

புகழ் பெற்ற இஸ்லாமிய சிந்தனையாளர் பேராசிரியர் கலாநிதி அப்துல் ஹமீது அபூ சுலைமான் தனது 83 ஆவது வயதில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி சவூதி அரபியாவின் ரியாதில் வஃபாத்தானார்.
அரபு இஸ்லாமிய உலகிலும் மேற்கிலும் இஸ்லாமியப் பணியின் முக்கிய புள்ளியாக அவர் கருதப்படுகிறார். இஸ்லாமிய தூது, அது எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஆழ்ந்த பார்வைகளைக் கொண்டிருந்த பேராசிரியர் அபூசுலைமான் தூர நோக்கும் கருத்துச் செல்வாக்கும் நிறுவன சிந்தனையும் அமைப்பு அனுபவமும் மிக்கவராகத் திகழ்ந்தார். அன்னார் பற்றிய சுருக்கமான அறிமுகக் குறிப்புக்களை இங்கு தருகிறோம்.
பிறப்பும் கல்வியும்
அப்துல் ஹமீத் அபூ சுலைமான் 1936 ஆம் ஆண்டு மக்கா நகரில் பிறந்தார். ஆரம்ப மற்றும் இடைநிலைக்கல்வியை மக்காவில் கற்றார். பல்கலைக் கழகப் படிப்பிற்காக எகிப்து சென்று கெய்ரோ பல்கலைக்கழகத்தின் வர்த்தக பீடத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1959 ஆம் ஆண்டு அதில் பட்டம்பெற்றார்.
1963 ஆம் ஆண்டு அதே பீடத்தில் முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்து விட்டு அமெரிக்கா சென்றார். அங்கு பிலடெல்பியாவில் அமைந்திருக்கும் பென்சல்வேனியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையில் 1973 ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.
சிந்தனைப் பயணம்
ஆரம்பத்தில் அரசியல் துறையில் ஆர்வம் கொண்டிருந்த கலாநிதி அபூ சுலைமான் பின்னர் சமூகவியல் கலைகளில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். சமூகவியல் கலைகளை இஸ்லாமியப்படுத்த வேண்டும் எனவும் குரலெழுப்பினார்.
எழுபதுகளின் நடுப்பகுதியில் இது குறித்து தீவிர கவனம் செலுத்தியதுடன், இஸ்லாமிய சிந்தனைக்கான நிறுவனமொன்றை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
1972 இல் கலாநிதி இஸ்மாயீல் பாருக்கீ ‘முஸ்லிம் சமூகவியல் அறிஞர்கள் ஒன்றியம்’ ஒன்றை ஸ்தாபித்தார். இதன் நோக்கம் அறிவை இஸ்லாமியப்படுத்தலும் அறிவை மேற்கத்திய பாகுபாட்டிலிருந்து விடுவிப்பதுமாகும். இதன் முதல் மாநாடு 1977 இல் சுவிட்சர்லாந்திலுள்ள லுகானோவில் இடம்பெற்றது. இஸ்லாமிய சிந்தனையின் நெருக்கடி குறித்து இம்மாநாடு விவாதித்தது. இம்மாநாட்டிலே இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச அகாடமி உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன் பிற்பாடு பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் ‘அறிவை இஸ்லாமியப்படுத்தல்’ எனும் தலைப்பிலான மாநாடு இடம்பெற்றது. அதேவருடம் மக்காவிலும் ‘இஸ்லாமியக் கல்வி’ தொடர்பான மாநாடு இடம்பெற்றது. மக்கா மாநாட்டில் “இஸ்லாத்தின் ஒளியில் சமூகவியல் கலைகளை மறுசீரமைத்தல்” எனும் தலைப்பில் புகழ்பெற்ற ஆய்வுக்கட்டுரையை கலாநிதி அபூ சுலைமான் சமர்ப்பித்தார்.
