

மருத்துவர் மற்றும் மார்க்க மேதை
இப்னுல் நஃபீஸ் – (1205-1288)
இஸ்லாமிய சிந்தனை பள்ளிகளில் ஷாஃபி சட்டங்களின் மேதையாகவும், தலை சிறந்த மருத்துவராகவும் (1205-1288) வாழ்ந்தவர் அல் குராஷி என்றழைக்கப்பட்ட இப்னுல் நஃபீஸ்.
மருத்துவத் துறைக்கு அவர் செய்த ஏராளமான பங்களிப்புக்களால் வரலாற்றில் இன்றும் நினைவு கூறப்படுகிறார். குறிப்பாக நுரையீரல் வழியாக, இதயத்தின் வலது அறையில் (Right Ventricle) இருந்து இடது அறைக்கு (Left Ventricle) செல்லுகின்ற இரத்த சுழற்சி குறித்த முதல் விளக்கத்தை அறிவியல் உலகிற்கு வழங்கியவர் இப்னுல் நஃபீஸ்.
இவரது முழுப்பெயர் அலா-அத்-தின் அபு அல்-அலா அலி இப்னு அபி அல்-ஹரம் அல்-குரைஷி அத்-திமஷ்கி இப்னு அன்-நபிஸ் என்பதாகும். சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் பிறந்தார், அவரது மருத்துவ பணி எகிப்தில் துவங்கி பின்னர் கொய்ரோவின் நாசிறி மருத்துவமனை வரை தொடர்ந்து, தலைமை மருத்துவராக செயல்பட்டிக்கிறார்.
உடலியல் மற்றும் மருத்துவம் குறித்த அவரது எழுத்துக்களால் மிகவும் பிரபலமானவராக மருத்துவ உலகில் காணப்படுகிறார்.
1928 ஆம் ஆண்டில் இரத்த ஓட்டம் குறித்து ஆங்கில மருத்துவர் வில்லியம் ஹார்வே விவரிக்கின்ற நிலையில், அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இது குறித்து இப்னுல் நஃபீஸ் அவர்கள், “தஷ்ரிஹ் அல்-கானுன்” என்னும் தனது புத்தகத்தில் விளக்கம் அளித்துள்ளதை பார்க்க முடிகிறது.
கிதாப் அல் ஷாமில் என்ற தலைப்பில் மருத்துவக் கலை குறித்த அவரது மிகப்பெரிய புத்தகம், அறுவை சிகிச்சை நுட்பங்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கடமைகள் பற்றிய பிரிவுகளைக் கொண்டிருந்தது.
இப்னுல் நஃபீஸின் பிற படைப்புகளில் கண் நோய்கள் மற்றும் உணவுமுறைகள் பற்றிய கட்டுரைகளும், பண்டைய கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸின் மருத்துவ எழுத்துக்கள் பற்றிய விளக்கங்களும் அடங்கியுள்ளன.
வானியலாளர் மற்றும் தத்துவஞானி : நூருத்தீன் அல்-பித்ருஜி (அல்பெட்ராஜியஸ்)
மேற்குலகில், அல்பெட்ராஜியஸ் என்னும் இலத்தின் பெயரிலும், நூருத்தீன் இப்னு இஷாக் அல்-பித்ருஜி எனும் அரபு பெயரிலும் அறியப்படுகின்ற நூருத்தீன் அல் பெட்ருகி மொரோக்கோவில் பிறந்து அந்தலூசியா மாகாணத்தின் தலைநகர் செவில்லே (Seville) வில் குடியேறி சுமார் கி.பி 1200களில் வாழ்ந்த மறைந்த அரபு வானியலாளரும் இஸ்லாமிய பொற்காலத்தின் தத்துவஞானி, அன்றைய இஸ்லாமிய ஸ்பெய்ன் – அல் அந்தலூஸின் காழியும் ஆவார். இப்னு துஃபைலின் (அபுபாசர்) வழித்தோன்றலாக வாழ்த்த இவர் அவெர்ரோஸி (Averroës) யின் சமகாலத்தவர்.
அல்-பெட்ருகி எழுதிய “கிதாபுல் ஹய்யா” முதலில் அரபு மொழியில் இருந்து ஹிப்ரு மொழிக்கும், பின்னர் மைக்கேல் ஸ்காட் என்பவரால் “டி மோடிபஸ் செலோரம்” (De motibus celorum) எனும் புத்தகமாக இலத்தின் மொழியில் 1531 ஆம் ஆண்டு வியன்னாவில் முதன்முதலில் அச்சிடப்பட்டது.
ஓரினக் கோளங்களின் சுழற்சிகளை இணைப்பதன் மூலம், சுற்றித் திரிகின்ற நட்சத்திரங்களுடைய விசித்திரமான நிகழ்வுகளை கணக்கிட்டு, கிரக இயக்கம் குறித்த தனித்துவமான ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். இது அவரது முன்னோடிகளான இப்னு பஜ்ஜா (அவெம்பேஸ்) மற்றும் இப்னு துஃபைல் (அபுபாசர்) ஆகியோரால் முன்மொழியப்பட்ட கிரக இயக்க முறைமைகளுக்கு மாற்றமானதாகும்.
