

மனதில் தோன்றும் கீழான எண்ணங்களை நீக்கி தடுமாறும் மனதை சீராககொண்டு செல்லும் வழிமுறைகளை மாணவர்களுக்கு/மனிதர்களுக்கு பயிற்சி அளிப்பதே கல்வியின் அடிப்படை.
அடிப்படைக் கல்வியால் மட்டுமே தனிமனிதர்களும் குறிப்பிட்ட சமூகமும், முழு மனித சமுதாயமும் மேன்மை அடைய முடியும். இது கற்போரை மட்டுமல்ல கற்பிப்போரையும் அதாவது மாணவர்களையும்/ஆசிரியர்களையும் சார்ந்தே இருக்கின்றது.
யானையின் மணி ஓசை போல கற்பிப்போரின் நடத்தை, பண்புகள், ஆளுமைத்திறன் ஆகியவை அனைத்தும் ஆசிரியர் கற்பிக்கும் கல்விக்கு முன்பாக மாணவர்களைச் சென்றடையும்.
நல்ல ஆசிரியரால் கற்பிக்கப்படும் கல்வி/வழிகாட்டுதல் அறிவை மட்டுமல்ல பணிவையும், பண்பையும் வளர்க்கும். மாணவர்களிடத்தில் நேர்மறையான ஆளுமையை உருவாக்கும். ஆசிரியர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் மரியாதையும் இதை நமக்கும் உணர்த்துகின்றன.
இந்த, முன்மாதிரி நடைமுறை ஆசியர்களுக்கு மட்டுமல்ல, தாய், தந்தை, தலைவர்கள், வழிகாட்டிகள் என பொறுப்புள்ள அத்தனை பேருக்கும் பொருந்தும் அடிப்படை தகுதியாகும்.
கொரோனா காலத்தில் பள்ளிகள் இல்லாத, குழந்தைகள் ஆசிரியரை நெருங்காத சூழலில், குழந்தைகளை கையாளுவதில் பெற்றோர்கள் கைசேதப்பட்டு நிற்பதைப் பார்க்கிறோம்.
பெற்றோர்களுக்கு பொதுவாகவே, தம்முடைய குரலை காதில் வாங்குவதில்லை என்ற மனக்குறை உண்டு. குழந்தைகள் நம் சொல்லைக் கேட்பதில்லையே என வருந்துகிறார்கள்.
ஆனால் முதலில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு நடைமுறை இருக்கிறது. பெற்றோர்களாகிய தங்களது செயல்களை, பேசும் விஷயங்களை குழந்தைகள் கவனிக்கின்றார்களா என்று அறிந்து கொள்ள வேண்டும். காரணம் “சொல்லுக்கு நல்ல முன்னோடியாகத் திகழ்வது செயலே.”
புத்தகத்தில் இருப்பதை படிப்பது நம்முடைய அடையாளமாகாது. ஒருவர் அதிகம் கற்ற காரணத்தால் சிறந்த பண்பாளராகிவிட முடியாது.
கல்வியின் நோக்கம் தனித்துவம் வாய்ந்த சிறந்த பண்பாளர்களை உருவாக்குவதுதான். நாணயத்தின் இருபக்கம் போல புற அறிவையும், அகச் செறிவையும் ஒருமைபடுத்தும் கல்வியே பயன்தரும் கல்வி.
அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கல்வியால் புறவளர்ச்சி, தொழில் நுட்பம், வர்த்தகம், வாழும் திறம் ஆகியவை மேம்படலாம். ஆனால் அத்தகைய வளர்ச்சி வெறும் புறக்கவர்ச்சி மட்டுமே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அறிவும், உணர்வும் சரியான விகிதத்தில் மனிதனிடம் இல்லாவிட்டால் எத்தனை வசதிகளிருந்தும் வாழ்க்கை வறண்டே காணப்படும். நம் எண்ணங்களை, குணங்களை, தொடர்புகளை சுயமாகப் பரிசோதித்து பார்க்க வேண்டும்.
குறைகளை சரிசெய்து, நம்மை நாமே மாற்றிக்கொள்ள ஆயத்தமாவது மனிதர்கள் மனநெருக்கடி இல்லாமல் வாழ்வதற்கு நல்லதொரு நடைமுறை. அகத்தில் மாற்றங்கள் ஏற்படாத வரை புறமாற்றங்களுக்காகப் பாடுபடுவதில் பயனில்லை.
மனதை ஒழுங்குபடுத்தவும், உணர்வுகளை கட்டுப்படுத்தவும் சொல்லித்தராத இன்றைய கல்வியும், அது வழங்கும் செல்வமும் பெயரையும் புகழையும் இன்பங்களைத் பெற்றுத் தரலாம். ஆனால் ஒருபோதும் அவற்றால் மனநிறைவும், திருப்தியும் கிடைக்காது.
சராசரியாக இருபது வருடங்கள் பள்ளியிலும், பல்கலையிலும் பயின்று பட்டம் பெறுகின்றோம். இக்கல்வியால் மன மாற்றம் நேர்ந்துள்ளதா? மன அழுக்குகள் நீங்கியதா? பணிவோடு இருக்கின்றோமா? பொறுப்புகளை உணர்ந்தோமே என பல கேள்விகள். இது நடக்கவில்லை என்றால் அது யாருடைய தவறு? ஆசிரியரா? பெற்றோர்களா? மாணவர்களா? நிர்வாகமா? அல்லது பாடத் திட்டங்களா? மாணவர்களின் வன்முறை சிந்தனைகளுக்கு யார் காரணம்? சிந்திப்போம்.
கல்வியின் இலக்கு தனிமனிதனுடைய, சமூகத்தினுடைய சீரான வாழ்வுக்கு வலிமை சேர்க்கும் விஷயங்களை ஆராய்ந்து, அதனை திட்டமிட்டு ஆரம்பக் கல்வியில் சேர்த்தல் அவசியம்.
கல்வியின் இலக்கு தேர்வுகள், மதிப்பெண்கள், சுய மரியாதை என்பதோடு நின்றுவிடாது வாழும் முறை, ஒழுக்கத்தில் உறுதி, சமுதாயப் பொறுப்பு போன்றவற்றைப் புகட்டுவதாகவும் இருக்க வேண்டும்.
மனதின் கீழான நிலைகளை, அவற்றை நீக்கும் நடைமுறைகளை அறியாது பிறவற்றை அறிந்தென்ன பயன். பள்ளிகளில் இதை போதிக்க நேரமில்லை, அதற்கான பாடத் திட்டங்களோ, பயிற்சியோ இல்லை.
மனிதனை உருவாக்கும் கல்வியே மகத்தானது. அத்தகைய கல்வியே நன்மை, தீமைகள் குறித்து சுயமாகச் சிந்திக்கவும், பிறர் துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாகவும், தன் காலில் தானுான்றி நிற்கவும் உதவும்.
இதனைக் கருத்தில் கொண்டு அடிப்படை ஆன்மிக விஷயங்களை போதிக்க வேண்டும். இதற்கான மையங்களை உருவாக்க வேண்டும். இதுவே சிறந்த கல்விப் பணி.


































