


புது வருடத்தை வரவேற்கும் ஒன்று கூடலொன்றில் கலந்து கொள்ளளும் வாய்ப்பு கிடைத்தது. பகல் உணவின் பின் மகிழ்வதற்காக சில போட்டிகள் நடைபெறுவதாக அறிவித்தார்கள்.
பெரியவர்களுக்கு, சிறுவர்களுக்கென போட்டிகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. சிறுவர்களது போட்டிகளில் முதல் மூன்று இடங்களுக்குத் தேர்வான பிள்ளைகளுக்கு மட்டுமன்றி கலந்து கொண்ட சகல பிள்ளைகளுக்கும் பரிசு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அனைத்துப் போட்டிகளிலும் அதுவே தொடர்ந்தது. குறிப்பிட்ட சிறுவர்கள் ஓரிரு போட்டிகளுக்குப் பின் ஏனாதானோவென்று போட்டியில் கலந்து கொண்டார்கள். வெற்றியை நோக்கிய தாகம், முயற்சி, உற்சாகம் என எதுவுமே அவர்களிடம் இல்லை.
உயிரோட்டம் குன்றிய ஒரு நிகழ்வாக மாறிப்போய் முடிவில் அனைவரும் கலைந்து சென்றார்கள். ஓரிருவர் பரிசு பெறும்போது கலந்து கொண்ட ஏனைய சிறுவர்கள் கவலைப் படக்கூடாது என்பதற்காக இப்போதெல்லாம் பல இடங்களிலும் இது நடைபெறுவதை காணலாம். சிறுவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அவர்கள் வாதம்.
ஆனால் நடப்பது என்ன?
தோல்விக்கு திரையிட்டு வெற்றியை மட்டும் சிறுவர்களுக்கு காட்டுவதன் மூலம் தோல்வி எனும் உணர்ச்சி க்கான உணர்ச்சி மனநிலை பற்றி போதிக்கத் தவறிவிடுகிறோம்.
போட்டியோ, விளையாட்டோ எதுவென்றாலும் வெற்றி, தோல்வி என இரண்டு தராதரங்கள் இருக்க வேண்டும். பலநேரங்களில் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை சொல்லிக் கொடுப்பதில்லை. வெற்றி பெற்றவனை வாழ்த்தவோ, அதை ஏற்றுக் கொள்ளவோ இவர்களுக்குத் தெரியாது. எதிலும் வெற்றி பெறுவது தான் கௌரவம் என்ற எண்ணத்தை விதைத்து விடுகிறோம். வென்றவனுக்கு ஒரு வழி தோற்றவனுக்கு பலவழி என்றுணர்த்த தவறி (மறந்து) விடுகிறோம்.
விழுந்தால்தான் எழ முடியும், விழ விடாமல் எழுந்து நில் என்றால் பாதங்களை எங்கு ஊன்றுவதென்பதும், எப்படி ஊன்றினால் நிலைக்கும் என்பதும் தெரியாமல் போய்விடுகிறது. எதிர்நீச்சல் எப்படியிருக்கும் என்பதை கரையிலுள்ளவன் எப்படி அறிவான்? தன் முயற்சியின்மையால் தோற்றோம் என்பதை உணரச் செய்யாமல் முயற்சி பற்றி பாடம் நடத்த முடியாது.
தன்னை ஒத்த இன்னொருவனால் முடிந்தது தன்னால் ஏன் முடியவில்லை? என்பதற்கு விடை தேடினால் தானே தன் திறமையை இனங்காண முடியும்? இருளையும் வெளிச்சத்தையும் காட்டினால்தான் சூரியனையும் காட்டலாம்.
அது போலத்தான் வெற்றி, தோல்வி இரண்டையும் அனுபவிப்பவனாலேயே விடாமுயற்சி, ஊக்கம், திறமை, இயலாமை, தனித்துவம், அர்ப்பணிப்பு, அயராத உழைப்பு, வேகம், விவேகம் போன்றவை எதற்கானது? என அறிய முடியும்.
வாழ்க்கையென்பது வெற்றி மட்டுமல்ல, சரிவுகள், சறுக்கல்கள் என மேடுபள்ளங்களின் மீதான பயணம்.தோல்வியுறும் எல்லா சந்தர்ப்பத்திலும் பரிசு கிடைக்குமென்ற பாடம் எதிர்க்காலத்தில் இலவசங்களை நோக்கி வழிநடத்தும். மற்றவனுக்கு கிடைப்பதை யாரோ தனக்கும் தர வேண்டுமென்ற மெத்தனப் போக்கு அங்குதான் உருவாகிறது.
