தமிழ்நாட்டில் எந்த மதுரையில் தான் அதிகப் புத்தகங்கள் தோன்றியுள்ளன. ‘கலித்தொகை’ என்ற செவ்விலக்கியம் பாண்டியநாட்டு இலக்கியம் என்றே அழைக்கப்படுகிறது. ‘பரிபாடல்’ என்ற செவ்விலக்கியத்துக்கு பெயரே மதுரை இலக்கியம். அந்த ஊரிலே நின்று பேசுகிறேன் இந்த ஊரின் நீரும், நெருப்பும் கூட தமிழ்ச்சுவை அறியும் என்கிறது ஒரு நூல்.
புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் விழுதுக்கும் உள்ள தொடர்பு போன்றது புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு. “புத்தகங்களின் மீது சமூகம் நடந்து போகிறது.” நடந்து போவது என்றால் எழுதியவனின் மனநிலையை நாம் உணர்ந்து கொள்வது.
உலகமயமாக்கல் என்ற சொல்லே எனக்குப் புரியவில்லை. உலகை எப்படி உலகமயமாக்குவது? உலகமயமாக்கம் என்ற சொல்லே நமக்கு புரியவில்லை. அதில் ஒரு நுண் அரசியல் இருக்கிறது. நான் கட்சி அரசியலை சொல்லவில்லை.
உலகமயமாக்குவது என்றால் உலகையே சந்தையாக மாற்றுவது. உலகிலே சந்தை மட்டும் இருந்தால் போதுமா? இம்மதுரையிலே சந்தையும் இருக்கும், தமுக்கமும் இருக்கும், மீனாட்சி கோவிலும் இருக்கும், மனநோயாளிகளுக்கான மருத்துவமனையும் இருக்கும்.
சந்தையில் ஐந்து வயது சிறுவர்களுக்கு, பாக்கெட்டில் பணமில்லாதவனுக்கு, கன்னிப் பெண்களுக் இடம் இருக்குமா? அல்லது கம்பூன்றி நடக்கும் வயதானவர்களுக்கு இடம் கிடைக்குமா?
சந்தை என்பது வாங்குவதற்கான இடமே தவிர அங்கு மனித உறவுகள் மலராது. சிறைச்சாலைகளில் கூட மனித உறவுகள் மலரும். மருத்துவமனைகளில் கூட மனித உறவுகள் மலரும். ஆனால் சந்தையில் “அஞ்சால் விற்றால் லாபம் என்றால் அஞ்சால் விற்போம். நஞ்சை விற்றால் லாபம் என்றால் நஞ்சை விற்போம்”. இது சந்தையின் தன்மை.
எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்பது தான் உலகமயமாக்கம். உலகமயமாக்கலை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். அறிஞர்கள் எதிர்க்கிறார்கள். என்னைப் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்களும் எதிர்க்கிறோம். ஏனென்றால் இது ஒரு பண்பாட்டு படையெடுப்பு. நமது பண்பாட்டை குலைப்பதற்கான முயற்சி. இதை பண்பாட்டுத் தாக்குதல் என்றும் கூறலாம்.
பண்பாடு என்பது பொருள் உற்பத்தியில் தொடங்குகிறது. ஒரு குழந்தை இலையில் தனக்கான பீப்பியை செய்து கொள்கிறது. தனக்கான வண்டியை செய்து கொள்கிறது. தனக்கான காகிதப்பையை செய்து கொள்கிறது. இப்படி தனக்காக செய்து கொள்கிறபோதுதான் கலாச்சாரம் பிறக்கிறது.
பொருள் உற்பத்தியில்தான் உறவுகள் மலரும். பொருள் உற்பத்தி செய்கிற போது மனிதன் கலாச்சாரம் உடையவன் ஆகிறான். அது வாடுகிற போது கலாச்சாரமும் செத்துப் போய் விடுகிறது. உலகமயமாக்கம் என்ற பெயரில் இவர்கள் உலகையே சந்தையாக்க முயல்கிறார்கள். சந்தையில் எதைவிற்றால் லாபம் கிடைக்கும் என்பதைத்தான் பார்ப்பார்கள். அங்கு மனிதர்களின் உணர்வுகளுக்கு இடமிருக்காது.
