சி. புஷ்பராஜாவின்
“ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்”
இலங்கையில் தமிழர்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கிய காலத்திலிருந்து அதில் கலந்து கொண்டவர் சி. புஷ்பராஜா. தமிழர் இளைஞர் பேரவையின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவராக விளங்கிய அவர், பின்னர் EPRLF இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். அந்த இயக்கங்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.
சிறைவாசத்தின்போது இலங்கை காவல் துறையினரின் கடுமையான தாக்குதல்களுக்கும் உள்ளானார். ஈழப் போராட்டத்தில் தனது பங்களிப்பு குறித்தும், பல்வேறு தமிழ்ப் போராளி இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் இயக்கங்களுக்கிடையே நடைபெற்ற மோதல்கள் குறித்தும் அவர் எழுதியுள்ள நூலே “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்”
இந்த நூலில் அவர் பல உண்மைகளை மிக வெளிப்படையாக விவாதித்துள்ளார். காவல்துறை மற்றும் இராணுவத்தின் கொடுங்கோன்மையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்களை ஏந்திய ஈழப்போராளிகள் பின்னர் அந்த ஆயுதங்களைக் கொண்டே தங்களது சகாக்களையும், பிற இயக்கத்தைச் சார்ந்த முன்னணிப் பிரமுகர்களையும் கொன்றொழித்த பல நிகழ்வுகளை இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் தங்கராஜா துறையப்பா 27.7.1975 அன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக்கொலை தொடங்கி பல காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளையும், அரசியல் தலைவர்களையும், அமைச்சர்களையும் விடுதலைப்புலிகள் கொன்றதோடு, தனது இயக்கத்தைச் சார்ந்த தோழர்களையும் பிற இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களையும் கொன்றொழித்ததை அவர் இந்த நூலில் பட்டியலிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்காகப் போராடிய மிகப்பெரும் அரசியல் தலைவர்களான அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், சட்டநிபுணர் தர்மரத்தினம் சிவராம், திரிகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை, யாழ்ப்பாண நகர மேயர்கள் பொன் சிவபாலன் மற்றும் சரோஜினி யோகேஸ்வரன், தமிழர் இயக்கத் தலைவர்களான ரேலோவின் சிரிசபாரத்னம், EPRLF தலைவர் பத்மநாபன் (சென்னையில் வைத்துக் கொல்லப்பட்டார்) இலங்கை அமைச்சர் லலித் அதுலத் முதலி, இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா எனப் புலிகளால் கொல்லப்பட்ட பிரமுகர்களின் நீண்ட பட்டியலை அவர் கொடுத்துள்ளார்.
சக போராளிகள் கொல்லப்பட்டது குறித்து “போராட்டத்தில் எதிரிகளுடன் மோதி இறப்பதை விட எனது சொந்த சகோதரர்களால் மரணித்தவர்களின் வரிசையை எண்ணும்போது வெறுப்புடன் கூடிய விரக்தி ஏற்படுகின்றது. சிறீலங்கா எனும் எதிரியால் அழிக்கப்பட்ட போராளிகளின் எண்ணிக்கையை விட சக இயக்கங்களால் அழிக்கப்பட்ட போராளிகளின் எண்ணிக்கையே அதிகமானது என்பதையறியும் போது அது மனதுக்குச் சாந்தி தரும் செய்தியாக இல்லை. இந்த ஆறாத துயரங்களை எல்லாம் தாங்கி நிற்கும் இதயத்தை எதைக் கொண்டுதான் தேற்றிவிடமுடியும்? என்று அவர் வேதனையுடன் குறிப்பிடுகின்றார். (பக்கம் 330)
இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றிருந்தபோது அதனை விரும்பாத விடுதலைப்புலிகள் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுடன் ரகசியத் தொடர்பு கொண்டு அவரிடமிருந்து ஆயுதங்களைப் பெற்று அதனை இந்திய இராணுவத்திற்கு எதிராகப் பயன்படுத்தியதையும், இறுதியில் விடுதலைப் புலிகளாலேயே பிரேமதாசா கொல்லப்பட்டதையும் நூலாசிரியர் “பிரேமதாசவும், விடுதலைப் புலிகளும்” என்ற தலைப்பில் விரிவாக எழுதியுள்ளார்.
ஈழப்போராட்டத்தின் போது, விடுதலைப் புலிகளால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாயினர். பன்னூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் அவர்களால் கொல்லப்பட்டனர். புலிகளால் முஸ்லிம்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் தேதி வாரியாக “இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்” என்ற தலைப்பில் விவரித்துள்ளார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வடமாகாணத்தில் (யாழ்பாணத்தில்) வாழ்ந்து வந்த முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் 24 மணிநேர அவகாசத்தில் 30.10.1990 அன்று துரத்தியடித்ததையும் ஆசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
ஆனால் தமிழகத்திலுள்ள அனைத்து அச்சு, மின் ஊடகங்களும் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைத் தாக்கியது குறித்தோ அல்லது அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டப்பட்டது குறித்தோ எந்த விதமான செய்திகளையும் வெளியிடவில்லை. இது தமிழகத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அப்போது தெரியாமலேயே போய்விட்டது.
பின்னர்தான் இந்த வன்முறைகள் அதிலும் குறிப்பாக இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் மூலமாகத் தெரியவந்தன. முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தவில்லையென்றும், இலங்கை இராணுவமே நடத்தியது என்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல தமிழகத் தலைவர்கள் பேசியும் எழுதியும் வந்தனர். இது பொய்யான தகவல்கள் என்றும், நேர்மையற்ற செயல் என்றும் நூலாசியர் அவர்களைக் கண்டிக்கின்றார். (பக்கம் 507) இது குறித்து நூலாசிரியர் கூறுவதைப் பார்ப்போம்.
“எமது போராட்டத்தில் முஸ்லிம் மக்களின் பங்கு பிரித்துப் பார்க்க முடியாததாகும். தமிழ் மக்கள் எப்படிச் சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளுக்கு ஆளாகிறார்களோ, அதைப் போலவே முஸ்லிம் மக்களும் சிங்களப் பேரினவாதத்தின் நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். ஈழவிடுதலைப் போராட்டத்தின் பங்காளிகளாக முஸ்லிம் மக்களை ஆக்கிக் கொள்ளத் தவறியது தான் இயக்கங்கள் விட்ட மாபெரும் தவறு. இது பற்றி நன்றாகச் சிந்திக்கலாம்; செயல்படலாம். ஒன்றும் தாமதமாகி விடவில்லை”
676 பக்கங்கள்கொண்ட இந்நூல் ஒரு மிகச் சிறந்த ஆவணமாகும். ஈழப் போராட்டங்களில் தன்னை முற்றாக ஈடுபடுத்திக் கொண்ட ஒருவரே இந்நூலை எழுதியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நூலைப் படித்து முடித்த போது நெஞ்சம் கனத்துப் போய்விட்டது. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இலங்கை காவல்துறை மற்றும் இராணுவத்தால் மட்டுமல்ல விடுதலைப் புலிகளாலும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களைப் படிக்கின்ற போது கண்கள் பனிக்கின்றன. ஈழப்போராட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படும். இதனைப் – புத்தாநத்தம் “அடையாளம்” பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.



































