


மனிதன் வாழ்வதற்கு பிரபஞ்சத்தில் இறைவன் படைத்த ஒரே இடம் இந்த பூமி.
மனிதன் மட்டுமா! பல உயிரினங்களையும் இறைவன் படைத்து பூமியில் வாழ வைத்திருக்கிறான். இன்னும் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் மனிதன் பிறப்பதற்கு முன்பே பல உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்ந்து வந்தன. ஆனால் இறைவன் இந்த பூமியில் உள்ள எந்த உயிரினத்துக்கும் இல்லாத சிறப்பை மனிதனுக்கு கொடுத்து மனிதனை உயர்த்தி வைத்தான்.
ஆனால், மனிதனோ மிகவும் சுயநலமாக சிந்தித்து தனக்கு மட்டும்தான் இந்த பூமி என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றான்.
சுயநலமாய் தனது தேவையை பூர்த்தி செய்துகொள்ள பல உயிரினங்களையும் அது வாழும் காடுகளையும் அழித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், ஒரு தனி மனிதன் பிற உயிரினங்களும் இந்த புவியில் வாழ சமஉரிமையைக் கொண்டிருக்கின்றது என்று ஒரு வனத்தையே உருவாக்கிய ஒரு இந்திய வனமகனின் கதை இதோ…!
அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றுப்படுகையில் தனிமனிதனாக எந்த விளம்பரமும் இல்லாமல் ஒரு காட்டையே உருவாக்கியவர் “ஜாதவ் பாயங்” இதற்காக இவர் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாதவ் பாயங் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மிஷின் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இவர் அசாமில் ஜோஹட் மாவட்டத்தில் அருணாசபோரி என்ற இடத்தில் 1963 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 13 பேர் எனவே இவருக்கு படிப்பதற்கு போதுமான வசதி இல்லை. இருந்தாலும் மற்றவர்களின் உதவியால் பத்தாம் வகுப்பு வரை தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் ஜாதவ் பாயங் அவர் ஊருக்கு அருகிலுள்ள மஜூலி தீவைப் பார்க்க சென்றார். மஜூலி தீவு கடலில் இல்லை. ஆற்றில் இருக்கும் தீவு.
நம் தமிழ்நாட்டில் காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து சேரும்போது ஸ்ரீரங்கம் என்கிற தீவு உருவாகிறது. அதுபோல் அசாமில் பெரிய ஆறு பிரம்மபுத்திரா. அது 100 கிலோமீட்டர் பிரிந்து பிறகு சேர்வதில் மஜூலி என்கிற தீவு உருவாகியுள்ளது.
மஜூலி தீவு முழுவதும் வெறும் மணல் மட்டுமே இருக்கும். ஒரு செடி, மரம், புல் பூண்டு கூட கிடையாது. பாலைவனம் போல் தோற்றமளிக்கும் அந்த மஜூலி தீவுக்கு ஜாதவ் பாயங் 1978இல் சென்று பார்த்தார்.
அப்போது ஒரு பெரு வெள்ளம் தாக்கியதால் பலவகை பாம்புகள் அந்த மஜூலி தீவு நிலப்பரப்பின் மேல் இறந்து கிடந்தது. பாலைவன மணலின் வெப்பம் தாங்கமுடியாமல் அந்த பாம்புகள் இறந்து கிடப்பதை உணர்ந்தார்.
தனக்குத் தெரிந்த பெரியவர்களிடம் சென்று இது குறித்து கேட்டார். அந்த தீவில் ஒரு மரம் கூட இல்லை. நிழல் இல்லாததால் தான் வெப்பம் தாங்க முடியாமல் இந்த பாம்புகள் இறந்து கிடக்கின்றன என்று அவர்கள் கூறினார்கள்.
இந்த நிகழ்வை பலர் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் ஜாத பாயங்கால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தப் பாம்புகள் இறந்தது போலவே நாமும் ஒருநாள் வெப்பத்தால் இறந்துவிடுவோமோ என்று எண்ணினார். எனவே தனது 16ஆம் வயதில் படிப்பை நிறுத்திவிட்டு மஜூலி முழுவதும் மரம் வளர்க்க வேண்டும் என்ற லட்சியத்தை கையிலெடுத்தார்.
அப்போது தனக்குத் தெரிந்த பெரியவர்களிடம் இந்த மண்ணில் மூங்கில் வளருமா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். தினமும் மஜூலி தீவுக்கு வந்து மூங்கில் மரங்களை விதைத்துக் கொண்டே இருந்தார்.
இக்கட்டத்தில் 1979 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கமே சமூக காடு வளர்ப்பு திட்டத்தை கோகிலாமுக் என்கின்ற இடத்தில் தொடங்கியது. இது இவர் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருந்தது. எனவே அங்கு சென்று வேலையில் சேர்ந்து கொண்டு நன்றாக மரம் வளர்க்கக் கற்றுக் கொண்டார்.
இந்தத் திட்டம் நான்கு வருடங்கள் நடந்தன. பிறகு அரசாங்கம் அதனை முடித்துக் கொண்டு கிளம்பியது. ஆனால் ஜாதவ் பாயங் விடவில்லை. திரும்பவும் மஜூலி தீவுக்கு சென்றார் மறுபடியும் மரம் நட ஆரம்பித்தார். இப்போது மூங்கில் மட்டுமில்லாமல் எல்லா மரங்களையும் வளர்க்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் மற்ற மரங்கள் வளர வேண்டுமென்றால் மண்வளம் வேண்டும் என்று அறிந்து பல முயற்சிகளை மேற்கொண்டார்.
