




முதியவர்கள், இளைஞர்கள் என சமூக சீர்திருத்தப் பணியில் இயங்குபவர்கள், சமூக ஒழுங்கில் முன்னுரிமைப்படுத்த வேண்டிய முக்கியமான இரு விசயங்கள் உள்ளன. அவைகளை விரிவாகப் பார்ப்ப்போம்.
- கலை, இலக்கியம், பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளை இஸ்லாம் வழிகாட்டும் பண்பாட்டு வரையறைகளுக்குள் நின்று வளர்த்தெடுக்க வேண்டும்.
‘நல்ல மனித ஆளுமை’ உருவாக்கம் என்பது உடல், அறிவு, ஆன்மா ஆகிய மூன்றின் மூலம் சாத்தியப்படும். மேலும் இந்த மூன்றுடன் மனித உணர்வுக்கும் முக்கிய இடம் கொடுக்கப்பட வேண்டும். அதற்கான காரணம், அல்குர்ஆன் மனித உணர்வுடன் பேச முனைகிறது என்பதுதான்.
அல்குர்ஆன் இயற்கை காட்சிகளை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் விதத்தைக் கவனிப்போம்.
ழுஹா நேரத்தின் மீது அல்குர்ஆன் சத்தியம் செய்கிறது. அது பனித்துளிகள் இலைகளின் ஓரங்களிலிருந்து வடிந்துகொண்டிருக்கும் நேரம். சிட்டுக் குருவிகள் அன்றைய நாளை எதிர்பார்ப்புடனும் மகிழ்வுடனும் இரை தேடிச் செல்லும் நேரம். அது அமைதியின் நேரம். மகிழ்வின் நேரம். புத்துணர்ச்சியின் நேரம். களைப்பில்லாத நேரம். டென்ஷன் இல்லாத நேரம். மனித உணர்வுடன் இருகிய தொடர்புகொண்டிருக்கும் ழுஹா நேரத்தின் மீது சத்தியம் செய்வதில் அறிவுடையோருக்கு படிப்பினை உண்டு.
கால்நடைகளை காலையில் மேய்ச்சல் நிலம் நோக்கி ஓட்டிச் செல்வதிலும் மாலையில் திரும்ப ஓட்டி வருவதிலும் அழகு இருக்கிறது என அல்குர்ஆன் கூறுகிறது. நமக்குப் புலப்படும் வானம் நட்சத்திர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, அவை பார்ப்பவர்களுக்கு அழகானதாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் அல்குர்ஆன் வர்ணிக்கிறது.
இறைத் தூதரது வாழ்வில் மனித உணர்வு சார்ந்த உரையாடல்கள் எண்ணிலடங்காதவை. இங்கு சில உதாரணங்களை மாத்திரம் தருகிறோம். நபியவர்கள் வீட்டில் தனது மனைவிகளுடன் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை ஸஹீஹ் புஹாரியில் வரும் பின்வரும் அறிவிப்பு விளக்குகிறது: ‘நபியவர்கள் வீட்டில் தன் மனைவிகளுடன் நகைச்சுவையாக உரையாடிக் கொண்டிருப்பதையும், அவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதையும், மனைவிகள் சொல்லும் கதைகளுக்கு செவிதாழ்த்திக் கேட்பதையும் நாம் படித்திருக்கிறோம்’.
நபியவர்கள் ஆயிஷா நாயகியுடன் ஓட்டப்போட்டியில் ஈடுபட்டதை நாம் அறிவோம்.
ஒரு கிழவி நபியவர்களிடம் வந்து, தான் சுவர்க்கம் நுழைய துஆ செய்யும்படி வேண்டுகிறாள். அதற்கு நபியவர்கள் முதியவர்கள் சுவர்க்கம் நுழைய முடியாது எனக் கூற அவள் அழுதுவிட்டாள். உடனே நபியவர்கள் யாரும் முதுமை நிலையில் சுவர்க்கம் நுழைய முடியாது. இளமை நிலைக்கு மாற்றப்பட்டதன் பின்னே நுழைவார்கள் எனக் கூறினார்கள்.
