


இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களைப் பற்றி கற்கும் போது பல இடங்களில் ஆச்சரியமே மேலிடுகிறது… தனது சிறுபிராயத்தை பிர்அவ்னின் மாளிகையிலேயே கழித்த அவர், அதே பிர்அவ்னின் கொடுங்கோன்மைக்கு எதிராக தன்னை நிறுத்திக் கொள்கிறார். அரச மாளிகையும், ஆடம்பரமும் அவரின் வாழ்வில் செல்வாக்குச் செலுத்தும் அங்கமாக மாறவில்லை. மறுபுறம், அவர் எந்த சமூகத்தின் ஒடுக்குதலுக்கு எதிராக பிர்அவ்னுடன் போராடினாரோ, அதே சமூகம் அவரை கடுமையான சோதனைக்குள் ஆழ்த்துகிறது.
பனூ இஸ்ராயிலர்கள் தங்களை பிர்அவ்னின் அடக்குமுறையிலிருந்து விடுவித்து அழைத்து வந்த மூஸா (அலை) அவர்களை தங்களது தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்களை பின்அவ்னின் ஒடுக்குதலிலிருந்து மீட்டு, அவர்களின் மீட்சிக்காக இறைவன் வாக்களித்த நிலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பயணம் முழுவதும், அவர்களின் கடுமையான சீர்கேடு மூஸாவை வதைக்கிறது.
இறைத்தூதர்களில் தன்னை தலைவராக ஏற்றுக் கொண்ட சமூகத்தினால் கடுமையாக சோதிக்கப்பட்ட இறைத்தூதராக மூஸா(அலை) தோற்றமளிக்கிறார். தான் பிர்அவ்னிடமிருந்து மீட்டு வந்த சமூகத்தின் பெரும் சீர்கேடுகளுக்கு மத்தியிலும், தான் சார்ந்த சமூகத்தின் எழுச்சிக்காக உழைக்கிறார். இறுதி வரையில் அவர்களுடனேயே பயணித்த இறைத்தூதர் மூஸா(அலை), தான் கனவு கண்ட சமூகத்தினை காணும் முன்பே பாலைவெளியில் மரணிக்கிறார்.
இவ்வகையில் மூஸா (அலை) அவர்கள் மேற்கொண்ட பொறுமையை, இறைத்தூதர்களிலேயே மகத்தான பொறுமையைக் கையாண்டவராக ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவி தனது “அஸ்ஸப்ர் பில் குர்ஆனில் கரீம் – திருக்குர்ஆன் கூறும் பொறுமை” என்ற நூலில் மதிப்பிடுவார். ‘உலுல் அஸ்ம்’ எனப்படும் திடவுறுதி கொண்ட இறைத்தூதர்களில் ஒருவராக மூஸா(அலை) நபித்துவ வரலாற்றில் சிறப்பிடம் பெறுவதற்கு இதுவே காரணம்.
இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள் பிர்அவ்னின் மாளிகையை விட (ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றை விட), ஒடுக்கப்பட்ட பனூ இஸ்ராயிலர்களின் மீட்சியை ஏன் தேர்ந்துகொண்டார்?! பனூ இஸ்ராயிலர்களுக்கு மத்தியில் ஆழ வேரூண்றி, பரவிக் கிடந்த அடிமை மனநிலையையும், பெரும் சீர்கேடுகளையும், வழிகேடுகளையும் மூஸா(அலை) அறியாமல் இருந்தாரா?! அல்லது தெரிந்துகொண்டு அவர்களை தேர்ந்துக் கொண்டாரா?! தான் சார்ந்த சமூகம் கடும் சீர்கேட்டிற்கும், நெறி பிறழ்விற்கும் உட்பட்டிருப்பதை நிதர்சனமாக நடைமுறையில் எதிர்கொண்ட பின்னரும் அவர்களுடனேயே ஏன் இறுதி வரையில் பயணித்தார்? ஏன் இடையில் அவர்களை விட்டுப் பிரிந்து ஒதுங்கிக் கொள்ள முனையவில்லை?!
சமூக சீர்திருத்தவாதிகள், சமூக மாற்றம் மற்றும் மனித சமூகத்தின் விடுதலை போன்றவற்றை யாசிப்பவர்களுக்கு மூஸா(அலை)வுடைய வாழ்வில் நிறையவே முன்னுதாரணங்கள் இருக்கின்றன… திட்டமிட்ட ஒடுக்குதலை மேற்கொள்ளும் பிர்அவ்ன், ஹாமான் போன்ற ஆட்சியாளர்களை மூஸா(அலை) எதிர்கொண்ட விதத்திலும், ஒடுக்கப்பட்ட பனூ இஸ்ராயிலர்களின் கடும் சீர்கேடுகளை, வழிபிறழ்வுகளை எதிர்கொண்ட விதத்திலும் நிறையவே வேறுபாடுகளுண்டு.
