சிறந்த செயல்கள் 

“ஒருவர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இஸ்லாத்தில் மிகவும் சிறந்த செயல் என்ன?’ என்று கேட்டார். அதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள், ‘உணவளிப்பதும், தெரிந்தவர் தெரியாதவர் யாவருக்கும் ஸலாம் சொல்வதாகும்’ என்று கூறினார்கள்.” அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி). 

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்: ”ஒரு மனிதன் பெருமானார் (ஸல்) அவர்களிடம் ‘முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?” என வினவினார் அதற்கவர்கள், ‘எவரது கரங்களிலிருந்தும், நாவிலிருந்தும் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரோ அவரே சிறந்தவர் ” எனக் கூறினார்கள். 

இறைநம்பிக்கை (ஈமான்), மனிதனின் அன்றாட வாழ்க்கையிலும், அவனது நடத்தையிலும் மாற்றங்கள் பல உண்டாக்குகின்றது.

மனிதனின் சமுதாயத் தொடர்புகளைப் பலப்படுத்து வதற்கு இரு விஷயங்கள் அவசியமாகின்றன. ஒன்று, பசித்தவனுக்கு உணவளிக்கும் அளவுக்கு ஒருவன் பெருந்தன்மை பெற்றவனாக இருக்க வேண் டும்; இரண்டாவது, அவன் தன் சக மக்களுக்கு வாழ்த்துக் கூறுமளவுக்கு இனிய சுபாவமுள்ளவனாக இருக்க வேண்டும். 

முஸ்லிம் சமூக அமைப்பில் ஒருவருக்கொருவர் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!) என்று வாழ்த்துக்கூற வேண்டும். 

தனது சகமக்களுக்கு நல்லதை நாடுவதும், சமாதானம் உண்டாகும் படி இறைஞ்சுவதும் ஒரு விசுவாசியின் பண்பாகும். சாந்தி, சமாதானம் உலகில் நிலவ வேண்டுமென்பதே முஸ்லிம் சமுதாயத்தின் இலட்சியமாகும். முஸ்லிம்களின் வாழ்த்துக் கூறும் இந்த நடைமுறை சமாதானத்தின் சுலோகமாகவே அமைந்திருக்கின்றது.

முதலில் உள்ள நபிமொழியில், பெருமானார் (ஸல்) அவர்கள் தாராளத்தன்மை. மற்றவர்க்கு உதவுதல், மற்றவரின் நல்வாழ்வில் அக்கறை ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளதை கவனிக்கலாம். 

இரண்டாவது நபிமொழியில், ஒரு முஸ்லிம் அநியாயக்காரனாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்துகிறார்கள். அவன் கருணை உள்ளவனாகவும், மற்றவரின் உயிர், மானம், கௌரவம் ஆகியவற்றின் பாதுகாவலனாகவும் இருப்பான். 

இது மிகவும் முக்கியமான பண்பாகும். ஏனெனில், அநியாயம், அடக்குமுறையின் அடிப்படையில் ஒரு சிறந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியாது. 

சாந்தி, சமாதானம் நிறைந்த வாழ்வுக்கு அடிப்படை – மனிதன் தனது வெறுப்புணர்ச்சிகளை அடக்கி, மற்றவர்களுக்கு எத்தகைய தீங்கும் செய்யாமல் காத்துக்கொள்வதிலேயே தங்கியுள்ளது. 

மனிதன் மீது சுமத்தப்படும் கொடுமைகள் பலவகையாக உள்ளன: இவற்றுள் கரங்களினாலும், நாவினாலும் செய்யப்படும் கொடுமைகளே மிகவும் கொடியவை.

உடல் பலமுள்ள ஒருவன் தனது வலிமையினால் பலவீனரை அடக்கியாளலாம்; மற்றவர் மீது சேற்றை வீசி அவர்களது கண்ணியத்திற்கும், கௌரவத்திற்கும் பங்கம் விளைவிக்கலாம்.

இந்த நபிமொழி மிகவும் விரிவான கருத்தைக் கொண்டது என்பதை நாம் மறக்கலாகாது. எல்லா வகையான இம்சைகளும் இங்கு கண்டிக்கப்படுகின் றன. 

