புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும்… ஏன்? –  பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு பொதுச் செயலாளர்,  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை 2020 தனியார் தங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் பள்ளியை நடத்திக் கொள்ளவும், பள்ளி தரும் வசதிக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூல் செய்யவும், உபரி வருமானத்தை கல்வித் துறையில் முதலீடு செய்யவும் வழி செய்கிறது இந்த கொள்கை. தற்போதுள்ள சமமற்ற கல்வி நிலையை நீடிக்கச் செய்வதுடன், மேலும் மேலும் தனியாரை ஊக்குவிப்பதுடன், அரசுப் பள்ளிகளுக்கு நெருக்கடியை உருவாக்குகிறது தேசியக் கல்விக் கொள்கை 2020. 

இந்த கொள்கை அறுதியிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி வழி கல்வி என்ற திட்டவட்டமாக கூறவில்லை. அனைவருக்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் தாய்மொழி வழியில் கல்வி வழங்குவதை உத்தரவாதப்படுத்த இயலாத இந்த கல்விக் கொள்கை கூடுதலாக, மூன்றாவதாக ஒரு மொழியை படி என்று மாணவரை கட்டாயப்படுத்துகிறது.

தன்னை சுற்றியுள்ள சூழலில் பேசப்படும் மொழியை கற்பது ஒரு குழந்தைக்கு சுமையாக இருக்காது. சூழலியலில் இல்லாத ஒரு மொழியை கற்பது சுமை தான். அதை தாண்டி ஆங்கிலம் கற்க வேண்டிய தேவையை அரசே உருவாக்கி வைத்துள்ளது. உயர் கல்விக்கும், வேலை வாய்பிற்கும் ஆங்கில அவசியம் என்ற நிலையில், ஆங்கிலம் தன் சூழலியல் மொழியாக இல்லாத போதும், குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் எழுகிறது.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்பிக்க தேவைப்படும் இந்தி ஆசிரியர்களை உருவாக்க ஐம்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ் உள்ளிட்ட வேறு எந்த மொழிக்கும் நிதி ஒதுக்காமல் இந்திக்கு மட்டும் என்பதின் நோக்கமென்ன? இது குழந்தைகளின் விருப்பமா, குழந்தைகளின் மீது நடத்தப்படும் திணிப்பா? மரவேலை, மண்பாண்ட வேலை, மின்சார வேலை உள்ளிட்ட பல்வேறு வகையான தொழிலில் குழந்தை விரும்பும் தொழிலை கற்க வேண்டும். கற்றுத்தர குழந்தை உளவியல், குழந்தைகள் கற்கும் விதம் ஆகியவற்றில்‌ எந்த பயிற்சியோ அனுபவமோ இல்லாத உள்ளுரில் அந்த தொழில் செய்பவரே வகுப்பறையில் தொழில் கற்றுத் தருவார். மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும், தொழில் கல்வியிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குழந்தை பருவத்தில் எத்தகைய சுமை.

அவ்வாறு 13 வயதிற்குள் தொழில் கற்க வேண்டிய அவசியத்தை ஏன் இந்த கல்விக் கொள்கை உருவாக்குகிறது? 

சமமான கற்றல் வாய்ப்பை அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்க மறுக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020, கற்றல் திறன் வெளிப்பாடு மட்டும் அனைவருக்கும் சமமாக இருக்கும் வேண்டும் என்கிறது. 9 முதல் 12 வகுப்பு வரை இடைநிலைக் கல்வி. இரண்டு மொழி அல்லாமல் கூடுதலாக ஒரு மொழி பயில்வதும், தொழில் கல்வி பயில்வதும் கட்டாயம். பாடங்களிலும், தொழிலிலும் சம அளவில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஒவ்வொரு பாடத்திலும் பொதுத் தேர்வு தாள்களில் பொது நிலை,  உயர் நிலை  என்று இரண்டு நிலைகளில் கேள்வித்தாள்கள் இருக்கும். 14 வயதில் 9 ஆம் வகுப்பில் தொடங்கி தனக்கு எந்த பாடம் கடினமாக இருக்கிறதோ அதில் அவர் பொது நிலைத் தாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அப்படி என்றால் உயர் நிலை தாள் எடுக்காத மாணவர் அந்த பாடத்தில் உயர்கல்வி பெற இயலாது. 