தன் கடின உழைப்பின் அவசியத்தை உணரத் தவறியவன் தனக்குத் தராதவன் குறித்து விமர்சனம் செய்யத் தொடங்குகிறான். மற்றவர்களை கடிந்து கொள்வதும், பகையுணர்வை வளர்ப்பதும் இங்கேயே ஆரம்பமாகிறது. தன்னைத் தவிர்த்து மற்றவனை குறை காணும் பண்பு வேரூன்றுவது நச்சுச் செடி ஒன்று வளர்வதற்கு ஒப்பானது.
இயல்பில் ஒவ்வொரு மனமும் அங்கீகாரத்திற்கே ஏங்குகிறது.
இவர்களே நாளை antisocial personalities சமூக விரோத செயல்பாட்டாளர்களாக மாறுபவர்கள். சமூகக் கட்டமைப்பிலிருந்து விலகி அந்த சமூகத்தையே சிதைப்பவர்கள் இவர்கள். தான் தன் முயற்சியினால், திறமையினால் வெற்றி பெற்றதை அங்கீகரிக்காத சமூகத்தை சிறு வயதிலேயே புறக்கணிக்கத் தொடங்குகிறார்கள் இவர்கள். மீள முயல்வதோ, திறமையை பட்டை தீட்டுவதோ இனி அவசியமில்லை என்ற கற்பிதம் அவர்களைப் பின்தள்ளும்.
வாழ்க்கை குறித்து நம்பிக்கையின்மை அவர்களில் ஏற்பட நாமே காரணமாகிறோம். காலில் முள் குத்தியதன் வலி தான் செருப்பு செய்ய உந்துதலை வழங்கியிருக்க வேண்டும்.
தோல்விகள் நிச்சயம் ஏதோ ஒன்றை நோக்கி நம்மை சீர்படுத்தும். ஆனால் இன்று நாம் நம் பிள்ளைகளுக்கு தோல்வியை காட்ட அஞ்சுகிறோம். எதைக் கேட்டாலும் அது கிடைக்க வழி செய்கிறோம். நான் அனுபவித்த ஏமாற்றங்களை என் பிள்ளை அனுபவிக்கக் கூடாதென நினைக்கிறோம்.
ஆனால் அன்று நாம் கண்ட ஏமாற்றங்கள் தான் இன்றைய நம் உயர்விற்கான ஏணிப்படிகள் என மறந்தே விடுகிறோம். ஏமாற்றங்களை மட்டுமல்ல பிள்ளைகளுக்கு ஏணிப்படிகளையும் வழங்கத் தவறுகிறோம்.
நாம் இன்று உயர்வடைய தோல்விகளும் வலிகளுமே காரணங்கள். என்றால் நமது பிள்ளைகளுக்கு அதை ஏன் காட்டுவதில்லை. அவர்கள் இளமையில் எல்லா வசதிகளுடன் வாழ்ந்தாலும் முதுமையில் தன் காலில் நிற்கும் வலிமையை இழந்து விடுவார்கள். அப்படியெனில் அவர்களது பிள்ளைகளின் இளமை சோதனைக்குள்ளாகும். அதற்கு ஒரு வகையில் நாம் தானே காரணம்?
அவ்வாறு நம் மகன் தன் பிள்ளைக்காக திண்டாடுவதை காண நாம் இருக்கப் போவதில்லை. நம் தவறுகளும் நமக்கு தெரியப் போவதில்லை. ஏமாற்றம், தோல்வி, வலி, புறக்கணிப்பு, இழப்பு என்பவற்றை கண்டவனால்தான் வாழ்வில் சவால்களை எதிர்க் கொள்ள முடியும். பிள்ளைகளின் முகத்தில் வாட்டம், கண்ணீர், ஏமாற்றம், ஏக்கம் என்பவற்றை காண்பதற்கு பயந்து அவர்களது வாழ்வை இருளில் தள்ளுவது சிறந்த பெற்றோரியம் – பேரண்டிங் அல்ல.
அவர்கள் எப்போதும் சிறுவர்களல்ல. இன்னும் வாழ நிறைய இருக்கிறது. எப்படி வாழ வேண்டுமென நாம் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். எப்படி சைக்கிள் ஓட்டுவதென புத்தகத்தில் படித்தவன் சைக்கிள் ஓடுவதில்லை. சைக்கிள் மிதித்து, விழுந்து, முழங்காலில் காயம் கண்டவனால் தான் சைக்கிள் ஓட்ட முடியும்.
அந்த காயம் ஆறினாலும் பாடம் மறக்காது. விழ விடுவோம்; எழுப்பி விடுவோம்; அவர்களாக வழி தேடிக் கொள்வார்கள்.
பௌசுனா இஸ்ஸதீன், உளவியலாளர், இலங்கை.



































