முக்கியமான பத்து புத்தகங்கள் கறுப்பின முஸ்லிம்களின் வரலாறு பிலால் ரழியல்லாஹு அன்ஹு (அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்ளட்டும்) மற்றும் மால்கம் எக்ஸ் (அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்) ஆகியோருடையது மட்டுமல்ல அவர்களுக்கிடையிலும் ஏராளமான மனிதர்களின் வரலாறு தங்கியுள்ளது.
முஸ்லிம் வரலாற்றில் இவ்விருவரும் பிரகாசிக்கும் முக்கிய நட்சத்திரங்களாக இருந்தாலும், இதே வரலாற்றில் இன்னும் சில நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டு இருந்தன.
முஸ்லிம்கள், கறுப்பின முஸ்லிம்களைப் பற்றிய தவறான எண்ணங்களை தங்கள் சிந்தனையிலிருந்தே மாற்றவேண்டும். இது ஒரு கல்வி சார்ந்த ஆர்வம் மட்டுமல்ல, முஸ்லீம் சமூகம் இனவெறிக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் தீவிரமாக போராட என்ன செய்ய வேண்டும் என்பதற்கு கறுப்பின முஸ்லிம்கள் வழங்கிய தொடர்ச்சியான ஆலோசனைகளில் இதுவும் ஒன்று.
குறிப்பிட்ட ஒரு சமூக மக்களின் வாழ்வியல், வரலாறை நீங்கள் அறியாதபோது, அந்த அறியாமையின் வெளிப்பாடாக அவர்களைக் சிறுமைப்படுத்துவதும், மனிதநேயமற்றவர்களாக சித்தரிப்பதும் மிகவும் சாதரணமாக நடைபெறும். அறியாமை தனி மனிதனை மட்டுமல்ல ஒரு சமூகத்தையே சிதைக்கும் என்பதற்கு கறுப்பின மக்களின் வரலாறு சாட்சி.
மனித சமூகத்தில் எல்லா நிற மக்களுக்கும் மெச்சத்தக்க வரலாறும் வாழ்வியலும் உள்ளது போல, கறுப்பின மக்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட செழுமையான வரலாறு உண்டு. கறுப்பின முஸ்லிம்களின் வரலாறு குறித்த ஆங்கில மொழி புத்தகங்களில் முக்கியமான 10 புத்தகங்கள் குறித்த சுருக்கமான அறிமுகத்தைப் பார்போம்.
- Centering Black Narrative: Black Muslim Nobles amongst the early pious Muslim by Dawud Walid and Ahmed Mubarak
பிலால் இப்னு ரபாஹ் (ரழி) அவர்களை நாம் தெரிந்திருந்தாலும் அறியப்படாத கறுப்பினத்தைச் சேர்ந்த நபித்தோழர்களின் வாழ்க்கை பற்றியும் படிக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த பெரிய புத்தகம் கறுப்பின முஸ்லிம்களாக இருந்த பல பெரிய தலைமுறையினரை நமக்கு அடையாளம் காட்டுகிறது. அவர்களது வரலாறைத் தெரிந்து கொள்ள இது ஒரு அற்புதமான புத்தகம்.
- The history of Islam in Africa edited by Levtzion & Pouwels
இந்த புத்தகம் ஒரு சிறு கலைக்களஞ்சிய தன்மை கொண்டது. இது வரலாற்றின் மீது தீவிர ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கும் வரலாற்றுக் குறிப்பு புத்தகத்தை தேடுபவர்களுக்கும் இது ஒரு பொக்கிஷம். சோங்காய் இன மக்கள் மற்றும் சனூசி வழி சிந்தனை கொண்ட மக்களுக்கு இடையிலான வித்தியாசத்தை தெரிந்துகொள்ளவும், பல்வேறு தரீகாக்களை (சூஃபி சிந்தனை பிரிவுகளை) அறிந்துக்கொள்ளவும் விரும்புவோருக்குத் தேவையான கலைக்களஞ்சியம் இந்த புத்தகம்.
- Illuminating the Darkness: Blacks and North Africans in Islam by Habeeb Akande
இந்த புத்தகம் வரலாறு, இனங்களுக்கிடையேயான திருமண உறவு போன்ற சமூகப் பிரச்சினைகளை பேசுகிறது. மேலும் அல்-சுயூதி போன்ற அறிஞர்களால் கையாளப்பட்ட இனம் பற்றிய கருத்துக்களைக் கையாளும் ஒரு விரிவான பார்வையையும் வழங்குகிறது. எதிர்பார்த்தபடி, இந்த புத்தகம் தரமான ஆய்வுகளுடன் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது, இந்த தலைப்பை படிக்க விரும்பும் புதியவர்களுக்கு இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். இந்த நூலின் ஆசிரியர் ஹபீப் அகண்டே பல தலைப்புகளில் செழுமையாக எழுதக்கூடிய கறுப்பின முஸ்லீம் எழுத்தாளர்களில் ஒருவர்.
