


எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அமெரிக்காவைப் பற்றி நான் அறிந்திருந்தது இதுதான்: அமெரிக்கா வளர்ச்சிபெற்ற, பணக்கார நாடு என்பதோடு ஜனநாயகம் தழைத்தோங்கி இருக்கும் நாடு.
திருமணம் முடிந்த கையோடு அமெரிக்காவுக்கு வந்து ஐந்து வருடங்கள் இங்கு வாழ்ந்தபோது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அமெரிக்காவின் வளமையைப் பார்த்த பிறகுதான் இந்தியாவின் வறுமை என்னை மிகவும் வாட்டியது. கம்யூனிஸக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. அமெரிக்கா முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பின்பற்றிவந்த நாடு என்றாலும் அடித்தட்டு மக்களுக்கும் தேவையான உணவு, உடை கிடைத்துக்கொண்டிருந்தது.
இந்தியாவில் இல்லாத சில சிறந்த விழுமியங்களை – கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டாமல் சாலைகளை சுத்தமாக வைத்திருப்பது, தபால்நிலையம் போன்ற இடங்களில் அங்கு வேலைபார்க்கும் அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வது, பொது இடங்களுக்கு வரும் மக்கள் முண்டியடிக்காமல் தங்களுடைய முறைக்காகப் பொறுமையாக வரிசையில் காத்திருப்பது – அமெரிக்க மக்கள் அணுசரித்துக்கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் என்னை மிகவும் ஈர்த்தன.
இன்னொன்றையும் நான் இங்கு கூறியாக வேண்டும். அப்போது நாங்கள் இங்கு இருந்தபோது என் கணவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக்கொண்டும் தென் ஆசியத் துறையில் தமிழ் கற்பித்துக்கொண்டும் இருந்தார்.
அதனால் எங்கள் தொடர்புகள் எல்லாம் பல்கலைக்கழக ஆசிரியர்களோடும் மாணவர்களோடும்தான். அதற்கு அப்பால் எப்போதாவது வெளியில் செல்லும்போது சிலரைச் சந்திப்பதோடு சரி. சமூகத்தின் எல்லாத் துறையினரையும் சந்திக்கும் வாய்ப்பு அவ்வளவாகக் கிடைக்கவில்லை. ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பியபோது அமெரிக்காவைப் பற்றிய ஒரு உயர்ந்த எண்ணத்தோடுதான் திரும்பினேன்.
இருபது வருடங்களுக்குப் பிறகு மறுபடிஅமெரிக்காவில் தொடர்ந்து வாழ வாய்ப்புக் கிடைத்தபோது அமெரிக்காவின் பல தரப்பட்ட மக்களையும் சந்திக்கும் வாய்ப்பும் அவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. பல இடங்களில் வேலைபார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதனால் அமெரிக்கக் கார்ப்பரேட்டுகள் இயங்கும் விதம் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. முதலாளித்துவப் பொருளாதாரத்தைப் பின்பற்றிக்கொண்டிருந்த நாடு முதலாளித்துவத்தில் முதன்மை இடம் பெற்றிருப்பது (capital of capitalism) தெரிந்தது. முதலாளித்துவம் வளர, வளர மக்களிடையே சமத்துவமின்மையும் அதிகரித்திருந்தது.
அமெரிக்க ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. முன்பெல்லாம் சிறந்த விழுமியங்கள் உள்ளதாகக் காட்டிக்கொண்டவர்களுக்கு மட்டுமே ஜனாதிபதித் தேர்தலில் நிற்கும் அருகதை இருந்தது. விவாகரத்து செய்துகொண்டவர்களுக்கு வாய்ப்புக் குறைவு. அதெல்லாம் கொஞ்சம் மாறிவிட்டிருந்தது. ஒரு தடவை விவாகரத்து செய்துகொண்ட ரீகன் இரண்டு முறை ஜனாதிபதியானார். ஜனாதிபதியாவதற்குத் தேவையான விதிமுறைகள் எல்லாம் ட்ரம்ப் தேர்தலுக்கு நின்றபோது முற்றிலும் மாறிவிட்டன.
