

வைக்கம் போராட்டம்
பெரியார் ஈ.வே.ரா. வுக்கு “வைக்கம் வீரர்” என்ற சிறப்புப் பட்டப் பெயருண்டு. கேரளாவில் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டிருந்த வைக்கம் என்ற ஊரிலுள்ள சிவன் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் ஈழவர்களும், நாடார்களும், புலையர்களும் இதர தாழ்த்தப்பட்ட மக்களும் நடந்து செல்வதற்குத் தடை இருந்து வந்தது. இந்தத் தடையினை எதிர்த்து கேரள காங்கிரஸ் தலைவர்களான டி.கே. மாதவன், கே.பி. கேசவமேனன், ஜார்ஜ் ஜோஷப், கேளப்பன், டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர், குடூர் நீலகண்ட நம்பூதிரி, பி.கே. ஜெபஸ்டியான், கே.ஜி. நாயர், வேலாயுத மேனன், குமார் ஆகிய தலைவர்கள் அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் வைக்கத்திலும் கேரளாவின் பிற பகுதிகளிலுமிருந்த உயர் சாதி இந்துக்கள் இக் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் பல நூற்றாண்டுகளாக தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நடந்து செல்வதற்குத் தடை இருந்து வந்ததாகவும், அதனை நீக்கினால் கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்று கூறி போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அன்றைக்கு ஆட்சியிலிருந்த திருவாங்கூர் மன்னரும் “சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகி விடும்” என்று கருதி இந்தப் பிரச்னையில் தலையிடாமல் இருந்தார். இந்தப் போராட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சார்ந்த காங்கிரஸ் அமைப்புகளும், சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.
தமிழக காங்கிரஸ் கட்சியும், தமிழகத்திலுள்ள பல நாடார் அமைப்புகளும் இந்தப் போராட்டத்திற்கு நிதி உதவி செய்தன. 30.3.1924அன்று தொடங்கிய இந்தச் சத்தியாகிரகப் போராட்டங்கள் 31.12.1925 அன்று முடிவுக்கு வந்தது. 20 மாதங்களாக நடந்த இந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு நாளும் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் சத்தியாக்கிரகிகள் அமர்ந்து மறியல் செய்தனர். இந்த மறியல்களுக்குத் தலைமையேற்ற தலைவர்களை திருவாங்கூர் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் மீது கோவிலில் பணிபுரிந்து வந்த பிராமனர்கள் தாக்குதல்கள் நடத்தினர். அவர்களது கண்களில் சுண்ணாம்பைத் திணித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பல தொண்டர்களின் கண் பார்வை பறிபோனது. போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய கேரளத் தலைவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அதனைத் தொடர்ந்து நடத்த தலைவர்கள் அங்கு இல்லை.
இந்நிலையில்தான் கேரளாவிலிருந்த காங்கிரஸ் தலைவர்கள் அப்போது சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியின் தலைவராகயிருந்த பெரியார் ஈ.வே.ராவை வைக்கம் வந்து போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திட உதவுமாறு வேண்டினர். அவர்களது அழைப்பினை ஏற்று மகாத்மா காந்திஜியின் அனுமதியையும் பெற்று 13.4.1924 அன்று பெரியார் வைக்கம் சென்றார். வைக்கத்திலும், அதனைத் சுற்றியிருந்த ஊர்களிலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து போராட்டக்காரர்களுக்கு வழிகாட்டினார்.
இதற்காக 22.5.1924 அன்றும் 18.7.1924 அன்றும் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மொத்தம் 41 நாட்கள் அவர் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் பெரியார் ஒரு அரசியல் கைதி போல் நடத்தப்படாமல் ஒரு கிரிமினல் குற்றத் தண்டனைக் கைதியாகவே நடத்தப்பட்டார். இது பற்றி இராஜாஜி அப்போது வெளியிட்ட அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
“தற்போது திருவனந்தபுரம் மத்திய சிறையில் சத்தியாக்கிரகக் கைதியாகயிருக்கும் ஈ.வே,ரா உணவு தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரணத் தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார். இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார். தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் நாயக்கர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. அவருடன் நன்றாகப் பழகியிருக்கிறேன். அவருடன் பல காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். அவர் ஒரு தளர்வுறா ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும், பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்த கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். பெரும்பாலான நம்மைப்போல் அல்ல”
மகாத்மா காந்திஜி வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த போதிலும் போராட்டம் அகிம்சையாகவே இருக்கவேண்டும். எந்த வன்முறையும் இருக்கக் கூடாது. போராட்டக்காரர்கள் தங்களை வருத்திக் கொள்ள வேண்டும். உயர்சாதியினரை மன மாற்றம் செய்கின்ற முயற்சிகளிலே ஈடுபடவேண்டும். இந்துக்களைத்தவிர முஸ்லிம்களோ, கிறிஸ்துவர்களோ, சீக்கியர்களோ இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்பது போன்ற பல நிபந்தனைகளை விதித்தார். இந்த நிபந்தனைகள் போராட்டத்தில் கலந்து கொண்ட கேரள காங்கிரஸ் தலைவர்களையும், பெரியார் ஈ.வே.ராவையும் சற்று ஏமாற்றமடையச் செய்தது. 9.3.1925 அன்று மகாத்மா காந்திஜி வைக்கம் வந்து போராட்டக்காரர்களைச் சந்தித்தார். திருவாங்கூர் மகாராணியையு்ம் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகும் இந்தப் பிரச்னையில் சுமுக முடிவு ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.
