மழை காலத்தில் வறட்சி பற்றிப் பேச வேண்டும் ஏன்?

சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பெருமழை காரணமாக நகரிலும் புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் மழை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டில் இதேபோன்று தொடர்மழையால் சென்னை வெள்ளநீரில் தத்தளித்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பாதிப்பைச் சந்திக்கிறது. 2015ஆம் ஆண்டு கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகள், 2021ஆம் ஆண்டிலும் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிறகும் இதுபோன்ற கனமழை பெய்தாலும் இதே நிலை நீடிக்குமா? சென்னையில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்குவதற்கு காரணம் என்ன? தேங்கிய நீரை எப்படி வெளியேற்றுவது? மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தரத் தீர்வு என்ன? ஏரி, ஆறுகளில் இருந்து வெளியேறும் உபரிநீரை தடுப்பது எவ்வாறு?
இந்தக் கேள்விகளுக்கு பல இடங்களில் விடை சொல்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான எஸ். ஜனகராஜன் :

பெருமழை காரணமாக சென்னையில் தேங்கும் தண்ணீரை வெள்ளநீர் என்று சொல்வது தவறு. இது வெள்ளம் இல்லை. குடியிருப்புப் பகுதிகளும் சாலைகளிலும் தேங்கும் தண்ணீர்.
 

இந்த அளவுக்கு சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள் அதிகரிக்க முக்கியமான காரணம் மக்களின் அடர்த்தி தான். குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பில் இவ்வளவு மக்கள் தான் வசிக்க முடியும் என்ற வரைமுறை உள்ளது.

தலைநகர் சென்னையில் மட்டுமே ஒரே இரவில் சுமார் 20 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. “இந்த மாமழை பொழிவு வழக்கமாக நடக்கின்ற ஒரு நிகழ்வு தான். இந்த அதீத மழை சார்ந்த கடந்த கால வரலாற்றை பார்த்தோமானால் 1977, 1985, 2005, 2015, இப்போது 2021 என சுழற்சி முறையில் பொழிந்து வருகின்றது மழை.

இருந்தாலும் எவ்வளவு மழை பொழிவு இருக்கும் என்பதை துல்லியமாக கணித்து சொல்ல முடியாது என வானிலை ஆய்வறிஞர்கள் சொல்கின்றனர்.

ஆனால் முன்பு நான் சொன்னதை போல 1977 முதல் 2021 வரையில் சுழற்சி மழையில் பொழிந்துள்ள மழையின் அளவு கிட்டத்தட்ட ஒன்றாக தான் உள்ளது. ஆனால் அதன் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையை ஒப்பிடும் போது 1977-இல் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் அப்போது பதிவானது இதே மழை அளவு தான். 

இப்போது இது மாதிரியான பாதிப்புகள் ஏற்படக் காரணம் நகரப்பகுதியில் அதிகரித்துள்ள மக்கள் தொகை. 1977-இல் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 12000 முதல் 13000 வரை இருந்த மக்கள் தொகை தற்போது 32000 முதல் 33000 என அதிகரித்துள்ளது.

இருக்கின்ற இடங்களை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்ததன் விளைவை தான் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பும் இதற்கு காரணம். நகரமயமாக்கலின் விளைவு இது. 

தேங்கிய பகுதியில் உள்ள வெள்ளநீரை குழாய் மூலம் அகற்றுவது வாகனத்திற்கு பழுது பார்ப்பது போன்ற செயலாகும். நீர் நிலைகளை பராமரித்தால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்.

மழை இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது. ஆனால், தற்போதைய மழையில் சென்னையே முடங்கிப்போய்க் கிடக்கிறது. “இது மனிதப் பிழையால் ஏற்பட்ட பேரிடர்.”

கிழக்குக் கடற்கரை சாலையில் மட்டும் கிட்டத்தட்ட 30 ஏரிகள் உள்ளன. சென்னையில் இவ்வளவு ஏரிகள் இருக்கும்போது அவற்றை ஆழப்படுத்தி வீணாகும் மழைநீரை சேமிக்கலாம். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், தண்ணீர் பற்றாக்குறையையும் தவிர்க்க முடியும்.