இவ்வாய்வில் சமூகவியல் கலைகள் தொடர்பான மேற்கத்திய மாதிரியை விமர்சித்ததுடன், விஞ்ஞான ஆய்வியல் அடிப்படையில் நின்று மேற்கத்திய முறையியலின் குறைபாட்டை வெளிப்படுத்தினார்.
இந்தப் பின்னணியில் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச அகாடமியை அவர் உருவாக்கினார். அதனை உருவாக்குவதில் அவர் சிந்தனைப் பங்களிப்பை வழங்கியதுடன் நின்று விடாது அதன் தனித்துவத்திற்காக ஈடுபாட்டுடன் உழைத்தார். ‘அறிவை இஸ்லாமியப்படுத்தல்: பொதுக்கொள்கைகளும் வேலைத்திட்டமும்;’ எனும் தலைப்பில் ஆய்வொன்றை எழுதி வெளியிட்டார். அதில் இஸ்லாமிய சிந்தனையும் சீர்திருத்த இயக்கங்களும் எதிர்கொள்ளும் நெருக்கடியின் இயல்பை சுருக்கமாக முன்வைத்தார். இவ்வாய்வு அகாடமியின் ஸ்தாபகர்களின் கவனத்தை உசுப்பிவிட்டது.
ஆரம்பத்தில் முஸ்லிம் உம்மாவின் நெருக்கடி அதன் சிந்தனையிலும் முறையியலிலும் இருப்பதாக நம்பினார். பின்னாட்களில் முஸ்லிம் உம்மாவின் நெருக்கடி அது மாத்திரமல்ல. கல்வி, நாட்டசக்தி மனப்பாங்கு நெருக்கடி எனவும் வலியுறுத்தினார். இதனை ‘நாட்டசக்தி மற்றும் மனப்பாங்கு நெருக்கடி’ எனும் நூலில் விரிவாக அலசியுள்ளார். இதன் விளைவாக கல்வியில் கவனம் குவிப்பதிலும் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதிலும் தீவிர கவனம் செலுத்தினார். இக்கருத்துக்கள் மூலம் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச அகாடமியை மற்றொரு கோணத்தில் சிந்திக்கத் தூண்டினார்.
முஸ்லிம் உம்மாவின் நெருக்கடி கல்வியிலும் பாடத்திட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் மேற்கத்திய பார்வையின் விளைவு என அவர் நம்பினார். அல்லாஹ் முழுமைப்படுத்திய பெறுமானங்களில் காணப்படும் உம்மத்தின் வறுமை அல்ல எமது நெருக்கடி. மாறாக அந்த பெறுமானங்களுடனான உறவாடலில் நெருக்கடி நிலவுவதாக அவர் நம்பினார்.
படித்த வர்க்கத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக வளரிளம் பருவத்தினரிடையே கவனம் செலுத்துவதிலும் அவர் கவனம் செலுத்தினார். அவர் எழுதிய ‘ஜஸீரதுல் பன்னாயீன்’எனும் சிறுவர் கதைகள் இந்த வகையைச் சேரும். இவற்றினூடாக வளரிளம் பருவத்தினரிடையே முஸ்லிம் மனப்பாங்கு மாற்றத்தை விதைப்பதை நோக்காகக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பதவிகள்
இஸ்லாமிய இளைஞர்களுக்கான சர்வதேச மன்றத்தின் (வாமி) நிறுவன பொதுச் செயலாளராகவும் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச அகாடமியின் ஸ்தாபகராகவும் அதன் முதல் தலைவராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். அமெரிக்காவிலும் கனடாவிலும் நிறுவப்பட்டுள்ள முஸ்லிம் மாணவர் ஒன்றியங்களின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் மாணவ அமைப்புக்களுக்கான இஸ்லாமிய ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் செயற்பட்டுள்ளார். ரியாதில் அமைந்துள்ள மன்னர் சுஊத் பல்கலைக்கழகத்தில் அரசியல் கலைகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார். குழந்தை வளர்ப்பு அகாடமியின் நிறுவனத் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்கா, கனடா முஸ்லிம் சமூகவியல் துறை அறிஞர்களுக்கான சபையின் முன்னாள் தலைவராகவும் பணிபுரிந்தார். இஸ்லாமிய சமூகவியல் கலைகளுக்கான அமெரிக்க சஞ்சிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராகவும் திகழ்ந்துள்ளார்.