பெரியார் ஈ.வே.ரா வைக்கம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டபோது அவருடன் அவரது துணைவியார் நாகம்மையும், கோவை அய்யாமுத்து, எஸ்.எம். பெருமாள் நாயுடு, காந்தி ராமன், சிவதாணுப்பிள்ளை ஆகிய பெரியாரின் நண்பர்களும் சென்று அதில் கலந்து கொண்டனர். இறுதியாக போராட்டங்கள் உச்சகட்ட நிலையில் இருந்தபோது 27.11.1925 அன்று “வைக்கம் கோவிலையொட்டிய தெருக்களில் சாதிப் பாகுபாடின்றி அனைத்து மக்களும் நடந்து செல்லலாம் என திருவாங்கூர் மன்னர் அறிவித்தார். போராட்டம் வெற்றிபெற்றது. 29.11.1925 அன்று வைக்கத்தில் பெரியார் தலைமையில் மாபெரும் வெற்றிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாகம்மையார், கேளப்பன், மன்னத் பத்மநாபன், டி.கே.மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் மன்னத் பத்மநாபன் ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். தனது உரையினூடே அவர் குறிப்பிட்டதாவது….
“இருபது மாத சத்தியாக்கிரகத்தில் ஆயிரம் வருஷங்களால் ஏற்பட்ட கொடுமைகள் அழிந்து போய்விட்டன. திருவாங்கூர் சமஸ்தானத்திலுள்ள நாயர்கள் எல்லாம் சத்தியாக்கிரகத்திற்கு அனுகூலமாக இருந்தார்கள். மலையாள நம்பூதிரிகள் அறியாத் தனத்தாலும், குருட்டு நம்பிக்கையாலும் சத்தியாக்கிரகத்திற்கு எதிராக இருந்த போதிலும் அவர்களால் அவ்வளவு கெடுதிகள் ஏற்பட்டதில்லை. ஆனால் தமிழ் நாட்டு பிராமணர்கள் தங்களது சோம்பேறி மடத்துச் சாப்பாடு போய்விடுமோ என்று பயந்து வேண்டுமென்றே பல அக்கிரமங்களையும் கொடுமைகளையும் சத்தியாகிரகிகளுக்குச் செய்து வந்தார்கள். வெட்டிச் சோற்றைத் தின்பதற்காக இங்கு வந்திருக்கும் ஊட்டுப்புரைத் தமிழ்ப் பிராமணர்கள் தான் கொடுமை செய்கிறார்கள். அந்தத் தமிழ்ப் பிராமணர்களை கேரளத்தை விட்டு தமிழ் நாட்டிற்கே ஓட்டி விட்டால் திருவாங்கூர் ராஜியத்தில் ஒரு கலகமும் இருக்காது”
இது போன்று வைக்கம் போரா்ட்டம் குறித்த ஏராளமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கும் ஒரு அரிய நூல்தான் பழ. அதியமான் எழுதியுள்ள “வைக்கம் பேராட்டம்” என்ற நூலாகும். வைக்கம் போராட்டம் குறித்தும், அதில் பெரியாரின் பங்களிப்பு குறித்தும் வந்திருக்கும் விரிவான ஆதாரப்பூர்வமான முதல் நூல் இது தான் எனலாம். நூலாசிரியர் இந் நூலில் தொகுத்து வழங்கியிருக்கும் வரலாற்றுச் செய்திகளலெல்லாம் முதன்மை சான்றாதாரங்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். 30.3.1924 முதல் 31.12.1925 வரை நடைபெற்ற போராட்டங்களை நாள் வாரியாகக் குறித்துள்ளார். எந்த ஒரு செய்தியையும் அவர் ஆதாரமில்லாமல் இந்த நூலில் குறிப்பிடவில்லை என்பது ஒரு சிறப்பம்சமாகும். நூலினைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் ஆசிரியரின் கடின உழைப்பைப் புரிந்து கொள்ள முடியும்.
வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டு குதர்க்கம் பேசி வரும் சில வரலாற்றுப் புரட்டர்களுக்குப் பதில் கூறும் வண்ணம் இந்நூலில் பல அரிய செய்திகள் உள்ளன. பெரியாருக்கு எதிராக தமிழகத்தில் பி.ஜே.பி உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்த நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நூலாசிரியர் பழ.அதியமான் அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவரது இந்த ஆய்வு நூலை “காலச்சுவடு பதிப்பகம்” வெளியிட்டுள்ளது. அதன் முகவரி … காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில்-629001. தொலைபேசி 04652 278525.




