மரபு வழியான அறிவுச்செல்வத்தைத் திட்டமிட்டுக் கொள்ளையடிப்பது உலகமயமாக்கம். நம்முடைய பாரம்பரிய மருத்துவ அறிவுகளை கொள்ளையடிப்பது உலகமயமாக்கம்.
கால்ல புண்ணு வந்தா மஞ்சளையும் வெங்காயத்தையும் அரைச்சுப் போடுவோம். இனி எதாவது ப்ரெஞ்ச் கம்பெனியோ, கனடா கம்பெனியோ மஞ்சள், வெங்காயத்தையெல்லாம் நான்தான் கண்டுபிடிச்சேன்னு காப்பிரைட் வாங்கி வச்சுகிருவான். அப்புறம் வெங்காயம், மஞ்சளப் பயன்படுத்த நாம அவனிடம் அனுமதி கேட்கணும். பணம் கட்டணும்.
இப்படி மரபுரீதியான அறிவுச் செல்வத்தை திட்டமிட்டே கொள்ளையடிக்கிறார்கள். அறிவு என்பது 19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழிற்புரட்சியில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. நமக்கு அறிவு பற்றிய சரியான பார்வை இல்லை.
பி.எஸ்.சி ரசாயனம் படிக்கும் மாணவனைப் பார்த்து ரசாயனம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கேட்டேன். அவனுக்கு தெரியவில்லை. சொல்லிக் கொடுத்தால்தானே அவன் சொல்வான். மனிதன் வேட்டையாடியபோது உணவு மீதம் ஆகி டிஹைட்ரேட் ஆகி நாளை பயன்படுத்தலாம் என்ற போதே ரசாயனம் தொடங்கிவிட்டது. அதில் உப்பைச் சேர்க்கும் போது இன்னும் கொஞ்சநாள் பயன்படுத்தலாம் என்ற போது ரசாயணம் வளரத்தொடங்கியது.
மனிதகுல வரலாறு தெரியாத கல்வி முறையில் வளரும் இன்றைய தலைமுறையில் பண்பாடு பற்றி பேசுவதெல்லாம் பைத்தியகாரத்தனம்.
உலகின் அறிவுச் செல்வங்களை கொள்ளையடிக்கவே உலகமயமாக்கம் பயன்படுகிறது. ஆப்ரிக்காவில் உள்ள காடுகளிலும், கடற்கரையோரங்களிலும் இருந்த தாதுக்களைக் கண்டுபிடித்து கொள்ளையடிக்கிறாங்களே அது தான் இன்பஃர்மேசன். இது தான் இன்பஃர்மேசன் டெக்னாலஜி.
எதற்கும் பயன்படாத தேரிக்காடு. அங்கே கல்லுமுள்ளும் ஓணானும் குடிகொண்டு இருக்கும். அங்கே தோரியம் இருக்குன்னு சொல்றானே அது இன்பஃர்மேசன். அங்கே பெரிய கம்பெனிக்காரன் வர்றானே அது உலகமயமாக்கம்.
எல்லா இடத்திலும் கையவச்சுட்டு இப்ப சமையலுக்குள்ளும் வந்து கைய வச்சுட்டாங்க. பீட்ஸான்னு ஒன்ன சாப்பிடக் கொடுக்கிறாங்க. அதுல என்னா இருக்குன்னு நமக்கு தெரியுமா? நம்ம வீட்ல செய்த பண்டத்துல என்னா இருக்குன்னு நமக்குத் தெரியும்.
“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”. நம்ம உணவுச் செல்வங்களை இன்னொருத்தன் கொள்ளையடிக்கிறானே அது உலகமயமாக்கம்.
நிலத்தையும் உணவையும் கூட காக்க முடியாத சமுதாயம் வாழ்வதற்கு லாயக்கில்லாதது.
