



அல்குர்ஆன் விவரிக்கும் மூஸா (அலை) மற்றும் யூஸுப் (அலை) ஆகியோரது வரலாற்றில் ஒன்றோடொன்று ஒத்துப் போகின்ற நிறைய விசயங்கள் இருக்கின்றன. அவைகள் நமது குழந்தை வளர்ப்பில் நமக்கு வழிகாட்டுதலாக அமையும்.
இருவரது வரலாறும் அல்குர்ஆனில் குழந்தைப் பருவத்தில் இருந்தே விவரிக்கப்பட்டுள்ளது. இருவரும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். இருவரது பெற்றோரும் தமது குழந்தைகளின் பிரிவுத் துயரை எதிர்கொண்டார்கள். இவ்விரு இறைதூதர்களும் சொந்த நாட்டைத் துறந்து வேறு பூமியில் தங்களது வாலிபத்தைக் கழித்தவர்கள். இறுதியில் இரண்டு இறைதூதர்களும் சமூகத்திலும், தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பிலும் மகத்தான பணியாற்றியவர்கள்.
1. மூஸா (அலை), யூஸுப் (அலை) ஆகிய இருவரின் பெற்றோரும் பிரிவுத்துயருக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
மூஸா (அலை) அவர்களது விசயத்தில் இறைக்கட்டளை நேரடியாக வந்தது. மூஸாவுக்குப் பாலூட்டுவீராக! அவர் குறித்து நீர் அஞ்சினால் அவரை ஆற்றில் போட்டு விடுவீராக! நீர் அஞ்ச வேண்டாம். துக்கப்படவும் வேண்டாம். நிச்சயமாக நாம் அவரை உம்மிடமே திருப்பிக் கொண்டு வந்து, நம் தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம் என அவரின் தாயாருக்கு நாம் அறிவித்தோம். (28: 7)
மூஸாவின் தாயுள்ளம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள். (28: 10)
யூஸுப் (அலை) விசயத்தில் அன்னாரது ஒரு சகோதரர் ஆலோசனை வழங்கினார்: நீங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் அவரை ஆழமான கிணற்றில் போட்டு விடுங்கள். பிரயாணிகள் சிலர் அவரை எடுத்துக் கொண்டு செல்வார்கள் என அவர்களில் ஒருவர் கூறினார். (12: 10)
யூஸுப் (அலை) அவர்களை இழந்த துயரத்தில் அவரது தந்தை யஃகூப் (அலை) யூஸுபின் மீதுள்ள என் துக்கமே! என்று கூறினார். கவலையால் அவரது இரு கண்களும் வௌ்ளை படர்ந்து விட்டன. எனினும், அவர் துக்கத்தை அடக்கிக் கொண்டார். (12: 84)
2. மூஸா (அலை) மற்றும் யூஸுப் (அலை)யின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நிலையை அறிந்துகொள்ள விரும்பினார்கள்.
மூஸா (அலை)யின் தாயார் தன் குழந்தை பற்றிய தகவலை அறிந்துகொள்ள நினைத்தார். இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். ( (28: 11)
யூஸுப் (அலை) அவர்களின் தந்தையும் அவ்வாறே கூறினார். எனது புதல்வர்களே! நீங்கள் சென்று யூஸுபையும் அவரது சகோதரரையும் நன்றாகத் தேடிப் பாருங்கள். அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். ஏனெனில், நிராகரிக்கும் கூட்டத்தினரே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழப்பார்கள். (12: 87)
அதாவது, அவர்கள் தம் நோக்கமும் இலட்சியமும் நிறைவேற அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதைக் கைவிட்டுவிடக் கூடாது என உத்தரவிட்டார். ஏனெனில், இறைவனை மறுக்கும் கூட்டத்தார் தவிர வேறு யாரும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கையிழக்கவோ ஆதரவிழக்கவோ மாட்டார்கள்.
3. இரு குழந்தைகளும் அரச குடும்பங்களால் வசீகரிக்கப்பட்டனர்.
(நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கம் தருபவராகவும் ஆவதற்காக! (28: 8)
உண்மையில், குழந்தை மூஸாவை எடுப்பதன் மூலம் அவர் தங்களுக்கு விரோதியாகவும் கவலையாகவும் மாற வேண்டும் என்பது குழந்தையை எடுத்தவர்களின் நோக்கமாக இருக்கவில்லை.
யூஸுப் (அலை) அவர்கள் அடிமைச் சந்தையில் எவ்வாறு அமைச்சரால் விலைக்கு வாங்கப்பட்டார் என்பதை அல்லாஹ் கூறுகிறான்:
பின்னர் ஒரு பயணக் கூட்டம் வந்து தமக்கு தண்ணீர் எடுத்து வருபவரை அனுப்பி வைத்தனர். அவர் தனது வாளியைக் கிணற்றில் போட்டதும் ஒரு நற்செய்தி! இதோ ஓர் அழகிய சிறுவன் எனக் கூறினார். அவர்கள் அவரை (யூசுஃபை) வியாபாரப் பொருளாக மறைத்துக் கொண்டனர். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். அற்ப மதிப்புள்ள குறிப்பிட்ட சில வௌ்ளி நாணயங்களுக்கு அவரை இவர்கள் விற்றனர். (12: 19 – 20)
4. மூஸா, யூஸுப் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகிய இருவரையும் பெற்றுக் கொண்டவர்கள் குழந்தைப் பாக்கியமற்ற தம்பதிகளாகவே இருந்தனர்.