அது அடக்குமுறை அரசியல், அநீதியான சமூக அமைப்பு அல்லது வலியவன் எளியவனைச் சுரண்டுவது அல்லது மனிதரது உடல், உடைமை, கண்ணியம் என்பவற்றுக்கு ஆபத்து வருத்துவதாக இருப்பினும் சரியே. இதுபோன்று மனித குலத்திற்கு அல்லது தனிமனிதன் ஒருவனுக்குத் தீங்கு தரக்கூடிய ஒரு சொல்லோ, தீர்ப்போ எதுவானாலும் அது நாவினால் செய்யக்கூடிய அநியாயமாகும்.

‘திர்மிதியில், இப்னு ஹிப்பான் அறிவிப்பதாக வரும் வேறொரு நபிமொழி, “எவனுடைய கரங்களிலிருந்தும், நாவிலிருந்தும் மக்கள் பாதுகாப்பாக இல்லையோ…” என்று துவங்குகின்றது. அதாவது இங்கே முஸ்லிம்கள் மாத்திரமல்லாது, மக்கள் எல்லோரும் உள்ளடக்கப்படுகின்றனர்.

அல்லாஹ்வின் வேதத்தை மக்களுக்குப் படித்துக் கொடுப்பதோடு மட்டும் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வேலை முடிந்துவிடுவதில்லை. 

குர்ஆனின் உண்மையான உள்ளர்த்தத்தை விளங்க வைத்து, அவற்றை மக்கள் காணக்கூடிய விதத்தில் செயல் ரூபம் கொடுத்து, அக்கருத்துகள் ஒரு சமுதாயத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைக் காண்பிப்பதும் அவர்களது வேலையாகும். 

சொற்கள் எவ்வளவு சக்திவாய்ந்தனவையாகவும், கூர்மையானவையாகவும் இருந்தாலும், அவை நமது மனதில் பிரதிபலிப்பை ஏற்படுத்த வேண்டுமானால், அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்கப்பட வேண்டும். அதுவரையில் அவற்றை மக்களால் சிறப்பாக விளங்கிக் கொள்ள முடியாது.

‘அவ்வாறே, இந்தக் குர்ஆனையும் (நபியே!) நாம் உமக்கு அருளினோம். மனிதர்களுக்காக (உம்மீது) அருளப்பட்ட இதை, நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பியும். (இதன் மூலம்) அவர்கள் கவனித்தறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் – 16:44)

இந்த வசனங்களுக்கேற்ப பெருமானார் (ஸல்) அவர்கள், தாம் போதித்தவற்றைச் செயலிலும் காட்டினார்கள். அவர்களது வாழ்நாளிலே யாரையும் தமது கரங்களினாலோ அல்லது நாவினாலோ நோவினை செய்தது கிடையாது. அவர்களது சேவகராக நெடுங்காலமாக இருந்த அனஸ் (ரலி) அவர்கள், தம்மைப் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு வேளை கூட ஒரு கடிந்த வார்த்தை கொண்டு அழைத்தது கிடையாது என்று கூறியுள்ளார்.

அதே போன்று பசியென்று வரும் யாவருக்கும் உணவளிக்கும் பழக்கம் அவர்களிடம் இருந்தது. தமக்கு இல்லாவிட் டாலும், பிறர்க்கு வழங்கி மகிழ்வார்கள். யாராவது ஏழைகள் வருவார்களாயின் தமது போர்வையை விரித்து அதில் அமரச் செய்து பரிமாறுவார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் யாரையாவது சந்தித்தால் முதலில் ‘ஸலாம்’ சொல்வார்கள். தம் வீட்டுக்குள் நுழையும் போதும், வழியில் குழந்தைகளைக் காண்கின்ற போதிலும் ‘ஸலாம்’ சொல்வார்கள். சந்தித்ததும் கைகுலுக்கி முகமன் விசாரிப்பார்கள். மற்றவர் தமது கரத்தை எடுக்கும் வரையில் தம் கரத்தால் பற்றிக்கொண்டிருப்பார்கள். இவ்வாறுதான் அவர்கள் தமது போதனைகளைச் செயலில் காட்டினார்கள்.

தாஹிர் ரசூல் காதிரி