ஒபாமா ஜனாதிபதியானதும் ‘ஒரு கருப்பர் ஜனாதிபதி ஆவதா?’ என்று கருப்பர்களை வெறுத்த பல அமெரிக்கர்கள் கேட்க ஆரம்பித்தனர். ‘வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பரா?’ என்றுகூட சிலர் கேட்டனர். ஜனாதிபதியின் இருப்பிடத்திற்கு வெள்ளை மாளிகை என்று பெயர் கொடுத்தார்களே யொழிய வெள்ளை இனத்தவர் மட்டுமே அங்கு வசிக்க வேண்டும் என்று ஒரு விதியும் இல்லை என்பதை ஒரு சில அமெரிக்கர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒபாமாவை எப்படியும் பதவியிலிருந்து விலக்கிவிட வேண்டும் என்று ட்ரம்ப் உட்பட பல வெள்ளை இனவாதிகள் முயன்றனர்.
ட்ரம்ப் நியூட் கிங்க்ரிச் என்பவரை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும்படி 2012-இல் – அதாவது ஒபாமா இரண்டாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது – ஊக்குவித்துப் பண உதவியும் செய்வதாக இருந்தார். ஆனால் அவர் முதல்நிலைத் தேர்தலிலேயே தோற்றுவிட்டதால் ட்ரம்ப்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிர்த்து நின்ற ராம்னியை ஒபாமா வென்றார்.
2016-இல் ட்ரம்ப் தானே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஒபாமா செய்த பல சீர்திருத்தங்களை – அமெரிக்காவுக்கு வேண்டாதவை என்று தான்நினைத்தவற்றை –மாற்ற முடிவுசெய்தார். தான் ஜெயிப்போமா என்ற சந்தேகம் அவருக்கு இருக்கத்தான் செய்தது. இருப்பினும் அவரே எதிர்பார்க்காமல் அவரை எதிர்த்து நின்ற ஹிலரி கிளின்டனைத் தோற்கடித்து ஜனாதிபதியானார். ஹிலரியைவிட மூன்று லட்சம் ஓட்டுக்கள் குறைவாக ட்ரம்ப் பெற்றிருந்தாலும் அவரைவிட electoral college ஓட்டுக்கள் அதிகம் பெற்றதால் அவருக்கு வெற்றி கிடைத்தது.
பதவிக்கு வந்த நாளிலிருந்து ஒபாமா செய்த எல்லாவற்றையும் அவர் செய்தவை என்பதற்காகவே முற்றிலுமாக மாற்றினார். ஏழைகளையும் கருப்பர்களையும் அவர் கண்டுகொள்ளவேயில்லை. பணக்காரர்களுக்கு நிறைய வரிச்சலுகை கொடுத்தார். அமெரிக்காவின் பணம் எந்த நாட்டிற்கும் போய்விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார். இதுவும் ஒரு முக்கிய காரணம் அவர் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காமல் இருந்ததற்கு. அமெரிக்காவின் வளம் அமெரிக்கர்களுக்கு அதுவும் அமெரிக்க வெள்ளையர்களுக்கு மட்டுமே என்பதுபோல் காரியங்கள் செய்துவந்தார்.
இந்த தாரகமந்திரம் வெள்ளை இனவாதிகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இவருக்கு இருந்த ஆதரவாளர்களைவிட இவருடைய பதவிக் காலத்தின் முடிவில் அதிகம் பேர் இருந்தனர். இப்படி ஆதரவாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டுபோனதால் இரண்டாவது முறையும் வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைத்தார்.
