


குழந்தைகளுக்கு சத்துக்கள் நிறைந்த பானம் எதுவென்று உலகம் முழுவதும் தேடினாலும் ஆராய்ச்சி பல செய்து போட்டிகள் நடத்தினாலும் போட்டியின் முடிவு ஒன்றாகத்தான் இருக்கும் அது “தாய்ப்பால்”.
பிறந்தது முதல் இறக்கும் வரை மனிதனின் முழு ஆரோக்கியத்திற்கும் “நோய் எதிர்ப்பு சக்தியே” முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
கலர் கலரான விளம்பரங்களில் விதவிதமான டப்பாக்களில் விலை உயர்ந்த பானங்கள் என பட்டியலிட்டு குழந்தைகளுக்கு சக்தியை நாம் ஊட்ட நினைத்தாலும், தாய்ப்பாலில் இருக்கின்ற அற்புத சக்தி வேறு எதிலும். இருக்காது என்பது தான் உலகம் அறிந்த விஞ்ஞான உண்மை.
தாய்ப்பால், குழந்தை நாவால் சுவைக்கும் உயர்ந்த சுவை மிக்க முதல் “உயிர் அமுதம்”. அந்த அற்புதமான அமுதத்திற்கு இணையாக எதையும் சொல்லி விட முடியாது.
வயிற்றில் இருக்கும் போது, தாயிடம் இருந்து சுத்தமான சத்துக்களை தொப்புள் வழியாக உட்கொள்ளும் குழந்தை, பூமிக்கு வந்தவுடன் முதலில் வாய் வழியாக உட்கொள்ளும் உணவு தாய் பால் மட்டுமே.
தாய்ப்பால் இறைவன் வழங்கிய அற்புதமான அதிசய பானம். அதனால் …தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்… என இறைவன் கூறுகிறான். (திருக்குர் ஆன் 2.233).
குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு சுரக்கும் மஞ்சள் நிறம் கலந்த பாலை மட்டுமே குழந்தைக்கு கொடுத்திட வேண்டும். மாறாக தேன், சர்க்கரை நீர் போன்றவற்றை கொடுக்கக் கூடாது. ஏனெனில், முதலில் சுரக்கும் சீம்பாலில் பச்சிளம் குழந்தைக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்திகள் நிறைந்திருக்கும்.
அனைத்து நோய்களுக்கும் எதிராக போராட அவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே,பிறந்த குழந்தைக்கு குறைந்தது எட்டு மாதங்களாவது நிச்சயமாக தாய்ப்பால் கொடுத்திட வேண்டும்
பிரசவித்த தாய்க்கு முதலில் சுமார் 10 மில்லியில் இருந்து 40 மில்லி அளவு வரை தாய்ப்பால் சுரக்கும் அந்த பானத்திற்கு கொலஸ்டிரம் என்று பெயர். இந்த கொலஸ்ட்ரம் என்ற சத்து நிறைந்த பால் சுமார் நான்கு நாட்களுக்கு சுரக்கும்.
கொலஸ்ட்ரம் பாலில் புரதச்சத்தும் நோய் எதிர்ப்பு சக்தி தருகின்ற ஊட்டச் சத்தும் அதிக அளவில் இருக்கும். தண்ணீரைத் தவிர இதில் புரதங்கள், கொழுப்புகள், கார்ப்ஸ், தாதுக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், மற்றும் ஏ, சி, டி போன்ற வைட்டமின்களும் தாய் தருகின்ற பாலிலேயே தேவையான அனைத்தும் இருக்கிறது. ஆபத்தான வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் ஊட்டச்சத்து.
சுகப் பிரசவமாக இருந்தால் அரை மணி நேரத்திலும் அறுவை சிகிச்சையாக குழந்தை பிறந்திருந்தால் நான்கு மணி நேரத்துக்குப் பிறகும் குழந்தைக்கு தாய்ப்பால் தந்திடவேண்டும்.
காரணம் அறுவை சிகிச்சையின் பொழுது
உண்ட மருந்துகளின் தாக்கத்தில் இருந்து குழந்தை எந்த பாதிப்புக்கும் உட்பட்டு விட கூடாது என்பதால் தான். வளரும் குழந்தைக்கு 8 மாத காலம் தாய்ப்பால் மட்டும் குடுத்து அதன் பிறகு துணை உணவாக மற்ற உணவுகளும் சேர்த்து தருவது நல்லது.
