
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள் சிறந்தவர்களாக, சாதித்தவர்களாக, வெற்றி பெற்றவர்களாக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
உண்மையில் குழந்தையின் நிமித்தம் நாம் கொண்டிருக்கும் அதிகபட்ச எதிர்பார்ப்பே அதுவாகத் தான் இருக்கிறது. குழந்தைகளை அதன் பொருட்டே நாம் ஒவ்வொரு கட்டத்திலும் வளர்த்து வருகிறோம். குழந்தைகளுக்கு நாம் வழங்கும் அறிவுரைகள், போதனைகள், கட்டுப்பாடுகள் என அனைத்துமே இதையே நோக்கமாக கொண்டிருக்கின்றன.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற குழந்தையாக நமது குழந்தை மிளிர்வதற்கு அந்த குழந்தையை எந்தெந்த வகையில் தயார் செய்ய வேண்டும், என்னென்ன கற்றுக்கொடுக்க வேண்டும், எப்படியெல்லாம் நமது குழந்தையை மாற்ற வேண்டும் என எப்போதும் யோசிக்கும் நாம், அதற்காக நாம் எப்படியெல்லாம் மாற வேண்டும், நமது அணுகுமுறைகளை, எதிர்பார்ப்புகளை, கட்டுப்பாடுகளை நாம் எந்தளவிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என பெரும்பாலும் யோசிப்பதில்லை.
பெற்றோர்களே இல்லாத குழந்தைகள் கூட வாழ்க்கையில் வெற்றி பெற்ற குழந்தைகளாக மாறியிருக்கின்றன என்பதை நாம் பல நேரங்களில் பார்த்திருக்கிறோம். அதனால் குழந்தை வெற்றி பெற்றதற்கு நாம் தான் காரணம் என உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால் ஒரு குழந்தை தோற்றுப்போவதற்கு ஏதோ ஒரு வகையில் மாற்றிக்கொள்ளாத நமது பிடிவாதமான அணுகுமுறைகள் இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் உறுதியாகச் சொல்கின்றன.
அந்த வகையில் வாழ்க்கையில் வெற்றி பெற்ற குழந்தைகளிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் இதன் நிமித்தம் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் ‘ஒரு குழந்தையை வெற்றி பெற்ற குழந்தையாக மாற்றுவதற்கு பெற்றோர்களிடம் இருக்க வேண்டிய சில முக்கியமான குணங்கள்’ என பட்டியல் போட்டிருக்கின்றன. அதில் உள்ளவற்றை இங்கே பார்ப்போம்:
குழந்தைகளை அவர்களின் வேலையை அவர்களே செய்ய விடுங்கள் :
ஜூலி ஹைன்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர். குழந்தைகள் உளவியல் தொடர்பாகவும், குழந்தை வளர்ப்பு தொடர்பாகவும் பல உரைகள், ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். “How to Raise an Adult” என்ற தலைப்பில் அவர் தொடர்ச்சியாக ஆற்றிவரும் Tedx உரைகள் சமூக வலைதளங்களில் மிக பிரபலமானவை.
அவர் தான் பார்த்த வெற்றி பெற்ற குழந்தைகளிடம் இருந்த மிக முக்கியமான குணம் என “குழந்தைகளின் அன்றாட வேலைகளை அவர்களே செய்துகொள்வது தான்” என்கிறார். அவர்களுடைய அன்றாட சாதாரண வேலைகளைக் கூட அவர்களுக்குப் பதிலாக நாம் செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கு எப்படி தன்னம்பிக்கையும், தைரியமும் வரும்? என கேட்கிறார்.
பெரும்பாலான நமது குடும்பங்களில், பெற்றோர்கள் தான் குழந்தைகளின் அத்தனை வேலைகளையும் செய்கிறார்கள், குளிப்பாட்டுவது, பல் துலக்குவது, உடைகளை எடுத்து வைப்பது, அணிவித்து விடுவது, பள்ளிக்குத் தேவையானவற்றை எடுத்து வைப்பது தொடங்கி சாப்பாடு ஊட்டுவது வரை அத்தனையையும் பெற்றோர்களே செய்கிறார்கள்.