இவர் ஒரு மிகச் சிறிய மனிதர்; மனிதனுக்குள்ளிருக்கும் அற்ப குணங்களின் மொத்த உரு. அவ்வப்போது தன்னுடைய ஆதரவாளர்களிடமும் இந்தக் குணத்தை வெளிக்கொண்டுவந்து அதற்குப் புத்துணர்ச்சி ஊட்டினார். அதனால் 2020-இல் ஓட்டளித்தவர்களில் 48% பேர் இவருக்கு ஓட்டளித்திருக்கிறார்கள். அப்படியும் பைடன் இவரைவிட அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார்.
தான் தோற்றுப் போகலாம் என்று ட்ரம்ப் நினைத்திருந்தாலும் இப்போது நிஜமாகவே தோற்றுப்போய்விட்டதால் தேர்தல் நாணயமாக நடத்தப்படவில்லை என்று பல பொய்க் காரணங்கள் கூறித் தேர்தல் முடிவுகளை தனக்குச் சாதகமாக மாற்றிவிட முயன்று வருகிறார்.
உச்சநீதிமன்றத்தில் இவர் நியமித்த மூன்று பழமைவாத நீதிபதிகள் இருப்பதால் தேர்தல் சரியாக நடத்தப்படவில்லை என்று கூறி வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றால் அங்கு தனக்குச் சாதகமாக வழக்கின் முடிவு இருக்கும் என்று நம்புகிறார். அதனால் வழக்கமாக தோற்றுப்போன ஜனாதிபதிகள் செய்வதுபோல் இவர் இதுவரை தோற்றுப்போனதாக ஒப்புக்கொள்ளவில்லை.
இவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களும் இவரோடு ஒத்துஊதுகிறார்கள்; 2016 தேர்தலுக்கு முன் இவர் குடியரசுக் கட்சி வேட்பாளராக நியமனம் பெற்றபோது இவரை வெகுவாக எதிர்த்த இவருடைய கட்சிக்காரர்கள்கூட இப்போது ட்ரம்ப் தான் தோற்றுப் போனதாக ஒத்துக்கொள்ளாததும் தேர்தல் நாணயமாக நடத்தப்படவில்லை என்று இவர் சொல்வதும் சரியே என்று வாதாடுகிறார்கள்.
தேர்தல் சரியாக நடக்கவில்லை என்று கூறி ஒவ்வொரு மாநிலத்திலும் பல வழக்குகள் தொடர்ந்திருக்கிறார். இவற்றில் ஆதாரம் எதுவும் இல்லையென்பதால் பல வழக்குகள் தள்ளப்பட்டிருக்கின்றன; இருந்தாலும் கடைசியாக வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைத்து பல குறுக்கு வழிகளைக் கையாளுகிறார்.
வெற்றி பெற்றிருக்கும் ஜோ பைடன் பதவியேற்பதற்கு எல்லா வகையான இடைஞ்சல்களையும் குறுக்கு வழிகளில் செய்துவருகிறார். பொய்கள் மட்டுமே உரைத்துப் பழக்கப்பட்ட இவர் தன்னுடைய ஆதரவாளர்களை வன்முறையில் இறங்கவும் தூண்டலாம் என்ற அச்சமும் இருக்கிறது.
அமெரிக்கா இப்போது இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது; இப்படி மக்களிடம் பிளவை ஏற்படுத்தியதற்கு ட்ரம்ப்தான் முக்கிய காரணம். அமெரிக்காவின் போதாத காலம் இவர் நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். இன்னும் நான்கு ஆண்டுகள் இவர் பதவியில் நீடித்தால் அமெரிக்காவை மட்டுமல்ல, உலகையே திருத்த முடியாத அளவுக்குத் திசைதிருப்பிவிடுவார் என்று அரசியல் வல்லுநர்கள் பயப்படுகிறார்கள்.
அதே சமயம் இவருடைய குறுக்கு வழிகள் எதுவும் பலனளிக்காது என்றும் நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கை பொய்க்காது என்பதுதான் என் நம்பிக்கையும்.



































