மருத்துவ மேற்படிப்பு பயின்று மக்கள் சேவை செய்வோம்

நம்முடைய மாணவ மாணவிகளுடைய கல்வி பயணத்தின் இலக்குகளில் மிகப் பிரதானமான இலக்கு மருத்துவராவது. மனிதனின் நோய்களை குணமாக்கி அவனை ஆரோக்கியமாக வைத்திருக்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் மருத்துவர்கள். அந்த மருத்துவ படிப்பை படிக்க நீட் என்ற நுழைவு தேர்வு எழுதுவது கட்டாயம். 

மருத்துவ படிப்புகளான எம். பி. பி. எஸ் ( பொது மருத்துவம்) மற்றும் பி. டி. எஸ் ( பல் மருத்துவம்) ஆகிய படிப்புகள் படிக்க நீட் தேர்வு எழுத வேண்டும். இத்துடன் மாற்று மருத்துவ சிகிச்சையை கொண்டு நோய் தீர்க்க பயன்படும் ஆயுஷ்  படிப்புகளான ஹோமியோபதி, சித்த, ஆயுர்வேத, நேட்சுரோபதி & யோகா மற்றும் யுனானி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டியது  அவசியமாகும்.

பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல்( Physics) , வேதியியல்( Chemistry) மற்றும் உயிரியல் ( Biology) பாடத்தை பயின்றவர்கள்  மட்டுமே நீட் தேர்வு எழுத தகுதி உடையவர்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் பயின்று கொண்டிருக்கும் போதே நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பலர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு ஒராண்டு நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து அதன் பிறகு இந்த தேர்வை எழுதுகின்றனர். 

மருத்துவ படிப்பிற்கு இந்தியாவின்  தலைசிறந்த மருத்துவ கல்வி நிலையங்களாக கருதப்படும் எய்ம்ஸ் ( AIIMS) , புதுவையில் அமைந்திருக்கும் ஜிப்மர் ( JIPMER) ஆகியவற்றில் சேர இதுவரை தனித்தேர்வு நடைபெற்று வந்தது. இந்த ஆண்டிலிருந்து அங்கு சேர்ந்து படிப்பதற்கும்  நீட் தேர்வு  மதிப்பெண்கள் தான் பயன்படுத்தப்படுகிறது.

மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். இயற்பியல் (Physics) – 45 கேள்விகள், வேதியியல் ( Chemistry 45 கேள்விகள்) மற்றும் உயிரியல் ( Biology) 90 கேள்விகள் என்று அந்த 180 கேள்விகள் அமையும். 

ஒவ்வொரு கேள்விக்கும் விடையளிக்க 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும் ( MCQs). அதில் சரியான பதிலை தேர்ந்தெடுத்து பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள்கள் கிடைக்கும். தவறாக குறிக்கப்படும் ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் ( Minus mark). பதில் தெரியாமல் எந்த பதிலும் எழுதாமல் இருந்தால் எந்த மதிப்பெண்ணும் குறையாது. 

180 கேள்விகளுக்கும் சரியாக பதில் எழுதினால் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண் என்ற அடிப்படையில் அதிக பட்சமாக 720 மதிப்பெண்கள் வாங்கலாம். 

வெற்றி பெறுவதற்கான குறைந்த மதிப்பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். பெர்சன்டைல் என்கின்ற ஒரு முறைப்படி அந்த தேர்வு எழுதியவர்களிலேயே தேசிய அளவில் முதல் மதிப்பெணின்  அடிப்படையில்  தேர்சிக்கான குறைந்த மதிப்பெண் குறிக்கப்படுவதால் இந்த மாற்றம் ஏற்படுகிறது. எனினும் சென்ற மூன்று நீட் தேர்வுகளை மையப்படுத்தி பார்த்தால் 109 – 135 வரை மதிப்பெண்கள் எடுத்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம். இந்த தேர்ச்சி மருத்துவ படிப்பு பயில நம்மை தகுதி படுத்துமே தவிர மருத்துவ கல்லூரியில் பயில இடத்தை பெற்று தராது. 

தமிழகத்தை பொறுத்தவரை எம். பி. பி.எஸ்; பி. டி.எஸ் – க்கான மருத்துவ சேர்க்கை கவுன்சிலிங் முறைப்படி நடக்கும். இங்கு மூன்று விதமான மருத்துவ படிப்பு இடங்களுக்கு சேர்கை நடக்கும். 

1. அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு சேர்க்கை

2. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடங்களுக்கான சேர்க்கை

3. தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாக இடங்களுக்கான சேர்க்கை. 