நபியவர்கள் ஆயிஷா ரழி அவர்களை ஹபஷிகளுடைய விளையாட்டுப் போட்டியை கண்டுகளிக்க அழைத்துச் சென்று, ஆயிஷா ரழி சலிப்படையும் வரை நபியவர்கள் தொடர்ந்தும் அங்கிருந்து, நிகழ்வை கண்டுமகிழ நபியவர்கள் உதவியது என்பதெல்லாம் மனித உணர்வுக்கு நபியவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
அன்சாரிகளது விருந்தொன்றில் கலந்துகொள்ளச் சென்ற நபியவர்கள், அங்கு அமைதி நிலவியதை கவனித்து, அங்கிருந்தவர்களிடம் பொழுதுபோக்கு நிகழ்வுகள் ஏதுமில்லையா? அன்சாரிகள் பொழுபோக்கை விரும்பக்கூடியவர்களல்லவா! எனக் கேட்டார்.
இவைகள் இஸ்லாம் மனித உணர்வுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதற்கான சில உதாரணங்கள்.
இம்மனித உணர்வை ஆரோக்கியமாக வைத்திருக்கவே கலை, இலக்கியங்கள் முனைகின்றன. நாடகம், இசை, ஓவியம், நாவல், சிறுகதை, குறுந்திரைப்படம், வீதி நாடகம், திரைப்படம், கார்டூன் என கலை, இலக்கிய வடிவங்கள் வியாபித்துச் செல்கின்றன. நாளுக்கு நாள் வளர்ச்சியடைகின்றன. புதிய புதிய போக்குகள் உருவாகின்றன. சமூக பிரச்சினைகளை அவை பேசுகின்றன. சமூகம் எதிர்நோக்கும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் மனித உணர்வுகளுடன் அவை பிணைத்து விடுகின்றன.
கலை, இலக்கிய ஆர்வளர்களும் ஆளுமைகளும் நம்மத்தியில் உள்ளனர். அவர்களுடைய மீம்களைப் பாருங்கள். கருத்தாழமிக்கவை அவை. அரசியல் கருத்துக்களை தனது கார்டூன்களினூடாக மக்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்கள்.
நாம் கலை, இலக்கிய விசயங்களில் இன்னும் ஆழமாக வேரூன்றவேன்டியுள்ளது. நாம் கட்டாயமாக மேற்கூறிய கலை, இலக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்துவதுடன் அவற்றை கவனமாக வளர்த்தெடுக்க வேண்டியும் உள்ளது.
இதன் கருத்து மேற்கத்திய கலை, இலக்கியங்களை அப்படியே விழுங்கிவிட வேண்டும் என்பதல்ல. இஸ்லாம் எதை அங்கீகரிக்கிறது எதை தவிர்க்கிறது, தடுக்கிறது என்ற விமர்சன ரீதியானதொரு பார்வை அவசியப்படுகிறது.
இஸ்லாம் முன்வைத்த பண்பாட்டு வரையறைக்குள் நின்று விமர்சன நோக்கொன்றை கட்டியெழுப்பி, மாற்றுகளை நோக்கியும் நகர வேண்டும். ஹராம் என்ற பத்வா மாத்திரம் போதுமானதாக இருக்காது என்பதே நமது கவனிப்பு.
02. படித்த பண்பட்ட சமூகம் எனும் நிலை நோக்கி நகர்தல்
பொதுவாக முஸ்லிம் சமூகம் ஓர் வியாபாரச் சமூகம் என்று கூறுவார்கள். நமது ஊர்களில் ஒரு தரமான வாசகசாலை இல்லை.
ஆனால் உணவகங்கள் ஒவ்வொரு நாளும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஆயிரம் கொடுத்து இறைச்சி வாங்கும் நாம் மாதத்துக்கொருமுறை முன்னூறு ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கத் தயங்குகிறோம். இதுதான் நமது நிலை.
ஆசிரியர் பணிக்கு இங்கிருக்கும் அந்தஸ்த்தும் போட்டியும் கவலைக்கிடமானது. இஸ்லாம் வலியுறுத்தும் கல்வி, அறிவை விட்டும் நாம் எந்தளவு தூரமாகியிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கவே மனம் கனக்கிறது.
படித்த பண்பட்ட சமூகம் எனும் நிலை நோக்கி நகர்வதற்கு இரண்டு எட்டுக்கள் அவசியமாகின்றன.
ஒன்று கல்வியின் முக்கியத்துவத்தை உணர்தல். இன்றைய உலகம் சிந்தனையை மையமாக வைத்து இயங்குகிறது என்பதற்கு அப்பால் இஸ்லாம் கல்வியை முக்கியமானதொரு வணக்கமாகக் கூட ஆக்கியிருக்கிறது.