எனவே, அவர்கள் இக்குழந்தைகளை பெரும் பாக்கியமாகக் கருதி பரவசமடைந்தனர். இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது – இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை. (28: 9)
(யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் வளர்ப்பு) மகனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். (12: 21)
5. இரு நபிமார்களையும் பயிற்றுவித்து, அவர்களது உள்ளத்தை உறுதிமிக்கதாக ஆக்கி, அவர்களது ஆளுமையை விருத்தி செய்ததன் நோக்கத்தை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இன்னும், (மூஸாவாகிய) அவர் வாலிபமடைந்து, (பக்குவ) நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் அளித்தோம் – இவ்வாறே நல்லோருக்கு நாம் (நற்) கூலி வழங்குகிறோம். (28: 14)
(யூஸுபாகிய) அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். (12: 22)
ஞானம் என்பது மெய்யறிவு, பேருண்மையைப் பற்றிய ஞானத்தைக் குறிக்கிறது. இது நேரடியாக வஹியின் மூலமாக நபிமார்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் அறிவுப் பலத்திலும் உடல் பலத்திலும் முழுமை பெற்றபோது அதிகாரத்தையும் ஞானத்தையும் நபித்துவத்தையும் அல்லாஹ் வழங்கினான்.
நபித்துவத்தின் மூலம் அந்த சமுதாய மக்களிடையே அவர்களை அல்லாஹ் தனக்கு நெருக்கமாக்கிக் கொண்டான். தீர்மானங்கள் எடுக்கும் ஆற்றல்கள் மட்டுமன்றி, அதிகாரம் செலுத்தும் நிலைமையையும் வழங்கி, மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளிலும் விவகாரங்களிலும் தீர்ப்பு வழங்குகின்ற திறமைகளையும் தகுதிகளையும் அல்லாஹ் வழங்கினான்.
6. மூஸா, யூஸுப் (அலைஹிமுஸ்ஸலாம்) இருவரும் தத்தமது பெற்றோருடன் ஒன்றிணையும்படியும் அல்லாஹ் செய்தான்.
அந்தப் பாக்கியம் மூஸா (அலை) அவர்களுக்கு குறுகிய காலத்திலும் யூஸுப் (அலை) அவர்களுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகும் கிட்டியது.
இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம்
(28: 13)
(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார். (12: 99)
7. இவை அனைத்தையும் பின்னாலிருந்து இயக்கிய ஒருவன் இருக்கவே செய்கிறான்.
அவனது அறிவை மிகைத்து வேறெதுவும் நடைபெறுவதில்லை. அத்தகைய வல்லமை மிக்க அல்லாஹ் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற, யாரும் அறிந்திராத விபரங்களை தன் இறுதித் தூதருக்கு அறிவித்தான்.
மேலும் மூஸாவுக்கு நாம் கட்டளைகளை விதித்தபோது நீர் தூர் மலையின் மேற்குப் பகுதியில் இருக்கவில்லை. (28: 44)
இவை மறைவான செய்திகளில் உள்ளவையாகும். அவற்றை நாமே உமக்கு வஹியாக அறிவிக்கிறோம். அவர்கள் யூஸுபுக்கு சூழ்ச்சி செய்தவர்களாக தமது விசயத்தில் ஏகமனதாக முடிவு எடுத்தபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (12: 102)
யூசுஃப் (அலை), மூஸா(அலை) இருவரும் வளர்ந்த விதம், சூழல், அதிலிருந்த சோதனை, அவற்றை அவ்விருவரும் எதிர்கொண்ட விதம் ஆகியவற்றின் சாரம்சத்தை மேலே வாசித்தோம்.
நாமும் நமது குழந்தைகள் மூலமாக சோதிக்கப்படுகிறோம். ஆனால் அதற்குப் பின்னால் அல்லாஹ் நம் கற்பனைக்கு எட்டாத அருள்களை மூடி மறைத்து வைத்துள்ளான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் சிறுபிராயத்திலிருந்து கடுமையான பயிற்றுவிப்புகளுக்கு உட்படுத்தப்படும்போது சமூகத்தில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் ஆற்றலையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள்.
நபிமார்களின் அந்தஸ்தை நமது குழந்தைகள் அடைய முடியாவிடினும் சமூகத்தில் பெரும் பணிகளைச் சுமந்து மனித குலத்திற்கும் நாட்டிற்கும் சேவையாற்றக் கூடிய ஆளுமைகளாகவும் நலன்விரும்பிகளாகவும் தொண்டு புரிபவர்களாகவும் தோற்றம் பெறுவது பெரும் பாக்கியமாகும்.
நமது பிள்ளைகளும் எதிர்காலத்தில் அல்லாஹ் எதிர்பார்க்கின்ற உயர்ந்த நிலையான இஹ்ஸானை அடைய வேண்டும். எனவே, அறிஞர்கள், மார்க்கப்பற்றுள்ளவர்கள், சிந்தனையாளர்கள் போன்றோருடன் சிறுவயதிலிருந்தே நமது குழந்தைகளுக்கு தொடர்பையும் நல்லுறவையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களது வழிகாட்டலிலும் கண்காணிப்பிலும் பிள்ளைகளை வளரவிட வேண்டும்.

































