

ஐரோப்பாவில் 3 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அமெரிக்காவிலும் முஸ்லிம்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறது. முஸ்லிம்கள் ஐரோப்பாவில் கடந்த மூன்று தலைமுறைகளாக கவனிக்கப்படும் முக்கியமான சமூகமாக மாறிக்கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவும் ஐரோப்பாவும் முஸ்லிம்கள் வளர்ச்சி குறித்து எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் முஸ்லிம்களின் வாழ்க்கை நிலை குறித்து பெல்ஹாம் (Nicolas Pelham) என்பவர் செய்த சிறப்பு ஆய்வறிக்கையைத்தான் நாம் படிக்கப் போகிறோம்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை (White House) க்கு அருகில் உள்ள கிறித்தவ தேவாலயம் (Washington’s Church of the Epiphany) ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதிய வேளையில் மஸ்ஜிதாக மாறிவிடுகிறது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அன்றைய நாளில் கூடி மக்காவை நோக்கி தரை விரிப்புகள் மீது தலை வைத்து (prostrate) தங்கள் இறைவனை வணங்குகிறார்கள். உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள், அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ. அதிகாரிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், சட்டத்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்களும் அந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்கிறார்கள். கருவூல அதிகாரி ஒருவரே இந்த பள்ளியின் இமாமாக இருக்கிறார். அவரது உபதேசங்கள், (அறிவுரைகள்) மிகத் தெளிவான அரசியல் பேசுகிறது.
அமெரிக்க முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே வந்து விட்டார்கள். அவர்கள் முன்னோர்கள் மேற்கு ஆப்ரிக்கப் பகுதிகளில் இருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளாக 16 ஆம் நூற்றாண்டிலேயே வந்து விட்டனர். நல்ல வளமான அரபு முஸ்லிம்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 1920கள் வரையில் படிப்புக் காரணமாக அமெரிக்காவுக்கு வந்து பின்னர் அங்கேயே தங்கி விட்டனர்.
அமெரிக்காவின் மத்தியத் தர வகுப்பினராக நுழைந்து கொண்டனர். ஐரோப்பாவில் அதிகப்படியான முஸ்லிம்கள் குடியேறி இருந்தாலும் அமெரிக்காவே குடியேற மிகப் பொருத்தமாக இருப்பதாக கருதினர். டியர்பான் (Dearborn), மிச்சிகன் (Michigan) போன்ற சில மாநிலங்கள் தவிர பல நகரங்களில் முஸ்லிம்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில் தான் பரவி இருக்கிறார்கள். அமெரிக்காவில் மொத்த முஸ்லிம்கள் எண்ணிக்கை 35 லட்சம் பேராக இருக்கிறார்கள். மக்கள் தொகையில் 1.1%.
ஐரோப்பாவுக்கும் இஸ்லாமுக்கும் உள்ள உறவு மிக நீண்ட காலமுடையது. ஆழமான உறவுடையது. இறையாட்சி தலைவர்கள் (கலீஃபா) காலத்திலேயே 8 ஆம் நூற்றாண்டிலேயே ஐரோப்பாவின் ஸ்பெயினில் முதன் முறையாக நுழைந்தது.
மீண்டும் 14 ஆம் நூற்றாண்டில் உதுமானிய இறை ஆட்சியர் காலத்திலும் தென் கிழக்கு ஐரோப்பாவில் நுழைந்தது. அங்கு முஸ்லிம்கள் உருவாக்கிய அரசுகள் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வீழ்த்தப்பட்டன.
உதுமானிய படைகள் வீழ்த்தப்பட்ட பிறகும் முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் தங்கி இருந்தனர். இதன் பிறகு ஐரோப்பாவுக்கு முஸ்லிம்கள் போர் வீரர்களாகவும் பணியாளர்களாகவும் வந்தனர். ஐரோப்பிய நாடுகள் இரண்டு உலகப் போரிலும் சண்டை போட தங்கள் குடியேற்ற நாடுகளில் இருந்து 35 லட்சம் முஸ்லிம்களை ஐரோப்பாவுக்கு கூட்டி வந்தார்கள். போருக்குப் பிறகு அவர்களில் பலரும் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். ஆனால், போர் சேதங்களை சரி செய்யும் பணிக்காக பின்னர் ஐரோப்பாவுக்குள் வந்தனர்.
1945 க்குப் பிறகு கடந்த இரண்டு தசாப்தங்களாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிக தூரமான இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான முஸ்லிம்களை வேலைக்கு எடுத்தனர். பிரிட்டன் பாகிஸ்தானில் இருந்தும் வங்க தேசத்தில் இருந்தும் கூலி ஆட்களை தருவித்துக் கொண்டது.