இப்போது புழக்கத்தில், மழை காலங்களில் வெள்ள நீர் வடியும் வகையில் பல்லாயிர கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள வெள்ள வடிகால் வசதிகள் அனைத்துமே அறிவியல் பூர்வமாக ஆய்வுகளை மேற்கொண்டு கட்டியது அல்ல.

தாழ்வான பகுதிகள், மேடான பகுதி என புவியியல் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளாமல் வெள்ள வடிகால் வசதிகளை கட்டியது தான் வெள்ள நீர் வடியாமல் இருப்பதற்கு காரணம். இது தொலைநோக்குப் பார்வையே இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட பணிகள்.

சென்னையை போன்ற மாநகரத்தில் நகர்ப்புற அடிப்படை கட்டமைப்புகள் சார்ந்த சரியான புரிதல் இல்லாதது இந்த சிக்கல் எழ காரணம். அறிவியல் பூர்வமான திட்டத்தைக் கொண்டு இதற்கு தீர்வு காண வேண்டும். அதற்கு ஒரு கமிட்டி அமைத்து இதை அறிவியல் பூர்வமாக அணுகினால் அடுத்த சில ஆண்டுகளில் தீர்வு காணலாம்.”

இப்போதைப் போலவே 2005-லும் ஒரே நாளில் 22 சென்டிமீட்டர் மழை பெய்தது. அப்போதே நமது நகரின் கட்டமைப்பில் நிகழும் குளறுபடிகளை தீவிரமாகப் பேசினேன். வருங்காலங்களில் நாம் இன்னும் மோசமான துன்பங்களை அனுபவிப்போம் என்று எச்சரித்திருந்தேன்.

ஆனால், நாம் கற்கவில்லை. ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சென்னை நகரம் மழைக்கு மிகவும் உகந்த நகரம். மிகப் பெரிய அளவில் வெள்ளத் தடுப்புக்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும் நகரம்.

சென்னையில் மூன்று பெரிய ஆறுகள் இருக்கின்றன. வடக்கே கொசஸ்தலை ஆறு எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதை எண்ணூர் அருகே கடலில் கொண்டுசேர்த்துவிடும்.

மத்திய சென்னையில் கூவம் ஆறு, தென் சென்னையில் அடையாறு ஆகியவையும் மழைநீரைக் கடலில் சேர்ப்பதற்கான கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. சென்னை முழுக்க 16 கால்வாய்கள் இருக்கின்றன. இவை தவிர, பக்கிங்ஹாம் கால்வாய் இருக்கிறது. இத்தனையையும் வைத்துக்கொண்டு மழை பெய்தால் தத்தளித்துக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இந்தக் கட்டமைப்புகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.

ஆற்றுக்கு உண்டான அகலமும் இல்லை… ஆழமும் இல்லை. பிறகு எப்படி தண்ணீரை அவை தாங்கும்? அனைத்துக் கால்வாய்களும் வெள்ளத்தைச் சுமப்பவை. அவற்றைச் சீரழித்தால் தண்ணீர் தேங்காமல் என்ன செய்யும்?

மேற்கத்திய நாடுகளில் வெள்ளநீர் வடிகால் அமைப்பதற்கு முன்பு அந்தப் பகுதி முழுவதற்குமான ஏற்ற-இறக்க நிலை குறித்துக் கணக்கெடுப்பு நடத்துவார்கள் (Elevation Survey). இதன் மூலம் அந்தப் பகுதியில் எங்கெல்லாம் மேடு, எங்கெல்லாம் பள்ளம், எதிலிருந்து எதை நோக்கித் தண்ணீர் போகிறது என்றெல்லாம் தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் வடிகால்களை அமைக்க வேண்டும்.

ஆனால், இங்கு அதுபோன்ற அறிவியல்பூர்வ அணுகுமுறை எதுவும் இருப்பதில்லை. ஒரு ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைத்துவிட்டால் அவருடைய பணியாளர்கள் நேராக வந்து பள்ளம் தோண்டி வடிகால் கட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள். இப்படிக் கட்டுவது வெள்ளநீர் வடிகாலே அல்ல. மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் குற்றம்.