யுனிசெப் என்றழைக்கப்படும் குழந்தைகள் நல அமைப்பு தாய்ப்பால் சுரப்பின் தன்மையின் அடிப்படையில் குழந்தை பிறந்த மூன்று மணி இடைவெளியில் பால் புகட்டலாம் என்கிறது
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாய்ப்பால் வாரம் என மக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்தி தாய்ப்பாலின் அருமையை lஎடுத்துரைப்பது மட்டுமில்லாமல் தாய்ப்பால் தருகின்ற தாய்க்கும் கிடைக்கின்ற நன்மைகளையும் உலகம் முழுவதும் அந்த நிறுவனம் தாய் பாலின் அற்புதத்தை பரப்பிக் கொண்டுள்ளது.
தாய்ப்பால் குடிக்கிற குழந்தைக்கு மட்டும் இல்லாமல் தாய்க்கும் மனச்சோர்வு இதயம் தொடர்பான பிரச்சினைகள் மார்பகப் புற்றுநோய் உடல் எடை அதிகரிப்பு ரத்தப்போக்கு அதிகரிக்காமல் தடுப்பது மற்றும் புற்றுநோய்கள் வராமல் தடுக்கவும் தாய்ப்பால் உறுதுணையாக அமைகிறது.
தாய் தனது குழந்தையை அணைத்து பால் புகட்டும் போது தாய்க்கும் சேய்க்கும் பிணைப்பு அதிகமாவது மட்டுமில்லாமல் ஆக்ஸிடோசின் என்ற சுரப்பி அதிகளவில் தாய்க்கு சுரக்கவும் காரணமாகிறது. தாய்ப்பால அதிகமாக சுரக்க இந்த சுரப்பி காரணமாகி விடுகிறது.
சில தாய்மார்கள் தவறுதலாக புரிந்து கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிப்பால் அல்லது செயற்கை பால் வழங்கக்கூடிய நிலையும் நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது.
அவ்வாறு தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காமல் போவது மட்டும் இல்லாமல் மலச்சிக்கல் வயிற்று பிரச்சினைகள் மற்றும் குடல் தொடர்பான நோய்களும் வரும் காலங்களில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
பால் தராத தாய்மார்களுக்கும் மார்பகப் புற்றுநோய் உடல் எடை அதிகரிப்பு போன்ற பல நோய்களும் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
பசுமாடுகளை வளர்ப்பவர்கள் தங்களுடைய கறவை மாடுகள் அதிகமாக பால் சுரக்க வேண்டும் என்பதற்காக ஆக்சிடோசின் என்கின்ற ஊசியினை செலுத்தி பால் கறப்பதும் நாம் இன்றய காலங்களில் பார்க்க கூடிய நிகழ்வு தான்.
கன்று குட்டியை பசுவின் அருகில் கட்டி அதன் பிறகு பால் கரக்கும் பொழுது பாலின் அளவு அதிகரிப்பதை அவர்கள் தெரிந்து கொண்டு கன்று இல்லாத பசுக்களிடம் கன்று போல் வைக்கோல் பொம்மைகள் வைத்து பால் கறப்பதை நாம் கண்கூடாக பார்த்தும் இருக்கிறோம்.
தாய்ப்பால் குழந்தைக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல் பால் கொடுக்கின்ற முறையும் தாய்க்கு மிகவும் முக்கியம்.
ஒரு பக்கம் ஒருக்களித்த நிலையில் படுத்தும் அல்லது சம்மணமிட்டு உட்கார்ந்தும் குழந்தையை தன் மடிமீது படுக்க வைத்தும் பால் புகட்டுவது சிறந்தது.
பால் குடிக்கும் பொழுது குழந்தை காற்றை சில நேரங்களில் உள் இழுத்துக் கொள்ளும் அதனால் பால் கொடுத்த பிறகு குழந்தையை கொஞ்ச நேரம் தோளில் சாய்த்து வைத்துக் கொள்வது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
முறையாக தாய்ப்பால் அருந்துகின்ற குழந்தைக்கு வயிறு தொடர்பான நோய்கள் குடல் தொற்று நோய்கள் சிறுநீர் பாதை தொற்று நோய்கள் சுவாச நோய் தொற்று, ஆஸ்துமா, சளி, ஜலதோஷம், இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
மற்றும் உடல் பருமன் போன்றவைகள் ஏற்படாமல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் குழந்தை ஆரோக்கியமாக வாழ்வதற்கும் உதவியாக அது இருக்கும்.
வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு வாய்ப்பாக நமது அரசு பிரசவ கால விடுமுறைகளையும் வழங்குகின்றது.
தாய்ப்பால் முறையாக தர முடியாத தாய் தனது பாலை சுத்தமான அறையில் சுத்தமான பாத்திரத்தில் சேகரித்து சுமார் 6 – 8 மணி நேரம் வரை பிரிட்ஜில் பத்திரப்படுத்தி குழந்தைக்கு அந்த பாலை புகட்டலாம்.
பிரிட்ஜில் உள்ள பாலை உடனே குழந்தைக்கு குடிக்க குடுக்காமல் அறையின் சரியான சீதோச நிலைக்கு பால் வரும் வரை வைத்திருந்து பிறகு கொடுக்க வேண்டும்.
தாய்ப்பாலை நேரடியாக சூடு படுத்தக்கூடாது. கொதிக்கும் தண்ணீர் பாத்திரத்தில் தாய்ப்பால் பாத்திரத்தை சுட வைத்து வெது வெதுப்பானவுடன் எடுத்து குழந்தைக்கு குடுக்கலாம்.
தாய்ப்பாலில் பாஸ்பரஸ், கால்சியம், புரோட்டீன், லேக்ட்டோஸ் குளுட்டய்மைன், மினரல்ஸ், போன்ற பல அற்புத சத்துகள் நிறைந்து இருக்கின்றன.
தாய்ப்பால் பற்றாக்குறையினாலோ தனக்கு பால் சுரக்காத காரணத்தாலோ பாதிக்கபடும் தாய்மார்கள் அசைவ உணவுகள், வெள்ளைப் பூண்டு, வெந்தயம், வெல்லம், கருவாடு, பேரிச்சம் பழம், வெற்றிலை, ஆலம் விதை, அருகம்புல் சாறு, பயறுவகைகள், பூசணி, ராகி, முருங்கை, ஓட்ஸ், பப்பாளி, கேரட், முட்டை, பாகற்காய், காய்கறிகள் ஆகியவைகளை சாப்பிடுவதால் தேவையான அளவு பால் சுரந்து குழந்தைக்கு ஆரோக்கியமான பால் கிடைக்கும்.
ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை பாலூட்ட வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு 8-12 தடவை.
மாலையிலும் இரவிலும் பால் ஊறுவது அதிகம் என்பதால் ராத்திரி நேரத்திலும் குழந்தைகளுக்கு பால் ஊட்ட வேண்டும். ஒரு மார்பகத்தில் குழந்தை எவ்வளவு நேரம் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுத்திட லாம். அதன் பிறகு குழந்தைக்கு தேவை என்றால் அடுத்த மார்பகத்திலும் பால் குடிக்க வைக்கலாம்
பால் குடிக்கும் குழந்தை 6-8 முறை சிறுநீர் கழித்தாலோ, 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம்.
குழந்தையின் மலத்தின் நிறம் கருப்பிலிருந்து மஞ்சளுக்கு மாறுகிறது என்றால் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் 150-200 கிராம் வரை குழந்தையின் எடை அதிகரித்தாலே பால் போதுமாக இருக்கிறது என அறிந்து கொள்ளலாம்.
இன்று தீவிரமாக பரவிவரும் COVID-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.
கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளில் சமூக இடைவெளி மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் தாய்ப்பால் SARS-CoV-2 ஐ விட சக்தி வாய்ந்தது. எனவே, குழந்தைக்கு நிதானமாக தாய்ப்பால் கொடுங்கள் என WHO அறிவுரை வழங்கியுள்ளது.
எனவே நாம் எந்த காரணமும் சொல்லாமல் பிறந்த குழந்தைக்கு தாய் பால் குடுத்து நோய் இல்லாத வாரிசை உருவாக்கி மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு முயற்சி செய்யும் நல்ல தாயாக ஆரோக்கியமான குழந்தையை வளர்த்தெடுப்போம்.



