- Beyond Timbuktu: An Intellectual History of Muslim West Africa by Ousmane Kane
திம்புக்து நகரமும், அது அமைந்துள்ள மேற்கு ஆபிரிக்காவும் ஒரு காலத்தில் செல்வம் மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தின் செல்வச் செழிப்பான முஸ்லிம் மத்திய நிலையங்களில் ஒன்றாக இருந்தது. அந்த அற்புதமான வரலாற்றுக் காலத்தைப் படிக்க ஹார்வர்ட் பேராசிரியர் உஸ்மேன் கேன் எழுதிய இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும்.
இன மேன்மைக் கருத்தை நம்புகிற அனைவருக்கும், மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கறுப்பின முஸ்லிம்களின் அறிவுசார் ஆழத்தைப் பிரதிபலிக்கும் இந்த புத்தகத்தை படிக்கும்போது தங்கள் கருத்தை விரைவில் மாற்றிக்கொள்வார்கள்.
- The Black Eunuchs of the Ottoman Empire: Networks of Power in the Court of the Sultan by George Junne
முஸ்லீம் சாம்ராஜ்யங்களும், சுல்தான்களும் ஆட்சியாளர்களும் காலச்சுழற்சியில் மாறக்கூடும், ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் நெருக்கமாக கவனித்துப் பார்த்தால் ஒரு நிலையான ஒரு செல்வாக்குமிக்க மையம் தொடர்வதை கவனிக்கலாம். பெரும்பாலும் கறுப்பின பாரம்பரியத்தைச் சேர்ந்த மந்திரிகள், செல்வாக்குமிக்கவர்களாக தொடர்ந்து நீடித்தார்கள்.
அவர்கள் அங்கு கொண்டு வரப்பட்ட விதம் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்றது என்றாலும், அவர்கள் தங்களது திறன் மற்றும் தொலைநோக்கு செயல்பாடுகளின் மூலம் செல்வாக்குமிக்க இந்த இடங்களை தக்க வைத்துக்கொண்டார்கள். இந்த புத்தகம் உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் முஸ்லீம் உலகை வடிவமைத்த கறுப்பின முஸ்லிம்களின் ஒரு குழுவின் பக்கம் உங்கள் கவனத்தை ஈர்க்கும்.
The African Caliphate: The Life Work & Teachings of Shaykh Usman Dan Fodio by Ibraheem Sulaiman
உலகின் மிகப் பெரிய பணக்காரர், சிறந்த மன்னர்கள் மற்றும் போர்வீரர்களை உலகுக்கு காட்டிய ஒரு பகுதியில் – தனித்து நிற்கும் சிறப்பு வாய்ந்தவராக ஒருவர் விளங்கினார். உஸ்மான் டான் ஃபோதியோ ஆஃப்ரிக்காவின் தனித்துவமிக்க மனிதர். மார்க்க அறிஞர், ஆசிரியர், இராணுவத் தலைவர், ஆஃப்ரிக்க நிலப்பரப்பில் சுகோட்டோ ஆட்சித் தலைமையை (Sokoto Caliphate) நிறுவியவர்.
இவர் சுன்னாஹ்வை உயிர்ப்பித்ததோடு இஸ்லாமிய வரலாற்றில் ஆற்றல் வாய்ந்த முஜத்திதாக – புத்துயிப்புச் சிந்தனையாளராக விளங்கினார்.
The Caliph’s Sister: Nana Asma’u, 1793-1865, Teacher, Poet and Islamic Leader by Jean Boyd
நானா அஸ்மா – சிறந்த மனிதர்கள் சிறந்த காரியங்களைச் செய்வார்கள் என்பதுதான் வரலாறு. வரலாறு இவரது கதையை அடிக்கடி நினைவு கூறுகிறது.
எழுத்தாளர், கவிஞர், கல்வியாளர். விதிவிலக்கில்லாமல் கல்வியை ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொண்டு சேர்த்தவர்.
உஸ்மான் டான் ஃபோதியோ இவரது தந்தை. அவர் நிலங்களை வென்றால், நானா மக்களின் இதயங்களை வென்றார்.
ஆணாதிக்கமும் போர்களின் காரணமாக மனித சமூகத்தின் பாதியாக இருக்கக் கூடிய பெண்களின் சமூக பங்களிப்பை மனித சமூகம் இழந்திருக்கிறது.