பிரான்ஸ் வட ஆப்பிரிக்கா பக்கம் திரும்பியது. ஜெர்மன் துருக்கியின் அனடோலியன் (Anatolian hills) மலைப்பகுதிகளில் இருந்து ஆட்களை எடுத்தது. வேலை முடிந்த போது அவர்கள் திரும்பி விடுவார்கள் என்று ஜெர்மன் எதிர்ப்பார்த்தது. ஆனால் அவர்கள் குடும்பத்தையே அழைத்து கொண்டு வந்தனர். ஜெர்மன் அவர்களுக்கும் ஜெர்மனியில் பிறந்த அவர்களின் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கியது.
சமீப காலமாக, முஸ்லிம் நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து அடைக்கலம் தேடிய போதும் அவர்களுக்கு ஜெர்மன் குடியுரிமை வழங்க அங்கு மக்கள் தொகை புள்ளிவிபரத்தில் முஸ்லிம்கள் விகிதம் அதிகமானது.
2014 க்கும் 2016 க்கும் இடையில் மட்டும் 10 லட்சம் பேர் புலம் பெயர்ந்து ஐரோப்பாவுக்கு வந்துள்ளனர். அவர்களில் பாதிப் பேர் ஜெர்மனியில் தங்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரபுகள்.
ரஷ்யாவையும் துருக்கியையும் தவிர்த்துப் பார்த்தால் ஐரோப்பாவில் இப்போது 2 கோடி 60 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 5% ஆக இருக்கின்றனர். உள்ளுர் வாசிகளை விடவும் இளமையாக உள்ளனர். ஐரோப்பாவின் பல நகரங்களில் குழந்தைகளுக்கு வைக்கும் மிகப் பிரபலமான பெயராக முகம்மது என்ற பெயர் இருக்கிறது.
முஸ்லிம்களின் துல்லியமான எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம். மேலும் அவர்கள் ஒரே தன்மையுடைய குழுவாக இல்லை. சமய செயல்பாடுகள், கலாச்சாரம், இனம் என்று வேறுபடுகிறார்கள். அவர்களது செயல்பாடுகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. பிரிட்டன் சட்டம் சமயங்களின் வேறுபாட்டையும் செயல்பாட்டையும் அங்கீகரிக்கிறது.
அதுவே, ஃபிரான்சில் சமய அடையாளங்களை வெளியில் காட்டுவது பள்ளிக் கூடங்கள் தொடங்கி அரசு நிறுவனங்கள் அனைத்திலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிரான்சில் இருக்கும் ஒரு முஸ்லிம் பிரிட்டனில் இருப்பவரைக் காட்டிலும் குறைவாக சமயத்தை பின் தொடர்கிறார்.
மேலும், ஃபிரான்சில் ஒரு முஸ்லிம் அண்டை வீட்டாராக இருப்பதை அங்குள்ள முஸ்லிமல்லாத மக்கள் விரும்புகிறார்கள். முஸ்லிம்களை திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகின்றனர்.
மேற்குலகிற்கு 20 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் வருகை குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு சிறப்பாக இருந்தது. அவர்களில் பலர் முஸ்லிம் நாடுகளின் கல்வியறிவே இல்லாத முனையங்களில் இருந்து தொழில் நகரங்களுக்கு வருகின்றனர். பெரிய குடும்பங்களில் உள்ளவர்களும் வருகிறார்கள். அவர்களின் குழந்தைகள் புதிதாக புகுந்த நாடுகளில் தங்களது கல்வி இடைவெளியை நிரப்புவதற்கும் சம்பளம் மற்றும் வாழ்வாதாரத்தை அடைவதற்கும் அதிக சிரமத்தை சுமக்கின்றனர்.
ஐரோப்பாவில் குடியேறியவர்களின் மூன்றாம் தலைமுறை முஸ்லிம்கள் தங்கள் இஸ்லாமிய கோட்பாட்டையும் ஐரோப்பிய அடையாளத்தையும் சேர்த்தே காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். ஐரோப்பா அரசியலிலும் முஸ்லிம்கள் உறுதியான செல்வாக்கை செலுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடந்த இடைக்காலத் தேர்தல்களில் (midterm election) அமெரிக்கர்கள் ராஷிதா தையிப் (Rashida Tlaib), இல்ஹான் உமர் (Ilhan Omar) என்கிற இரண்டு முஸ்லிம் பெண்களுக்கு வாக்களித்தார்கள். இவர்கள் இருவரும் முதல்முறையாக அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரமான லண்டனில் சாதிக் கான் என்பவர் பெருநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐரோப்பா கண்டத்தின் ஆகப் பெரிய துறைமுகமான ராட்டர்டாமில் (Rotterdam) மொராக்கோவை பூர்வீகம் கொண்ட அகமது அபுதாலிப் தலைவரானார். ஐரோப்பாவின் விளையாட்டு (Sports) மற்றும் ஆடை அலங்காரத் துறை (fashion) யிலும் முஸ்லிம்கள் பெரிய பங்காற்றுகின்றனர்.
ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஐரோப்பிய முஸ்லிம்களை வன்முறையும் அச்சமும் சூழ்ந்து கொண்டுள்ளது.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 2000 ஆம் ஆண்டில் இருந்து இது வரையில், முஸ்லிம்கள் நடத்தியதாகச் சொல்லப்படும் தாக்குதல்களுக்கு 3,670 பேர் பலியாகி இருக்கிறார்கள். அவர்களில் 2,996 பேர் அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட போது (11.9.2001) கொல்லப்பட்டார்கள். இதே காலக்கட்டத்தில் 119 பேர் முஸ்லிம் வெறுப்பில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த தீவிரவாத தாக்குதல்களில் இருந்து ஐரோப்பியர்கள் எண்ணத்தில் இஸ்லாம் ஒரு அச்சுறுத்தும் சித்தாந்தம் என்ற எண்ணம் ஏற்பட்டுப் போனது. ஒரு சிரிய வன்முறையிலும் கூட முஸ்லிம்களுக்கும் அவர்கள் வாழ்ந்து வரும் ஐரோப்பிய நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவில் சந்தேகமும் சிக்கலும் ஏற்பட்டு விடுகிறது.
20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முஸ்லிம்கள் அமெரிக்க முஸ்லிம்களில் இருந்து வேறுபடுகின்றனர். அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் தாங்கள் ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம்களை காட்டிலும் நல்ல நிலைமையில் இருப்பதாகவே கருதுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மக்களாக இருக்கிறார்கள். அமெரிக்க மக்களோடு நெருக்கமாகவும் ஐக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.
ஆனால், இந்த ஐக்கியத்தையும், சந்தோஷத்தையும் மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்காவின் தலையீடு, அதற்கு ஜிகாதியர் தரும் பதிலடி, அதனோடு சேர்ந்து உருவாகும் வெள்ளையர் தேசியவாதம் சேர்ந்து சீர் குலைவு செய்கிறது.
2017ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் அமெரிக்காவில் படிக்கும் முஸ்லிம் குழந்தைகளில் 42% னர் தாங்கள் மத ரீதியில் துன்புறுத்தப்படுவதாக கூறி இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் முஸ்லிமுக்கு குடியுரிமை தரக் கூடாது என்று அமெரிக்க மக்களில் ஐவரில் ஒருவர் கூறுகிறார். தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பரப்புரையின் போது இந்த வெறுப்புணர்வை ஊக்கப்படுத்தினார். தான் அதிபரானால் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் (“total and complete shutdown of Muslims entering the United States”) என்றார். அதிபரான பிறகு 6 முஸ்லிம் நாடுகளுக்கு விசா அனுமதியை மறுத்தார். அமெரிக்காவுக்கும் மெக்சிகனுக்கும் இடையிலான எல்லையில் தொழுகை விரிப்புகளை விட்டுச் செல்கின்றனர் என்றார் டிரம்ப். அந்த இடத்தில் தான் எல்லையை ஒட்டி தடுப்புச் சுவர் கட்ட டிரம்ப் விரும்புகிறார்.
1950 களில் பெருந்திரளாக முஸ்லிம்கள் ஐரோப்பாவில் குடியேறியது முதல் உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் முஸ்லிம் அடையாளத்தை எவ்வாறு வடிவமைத்து இருக்கிறது என்பதற்கு இந்த ஆய்வறிக்கை ஒரு உதாரணம். உள்ளே நுழையும் எந்த சமய நம்பிக்கையையும் கேள்வி இல்லாமல் (laissez-faire) மேற்குலக அரசுகள் தொடக்கத்தில் ஏற்றுக் கொள்வதும் பிறகு படிப்படியாக தலையிடும் கொள்கைகளை உருவாக்குவதும் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்பதிலும் முஸ்லிம்கள் சென்று தங்கும் நாடுகளின் மக்களுடனான உறவிலும் அதிக சிக்கல்களை உருவாக்குகிறது.