சந்திரனில் உள்ள அல்பெட்ராஜியஸ் பள்ளம் இவரது பெயரிலேயே வானியல் குறிப்புக்களில் இன்றும் அறியப்படுகின்றது.
விஞ்ஞானி மற்றும் தத்துவவாதி – பல்துறை வித்தகர் : அல் ஃபராபி (அல்ஃபாரபியஸ்) – 872-950
மேற்குலகில் அல்ஃபராபியஸ் என்று அழைக்கப்படுகிற அபு நஸ்ர் முஹம்மது அல்-ஃபராபி சுமார் கி.பி 872-950 காலகட்டங்களில் இஸ்லாமிய பொற்கால விஞ்ஞானிகள் மற்றும் தத்துவவாதிகளுக்கு மத்தியில் வாழ்ந்து மறைந்த அண்டவியல் (பிரபஞ்சம்) நிபுணர், தர்க்கவாதி, இசைக் கலைஞர், உளவியலாளர் மற்றும் சமூகவியலாளர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பல்துறை வித்தகர் ஆவார்.
தர்க்க சாஸ்திரம் (logic), கணிதம், மருத்துவம், இசை, தத்துவம், உளவியல் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
அரிஸ்டாட்டிலின் தத்துவார்த்தங்கள் அல்லாத வாதங்களை உருவாக்கிய முதல் முஸ்லிம் தர்க்கவாதி அல்-ஃபராபி ஆவார். எதிர்கால குழுக்கள், எண்ணிக்கை மற்றும் உறவு வகைகள், தர்க்கத்திற்கும் இலக்கணத்திற்கும் இடையிலான தொடர்பு, அரிஸ்டாட்டிலியன் அல்லாத அனுமான வடிவங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புக்களில் விவாதித்து இருக்கிறார். கருத்துக்கள் அடிப்படையில் மற்றும் ஆதார தரவுகள் மூலமாக என இரு குழுக்களாக தர்க்க வாதங்கள் புரிவதை வகைப்படுத்திய பெருமைக்கு உரியவர்.
அல்-ஃபராபி பல நூற்றாண்டுகளாக அறிவியல் மற்றும் தத்துவத்தில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தார். அறிவாற்றலில் அரிஸ்டாட்டிலுக்கு அடுத்தபடிநிலைத் தரமான, இரண்டாவது ஆசிரியராக (The Second Teacher) அவரது காலத்திலேயே கருதப்பட்டார். தத்துவத் தொகுப்பை நோக்கமாகக் கொண்ட இவரது பணி, பின்னர் இப்னு சினாவின் (அவிசென்னா) தத்துவ பணிகளுக்கும் வழி அமைத்து தந்தது.
இயற்பியலில், வெற்றிட இருப்பின் தன்மை குறித்த முதல் நிலை ஆராய்ச்சிகளிலும் அல்-ஃபராபி அறியப்படுகிறார். தண்ணீரில் கையடக்க உலக்கைகளை கொண்டு, வெப்ப இயக்கவியலில் (Thermodynamics), வெற்றிடத்தின் இருப்பைப் பற்றிய முதல் சோதனைகளை அவர் மேற்கொண்டதாகத் தெரிகிறது. காற்று புகமுடியாத வெற்றிடத்தில் ஒருபொருளின் (எடை உள்ளிட்ட) தன்மைகள் மாறுபடும் என்றும், திறந்த வெளியில், மீதமுள்ள இடத்தை நிரப்ப காற்றின் அளவு விரிவடையும் என்றும் இயற்பியல் கோட்பாடுகளை அவர் பரிந்துரைத்தார்.
மேம்பட்ட நகர மக்களின் கருத்துக்கள் (Opinions of the people of the Ideal City) என்னும் அவரது புத்தகத்தின் “கனவுகளின் காரணம்” (Cause of Dreams) எனும் 24வது அத்தியாயத்தில் கனவுகளின் தன்மை மற்றும் காரணங்களை வேறுபடுத்திய கனவுகள் குறித்த முதல் விளக்கத்தை பதிந்துள்ளார்.
அலெக்ஸாண்டிரிய தத்துவ மரபுகளை ஒரே நேரத்தில் புத்துயிர் பெற்று மீள் உருவாக்கம் பெறுவதற்கும் இலக்கை நோக்கி அவரது பணிகள் இயக்கப்பட்டன என்பது ஆடம்ஸனின் கூற்றாக உள்ளது. தத்துவவியலின் இரண்டாம் தந்தையாக அறியப்பட்டதே அவரது வெற்றிப் பணிகளை இன்றும் உலகிற்கு பறைசாற்றுகின்றன.


































