

கர்னல் லட்சுமி என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அருணாசலம் என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதுக்கோட்டை ராயவரத்திலிருந்த புத்தக நிலையம் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “ஜெய்ஹிந்த்” எனும் அரிய நூலை வாசிக்கின்ற வாய்ப்பு எனக்கு அண்மையில் கிடைத்தது.
இந்நூலில் சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறும் அவர்உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தின் வரலாறும் அவர் ஆற்றிய முக்கியமான உரைகளும் இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் எனில் அது ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலமே சாத்தியமாகும் என்ற கொள்கை கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இந்திய தேசிய ராணுவம் (INA) என்ற அமைப்பை உருவாக்கினார்.
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் படையினரிடம் சரணடைந்து மன்னிப்புப் பெற்ற இந்திய ராணுவ வீரர்கள் பலர் இந்த ராணுவத்தில் சேர்ந்தனர். உலகப்போரில் இங்கிலாந்துக்கு எதிரான அணியில் இருந்த ஜப்பான் நாட்டு ராணுவ வீரர்களுடன் இணைந்து போராடுவதன் மூலம் அந்நாட்டை தோற்கடித்து அதன் மூலம் இந்திய விடுதலையைத் துரிதப்படுத்தலாம் என நேதாஜி எண்ணினார்.
அவரது எண்ணப்படியே இந்திய தேசிய ராணுவத்தினர் ஜப்பான் படையினருடன் இணைந்து இங்கிலாந்துக்கு எதிராகப் போரில் ஈடுபட்டனர். எனினும் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய அச்சு நாடுகள் தோல்வியை தழுவியதால் அவரது நோக்கம் நிறைவேறவில்லை. இதுகுறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.
இந்திய தேசிய ராணுவத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்தும் இந்நூலில் செய்திகள் காணப்படுகின்றன. 21.10.1946 அன்று நேதாஜி போஸ் சிங்கப்பூரில் சுதந்திர இந்திய தற்காலிக அரசு ஒன்றை நிறுவினார். அவர் அமைத்த அந்த அரசில் கீழ்க்கண்ட முஸ்லிம்கள் இடம்பெற்றிருந்தனர்.
- லெப்டினன்ட் கர்னல் அஜீஸ் அஹ்மது 2. கர்னல் ஈஷான் குவாதிர், 3. கர்னல் ஷாநவாஸ் கான், கர்னல் H.M.கியானி. மேலும் அல்லாமா கரீம் கனி, டி.எம். கான் ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். நேதாஜியின் அந்தரங்கச் செயலாளராக அப்துல் ஹஸன்என்பவர் இருந்தார்.
இரண்டாம் உலகப்போரில் அச்சு நாடுகள் தோல்வியுற்றதையடுத்து 24.4.1945 அன்று நேதாஜி ரங்கூன் நகரை விட்டு பாங்காக் நகருக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவருடன் சென்றவர் கர்னல் ஹபிபுர் ரஹ்மான் என்பவர். செல்லும் வழியில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் சென்ற நேதாஜி மரணம் அடைந்தார். நேதாஜி விமான விபத்தில் மரணமுற்றதை உலகுக்கு அறிவித்தவர் கர்னல் ஹபீபுர் ரஹ்மான் தான்.
நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் ஏராளமான முஸ்லிம்கள் இணைந்தனர். இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்ட இந்த ராணுவம் இந்திய பர்மா எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து இம்பாலாவைக் கைப்பற்றியது. (தற்போதைய மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர்) இந்த ராணுவ பிரிவுக்குத் தலைமை தாங்கி சென்றவர் லெப்டினன்ட் கர்னல் ஷா நவாஸ் கான்.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் தென்கிழக்காசிய நாடுகளான ஜப்பான், பர்மா, மலேயா, சிங்கப்பூர் ஆகியவற்றில் வாழ்ந்துவந்த இந்திய மக்கள் தாராளமாக வழங்கிய நன்கொடைகளைக் கொண்டே இயங்கி வந்தது. அதிலும் குறிப்பாக பர்மாவில் வாழ்ந்து வந்த தமிழ் முஸ்லிம்கள் இந்த ராணுவத்திற்கு பெருமளவு நிதி உதவி செய்தனர்.
