புதிய கல்விக் கொள்கை 2020 எழுப்பும் கேள்விகள் – மு. அ. ரசாக் 

‘கல்வித் துறையை முழுமையாக சீர்திருத்தம் செய்தல்’ எனும் இலக்கோடு சென்ற ஜூலை 29க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தேசிய கல்விக் கொள்கை 2020, நரேந்திர மோடி அரசு எங்கனம் செயல்படுகிறது என்பதற்கு பல உதாரணங்களில் ஒன்று.

தொடர்ந்து மோடி அரசு செயல்படும் முறை குறித்து விவாதிக்கும் போது தான், அதன் மறைவான நிகழ்ச்சி நிரல்கள் தெரிகிறது. இப்போது வெளிப்படையாக துணிச்சலுடன் தெனாவட்டாக பெரும்பான்மை இருக்கிறது என்று திமிரோடு செயல்படுவதை உணரமுடியும்.

2019 மே 31இல் கஸ்தூரிரங்கன் குழு அளித்த 484 பக்க அறிக்கை, மக்கள் அதை விவாதித்து ஆய்வு செய்து கிடைத்த கருத்தொற்றுமை அடிப்படையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறதா என்றால் இல்லை. நாடாளுமன்றத்தில் எந்த விவாதம் செய்யாமல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, பல தலைமுறைகளை பாதிக்கின்ற பிரச்சனைகளை எந்த உரையாடலுக்கும் இடமின்றி விரைவாக செயல்படுத்த முனைகிறது.

இந்திய கல்வித் துறையை சந்தைக்கு சமர்ப்பிக்கிற நவ தாராளமயக் கொள்கையை இந்த அறிக்கை முன்வைக்கிறது. கல்வித் துறையை ஜீவகாருண்ய பங்களிப்புடன் (Philanthropic Private Partnership) விரிவுபடுத்த வேண்டும் என்ற அறிவிப்பு தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான கடை திறப்பு.

அரசின் பொறுப்பிலுள்ள மக்களின் உரிமைகளோடு தொடர்புடைய பொதுத் துறைகளை ஏற்கனவே ஒன்றொன்றாக ஏலம் விட்டுக் கொண்டிருக்கிற நடவடிக்கைகளின் தொடர்ச்சி தான் இது.

இலாபத்தில் இயங்குகிற பொதுத் துறைகளை தாராளமயம் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்கு சமர்ப்பிக்கும் பொது நல அரசு (?) இது.

கல்வியை கடைச் சரக்காக்கி ஏழை-எளிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக மாற்றுவதற்கான முயற்சி தான் இவை என சந்தேகப்படுவது நியாயம் இருக்கிறது. இன்னும் தொடங்காத அம்பானியின் ஜியோ பல்கலைக் கழகத்திற்கு சிறந்த கல்வி நிறுவனம் எனும் பெயரில் மக்கள் வரிப்பணத்திலிருந்து ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருப்பதை நியாயமாக  சிந்திக்கின்ற எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கோவிட் கொடூர காலத்தில் உலகம் முழுவதும் பொருளாதார சரிவும் பின்னடைவும் வேலையின்மையும் நிச்சயமற்ற தன்மையும் நிலவுகிற வேளையில் இலாபத்திலும் வருமானத்திலும் முன்னணியில் இருக்கின்ற நிறுவனத்திற்கு ஏழைகளின் ஜிஎஸ்டி வரியிலிருந்து கொள்ளையடித்த பணத்தை பண முதலைகளுக்கு வாரி வழங்குவது எத்தகைய மனிதத் தன்மை என்று விளங்கவில்லை.

2017 பிப்ரவரியில் கொண்டுவந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சட்டத்(Indian Institute of Management Act)துடன்தான் இந்த கொள்ளை ஆரம்பித்தது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் கடை விரிக்க அனுமதி அளித்து விட்டு, விதிமுறைகள் என்னென்ன, கல்விக் கட்டணம் ஆகியவை குறித்து மௌனம் காப்பது சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துகிறது. கல்வி நிறுவனங்களில் எத்தகைய இட ஒதுக்கீடு நடைமுறையில் வரும் என்பது குறித்து கடுமையான மௌனம் சாதிப்பது சாதிய சமூகத்தை இன்னும் வலிமைப்படுத்துவதற்கான உத்திதான்.

கல்வி உரிமை சட்டத்தின் எல்லை 3 வயதிலிருந்து 18 வயது வரை உயர்த்துவோம் என்கிற ஒரு சில அம்சங்கள் வரவேற்கத்தக்கது என்றாலும் அதற்கான நிதி ஒதுக்கீட்டில் எந்த வகையான திட்டங்களும் அறிவிக்காதது செய்து வருகிற வாயால் வடை சுடுகிற என்று அணுகுமுறைதான்.