மக்களை ஒடுக்கியவர் விடயத்தில் அவர் சமரசத்துக்கு சம்மதிக்கவில்லை; ஒடுக்கப்பட்டவர்கள் விடயத்தில் அவரளவு எவரும் பொறுமை காக்கவுமில்லை.
ஒரு சமூகம் ‘திட்டமிட்ட ஒடுக்குமுறைக்கு’ நீண்ட காலத்திற்கு உட்படும் போது அச்சமூகத்தில் சீர்கேடுகள், நெறிபிறழ்வுகள் மலிந்து போவதும், அடிமை மனநிலை குடிகொள்வதும் இயல்பானது.
…..
பனூ இஸ்ராயிலர்களின் நாட்ட சக்தியிலான வீழ்ச்சியினை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிலேயே, (பிர்அவ்னிடமிருந்து அவர்களை மீட்டதற்குப் பிறகான) மூஸா(அலை) அவர்களுடைய முழு வாழ்வும் செல்கிறது. தான் அவாவிய சமூகத்தினை தனக்குப் பிறகான தலைமுறையில் மூஸா(அலை) கண்டு கொள்கிறார்.
……
அத்தலைமுறையினர் முன்னைய தலைமுறையினரின் அடிமை மனநிலை, பிற்போக்குத்தனம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டு, சுதந்திர வேட்கையும், வீரியமும் கொண்டவர்களாக திகழ்கின்றனர். தாலூத் என்ற அரசனும், இறைத்தூதர் தாவூத்(அலை) அவர்களும் அத்தலைமுறையினரை பிறகு வழிநடத்திச் செல்கின்றனர்.
***
பிற்சேர்க்கைகள்:
01). ‘ஒடுக்கப்பட்ட’ ஒரு சமூகத்தின் / வர்க்கத்தின் விடுதலைக்காக பாடுபடுபவர்கள் முதலில் மேற்கொள்ள வேண்டிய பணி, ஒடுக்கப்பட்டவர்களின் ‘நாட்ட சக்தி’யினை மீண்டும் கட்டியெழுப்புவதே. திடமான மன அமைப்பை பெறாத ஒரு சமூகம் உண்மையான விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாது. ‘நாட்ட சக்தி’யினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மிகப் பொருத்தமானவர்கள், அச்சமூகத்தின் இளம் தலைமுறையினரே.
ஏற்கனவே அடிமைத்தனத்துக்கு / ஒடுக்குமுறைக்கு உட்பட்டு வாழ்ந்து பழகிவிட்ட ஒரு தலைமுறையினரின் மன அமைப்புக்குப் பதிலாக அந்த இடத்தில் சுதந்திர வேட்கையை பிரதியீடு செய்வது மிகக் கடினமான பணி.
மூஸா(அலை) அவர்களுடைய நடவடிக்கை இதனையே காட்டுகிறது. மிகக் கவனமான, நுணுக்கமான திட்டமிடலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணி இது.
மால்கம் X, அம்பேத்கர் போன்றோரின் சமூக விடுதலைக்கான போராட்டமும் இவ்வகையில் நோக்கத்தக்கது!
02). ஒடுக்கப்படும் சமூகத்தின் சீர்கேடுகளை அதன் தன்மையாக, குணாதிசயமாக மாற்றுவதன் மூலம், ஒடுக்கப்படும் குழுவினரையே ‘குற்றத்தன்மை’ உடையவர்களாக/குற்றவாளிகளாக ஒடுக்கும் சமூகம் வரையறுக்கிறது. இவ்வாறு வரையறுப்பதன் மூலம் அவர்களை ஒடுக்குவதற்கான நியாயத்தை தான் சார்ந்திருக்கும் வர்க்கம் / சமூகத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது.
இவ்விடத்தில் பொதுப்புத்தி சார்ந்த சிந்தனை, ஒடுக்குதலின் கொடூரத்தை விட இவர்கள் ஒடுக்கப்பட வேண்டியவர்கள் என ஆதிக்க சக்திகள் கட்டமைக்கும் மொழி சார்ந்தே சிந்திக்கத் தொடங்கும்.




































