

- தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன?
முஸ்லிம்கள் மலைபோல் எழுதிக் குவித்துள்ளார்கள். அவைகளை நாம் படிக்கவில்லை. காரணம் நம்ம விஷயத்த படிப்பதற்கே நமக்கு நேரம் இல்லை. நமக்கு சிறு பிராயத்திலிருந்தே முஸ்லிம்கள் மேல் ஒரு துவேஷத்த உண்டு பன்னிட்டாங்க. தவிர முஸ்லிம்கள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியவைகள் நிறைய இருக்கிறது. (இதைச் சொல்லி விட்டு, எனக்கு ஒரு நினைவு வருகிறது சமீபத்தில் கொடிக்கால் சேக் அப்துல்லாஹ்வைப் பற்றி தெரிந்த போது ஆச்சரியப்பட்டுப் போனேன். எவ்வளவு பெரிய மனிதர் என்றார். கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்வின் நேர்காணல் அடங்கிய நவம்பர் 2020 சமூக நீதி முரசு இதழை அவருக்கு நாம் வழங்கினோம். பின்னர் இருவரும் அலைபேசியில் உரையாடிக் கொண்டனர்.)
- முஸ்லிம் சமூகம் குறித்த உங்களுடைய பார்வை என்ன?
அவர்கள் தங்கள் போக்கில் இருக்கிறார்கள். வேறு எதிலும் அவர்கள் தலையிடுவதில்லை. என்ன கேலி செய்தாலும் அவர்கள் நம்மை சட்டை செய்யமாட்டார்கள். ஒரே ஒரு விஷயம் அவர்களுக்கு பிடிக்காது. அவர்களது மத ரீதியான கேலிகள் அவர்களுக்குப் பிடிக்காது. அவர்களது அல்லாஹ்வையோ தூதரையோ எதுவும் சொல்லக்கூடாது. அதை அவர்கள் சகிக்க மாட்டார்கள். அது கெட்ட பழக்கம் என்று சொல்ல முடியாது. அது அவர்களின் இயல்பு.
வரலாற்றிலும் எத்தனையோ கோவில்களுக்கும் முஸ்லிம்கள் நிலம் வழங்கி இருக்கிறார்கள். தர்ம காரியங்கள் செய்திருக்கிறார்கள். இப்போதும் செய்து வருகிறார்கள்.
- தமிழகத்தில் முஸ்லிம்களுக்கும் மற்ற மக்களுக்கும் இருக்கும் உறவுமுறை குறித்து உங்கள் கருத்தை பதிவு செய்யலாமா?
இங்குள்ள நாயக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாமன் – மாப்பிள்ளை உறவுமுறை இருக்கிறது. ஆசாரிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு உறவு இருக்கிறது.
ஒவ்வொரு வைனவக் கோவிலுக்குள்ளும் ஒரு சின்ன கோவில் இருக்கும். அந்த கோவிலில் ஒன்று துலுக்க நாச்சியார் கோவில். இப்படி பல இணக்கங்கள் வரலாற்றில் இருக்கிறது. குரோதம் இருப்பது போன்ற வரலாறு நமக்கு இல்லை.
உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். வெள்ளைக்காரன் காலத்தில் சர்க்கார் பணம் வந்து சேரும் கருவூலம் முதலில் பாளையங்கோட்டையில் இருந்தது. அதன் பின்பு கோவில்பட்டியில் கிளை திறந்தார்கள். கோவில்பட்டி கருவூலத்தில் சேரும் பணத்தை சுமந்துகொண்டு பாளையங்கோட்டை கொண்டு செல்ல வேண்டும். அந்த பணத்தை சுமந்து செல்லும் நபர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர், அவர் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள மணியாச்சியின் தலையாரி. அவனது சிநேகன் கயத்தாரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரர். இருவரும் பணத்தை சுமந்து செல்வார்கள்.
கொள்ளைக்காரர்கள் இதை நோட்டுமிட்டு இருவரில் ஒருவரை அடித்தால் தான் பணத்தை கைப்பற்ற முடியும் என திட்டமிட்டார்கள்.
குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் இருவரையும் தாக்கத் தொடங்கினார்கள். அந்த தலையாரி முஸ்லிம் சகோதரனிடம் நீ தப்பிச்சு போயிடு என்று சொன்னார். நான் போக மாட்டேன் என்று சொல்லிவிட்டார் முஸ்லிம். கொள்ளைக்காரர்கள் இருவரையும் அடித்துப்போட்டு பணத்தை எடுத்துப் போய் விட்டார்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது சிநேகன் தலையாரியை முஸ்லிம் சகோதரர் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். வழியில் தலையாரி இறந்து விட்டார்.
பாதையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளிடம் தலையாரியின் வீட்டில் செய்தியை சொல்லி விடுங்கள். எனக்கு குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் என்று கேட்ட சிறிது நேரத்திலேயே அந்த முஸ்லிம் சகோதரரும் இறந்து விட்டார். பின்னர் அந்த தலையாரியின் சமூகம் இறந்த முஸ்லிம் சகோதரருக்கு மரியாதை செய்தார்கள்.
ஒரு மனிதர் கொலை செய்யப்பட்டால் அவர் இறந்த அன்று கும்பிடுவார்கள். அல்லது ஒரு விழாவாக கொண்டாடுவார்கள். இறந்தவர்களை மரியாதை செய்யும் விதமாக இறந்த மனித அடக்கப் பாதை வழியாக செல்பவர்கள் கற்களை போட்டுச் செல்வார்கள். அது குவியலாக மாறும். (கட்டபொம்மனுக்கும் அது போன்ற கல் குவியல் இருந்தது. மண்டபம் கட்டும் போது அதை நிறைத்து விட்டார்கள். அது போன்று செய்திருக்கக் கூடாது அது மக்கள் செய்த மரியாதை.)
கயத்தாரில் இருந்து குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு கொடியை சுமந்து வந்து நட்டு வைத்து ஒரு விழா கொண்டாடுகிறார்கள். எதற்காக இதை செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. இது குறித்து கயத்தாறில் விசாரித்தால் கூடுதல் விவரங்கள் தெரியலாம்.
இடைச்செவல் என்பது எனது கிராமத்தின் பெயர். பத்தமடை என்ற ஊரில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்துக்கு இடைசெவலோன் என்று பெயர். இப்படி பெயர் இருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கும். தமிழகத்தில் வாழும் சமூகங்களுக்கு இடையே இது போன்ற இடப்பெயர்வுகள், இணக்க நிகழ்வுகள் அனேகம் நடந்திருக்கிறது.
- முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ஒரு சின்ன உதாரணம் நாடார் சமூகம் இருக்குதுல்ல அந்த சமூகம் எப்படி கிளர்ந்து மேலே எழுந்ததுங்கிறதப் பார்க்கனும். சங்கங்கள் வைத்து மகிமைகள் வைத்து அவர்களுக்குள்ளேயே பணம் வசூல் செய்து ஒரு பேங்க் ஒன்னு ஆரம்பிச்சாங்க.
அவர்களது கல்வி சமாச்சாரம் அப்புறம் அவர்களது அரசியல் ஈடுபாடுகள் மிகவும் கவனிக்கத்தக்கது. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் பல்வேறு துறைகளிலும் பங்கெடுக்கிறார்கள். முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்கள்.
தமிழகம் அறிந்த, அந்தக் காலத்திலேயே லண்டனில் படித்த இரண்டு பாரிஸ்டர்கள் இருக்கிறார்கள். ஒருவர் தமிழ் நாட்டின் இதழியல் முன்னோடி, தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தன், இரண்டாமவர் இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவரான கே.டி.கே. தங்கமணி ஆகியோர் நாடார் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அந்த சமூகத்தின் முன்னோடிகள். அவர்கள் படித்து என்னவாக ஆனார்கள் என்பதை இன்று நாம் பார்க்கிறோம்.
அந்த சமூகம் வேகமாகவும் மிகவும் கவனமாகவும் மேலே வந்தார்கள். அவர்களது முன்னேற்றத்தைக் கண்டு பிராமணர்களே மூக்கால் அழுதுகொண்டிருக்கிறார்கள்.
பிராமணர்கள் ஏன் பின் தங்கினார்கள் என்றால் நாங்க ரொம்ப உசத்தியாக்கும் அப்படின்னு நெனச்சிக்கிட்டே அவர்கள் கீழே சென்று விட்டார்கள். ஆனால் முஸ்லிம்கள் நாங்கள் உசத்தி அப்படிங்கிற மாதிரி போகல! நாடார்களைப் போல திட்டமிட்டு செயல்பட்டால் சமூகம் எங்கேயோ போய் விடும்.



