ஒருங்கிணைத்துக் கொள்வது அல்லது பாதுகாப்பை பலப்படுத்த உதவும் என்று உருவாக்கப்படும் கொள்கைகளுக்கு முஸ்லிம் சமூகம் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
ஐரோப்பாவை ஏற்றுக் கொண்டு வாழும் முஸ்லிம் சமூகத்தில் அடுத்தடுத்த தலைமுறையினரின் மாற்றங்கள் பற்றியும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. நெகிழ்வுத் தன்மையும் பன்மைத்துவமும் உள்ளடக்கிய உலக சமயமாக இஸ்லாம் 1400 வருடங்கள் செழித்து வளர உதவியிருக்கிறது.
ஆனால், மிகச் சமீபமாக ஐரோப்பிய முஸ்லிம்கள் ஐரோப்பாவில் முஸ்லிம் அல்லாத மக்கள் நடுவில் அரசியல் அதிகாரமின்றி சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து கொள்வது என்ற கொள்கை முடிவை எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். இதற்கான வேலையும் நடந்து கொண்டு வருகிறது.
முதல்தலைமுறையாக வந்து குடியேறிய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பாவை ஏற்றுக் கொண்டனர். மிகச் சிரிய எண்ணிக்கையில் இருந்த அவர்களுக்கு ஐரோப்பாவில் எத்தனை காலம் நீடித்து இருப்போம் என்ற உத்தரவாதம் இருக்கவில்லை. அவர்கள் தங்கள் பாரம்பரியத்தையும் சமயத்தையும் சேர்த்து கொண்டு வந்தனர்.
அவர்களுடைய சமயத் தேவைக்கு அவர்களது பூர்வீக தேசங்களை எதிர்ப்பார்த்து இருந்தனர். இமாம்கள் எனும் சமய தலைவர்கள் துருக்கி, வட ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியா நாடுகளில் இருந்து வந்தனர். சில முஸ்லிம் நாடுகள் மஸ்ஜிதுகள் கட்டுவதற்கு நிதியுதவி அளித்து இயக்கிக் கொண்டும் வருகின்றன.
மேற்குலக நாடுகளுடனான உறவுகள் பலமான நிலையில் முஸ்லிம் நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்குள் வருவது சுருங்கியது. அடையாள குறியீட்டிற்கு இனத்தை காட்டிலும் சமயம் மிக முக்கியமானது. ஐரோப்பாவின் இரண்டாம் தலைமுறை முஸ்லிம்கள் தங்கள் பெற்றோர்கள் கட்டுப்பட்ட நம்பிக்கையை தவிர்த்து விட்டு தங்களுக்கு தெரிந்த மொழியில் பேசும் உரையாளர்களின் பேச்சை கவனிக்கின்றனர். அவர்கள் கூறுவதை புரிந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இணையம் வழியாக தகவல்களைப் பெறுகின்றனர். அவர்கள் தங்களுக்கு அதிகாரம் அளிக்கும் சமயத்தை விரும்புகின்றனர். இறுதி இலக்காக ஒருசிலர் தீவிரவாதத்தில் போய் சேர்ந்தார்கள்.
இன்று ஐரோப்பாவில் வாழும் மூன்றாம் தலைமுறை முஸ்லிம்கள் ஐரோப்பிய அடையாளம் மீதும் இஸ்லாம் மீதும் அதிக நம்பிக்கை கொண்டு உள்ளனர். அரசியல் மற்றும் நீதிமுறைமை பற்றி விவாதிக்கவும் அரசமைப்பு குறித்து கலந்துரையாடவும் இவற்றில் கருத்துக்கள் இருக்கின்றன. சமயம் தனிநபரின் விருப்பத் தேர்வாக படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறது. ஐரோப்பாவில் இருக்கும் 10,000 க்கும் அதிகமான மஸ்ஜிதுகள் இஸ்லாமின் நம்பிக்கை மற்றும் பின்பற்றுதல்கள் குறித்து முழுமையான பரிமாணத்தை பிரதிபலிக்கிறது.
கடந்த கால அனுபவங்கள் மற்றும் நிகழ்கால அனுபவங்கள் ஐரோப்பாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்து பேச வைத்திருக்கிறது. அவர்கள் ஐரோப்பாவுக்கு வந்த மூன்றாம் தலைமுறையில் இஸ்லாமுக்கு அரசியல் அதிகாரம் இல்லாத ஐரோப்பிய மதச்சார்பற்ற அரசியல் அமைப்பிலும் பன்மைத்துவ சமூக அமைப்பிலும் வாழ்வதற்காக வடிவத்தை அவர்கள் உருவாக்கி உள்ளார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் ஐரோப்பாவில் இஸ்லாமை கட்டமைத்துக் கொண்டு வருகிறார்கள்.




