அதுவும் இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று ஒரு குழந்தை கவனிப்பது கூட இல்லை. டிவியைப் போட்டு விட்டு பார்க்க தொடங்கினால் போதும் தலை சீவி, உடை அணிந்து, சாப்பாடு ஊட்டி என அத்தனையும் அம்மாவே வந்து செய்து விடுவார். எல்லாம் செய்ததற்குப் பிறகு டிவியை அணைத்து விட்டு பள்ளிக்கு அனுப்பியும் வைப்பாள்.
தங்களது வேலைகளை குழந்தைகள் செய்யத் தொடங்கும்போது தான் அவர்கள் அதில் உள்ள சிக்கல்களை, கால அளவுகளை, நேர்த்தியை கற்றுக்கொள்கிறார்கள். அதுவும் அன்றாட வேலைகள் போன்ற சுலபமான வேலைகளில் இருந்து நேர்த்தியையும், ஒழுங்கையும், நேர மேலான்மையையும் மிக எளிதாக குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும், அது மட்டும் இல்லாமல் அப்போது மற்றவர்களின் உதவியை, தேவையை, கஷ்டங்களை அவர்கள் புரிந்து கொள்ள தொடங்குவார்கள். அது அவர்களை பக்குவப்பட்டவர்களாக மாற்றும்.
தங்களது இயல்புகள், குறைகள், போதாமைகள், விருப்பங்கள் என குழந்தைகள் தங்களைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்வதற்கும் இந்த அன்றாட வேலைகளை செய்வது உதவியாக இருக்கும்.
“நல்ல திட்டமிடக்கூடியவர்களாக, சக மனிதர்களுடன் சிறப்பாக ஒருங்கிணைக்கக்கூடியவர்களாக, ஒரு செயலை மிகத் துல்லியமாகவும், சரியான நேரத்தில் சிறப்பாக முடிக்கக்கூடியவர்களாக இன்று இருக்கும் ஆளுமைகள் அனைவரிடம் சிறு வயதில் இருந்த ஒரு பொதுவான பண்பு அவர்களின் அன்றாட வேலைகளை அவர்களே செய்பவர்களாக இருந்தது தான்” என்கிறார் பேராசிரியர் ஜூலி.
அதனால் குறைந்தபட்சம் குளிப்பது, உடை உடுத்துவது, பள்ளிக்கு தேவையானவற்றை எடுத்து வைப்பது, வேண்டுபவற்றை அவர்களையே போய் எடுத்துக்கொள்ளச் செய்வது, பொருட்களை ஒழுங்குடன் அடுக்கி வைப்பது, கொஞ்சமே சாப்பிட்டாலும் தானே சாப்பிடப் பழகுவது என குழந்தைகளை நாம் பழக்கலாம்.
சகமனிதர்களுடன் உறவாடும் திறனை வளர்த்தல்:
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் 700 நர்சரி பள்ளிக் குழந்தைகளை அவர்களின் இருபத்தைந்து வயது வரை தொடர்ச்சியாக கவனித்து ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதில் இருபத்தைந்து வயதில் சிறப்பான ஆளுமையுடைவர்களாகவும், வெற்றி பெற்றவர்களாகவும் இருப்பவர்கள் சிறுவயதில் இருந்தே மற்றவர்களிடம் கனிவாகவும், மிக எளிமையாக பழகுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.
சக குழந்தைகளுடன், மனிதர்களுடன் இணக்கமாக பழகும் திறன் அந்த குழந்தையை வெற்றிப் பாதையை நோக்கி மிகச் சுலபமாக கொண்டு சேர்க்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.
