





மனிதர்களின் வழிகாட்டியாக இருக்கும் அல்குர்ஆனையும், நபிமொழிகளையும் ஒவ்வொரு முஸ்லிமும் தங்களுடைய மார்க்கத்தின் முதன்மையான மூலாதாரங்களாக நம்புகின்றனர்.
தங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தேர்விலும் அவை இரண்டும் என்ன வழிகாட்டல்களை முன்வைக்கின்றன என்பதிலிருந்தே ஒரு முஸ்லிமின் தேடல் ஆரம்பிக்கிறது.
அந்த வகையில் மருத்துவம் பற்றி அவை என்ன கூறுகின்றன என்பதை மருத்துவத்துறையோடு தொடர்பான அல்குர்ஆனின் அனைத்து வசனங்களையும், நபிமொழிகளையும் ஹதீஸ்களையும் திரட்டி ஆராய்ந்து இன்றைய நவீன உலகிற்குத் தேவையான மருத்துவப் பார்வையை முஸ்லிம்கள் முன் வைக்க வேண்டும்.
இறைவனது மார்க்கத்திற்காக உழைத்தது போன்றே மருத்துவத்துறை வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் பெரிதும் பங்களித்துள்ளனர்.
“குர்ஆன் தன்னை ஒரு நோய் நிவாரணி” என்று அறிவிப்புச் செய்திருப்பது முஸ்லிம்கள் இத்துறையில் அதிக அக்கறை செலுத்தக் காரணமாக அமைந்தது.
ஒருமுறை “அல்லாஹ்வின் அடியார்களே! நீங்கள் மருந்துகளைக் கொண்டு பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள். மரணத்தைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்துகளை படைத்துள்ளான். ஆனால் மனிதர்கள் அதனை அறியாது உள்ளனர்.” என நபிகள் நாயகம் தந்த முஸ்லிம்களின் மருத்துவத்துறை பங்களிப்புக்கு ஊக்கப்படுத்தியது.
வரலாற்றாசிரியர் H.G. Wells தனது The Out Line of History என்ற நூலில் “ஐரோப்பாவில் சமயச் சடங்குகளாலேயே நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று நம்பி மருத்துவத் தொழில் தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் அரேபியர்கள் உண்மையான மருத்துவ முறையைப் பின்பற்றினர்.’ என்று குறிப்பிடுகிறார்.
கொள்ளை நோயாகக் கருதப்படும் பிளேக் நோய் பற்றி மிகச் சிறந்த ஒரு நூலை முதன் முதலில் எழுதியவர் “இப்னு காதிமா” ஆவார். ஸ்பெயினைச் சேர்ந்த அல்மீரியாவில் 1348-49 இல் பரவிய கொள்ளை நோயே, இந்த நூலை எழுத அவரைத் தூண்டியது.
பிளேக் நோய் பரவும் முறை, அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி அதற்கு முன்னர் கிரேக்கர்கள் அறிந்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதை முன்னுதாரணமாக வைத்து, 2019 ஆம் ஆண்டு இறுதி முதல் இன்று வரை கோரோனா நோயின் தாக்கம் உலகம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக சொல்லப்பட்டு, மக்களுடைய இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் சூழலில் இந்த சிக்கலை துயரத்தை எப்படி சரி செய்ய வேண்டும் என்று முஸ்லிம்கள் ஆராய வேண்டும்.
நோயைக் கண்டறிவது, நோய்க்கான மருந்துகளைக் கண்டறிவது மட்டுமல்ல நோயாளிகளை தங்க வைத்து மருத்துவம் பார்க்கும் மருத்துவமனைகளையும் நடத்துவதற்கும் நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
நோயாளிகளை தனியாக வைத்து சிகிச்சை அளிக்கும் முறை நபியவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. உதாரணமாக போர்க் காலங்களில் காயம் பட்டவர்களுக்கு மஸ்ஜிதுந் நபவியில் ஒரு பக்கத்தில் கூடாரம் அமைத்து அதில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.
இதன் மூலம் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்கள் இறைவழிபாட்டில் ஈடுபடவும், இறைவனது வார்த்தைகளைகாதுகள் கொடுத்து கேட்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
இஸ்லாமிய வரலாற்றில் மருத்துவத்துறைக்கு “வக்ப் நிறுவனங்கள்” வழங்கிய பங்கை இன்று எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதையும் முஸ்லிம்கள் ஆராய வேண்டும்.
இலாப நோக்கில்லாமல் பொது மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இயங்கும் ஒரு மருத்துவமனையை ஒவ்வொரு மஹல்லாவும் சின்ன அளவிலாவது தொடங்க முன் வரவேண்டும்.
இது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. இதன் மூலம் அமானிதம், மனிதாபிமானம் போன்ற விழுமியங்களை உயிர்ப்பிக்க முடியும்.
ஆரோக்கியம் என்பது உடல், உள்ளம் இரு பகுதிகளையும் கொண்டது. இன்றைய மருத்துவம் எல்லாவறையும் போல உளவியலையும் – உடல் ஆரோக்கியத்தையும் பிரித்து இரண்டுக்கும் வெவ்வேறு மருத்துவர்களைத் தேட வைத்திருக்கிறது.
இதன் காரணமாக முழுமையான ஆரோக்கியத்தை மனிதர்களால் அடைய இயலவில்லை. அல்லது இரண்டுக்கும் மருத்துவம் பார்க்கும் அளவுக்கு மக்களின் பொருளாதாரம் இடம் தருவதில்லை.
தலைசிறந்த மருத்துவ ஆளுமைகளை உருவாக்குவதும், ஒவ்வொரு மஹல்லாவிலும் பொது மருத்துவ மனைகளை உருவாக்குவதும், மனித விழுமியங்களுக்கு முரணான இன்றைய மருத்துவத்துறையின் சீரழிவுகளைத் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிவதும் முஸ்லிம் சமூகத்தின் முன் இருக்கின்ற சவால்.




