மூன்று வயது தொடங்கி பதினெட்டு வயது வரை பதினைந்து வருட பள்ளி படிப்பு முடித்த மாணவரை “நீ படித்த பள்ளிப் படிப்பை வைத்து உயர்கல்வி செல்ல தகுதி இல்லை” என்று கூறுவது எந்த வகையில் நியாயம்.

ஒரு அகில இந்திய தேர்வில் பெறப்படும் மதிப்பெண் தான் கல்லூரி சேர்க்கைக் கான தகுதியை தீர்மானிக்கும் என்பது  அனைவரையும் உயர்கல்வி கொண்டு சேர்க்க உதவாது.  கல்வி முறையை விட்டு வெளியேற்றி அரைகுறை திரன் கொண்ட சந்தை எதிர்பார்க்கும் கூலித் தொழிலாளிகளையே உருவாக்க முற்படுகிறது தேசியக் கல்விக் கொள்கை 2020.

உயர் கல்வி நிறுவனங்களும் ஈட்டிய இலாபத்தை, தங்கள் விருப்பப்படி வெவ்வேறு கல்வி நிறுவனங்களை வெவ்வேறு இடங்களில் திறப்பதற்கான முதலீடுகளை செய்ய தேசியக் கல்விக் கொள்கை 2020 வழி செய்கிறது. உயர் கல்வி கற்க வரும் மாணவரை, தன் படிப்பை எந்த நிலையிலும் நிறுத்திவிட்டு வெளியேற அனைத்து வழிகளையும் காட்டுகிறது. எந்த ஆய்வும் இல்லாமல் மூன்று வருடப் பட்டப் படிப்பை நான்கு வருட பட்டப் படிப்பாக்குகிறது.  ஆழமாக ஒரு பாடத்தை படித்து அறிஞர் ஆவதற்கு உருவாக்கப் பட்ட இரண்டாண்டு முதுகலைப் பட்டப் படிப்பை ஓராண்டாக சுருங்குகிறது.

இட ஒதுக்கீடு குறித்து இந்த கொள்கையில் எங்கும் பேசப்படவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகையும் சமூக மற்றும் கல்வி பின்தங்கலை அடிப்படையாக கொண்டது. இந்திய சமூகத்தில் பெரும் பகுதி மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சமூக – பொருளாதார வாய்ப்பின்மை என்ற தலைப்பில் தான் கல்வி உதவித்தொகை குறித்து விவாதிக்கிறது தேசியக் கல்விக் கொள்கை 2020.

ஏழ்மை, வசதியின்மையே கல்வி வளர்ச்சிக்கு தடை என்கின்ற வகையில் சிக்கலை திசை திருப்பி, எதிர்காலத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் சமூக மற்றும் கல்வி பின்தங்கலை கணக்கில் எடுத்து  இட ஒதுக்கீடு இல்லாமல் செய்கிறது. சமூக நீதியின் விளைவாக பெறப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட தேசியக் கல்விக் கொள்கை 2020 வழி செய்கிறது. இக்கொள்கை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சி தத்துவத்தை புறம் தள்ளி, பொதுப் பட்டியலில் உள்ள  கல்வியை மத்திய பட்டியலுக்கு நகர்த்த வழி செய்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில், தமிழ் நாடு சட்டப் பேரவை இதுவரை கல்வித் துறையில் இயற்றிய சட்டங்கள் செல்லாதவை ஆக்கப்படுவதுடன், இனி மாநில அரசு சுயமாக கல்வித் துறையில் கொள்கை வகுக்கவோ, சட்டம் இயற்றவோ இயலாது என்ற நிலையை இக் கொள்கை உருவாக்குகிறது. 

கல்வியில் சிறந்த தமிழ் நாடு மேலும் கல்வித் துறையில் வளர்ச்சி பெற  தமிழ் நாடு அரசு தன் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்தி சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உருவாக்க வேண்டும். மாநில அரசின் உரிமையை பறிக்கின்ற, சமூக நீதிக்கு எதிராக அமைந்துள்ள, சமமான கற்றல் வாய்ப்பை அனை வருக்கும் உறுதிப்படுத்தாத தேசியக் கல்விக் கொள்கை 2020யை மக்களுடன் சேர்ந்து தமிழ் நாடு அரசு நிராகரிக்க வேண்டும்.