10+2+3  என்ற அமைப்பை 5+3+4 என மாற்றியிருப்பதெல்லாம் புதுமையான திட்டம் தான், கரிக்குலம், கோ கரிக்குலம், எக்ஸ்ட்ரா கரிக்குலம் என்ற வேறுபாடுகளை நீக்கி அனைத்து விஷயங்களையும் பாடத்திட்டமாக ஒன்றிணைப்போம் என்பதெல்லாம் எந்த அளவு சாத்தியம் என்பதை கல்வியாளர்களின் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

பட்ட வகுப்பு முறையில் மூன்றாண்டு என்பதை நான்காண்டாக மாற்றுவதும் ஒவ்வொரு ஆண்டும் தொழில் அடிப்படையிலான சான்றிதழ் வழங்குவதும் முழுமை செய்தால் ஆய்வுத் தகுதி ரிசர்ச் குவாலிஃபிகேஷன் (Research Qualification) அளிப்பது என்ற முறைக்கு பல மாறுபட்ட கருத்துக்கள் வந்துள்ளன.

ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டு எதிர்ப்புகளைத் தொடர்ந்து அது திரும்பப் பெறப்பட்டதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

மத்திய மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரம் அளித்து 1976 சட்டத் திருத்தத்தினூடாக கன்கரண்ட் லிஸ்டில் கொண்டு வரப்பட்ட கல்விமுறையை இப்போது அதிகாரக் குவியலுக்கு மாற்றியிருக்கிறது.

UGC, AICTE, NAAC ஆகியவற்றை ஒரே குடையின்கீழ் கொண்டு வரும் முயற்சி நடைபெறுகிறது. குடை நாக்பூரில் செய்யப்படுமா?

நேஷனல் ரிசர்ச் பவுண்டேஷன், பள்ளிக் கல்வி முறையை மையப்படுத்தும் ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக் இங்கனம் செல்கிறது. அதிகார மயம் எனும் பாசாங்கு தந்திரம் கல்வித் துறையிலும் நடைமுறைப்படுத்தப்போகிறது. 

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் கல்வித்துறை அதிகாரப் பரவலை விரிவுபடுத்தும்போது பன்மைத்துவமும் சிக்கலும் நிறைந்த இந்தியாவில் அதிகாரக்குவியலை தேர்ந்தெடுக்கிறது மோடி அரசு.

பல மௌனங்களின் கலவை இந்த அறிக்கை. மிகப்பெரும் மௌனங்களின் இன்னொன்று மதச்சார்பின்மை. அரசியலமைப்பு விழுமியங்களை கூறிச் செல்லும் இடங்களில் மதச்சார்பின்மை என்ற சொல்லைக் கூட உச்சரிக்காதது இன்னும் அச்சப்படுத்துகிறது.

சமஸ்கிருதம் குறித்து விழுந்து விழுந்து பேசுகிற கல்வி அறிக்கை ‘மத்ரசா’ என்ற சொல்லை ஓரிடத்தில் மட்டும் கூறிச் செல்கிறது.

செகண்டரி ஸ்கூலில், கொரியன், ஜப்பான், தாய், பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ரஷ்யன் ஆகிய வெளிநாட்டு மொழிகளை அனுமதிக்கும் போது இலட்சக்கணக்கான இந்தியர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு பணியாற்ற பயன்படுத்தும் அரபு மொழியை தவிர்த்ததுடன் புறக்கணித்துள்ளது.

அரபு நாடுகளுடன் வெளியுறவுக்கும் நட்புணர்வுக்கும் பொருளாதார லாபத்துக்கும் கை கொடுத்துவிட்டு அரபு மொழியுடன் மாற்றாந்தாய் மனப்பான்மையை கை கொள்வது பாஜகவின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பகுதிதான்.

அதே போன்று தான் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவமும் மக்கள் பேசும் மொழிக்கு உதாசீனமும் இந்த அறிக்கையின் முதன்மை குணங்களாக உள்ளன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளான பாரதீய சிக்‌ஷா மண்டல் (BSM) சிக்‌ஷா சன்ஸ்கிருதி உத்தான் நியாஸ் (SSUN) என்பவை இந்த அறிக்கை உருவாக்கத்தில் தலையீடு செய்ததை தேசிய ஊடகங்கள் ரிப்போர்ட் செய்திருந்தது.

மனிதவள மேம்பாட்டு வகுப்பை கையில் வைத்திருந்த பிரகாஷ் ஜவேடகர், இப்போதைய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து உரையாடலில் உள்ளது. BSMன் 2018 கூட்டத்தில் நரேந்திர மோடியும் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்று அளித்த கருத்துதான் கல்வித்துறை என பெயர் மாற்றம்.