜாடியின் கீழ் இருக்கும் திருகும் அமைப்பை வலது புறம் திருப்பினால் முதலில் ஊற்றிய திரவம் வருகிறது. இடது புறம் திருப்பினால் இரண்டாவதாக ஊற்றிய திரவம் வெளியில் வருகிறது. பின் பக்கம் திருப்பினால் மூன்றாவது திரவம் வெளியில் வருகிறது.
செயல்படும் விதம்
குடுவையினுள் இருக்கும் மூன்று கோப்பைகள் அவற்றின் அளவு ஒன்றை விட ஒன்று சிறிதாக இருக்கும் வண்ணம் உள்ளது. மூன்று கோப்பைகளும் மூன்று குழாய்களில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த குழாய்கள் அனைத்தும் குடுவையின் மேல் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது குழாயின் அளவுகளும் ஒன்றை விட ஒன்று சிறியதாக உள்ளது முதல் திரவம் ஊற்றும் போது சிறியதாக இருக்கும் குழாயின் வழியாக சிறிய கோப்பையில் சென்று சேருகிறது. திரவம் ஊற்றப்படும் போது அதை விட பெரியதாக இருக்கும் குழாய் வழியாக மத்தியில் இருக்கும் கோப்பையில் திரவம் சென்று சேருகிறது. மூன்றாவது திரவமும் இவ்வாறு சேமிக்கப்படுகிறது
கணிதவியலுக்கு அடித்தளமிட்ட பனூ மூஸா சகோதரர்கள்
பனூ மூஸா சகோதரர்கள் கலீபா மாமூன் அவர்களால் பைத்துல் ஹிக்மாவில் மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதை நாம் அறிவோம். அவர்கள் மொழிபெயர்த்த நூல்களில் கிரேக்க கணித நூல்கள் மிக முக்கியமானது. அவற்றின் மூலம் அரபி கணித முறைகளுக்கும் அடித்தளமிட்டனர். வெறுமனே மொழிபெயர்ப்பு மட்டும் செய்யாமல் அவற்றின் அடிப்படையில் புதிதாக ஆய்வு செய்து பல கணக்கீட்டு முறைகளை உருவாக்கினர்.
சமதள மற்றும் கோள வடிவிலான பொருட்களை கணிக்கிடும் முறைகள் குறித்த நூல் ஒன்றை எழுதியுள்ளனர். இந்த நூலின் கையெழுத்துப் பிரதி இன்றளவும் ஆக்ஸ்ஃபோர்டு, பாரிஸ், பெர்லின், இஸ்தான்புல் மற்றும் இந்தியாவின் ராம்பூரில் பாதுகாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இவர்களின் வடிவியல் தொடர்பான ஆய்வுகள் பின்னாட்களில் வந்த பல்வேறு ஆய்வாளர்கள் உருவாவதற்கும். அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கும் அடிக்கோலியது. அப்படி உருவான ஆளுமைகளில் ஒருவர்தான் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த நசீருத்தீன் அல்-தூசீ.
வானியல் துறையில் பனூ மூஸா சகோதரர்கள்
பனூ மூஸா சகோதரர்கள் வானியல் குறித்த பனிரெண்டிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இவற்றின் மூலம் பூமியின் ஒரு வருட காலத்தை 365 நாட்கள் மற்றும் 6 மணி நேரம் என்று கணித்தனர். இது இன்றைய கணக்கீடுகளுடன் ஒத்துப்போகிறது.
கலீபா அல் – மாமூன் அவர்களின் உத்தரவுப்படி பனூ மூஸா சகோதரர்கள் பூமியின் அட்சரேகையை வடக்கு மெசொப்பொத்தேமியா பகுதியில் இருந்து கணக்கிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பூமியில் இருந்து சுமார் 79 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ரேகுளுஸ் என்ற நட்சத்திரத்தையும் ஆய்வு செய்தனர். இந்த விண்மீன் லியோ என்ற நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் இரவு வானில் பிரகாசமாக ஒளிரக்கூடியது
வானியல் குறித்து பனூ மூஸா சகோதரர்கள் எழுதிய புத்தகங்கள்
- வான் கோள்களின் இயக்கம் பற்றிய புத்தகம்
- வானியல் கணக்கீட்டு இயந்திரமான (ஆஸ்ட்ரோலேப்) வடிவமைப்பதற்கான புத்தகம்
- சூரிய ஆண்டின் கணக்கீடு குறித்த புத்தகம்
- சந்திர கணக்கீடு குறித்த புத்தகம்
- உலகின் துவக்கம் குறித்த புத்தகம்
- சூரிய குடும்ப கோள்களின் இயக்கம் பற்றிய புத்தகம்
- சூரிய, சந்திர, நட்சத்திர, மற்றும் கோள்களின் அளவுருக்களை கொண்ட அட்டவணை தொகுப்பு



































