பிரபஞ்சம் அற்புதங்கள் நிறைந்த பொக்கிஷம் என்பது எவ்வளவு உண்மையானதோ, நமது உடலும் அதிசங்களின் அமைவிடம் என்பது உண்மைதான் என்பதை அறுபெரும் சுவை என்ற தலைப்பு கட்டுரை விரிவாகக் கூறியது. உணவு வெறும் சுவைக்கல்ல அந்த சுவையின் மூலம் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஆரோக்கியத்தையும் பெறுகிறோம் என்பது புரியாமலே நமது ஆயுள் நம்மைக் கடந்து விடுகிறது.
கமருத்தீன், புளியங்குடி
டிசம்பர் மாத அட்டைப்படம் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மனித சமூகம் தலைமுறை தலைமுறை என தொடரும் தன்மை கொண்டது. ஒரு தலைமுறையின் வீழ்ச்சி அடுத்து வரும் சந்ததிகளையும் பாதித்து முழு சமூகத்தையும் பலவீனமாக்கும். இந்தப் போக்கு முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. முஹம்மது (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மனித சமூகத்துக்கு நினைவூட்டத் தொடங்கிய காலம் முதல் மத்திய காலத்தில் நிகழ்ந்த அறிவெழுச்சி அதன் காரணமாக உலகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்தது அன்றைய முஸ்லிம்களுக்கு இறைவன் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை. இறை நம்பிக்கை பலவீனப்பட்டு உலகத்தை மேம்படுத்த இயலாத தேங்கிப் போன சிந்தனை காரணமாக இன்றைய முஸ்லிம் சமூகம் பலவீனப்பட்டு இருக்கிறது. உலகத்தின் போக்கில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமானால் மீண்டும் இறைநம்பிக்கையை பலப்படுத்தி இறைவன் வழங்கியிருக்கும் அறிவாற்றலின் மூலம் முஸ்லிம் சமூகம் ஆளுமைமிக்க மனிதர்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றி தலையங்கத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் முஸ்லிம் சமூகத்தில் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அஹ்மது இபுராஹீம், கன்னியாகுமரி
கண்ணியத்திற்குரிய ஆசிரியர் கான் பாகவி அவர்களின் இளம் ஆலிம்களே உங்களைத்தான் தொடரில் பேச்சு, எழுத்து தலைப்புகளைத் தாண்டி வாசி வாசித்துக் கொண்டே இரு!! கட்டுரைத் தொடரிலும் ஆசிரியர் அவர்களின் அனுபவமும் ஆளுமையும் கட்டுரையின் ஒவ்வொரு செய்தியிலும் வெளிப்பட்டது. ஒரு சமூகத்தின் கலாசாரத்தை அழிக்க விரும்பினால் வாசிப்பை நிறுத்தி விட்டாலே போதும். வாசிப்புதான் சமூகங்களில் விழிப்புணர்வு. அறிவின் வளர்ச்சி. பார்வையற்றவனின் பார்வை. என்ற வார்த்தைகள் வாசிப்பின் மகத்துவத்தை உணர்த்தியது.
மௌலவி அப்துந் நசீர் பைஜி, கடையநல்லூர்
அடுத்த தலைமுறைக்கு முஸ்லிம் சமூகம் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை முஸ்லிம் சமூகம் கல்வித் துறையில் அடைய வேண்டிய மேம்பாடு அதற்கான செயல்திட்டங்கள், வழிகாட்டுதல்கள் அதில் சொல்லப்பட்டிருந்தது சரியான செய்தி.
அப்துல் ஜப்பார், காரைக்குடி


