இன்றைய முதல்வருக்கு நான் முன்வைக்கும் வேண்டுகோள் இது: வெள்ளநீர் வடிகால்களைக் கட்டமைப்பதற்காகக் கடந்த பத்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவுசெய்யப்பட்டிருக்கிறது. இவை குறித்து ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.

அவை ஒழுங்காகக் கட்டப்பட்டிருந்தால் இன்று இவ்வளவு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது. உயர் நீதிமன்றம் இதே கேள்வியைத்தான் எழுப்பியிருக்கிறது.

பருவநிலை மாற்றத்தை இனியும் நாம் ஒதுக்கித் தள்ள முடியாது. சென்னை கடலோர மாநகரம். இங்கு கடல் மட்டத்தைவிட பத்து மீட்டர் உயரத்துக்குக் கீழே இருக்கும் பகுதிகள் அதிகமாக உள்ளன. வரும் காலங்களில் மழை, வறட்சி ஆகியவற்றின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போகுமே தவிரக் குறையாது.

 இவற்றால் விளையக்கூடிய பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற நீண்டகால நடவடிக்கைகள் பல எடுக்கப்பட வேண்டும். அதற்கு உடனடியாக ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும்.


மழைநீரை அந்தந்த ஏரிகளிலேயே சேகரிப்பதற்கான வழிகளைச் செய்துவிட்டால், நமக்கு வெள்ள அபாயமும் கிடையாது. குடிநீர்ப் பிரச்சினையும் வராது. பல்லாயிரம் கோடி, பல லட்சம் கோடிகளில் நதிநீர் இணைப்புத் திட்டங்களைத் தீட்டுவதற்குப் பதிலாக ஏரிகளைச் சீரமைத்தாலே நாம் வெள்ளம், வறட்சி இரண்டிலிருந்தும் தப்பிக்கலாம். சுற்றுச்சூழலையும் வளமாக்கலாம்.

இன்றைய அரசு தமிழ்நாடு முழுக்க நிறைய அதிகாரிகளை நியமித்திருக்கிறது. அவர்கள் அல்லும் பகலும் அயராமல் உழைக்கிறார்கள். உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இப்போது இதைத்தான் செய்ய முடியும்.

ஆனால், இதுபோன்ற பெருமழைக் காலங்களில் நாம் என்னென்ன இடர்களை எதிர்கொண்டோம் என்பதை முறையாகப் பதிவுசெய்ய வேண்டும். இதற்கென்று தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுச் செயல்பட வேண்டும். என்னென்ன இடர்கள் வந்தன. எதனால் அவை ஏற்பட்டன, அவற்றுக்கான தீர்வுகள் என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து அந்தக் குழுவினர் விரிவான அறிக்கையைக் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்துவதற்குத் தயாராக வேண்டும்

நாம் மழைக்காலத்தில் மட்டும்தான் மழைக்காலப் பிரச்சினைகளைப் பேசுகிறோம். இது மிகப் பெரிய தவறு. மழை வராத சமயத்தில்தான் மழையைப் பற்றிப் பேச வேண்டும். மழை வரும் நேரத்தில் நாம் வறட்சி பற்றிப் பேச வேண்டும். இன்னும் இரண்டு மாதங்களில் நகர்ப்புற வெப்பம் அதிகரிக்கப்போகிறது. உடனடியாக நீர்ப் பற்றாக்குறையும் வரும்.

எனவே, நமக்கு வறட்சியையும் வெள்ளத்தையும் ஒருசேரப் பார்க்கும் அணுகுமுறை வேண்டும். வெள்ளம் வரும்போது வறட்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுத் தண்ணீரைச் சேமிக்க வேண்டும். மழை இல்லாதபோதும் மழைக்காலத்துக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.


தேங்கிய பகுதியில் உள்ள வெள்ளநீரை குழாய் மூலம் அகற்றுவது வாகனத்திற்கு பழுது பார்ப்பது போன்ற செயலாகும். நீர் நிலைகளை பராமரித்தால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்.

இனி வரும்காலங்களில், மழைநீர் தேங்காமல் இருக்கவும், தண்ணீரை சேமிக்கவும் நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வதுதான் சென்னைக்கு மட்டுமல்ல! தமிழகத்திற்கும் நல்லது.