ஆனால் இன்றைய கல்விச் சூழலில் பெற்றோர்களாகிய நாம் எந்த அளவிற்கு குழந்தைகளிடம் இதை அனுமதிக்கிறோம் அல்லது சொல்லித் தருகிறோம்? “அவனை விட நீ நிறைய மார்க் வாங்க வேண்டும்” “அவனை நீ இந்த போட்டியில் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்” “அவனை விட நீ நன்றாக டேன்ஸ் ஆட வேண்டும்” என சிறு குழந்தைகளின் மனதில் அவர்களின் நண்பர்களின் மீது ஒரு போட்டி மனப்பான்மையைத்தான் எந்நேரமும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
சக குழந்தைகளை எப்போதும் போட்டியாளராக நினைத்துக் கொண்டு வளரும் குழந்தை எப்படி அவர்களுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும்? அதே போல யாரிடமும் நமது குழந்தைகளை சுலபமாக பழகவிடுவதையும் நாம் அனுமதிப்பில்லை. “அவர்களோட என்ன பேச்சு? வந்து படி” “பக்கத்து வீட்டுக்குலாம் போகக் கூடாது” என எந்த நேரமும் நமது கைகளுக்குள்ளேயே நமது குழந்தைகளை வளர்த்து வருகிறோம்.
எந்த நேரமும் நமது கட்டுப்பாட்டிலேயே வளரும் குழந்தைகள் பழகும் திறனை முற்றிலுமாக இழக்கிறார்கள். முதன்முறையாக சமூகத்தை தனியாக எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது திணறிவிடுகிறார்கள், மனிதர்களை புரிந்து கொள்வதிலும், அவர்களுடன் நீடித்த உறவை ஏற்படுத்திக்கொள்வதிலும் ஏராளமான சிக்கல்களை முதல் முறையாக சந்திக்கத் தொடங்குகிறார்கள் அது தான் அவர்களின் வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலானதாக அமைந்து விடுகிறது.
சிறு வயதில் இருந்தே அவர்கள் இந்த திறனுடன் வளரும்போது அவர்களுக்கு மனிதர்களை எப்படி கைக்கொள்ள வேண்டும் என்பதை கற்றுவிடுகிறார்கள் அது ஒரு போதும் வெற்றியை நோக்கிய அவர்களின் பாதைக்கு குறுக்கே வராது.
இரண்டு பெற்றோர்களுக்கும் இடையேயான ஆரோக்கியமான உறவு:
கணவன், மனைவிக்கு இடையே அதாவது குழந்தையின் அப்பா அம்மாவிற்கு இடையே இருக்கும் ஆரோக்கியமான, புரிதலுடைய, பக்குவமான உறவு என்பது குழந்தையின் எதிர்காலத்திற்கும் அதன் மனநிலைக்கும் மிக அவசியமானது என பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஒரு விஷயத்தை எப்படிச் சொல்கிறோம் அதைப் பற்றி எப்படி உரையாடுகிறோம், அதன் மீதுள்ள நமது முரண்களை எப்படி கலைகிறோம், அதன் நிமித்தம் எப்படி ஒரு ஒருமித்த உறவிற்கு வருகிறோம் என்பதையெல்லாம் குழந்தைகள் தொடர்ச்சியாக நம்மிடம் கவனித்தே வளருகின்றன. அதிலிருந்து குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கின்றன.
அதன் படியே அவர்களும் நடந்து கொள்கிறார்கள். அதே போல பெற்றோர்கள் ஒரே நேரத்தில் இரண்டு எதிர்மறையான போக்கில் குழந்தைகளிடம் நடந்து கொள்வதும் குழந்தைகளிடையே குழப்பத்தை அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு அம்மா “டிவியே பார்க்கக்கூடாது, டிவியே பார்த்துக்கொண்டிருந்தால் படிப்பு வராது” என்று சொல்லும் நேரத்தில் “அப்படியெல்லாம் குழந்தைய பயமுறுத்தாத, டிவி பார்த்தா அறிவு நல்லா வரும்” என்று அப்பா சொல்வது நிச்சயம் குழந்தைகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தும்.