ஆனால் நானா அஸ்மாவின் சமூகப் பங்களிப்பின் தாக்கம் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் நைஜீரியாவில் இன்னும் வலுவாக உள்ளது. பல அமைப்புகள், பள்ளிகள் மற்றும் கூட்ட அரங்குகளுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்வளவு அழகிய முன்மாதிரியான இந்த பெண்ணின் வாழ்க்கையை அறிந்துகொள்ள இந்த புத்தகதுடன் பயணம் செய்யுங்கள்.
Servants of Allah: African Muslims Enslaved in the Americas by Sylvaine Diouf
அடிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கையையும் மதிப்புகளையும் தக்க வைத்துக் கொள்ள போராடினார்கள். அது வெறும் உயிர்வாழ்வதற்காக மட்டுமல்லாமல் உண்மையில் கல்வியறிவுள்ள சமூகமாகவும், செழிப்பான சமூகமாகவும் வளர்ச்சி பெறுவதற்காகவே போராடினார்கள்.
இந்த விஷயத்தை இன்னும் விரிவான முறையில் கையாளும் பிற புத்தகங்கள் இருக்கும்போது, இந்த புத்தகம் கிளர்ச்சி முதல் கல்வியறிவில் மேம்பட்ட நிலைகள் வரை அனைத்தையும் அணுகி அதன் முக்கிய கருப்பொருள்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் இது போன்ற இருண்ட வரலாறுகளை ஒளிர செய்த திருமதி டியோஃப் வின் எழுத்து பாராட்டக்குரியது.
Muhammad Ali: His Life and Times by Thomas Hauser
எல்லா காலத்திலும் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக இருந்தபோதிலும், அது முஹம்மது அலியின் வாழ்க்கையின் மிக சுவாரஸ்யமான 2 வது பகுதியாக மட்டுமே இருந்தது. லூயிஸ்வில்லிலிருந்து ‘காசிஸஸ் கிலே’ என்ற பெயர் கொண்ட இந்த மெல்லிசான சிறுவன் பூமியில் அடையாளம் காணக்கூடிய மனிதர்களில் ஒருவராக நட்சத்திரமாக மாறிய கதை இவருடையது.
வெறும் நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, இது மக்களின் போராட்டத்தின் கதை, அவர்கள் கடந்து வந்த கரடுமுரடான பாதையிலிருந்து மீண்ட கதை. நினைவில் கொள்ளுங்கள்! அவரது சகாப்தத்தில் வாழ்ந்த ஜனாதிபதிகள் மற்றும் மன்னர்களின் பெயர் மறந்து நீண்ட காலத்திற்குப் பிறகும் , முஹம்மது அலியின் பெயர் இன்றும் உயிர் வாழ்கிறது.
The Autobiography of Malcolm X with Alex Haley
என்னைப் பொறுத்தவரை, இந்தப் புத்தகம் ஒரு குறிப்பிட்ட நபர், இடம் மற்றும் போராட்டத்தைப் பேசினாலும், கறுப்பின முஸ்லிம்களின் வரலாற்றைப் பற்றிய எல்லா புத்தகங்களிலும் இதுவே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
ஒரு தனிநபரின் இறைநம்பிக்கை, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணமாக அடிமைத்தனம், இனவாதம் மற்றும் நடைமுறையில் இருந்த ஒடுக்குமுறை அனைத்தும் எவ்வாறு நொறுங்கி விழுந்தன என்பதை வரலாறே ஆச்சர்யத்துடன் பதிவு செய்துள்ளது.
நீங்கள் இன்னும் இவரைப் பற்றி படிக்கவில்லை என்றால், நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? விரைவாக வாசியுங்கள் அது உங்களை மாற்றும்.
கறுப்பின முஸ்லிம்களைப் பற்றி சொல்லாத இஸ்லாத்தின் வரலாறு உண்மையில் ஒரு வரலாறு அல்ல.
இந்த புத்தகங்களில் ஏதேனும் ஒன்றைப் படிக்க நீங்கள் முடிவு செய்தாலும் அல்லது சில யூடியூப் வீடியோக்கள் அல்லது கறுப்பின முஸ்லிம்களின் வரலாறு குறித்த கட்டுரைகளைப் பார்த்தாலும், அவை அனைத்தும் நமக்கு பல பாடங்களை பயிற்றுவிக்கும்.
அப்போதுதான் நாம் அனைவரும் ஒரு நியாயமான உலகத்தை உருவாக்க உதவ ஆரம்பிக்க முடியும். அப்போதுதான் நம் சுவாசமும் நிதானமானதாக இருக்கும்.


































