



அன்று குலக் கல்வி, வேதக் கல்வி, சமஸ்கிருதக் கல்வி இவற்றில் இருந்து மீள வேண்டுமென பரப்புரை செய்து கல்வியை கடை கோடி மக்கள் வரை கொண்டு சேர்த்தார்கள் மக்கள் மீது அக்கறை கொண்ட நன்மக்கள்.
இன்று கல்வி வியாபார நோக்கோடு கையாளப்படுகிறது.் கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதற்கு பதிலாக பணம் கொடுத்து வாங்கும் வணிகமாக மாற்றப்பட்டு விட்டது.
இன்றைய சூழலில் எளிய மக்கள் பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்விக்கு செல்கின்றபோது பண வசதி இல்லாமையால் கல்வி மறுக்கப்படுகிறது.
பணமிருந்தால் மட்டும் உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு நினைத்துப் பாருங்கள் என்ற கட்டமைப்பு உருவாக அரசும் காரணமாகியுள்ளது.
தம் பிள்ளைகளுக்கு எவ்வளவு பணம் செலவழித்தேனும் உரிய கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பெற்றோர்கள் செயல்படுகின்றனர்.
பல்லாயிரம், பல லட்சம் செலவழித்து படித்து பட்டம் பெற்ற பிறகு வேலைவாய்ப்புக்காவது ஏதாவது வழி இருக்கிறதா? அதுவும் விடை தேட முடியாத கேள்வியாகவே இருக்கிறது.
நமது அரசும் எந்த வேலைகளையும், வேலை வாய்ப்புத் திட்டங்களையும் புதிதாக உருவாக்கவில்லை. இருந்த வேலைகளையும் பறித்து மக்களை தெருவில் நிறுத்தி இருக்கிறது.
இன்றைய இளைய பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும், மாணவர்களும் வேலைவாய்ப்பு திண்டாட்டத்தின் காரணமாக பல்வேறு தவறான முயற்சிகளில் ஈடுபடும் மோசமான சூழல் உருவாகியுள்ளது.
அண்மையில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு, கல்வி மட்டுமல்ல, வேலை வாய்ப்பும் கொள்ளையடிக்கும் வியாபாரமாக மாறி உள்ளதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
வாழ்க்கை என்றால் என்ன? என்ற புரிதலை கல்வி தர வேண்டும். அதற்கு மாற்றாக கல்வி பணம் சம்பாதிக்கத் தான் என்ற புரிதலை கற்றுக்கொடுத்தன் விளைவு மருத்துவத் தேர்வில் மோசடி, அரசுத் தேர்வில் மோசடி. பணம் ஒன்றே குறிக்கோளாக ஆனதால் எங்கும் மோசடி எதிலும் மோசடி.
அதன் மோசமான இன்னொரு விளைவு இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவனமாக சொல்லப்படும் ஐ.ஐ.டி. முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பேராசிரியர் உட்பட உயர் பதவிகளுக்கு தகுதியுள்ளவர்கள் நிரப்பப்படாமல் வியாபார நோக்கோடு நிரப்பப்படுகின்றது.
படிப்பு, வேலை அனைத்துக்கும் பணம் கொடுத்து வேலை செய்யும் ஒருவர் யாரை உருவாக்குவார்.
WTO (World Trade Organization) என அறியப்படும் உலக வர்த்தக அமைப்பு கென்யாவின் தலைநகர் நைரோபியில் 2015 டிசம்பர் 15 முதல் 18 வரை நடைபெற்ற பத்தாவது வர்த்தக மாநாட்டில் சேவை ஒப்பந்தம் (GATS) இறுதி செய்யப்பட்டது.
இதில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைத் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து கொள்ளை இலாபம் ஈட்ட வழிவகுப்போம் என ஒவ்வொரு உறுப்பு நாடும் ஒப்புக்கொண்டுள்ளது அதில் இந்தியாவும் உண்டு.
அதன் காரணமாக இந்தியாவின் உயர்கல்வி சர்வதேச சந்தையாகும். பொதுக்கல்வி முறை அழிந்து வணிக வளாகங்களாக நமது கல்விக் கூடங்கள் ஆகும். கல்வி இனி விற்பனைக்குரிய சர்வதேச சந்தை பொருளாகி உலக பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக மாறும்.
கல்லூரியின் கட்டணம் எளியவர்கள் செலுத்த முடியாத அளவிற்குப் போனால் மெல்ல மெல்ல காலப்போக்கில் அரசு கல்லூரிகள் காணாமல் போகும்.
நேரடியாக சொல்ல வேண்டுமானால் எளிய மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும். அரசு கல்வி நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுகின்ற போது கல்வியென்பது காணல் நீராகிப் போகும்.
ஜனநாயகத்தின் மீதும் நாட்டின் மீதும் நாட்டின் எதிர்காலத்தின் மீதும் விருப்பம்கொள்வோர் இந்த மோசமான சூழலுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.
அடுத்த தலைமுறைக்கு கல்வியைப் பாதுகாப்போம்.
பழவை மு.முஸ்தபா




