இந்த மூன்று இடங்களுக்கான கல்வி கட்டணங்களில் மிகப்பெரிய வித்தியாசங்கள் உண்டு. 

அரசு மருத்துவக் கல்லூரியில் எம். பி. பி. எஸ் பயில ஓரு வருடங்களுக்கு சுமார் ரு. 15000 மட்டுமே கல்வி கட்டணம் கட்டவேண்டி வரும். 

தனியார் மருத்துவ கல்லூரியின் அரசு இடங்களுக்கு ஆண்டுக்கு ரு. 6 முதல் 7 லட்சம் வரை கல்வி கட்டணம் ஆகும். அதே நேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக இடங்களுக்கு ஆண்டு தோறும் ரு 13-14 லட்சம் வரை கட்ட வேண்டி வரும். 

தமிழகத்தில் வரும் ஆண்டு பி. சி. எம் ( BCM) கோட்டாவில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்க குறைந்தது 550 – 600 வரை நீட் மதிப்பெண் எடுக்க வேண்டும். வருடம் தோறும் முஸ்லிம் மாணவ மாணவிகளின் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகமாகி வருகிறது. 450 – 500 நீட் மதிப்பெண் வாங்கினால் தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு கோட்டாவில் இடம் கிடைக்கலாம். 

நீட் தேர்வில் 600 மதிப்பெண்கள் வாங்கினால் ரு. 2 லட்சத்திற்குள் அத்தனை செலவுகளையும் உள்ளடக்கி மருத்துவராகலாம்.அந்த கல்வி கட்டணமும் செலுத்த வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவி செய்ய பல நல்ல உள்ளங்கள் சமுதாயத்தில் உண்டு. நன்றாக பயிற்சியும் விடா முயற்சியும் சமுதாய சேவையின் மூலமாக இறை பொருத்தம் ஆகிய நிய்யத்துடன் ஒருவர் இந்த நீட் தேர்வை அணுகினால் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பெறுவது எளிது. 

என். சி. ஆர். டி ( NCERT)  பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பதினொன்று மற்றும் பன்னிரண்டு வகுப்புகளுக்கான இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய புத்தகங்களை அடிப்படையாக கொண்டு உங்கள் பயிற்சிகளை ஆரம்பியுங்கள். 

மனப்பாடம் செய்வதை விட்டு ஒவ்வொரு விசயத்தையும் நன்றாக புரிந்து படியுங்கள். 

இயற்பியல் சற்றே கடினமான பாடமாக நீட் எழுதுபவர்கள் கருதுவதால் சற்று அதிகமான கவனமும் பயிற்சியும் இயற்பியலுக்கு கொடுங்கள். 

உயிரியியல் தான் மருத்துவ படிப்பிற்கும் நீட் தேர்வுக்கும் உயிர் என்பதால் அதில் எந்த கேள்வி கேட்டாலும் எழுதுவேன் என்ற அளவில் முழுமையாக படியுங்கள். 

வேதியலில் முக்கியமான மூன்று பகுதிகளிலும் கைத்தேர்ந்திடுங்கள். 

நம் மாணவ மாணவிகள் தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கும் முறைக்கு (  Minus mark for wrong option)  பழக்கப்பட்டவர்கள் கிடையாது. மருத்துவ கல்லூரி இடத்தை உறுதி படுத்தும் மிகமுக்கியமான மதிப்பெண்களை இந்த தவறை செய்து மாட்டி கொள்கின்றனர்.  சரியான பதிலுக்கான நான்கு  வாய்ப்புகள் வினா தாளில் கொடுக்கப்பட்டிருப்பதால் உறுதியாக தெரியவில்லை என்றாலும் எதாவது பதிலை எழுத நம் மாணவ மாணவிகள் உந்தப்படுகின்றனர். இது பெரும்பாலும் தவறாக அமைந்து மதிப்பெண் குறைந்துவிடுகின்றன. இதை நிர்வாகிக்க தொடர் பயிற்சிகள் தேவை. 

மருத்துவராவதால் சமுதாயத்தில் கிடைக்கும் மரியாதை, சிறந்த சேவையுடன் கூடிய மருத்துவ பணியால் சமுதாயம் அடையும் நன்மை, அதன் மூலமாக இறைவனிடத்தில் கிடைக்கும் வெகுமதிகள் இவை அனைத்தையும் தாண்டி இன்று நோயாளியை நுகர்வோர்களாக மாற்றி வியாபார வாய்ப்பு களாக பார்க்கும் நவீன மருத்துவ உலகில் ஏழைகளுக்கு உதவும் தூண்களாக  மருத்துவ படிப்பை பயன்படுத்த மருத்துவம் படியுங்கள்!!!