முதல் வஹி அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளும்படியோ, சுஜூத் செய்யும்படியோ ஏவவில்லை. மாற்றமாக “வாசிப்பீராக” என்ற ஏவலே முஸ்லிம் சமூகத்துக்கான முதல் உத்தரவு.
தொடர்ந்து வரும் வசனத்தில் அவன் எழுதுகோல் கொண்டு கற்பித்தது இறைவனின் மிகப்பெரிய கொடை என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. சூரா ரஹ்மானின் ஆரம்பம் அவன் மிகப்பெரும் கருணையாளன் எனக் கூறிவிட்டு தொடர்ந்து வரும் வசனத்தில், அவனது மிகப்பெரும் கருணை அல்குர்ஆனை கற்பித்தது என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
கற்பித்தலும் கற்றலும் மிகப்பெரும் வணக்கங்கள். கற்பித்தல் பணி மிகப் பெரும் பாக்கியம் நிறைந்தது. தலைமுறை உருவாக்கும் மிகப்பெரியதொரு வேலைத் திட்டம். இதை உணர்ந்து கொள்வது மிக அவசியமானது.
கல்வியின் இலக்கு மீண்டும் ஒழுங்கு செய்யப்பட வேண்டும் என்பதும் நமது இலக்காக இருக்க வேண்டும்.
ஏன் கற்கிறேன்? ஏன் மேற்படிப்பு படிக்கிறேன்? ஏன் இத்துறையை தேர்வுசெய்கிறேன்? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு மிகத் தெளிவான விடை இருக்க வேண்டும். அவ்விடையை அடைந்துகொள்ள மூத்தவர்கள் உதவ வேண்டும்.
சில இளைஞர்களிடம் மேற்கூறிய வினாக்களை தொடுத்திருக்கிறேன். பெரும்பாலானவர்களது விடை திருப்திகரமானதாக இல்லை. தனிப்பட்ட பொருளாதார மேம்பாட்டை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்களது பதில்கள் மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன.
பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்வதை இலக்காகக் கொள்வதில் பிரச்சினையில்லை. ஆனால் அதை மட்டுமே இலக்காகக் கொள்வதுதான் சிக்கலானது.
இறைத்தூதரது மிகப் பெரும் சுன்னா எது எனக் கேட்டால் அவரது தனிப்பட்ட வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொண்டதோடு, அவரது மிக முக்கிய கரிசனையாக சமூக மேம்பாடு, சமூக சீர்திருத்தம், சமூக நலன் போன்றவை மிக முக்கிய இடம் வகித்தன.
கல்வி இவ்விரு நோக்கங்களையும் அடையும் வகையில் இருக்க வேண்டும். சமூக நலன் பற்றிய மனோநிலையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது இன்று பெரும் முயற்சியை வேண்டி நிற்கிறது.
துறைசார்ந்து மாணவர்களை உருவாக்குவதும் அவசியமானது. அனைவரும் டாக்டராக வேண்டும் எனும் மனோநிலை மாற வேண்டும். மாணவரது ஆர்வத்துக்கும் ஆசைக்கும் இடம் வழங்க வேன்டும்.
சமூகம் அனைத்துத் துறையையும் மதிக்க வேண்டும். நாம் ஏற்கனவே பட்டியலிட்ட கலை, இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் அத்துறைகளில் வழிகாட்டப்பட வேன்டும். அரசியல், பொருளாதாரம், கட்டிடக் கலை, புவியியல், மருத்துவம், உளவியல் போன்ற துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் அத்துறைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். இதுவே பங்களிப்பு செய்யும் சமூகமொன்றை உருவாக்க வழிவகுக்கும். இல்லாவிட்டால் தொடர்ந்தும் உரிமைகளைப் பேசும் சமூகமாகவே இருப்போம். கடமைகளை சரிவர செய்யும் சமூகமாக மாறுவதும் அதனூடாக பங்களிப்பு செய்யும் சமூகமாக பரிணாம வளர்ச்சியடைவதும்தான் முஸ்லிம் சமூகம் மீதுள்ள மிகப் பெரும் பொறுப்பு எனலாம்.
