ஒன்றைத் திட்டமிட்டே பழசாக்குவது உலகமயமாக்கம். இந்த வருடம் ஒரு இருசக்கர வாகனம் வாங்கினால் அடுத்த வருடம் ஒரு சின்ன மாற்றத்துடன் புதிதாக ஒன்று வரும். இப்படித் திட்டமிட்டுப் பழசாக்கி அடுத்த பொருளை விற்பதுதான் உலகமயமாக்கம்.
உலகமயமாக்கம் எழுத்துலகத்தில் என்ன மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது எனப் பார்ப்போம். சென்னை புத்தகத் திருவிழாவில் 10 லட்சம் புத்தகம் விற்றிருக்கிறது என சொன்னார்கள். மகிழ்ச்சி. மனிதன் வாசிக்க தொடங்கிவிட்டான். வாசிக்கும் மனிதன்தான் யோசிக்கிறான். சமூகம் மாற்றம் அடையத் தொடங்கியதா எனப்பார்த்தால் மாற்றம் ஏதுமில்லை. ஏனென்றால் பாதிக்குப் பாதி வாஸ்து புத்தகங்கள்தான் விற்றிருக்கிறது.
உலகமயமாக்கலில் எல்லாவற்றையும் சந்தைப்படுத்துகிறோம். நுகர்வுக் கலாசாரம் ரொம்பப் பெருகிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் ஒரு சோப்பு இருந்தது. இப்ப ஆறு பேர் இருக்கிற வீட்ல ஏழு சோப்பு இருக்குது.
கென்டகி சிக்கன்னு ஒரு கம்பெனி நான் கோழிக்கறி தர்றேன். அத சமைன்னு சொல்றான். நம்ம ஊருல நம்ம பொண்ணுகளுக்கு கோழிக்கறி சமைக்கத் தெரியாதா?
மருத்துவ சம்மந்தமான அறிவுச் செல்வங்களை திட்டமிட்டு பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்கின்றன.
உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்ற சொல்லிலேயே நாம் ஏமாந்து போகிறோம். “மெய்ப்பொருள் காண்பது அறிவு” யார் என்ன சொன்னாலும் இந்த நுகர்வு கலாச்சாரத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.
நாம் தினமும் பங்கு சந்தை பார்க்கிறோம். எனக்கு என்னவென்றே புரியவில்லை. இப்பதான் தெரிந்தது அது இரண்டு சதவீத மக்களுக்கான செய்தியென்று.
இப்ப கடன் திருவிழா, லோன் மேளா எல்லாம் நடத்துறாங்க. இந்த திருவிழாவிற்கு எப்ப கொடி ஏத்துவாங்க? எப்ப இறக்குவாங்கன்னு தெரியல. எந்த நாடும் உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்ததாக வரலாறு இல்லை.
“மாற்ற முடியாதது எதுவோ அது அறம். மாற்றம் வந்தாலும் அதிக மாறுதல் வராதது பண்பாடு”.
நாம் பிரம்மாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை உண்டு பண்ண வேண்டும். நாம் எதை இழந்தோம் என்பதைக்கூட மறந்து விட்டோம். “இழந்தோம் என்பதைவிட இழக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறோம்” என வருத்தப்படுகிறார் ஆழ்வார்.
இறுதியாக மேல்மண் கீழ்மண் ஆவதும், கீழ்மண் மேல்மண் ஆவதும் வரலாறு. புரட்சியை ஒரு புத்தகம் எப்பொழுதும் ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது.
ஒரு மனிதன் வாசிப்பது மூலம் யோசிக்கிறான். யோசிப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறான். நாம் யோசிப்பதன் மூலம் ஜனங்களின் நிலையை மாற்ற வேண்டும். பாரம்பரியமான அறிவுச் செல்வத்தை நாம் தக்க வைத்துக்கொள்ளப் போராட வேண்டும்.
பிரம்மாண்டங்களுக்கு எதிராக சிந்திக்கும் கலகக்குரல் நமக்கு வேண்டும். பண்பாடு என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு வேண்டும்.




