பர்மாவில் மட்டும் ரூபாய் எட்டு கோடி வசூல் ஆனது. ரங்கூனில் வர்த்தகம் செய்துவந்த ஹபீப் என்ற முஸ்லீம் செல்வந்தர் நேதாஜியிடம் நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வழங்கினார். தனிமனிதராக ஒருவர் வழங்கிய அதிகபட்ச நன்கொடை இதுவேயாகும். இதற்காக அவருக்கு “சேவக் – இ – ஹிந்த்” என்ற பதக்கத்தை நேதாஜி வழங்கினார். இத்தகைய அரிய தகவல்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
11.7.1944 அன்று ரங்கூனிலுள்ள முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் பகதூர்ஷாவின் கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின் நேதாஜி ஆற்றிய எழுச்சி உரை நூலில் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம்களை கொடுமைப்படுத்தும் ஜப்பானுடன் இணைந்து நேதாஜி போராடுகிறார் என்று அப்போது இந்தியாவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனை மறுத்து 12.07.1944 அன்று அவர் ஆற்றிய வானொலி உரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
கிழக்காசியாவில் உள்ள முசல்மான்கள், இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் ஆகியோர் மனநிறைவுடன் ஒன்றிணைந்து தாய் நாட்டின் விடுதலைக்காக ஆர்வமுடன் உழைக்கிறார்கள் தவிர இந்திய தேசிய ராணுவத்தில் அதிக அந்தஸ்தும் ராணுவத்தில் உயர்ந்த உத்தியோகங்களில் இருப்பவர்களும் முஸ்லிம்களே அதிகம்! என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்களெல்லாம் இந்தியாவில் உயர்ந்த குடும்பத்தில் பிறந்த டேராடூன் ராணுவ ஸ்தாபனங்கள் போன்ற பல இடங்களில் இருந்து வந்தவர்கள். இவ்வாறு இந்திய தேசிய ராணுவத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை நேதாஜி பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணாகதி அடைந்த பிறகு இந்திய தேசிய ராணுவத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த லெப்டினன்ட் கர்னல் ஷா நவாஸ்கான், கேப்டன் தில்லான் ஆகியோர் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு எதிரான தேசத்துரோக வழக்கு விசாரணை டெல்லி செங்கோட்டையில் நடைபெற்றது. இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட இந்த வீரர்களின் சார்பாக காங்கிரஸ் தலைவர்களான புலாபாய் தேசாய், சர் சாப்ரு, பண்டித ஜவஹர்லால் நேரு, ஆஷப் அலி, டாக்டர் காட்ஜு ஆகியோர் வாதாடிய தாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்திஜியோடு கருத்து வேறுபாடுகள் கொண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இந்திய விடுதலைக்காக ஒரு மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்ட நேதாஜி அவரை ஒருபோதும் விமர்சிப்பதில்லை. தனது உரைகளில் காந்திஜியைப் பற்றி உயர்வாகவே பேசுகிறார்.
சுதந்திரம் அடைந்தபின் இந்தியாவை காந்திஜி தான் வழி நடத்தவேண்டும் என்று குறிப்பிடுகின்றார். நேதாஜியைப் பற்றியும் அவரது இந்திய தேசிய ராணுவத்தைப் பற்றியும் அதில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்தும் அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவுகிறது. 1946 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்நூல் மறுபதிப்பு கண்டுள்ளதாக தெரியவில்லை. தமிழகத்திலுள்ள ஏதாவது ஒரு முன்னணி பதிப்பகம் இந்நூலை பதிப்பிக்க முயற்சிகள் எடுக்க வேண்டுமென இக்கட்டுரை வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறேன்.


































