

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் வரலாறு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அது ஏன் நிகழ்கிறது, அது நம் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பன போன்றவற்றைப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு முக்கியமான நேரம்.
இன்றைய உலகம், சாமனியர் ஒருவர் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்குச் சிக்கலான தன்மையை அடைந்துள்ளது. அரசியல், பொருளாதாரம், அறிவியல்-தொழில்நுட்பம் தொடங்கி அனைத்தும் சிக்கலான கட்டமைப்புகளாக மாறத் தொடங்கிவிட்டன.
இவற்றைப் புரிந்துகொள்ள பள்ளி, கல்லூரியில் வழங்கப்படும் கல்வியறிவு போதுமானதாக இல்லை.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய, நீண்ட கால அனுபவம் உள்ளவர் ரிச்சர்டு ஹாஸ். தற்சமயம் வெளிநாட்டு உறவுகள் அமைப்பின் தலைவராக உள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கும் மாணவர் ஒருவரிடம் பேச நேர்ந்தபோது, அவர் தன்னுடைய முதன்மைப் பாடத்தைத் தவிர வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட வேறு எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருப்பதை அறிந்தார்.
சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து பட்டம் பெறப்போகும் அவருக்கு, தான் வாழும் உலகம், நாடு குறித்த குறைந்தபட்ச அல்லது சுத்தமாக எந்தப் புரிதலும் இருக்கப் போவதில்லை என்பதை ஹாஸ் அப்போது உணர்ந்தார்.
மேலும் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்விக் கூடங்களில் இந்த நிலையை உணர்த்தும் புள்ளி விபரங்கள் ஹாஸ்-ஐ கவலைகொள்ளச் செய்தன.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் கற்ற கல்வி, இன்றைய உலகை அவதானிப்பதற்கு கைகொடுக்கப் போவதில்லை. எனவே ‘உலகளாவிய கல்வியறிவு’ (Global Literacy) அவசியம் என்பதை ஹாஸ் உணர்ந்தார். ஆகவே, வெறும் வாசிக்க, எழுத அறிவது கல்வியறிவு என்று இல்லாமல், சமகாலத்தைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலை ஏற்படுத்திக் கொள்வதை உலகளாவிய கல்வியறிவாக ஹாஸ் விளக்குகிறார்.
நாம் வாழும் காலத்தைப் புரிந்துகொள்ள, கடந்த காலத்தின் வரலாற்றை அறிவது அவசியம். ஏனென்றால், கடந்த காலம் தெரியாதவர்களுக்கு நிகழ்காலம் புரியாது; நிகழ்காலம் புரியாதவர்களுக்கு எதிர்காலம் இல்லை.



