பெற்றோர்களுக்கிடையே எதிர்மறை கருத்துக்கள் இருக்கலாம், நிறைய நேரங்களில் இருவரும் தங்களது கருத்துகளில் மாறுபடலாம் ஆனால் குழந்தையிடம் ஒற்றைக் கருத்து மட்டுமே சொல்லப்பட வேண்டும், உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால் தனியாக நீங்கள் விவாதித்துக் கொள்ளலாமே தவிர குழந்தைக்கு முன்னால் இன்னொருவரையோ அல்லது அவரது கருத்தையோ மட்டப்படுத்தக்கூடாது.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ரகளை செய்யும், மோசமாக நடந்து கொள்ளும் மாணவர்கள் எல்லாம் அந்த நடத்தைகளை பெரும்பாலும் அவர்களின் வீட்டில் இருந்தே கற்றிருக்கிறார்கள் என்கின்றன உளவியல் ஆராய்ச்சிகள். அதனால் வீட்டை நாம் ஆரோக்கியமாக, வீட்டில் உள்ள மனிதர்களுக்கிடையேயான உறவுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் போது குழந்தையும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையே கற்றுக்கொள்கிறது.
பெற்றோர்களின் மனஅழுத்தம்:
அலுவல்கள் நிமித்தமாகவோ அல்லது குடும்ப பொறுப்புகள் நிமித்தமாகவொ பெற்றோருக்கு ஏற்படும் மனஉளைச்சல்கள் குழந்தைகளின் மனநிலையை பாதிக்கின்றன என்கின்றன ஆய்வுகள். நீங்கள் அதை வெளியே சொல்லவில்லையென்றாலும் உங்களது நடவடிக்கைகள், உடலசைவுகள், முகத்தோற்றங்களை வைத்து குழந்தைகள் அதை யூகித்துவிடுவார்கள்.
அதனால் குழந்தைகள் இருக்கும் வீட்டில் எந்த ஒரு சிக்கலையும் நீடிக்க விடாமல் அதற்கான தீர்வை உடனடியாகத் தேடி அதை சரி செய்வது அவசியமானது. இரண்டு பேரும் வேலைக்கு போகக்கூடிய சூழலில் உள்ள குடும்பங்களில் இது போன்ற மன உளைச்சல்கள் அதிகமாக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
அப்படி இருக்கும்போது அதை முடிந்தவரை குழந்தைகளிடம் காட்டாமல் இயல்பாக நடந்து கொள்வதும், அப்படி ஒருவருக்கு மனஅழுத்தம் இருக்கும்போது இன்னொருவர் அக்கறையுடனும், கரிசனத்துடனும் அருகே இருந்து அவரை பார்த்துக்கொள்வது குழந்தையின் மனநிலையில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும்.
வாசிப்பு பழக்கம்:
நான் சிறுவயதாக இருந்தபோது எங்களது கிராமத்தில் ஒரு பொது நூலகம் இருந்தது. மிகச் சிறிய நூலகம் அது. எனது பள்ளியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் தான் அந்த நூலகம் இருக்கும்.
ஒரு பெரிய முன்னறை அதில் பெரிய மேஜை அதைச் சுற்றிலும் ஏழெட்டு நாற்காலிகள் இடப்பட்டிருக்கும், அன்றைய தினசரிகள், நாளிதழ்கள், சிறுவர்களுக்கான காமிக்ஸ், அம்புலிமாமா என அந்த மேஜை முழுக்க பரவிக் கிடக்கும்.
உள்ளறையில் நூலகம் நான்கைந்து அலமாரிகளில் புத்தகம் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும். ஒரு நடுத்தர வயது நூலகர் இருப்பார். பள்ளி முடிந்ததும் நூலகம் சென்றுவிட்டுத் தான் வீட்டுக்குச் செல்வேன். ஐந்து ரூபாய் கொடுத்து அப்போதே நான் அதில் உறுப்பினராக இருந்தேன். என்னைப் போல பல பள்ளி மாணவர்கள் அந்த நூலகத்தில் உறுப்பினர்களாக இருந்தார்கள்.