மலேசியாவில் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகத்தை நிறுவியது அவரின் மிகப் பெரும் பங்களிப்பாகும். உம்மத்தின் விவகாரங்களில் கவனம் செலுத்தும் தலைமுறையை உருவாக்கும் வேட்கையுடன் அவர் அதனை உருவாக்கினார். 1988 ஆம் ஆண்டிலிருந்து 1999 வரை அதனை நிர்வகித்தார். அவர் தலைமை வகித்த காலப்பகுதியில் 90க்ற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பல்கலைக் கழகத்தில் கற்பதற்கான புலமைப்பரிசிலை (ஸ்காலர்ஷிப்) வழங்கினார்.
பயிற்றுவிப்பாளராக!
ஒரு சிந்தனையாளராக திகழ்ந்த பேராசிரியர் அபூ சுலைமான் ஒரு முரப்பியாகவும் காணப்பட்டார். பின்னடைவிலிருந்து வெளியேறிய ஒரு இளம் தலைமுறையை உருவாக்குவதில் அல்லும் பகலும் பாடுபட்டார். அதற்காக பாடத்திட்டம் வடிவமைத்தல், பொருத்தமான விரிவுரையாளர்களை வரவழைத்தல், சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல், ஏனைய வசதிகளை பூரணப்படுத்தல் என்பவற்றில் கவனம் எடுத்து, அவற்றை நிறைவேற்றினார்.
பேராசிரியர் அபூ சுலைமான் பற்றி எழுதியுள்ள கத்தார் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பத்ரான் ஹஸன் : பேராசிரியர் அபூ சுலைமான் பற்றி அறியாத பக்கமொன்றிருக்கிறது. அவர் மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவராக ஒரு தசாப்தத்திற்(பத்தாண்டுகளுக்)கு மேல் பணியாற்றியிருக்கிறார்.
இக்காலப் பகுதியில் அவர் சம்பளம் பெற்றதில்லை. அப்பணத்தை தேவையுடைய மாணவர்களுக்கான நிதியத்திற்கு வழங்கிவந்திருக்கிறார் எனக் குறிப்பிடுகிறார்.
பல்கலைக் கழக தலைமைப் பதவியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் அல்குர்ஆனிய நாகரீகப் பார்வை கொண்ட புதிய பயிற்றுவிப்பு தத்துவத்தின் அடிப்படையிலான பாலர் பாடசாலைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். அதேபோல குழந்தை மற்றும் குடும்ப பராமரிப்பு நிறுவனங்களை நிறுவினார்.
பின்நாட்களில் குழந்தை கதைகளில் அதிக கவனம் செலுத்தினார். குழந்தைகளுக்கான பல நூல்களையும் எழுதினார்.
நூல்கள்
இஸ்லாமிய சிந்தனை குறித்து அதிகம் விவாதித்த பேராசிரியர் அபூ சுலைமான் இஸ்லாமிய சிந்தனை சார்ந்த பல்வேறு புலங்களில் பல ஆய்வுகளையும் நூல்களையும் ஆக்கியுள்ளார். பல மாநாட்டுப் பேருரைகளை நிகழ்த்தியுள்ளார். அவர் எழுதிய நூல்களுல் பின்வருவன முக்கியமானவை.
– இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை: தத்துவமும் நவீன வழிமுறைகளும் – 1960
– சர்வதேச உறவுகள் பற்றிய இஸ்லாமியக் கோட்பாடு: சிந்தனைக்கும் இஸ்லாமிய முறைவழிக்குமான புதிய செல்நெறிகள் -1973
– முஸ்லிம் சிந்தையின் நெருக்கடி– 1986
– வன்முறையும் அரசியல் போராட்டத்தை நிர்வகித்தலும்: கொள்கைக்கும் நடைமுறைத் தேர்வுக்கும் இடையில் இஸ்லாமிய நோக்கு – 2002
– பெண்ணைத் தண்டித்தல் -2003
– முஸ்லிமின் நாட்டசக்தி மற்றும் மனப்பாங்கு நெருக்கடி – 2004
– இஸ்லாமிய சீர்திருத்தம்- 2004
– இரு சட்டங்களுக்கிடையில் மனிதன் -2005
– இஸ்லாத்தில் மதம் மாறுதல் பற்றிய சிந்தனைகள்
– அல் – குர்ஆனிய அகில நாகரிக நோக்கு – 2009
சர்வதேச உறவுகள் பற்றிய இஸ்லாமியக் கோட்பாடு என்ற நூலில் முஸ்லிம், முஸ்லிமல்லாத புத்திஜீவிகளுக்கு சர்வதேச உறவுகள் பற்றிய இஸ்லாமியக் கோட்பாட்டினை அறிவுபூர்வமாக பேராசிரியர் அபூ சுலைமான் முன்வைக்கிறார். அத்துடன் தற்கால சிந்தனைப் போக்குகளில் இஸ்லாமிய சிந்தனையின் பங்களிப்பு குன்றிப் போயுள்ளமைக்கான காரணங்களை ஆராய்ந்துள்ளார். அத்துடன் சர்வதேச உறவுத்துறையில் அமைதி, சமாதானம், பாதுகாப்பு, கூட்டுறவு என்பனவற்றை பலப்படுத்துவதில் மேற்கத்திய சிந்தனைகள் கண்டுள்ள தோல்விகளை ஈடுசெய்யும் வகையில் புதிய கருத்துகளையும் மாற்று வழிமுறைகளையும் முன்வைத்துள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.
அல் – குர்ஆனிய அகில நாகரிக நோக்கு என்ற நூலில் முஸ்லிம் உம்மாவின் அகில நாகரிக நோக்கு பற்றிய ஆழ்ந், முழுமையான சிந்தனா ரீதியிலான மீளாய்வொன்றைபேராசிரியர் அபூ சுலைமான் முன்வைத்திருக்கிறார். முதற்தலைமுறை முஸ்லிம்களின் எழுச்சிக்கு இந்நோக்கு எவ்வாறு முக்கியமாக காணப்பட்டது என்பதை அவர் ஆராய்ந்துள்ளார்.
அனுதாபச் செய்திகள்
பேராசிரியர் அபூ சுலைமானின் மரணம் குறித்து பல இஸ்லாமிய அறிஞர்களும் நிறுவனங்களும் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். இஸ்லாமியப் பணி, அதன் தூதுக்காக தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்திருக்கிறார். இஸ்லாமிய சிந்தனையின் புத்துயிராக்கும் பணியில் அளப்பரிய பங்காற்றினார் என இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச அகாடமி குடும்பம் அனுதாபம் தெரிவித்துள்ளது.
பேராசிரியர் மர்ஹும் அப்துல் ஹமீத் அபூ சுலைமானின் முக்கியமான வாசகங்களில் ஒன்றை குறிப்பிட்டு இக்குறிப்பை நிறைவு செய்கிறேன். ‘முழுமையான சமூக சீர்திருத்தத்தின் மூலமாகவே இஸ்லாமிய எழுச்சி சாத்தியப்படும். கல்வித்துறையில் தரமின்மை வெள்ளத்தில் அடித்துச் செல்லும் சருகுகளாக முஸ்லிம்களை மாற்றியிருக்கிறது’.
அல்லாஹ் தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து, உயர்ந்த சுவனபதியை வழங்குவானாக!
03 ஆகஸ்ட் 2021




