ஒரு வகையான சிவப்பு எறும்பை கொண்டுவந்து விட்டால், மண் வளம் பெற்று விடும் என்று அதனையும் செய்தார். எல்லா மரங்களும் வளர ஆரம்பித்தது.
ஒரு வருடம் இல்லை இரண்டு வருடம் இல்லை சுமார் 39 வருடம் வேலை செய்தார். இப்போது அந்த தீவு, ஒரு பெரிய காடாக உருவாகியிருக்கிறது. அந்தக் காடு 1360 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கின்றது. அந்தக் காட்டிற்கு பலவகையான பறவைகள், கூட்டம் கூட்டமாக மான்கள், அந்த மான்களை வேட்டையாடுகின்ற புலிகள், கூட்டம் கூட்டமாக யானைகள் அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் அரிய வகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இப்படியாக எல்லா வகையான உயிரினங்களும் அங்கு வந்து சேர்ந்தது.
அந்த பகுதி மக்கள் அந்த காட்டை முலாய் காடு என்று அழைத்தனர். முலாய் என்பது ஜாதவ் பாயங்கின் செல்லப் பெயர்.
அதெல்லாம் சரி நாம் ஒரே ஒரு செடியை நடுவோம். அதை புகைப்படம் எடுத்து மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம்! என்று ஷேர் செய்வோம். ஆனால் 1,360 ஏக்கர் காட்டை உருவாக்கிய ஜாதவ் பாயங் இது எதையும் செய்யவில்லை.
அவருடைய அந்த சாதனை வெளி உலகிற்கே தெரியவில்லை. பிறகு 2008ஆம் ஆண்டு பக்கத்து காட்டில் இருந்து 115 யானைகள் முலாய் காட்டிற்கு வந்தது. இந்த யானைகளை தேடிக்கொண்டு வனத்துறையினர் வந்தார்கள். அவர்களுக்கு மிகவும் ஆச்சரியம். ஏனென்றால் இப்படி ஒரு காடு இருப்பது அவர்களுக்கே தெரியாது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜாதவ் பாயங் வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தார். பத்திரிக்கை நிருபர் ஜிட்டு கலிதா அசாம் பத்திரிக்கையில் இவரைப் பற்றி எழுதினார். பிறகு மிகவும் பிரபலமாக வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தார். பிறகு 2012ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவ் பாயங்கிற்கு “இந்தியாவின் வன மனிதன்” என்ற பட்டத்தை கொடுத்தது.
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் அவரை பாராட்டி பரிசும் வழங்கினார்.
அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி ஜாதவ் பாயங்கிருக்கு “பத்மஸ்ரீ” விருது கொடுத்தார்.
இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்கா பள்ளி ஒன்று, தனது பாடத்திட்டத்தில் இவரைப்பற்றி எழுதி இவருக்குப் பெருமை சேர்த்துள்ளது.
இன்னும் அவர் காலில் செருப்பு இல்லை, ஆடம்பர உடைகள் இல்லை ஆனால் அவர் தான் உயர்ந்த மனிதன்.
இப்போது ஜாதவ் பாயங்கிற்கு 59 வயது ஆகிறது. இன்னும் கையில் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு புதிது புதிதாய் மரங்களை நட்டு வளர்த்துக் கொண்டே இருக்கின்றார். நன்றாகப் படித்த மேதைகள் மரம் வளர்ப்போம் என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால் ஜாதவ் பாயங் களத்தில் இறங்கி ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஒரு மரத்தையாவது அழிக்காமல் இருப்போம். ஜாதவ் பாயங் செய்ததில் ஆயிரத்தில் ஒரு பங்காவது நாம் செய்ய முயற்சி செய்வோம்….
பத்திரிக்கையாளர்கள் ஜாதவ் பயேங் பேட்டி எடுக்கும்போது ஜாதவ் அரசுக்கு வலியுறுத்திய விஷயங்களை காண்போம்…
இயற்கையைக் காக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, “ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும்” என்கிறார்.
“அரசு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் அழிவைத்தான் விதைக்கிறது. பிரம்மபுத்திராவை பாருங்கள், அதன் சீர்கேட்டுக்கு யார் காரணம்? அரசுதானே அதனால்தான் சொல்கிறேன், அது ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும்.” என்கிறார்.
“உண்மையில் அரசு ஏதாவது செய்ய விரும்பினால், நம் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். நம் உள்ளூர் காடுகள் குறித்தும், விலங்குகளுக்கும், காடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து விரிவான செய்திகளுடன் பாடப் புத்தகத்தை மாற்ற வேண்டும்,” என்று ஜாதவ் பாயங் வலியுறுத்துகிறார்.
“இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபடத் தயார் ” என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இவர் வளர்த்த காடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரத்துவங்கியது மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் இக்காடு வர ஆரம்பித்துள்ளது.
ஆதாரம்:
- http://www.ajithkumar.cc/my-thoughts/one-of-the-greatest-achievements-of-the-human-race-jadav-payeng/
- http://www.ecotourismsociety.in/real-eco-heroes
- “காட்டை உருவாக்கிய தனிமரம்!”. தினமணி (சூலை 8, 2012).
- BBC news tamil nov 3 2020


