நூலகர் எங்களுக்கு இன்னொரு ஆசிரியர் போன்றவர். ஏராளமான உலக அரசியல், பொருளாதார, வரலாறுகளை எல்லாம் மாணவர்கள் அந்த வயதில் இருந்தே வாசிக்கத் தொடங்குவதற்கு அவர்தான் ஊக்கமாக இருந்தார்.
சமீபத்தில் அந்த நூலகம் சென்றிருந்தேன், யாருமே இல்லாமல் அத்தனை வெறுமையாக இருந்தது, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இரண்டு பேர் அன்றைய தினசரிகளை பார்த்துக்கொண்டிருந்தனர், வயதான நூலகர் ஒருவர் இருந்தார். அவரிடம் பேசும்போது “யாரு தம்பி இப்பல்லாம் புத்தகம் படிக்கிறா? அதான் ஃபோன் வந்துருச்சே எல்லாம் அதுல தான் இருக்காங்க, பக்கத்துல தான் பள்ளிக்கூடம் இருக்கு, ஒரு மாணவர் கூட இந்த பக்கம் வர்றதில்லை, படிக்கிறதுனாவே பாடப்புத்தகம் மட்டும்தான்னு ஆய்டுச்சி” என்றார்.
இன்றைய மாணவர்களிடம் நிச்சயமாக வாசிப்புப் பழக்கம் குறைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. டிஜிட்டல் சாதனங்களில் வரவு அதற்கு முக்கியமான காரணமாக இருந்தாலும் அது மட்டுமே முழுமையான காரணமல்ல.
மாணவர்களின் உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போட்டி நிறைந்த உலகமாகிக்கொண்டிருக்கிறது. இயல்பான கல்வி என்பது போட்டியாக மட்டுமே பார்க்கக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. அதனால் கல்விக்கு வெளியே வாசிப்பு என்பது குழந்தைகளிடம் தேவையற்ற வேலை என்பது போன்ற கருத்தை பெற்றோர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
வாசிப்பின் மீதான ஆர்வம் புறந்தள்ளப்படுகிறது, அது எந்த வகையிலும் போட்டியில் வெல்வதற்கு உதவாது என்ற மனப்பான்மையை பெற்றோர்களும் ஆசிரியர்களும் இன்றைய குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் வாசிப்பு என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை, கற்றல் திறனை மேம்படுத்துகின்றன என ஆய்வுகள் சொல்கின்றன, இன்ஃபார்மல் வாசிப்பு அதாவது பாடபுத்தகங்கள் இல்லாத வாசிப்புகள் குழந்தைகளின் சிந்தனைகளை கூர்மைப்படுத்துகின்றன.
நிறைய வாசிப்பு பழக்கம் இருக்கும் குழந்தைகள் வாழ்க்கையின் எந்த சூழ்நிலைகளிலும் சவால்களை எதிர்கொள்வதில் தயங்குவதில்லை, சுய சிந்தனை, பகுத்தறியும் திறன் போன்றவையெல்லாம் வாசிப்பின் வழியாகவே மேம்படுகின்றன என்கின்றன ஆய்வுகள்.
இவையெல்லாம் வெற்றி பெறும் குழந்தைகளின் பொதுவான பண்புகளாக இருக்கின்றன. அதனால் குழந்தைகளை வாசிக்கச் செய்ய வேண்டும், எதை வேண்டுமானாலும் வாசிக்கலாம், நல்லது, கெட்டது என்பது கிடையாது படிப்பதில் இருந்தே அதை அவர்கள் பிரித்தறிந்து கொள்வார்கள். அச்சுப் புத்தகம், மின்னூல் என குழந்தைகள் விரும்பிய வடிவில் விரும்பியதை படிக்க நாம் அனுமதிக்க வேண்டும், வாசிப்பது என்பது நிச்சயமாக நேர விரயம் கிடையாது. நிறைய வாசிக்கும் பழக்கமுடைய குழந்தைக் கல்வியிலும் சிறந்து விளங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.


































