
மாறிவரும் உணவு முறைகளைச் சமாளிக்க ஒரு புதியஅணுகுமுறை தேவை என ஐ.நா.வின் சுகாதார நிறுவனம் (WHO) அழைப்பு விடுத்துள்ளது.
உலகிலுள்ள ஏழை நாடுகளில் மூன்றில் ஒன்று அதிக உடல் பருமனையும், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளது என பிரிட்டிஷ் மருத்துவ அறிவியல் வெளியீடான தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
உலகளவில், கிட்டத்தட்ட 2.3 பில்லியன் குழந்தைகளும், பெரியவர்களும் அதிக எடையுடன் இருப்பதாகவும், 150 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியிருப்பதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன் ஆகியவை முழு தலைமுறையையும் பாதிப்புகளுக்கு ஆளாக்கும் என்று எச்சரிக்கிறது அந்த அறிக்கை.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் உலகெங்கும் எளிதில் கிடைப்பதன் காரணமாகவும், உடற்பயிற்சி குறைந்துள்ளதாலும் ஊட்டச் சத்து, உடல் பருமன் பிரச்சனைகள் நிலவுவதாக தெரிவிக்கிறது.
20% குழந்தைகள் அதிக எடையுடையதாகவும், நான்கு வயதுக்கு கீழுள்ள 30% குழந்தைகள் சரியான வளர்ச்சி இல்லாமலும், 20% பெண்கள் ஒல்லியாக இருப்பதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
“நாம் ஒரு புதிய ஊட்டச்சத்து யதார்த்தத்தை எதிர்கொண்டு வருகிறோம், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடு இருக்குமென்றும், அதிக வருமானம் உள்ள நாடுகளில் உடல் பருமனில் மட்டுமே அக்கறை கொள்ள வேண்டும் என்றும் இனி நாடுகளை வகைப்படுத்த முடியாது” என்கிறார் இந்த அறிக்கையை தயாரித்த உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) சுகாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து பிரிவின் இயக்குநரும், அறிக்கை தயாரித்த குழுவின் தலைவருமான டாக்டர் பிரான்செஸ்கோ பிரான்கா.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் உடல் பருமன், வளர்ச்சிக் குறைபாடு என இரண்டு வடிவங்களாலும் தனிநபர்கள் தங்கள் வாழ்வின் வேறுப்பட்ட நிலையில் பாதிக்கப்படுவதோடு, சமூகங்களும், குடும்பங்களும் பாதிக்கப்படும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அனைத்து வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளுக்குமான ஒரே தொடர்பு – உணவு
அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான, பாதுகாப்பான, அனைவருக்கும் ஏற்ற விலையுடன் அடங்கிய உணவை வழங்குவதில் எல்லா அமைப்புகளும் தோற்றுவிட்டது. இந்த நோய்களுக்கு அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளே தோற்றுவாய்.
உணவுத்துறை சார்ந்த வர்த்தகம், விநியோகம், விலை நிர்ணயம், சந்தைப்படுத்தல், நுகர்வு, கழிவு மேலாண்மை உட்பட அனைத்துக் கொள்கைகளும், முதலீடுகளும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மக்கள் சாப்பிடும், குடிக்கும் மற்றும் இயங்குகின்ற வழிமுறைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. எண்ணிக்கையில் அதிகரித்து வரும் பெருவணிக நிறுவனங்கள், அவைகள் சந்தைகளை கட்டுப்படுத்துவதன் காரணமாக உழவர் சந்தைகளின் வியாபாரம் குறைகிறது (fresh food markets).
இதனால் லாபத்திற்காக தயார் செய்யப்படும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளே எங்கும் எளிதாக கிடைக்கிறது. மேலும் உடல் ரீதியான செயல்பாடுகள் குறைவது மக்களை அதிக எடையுடையவர்களாக மாறச் செய்கின்றன.
அதிக பதப்பட்டுத்தப்பட்ட உணவுகளை குழந்தை பருவத்திலிருந்தே சாப்பிடுவது அவர்களுக்கு மோசமான வளர்ச்சி ஏற்படக் காரணமாகிறது.
இந்த மாற்றங்கள் எல்லாம் குறைவான மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளையும், அதிக வருமானம் பெறுகின்ற நாடுகளையும் பாதிக்கின்றன. பல்பொருள் அங்காடிகள் உணவுச் சங்கிலியை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கியமற்ற உணவுப் பயன்பாடுகளால் தொற்றா நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
குறிப்பாக இரண்டு வகையான நீரிழிவு நோய்கள் (இப்போது உலகளாவிய தொற்று நோய்), உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் போன்றவைகளையும் அதிகரிகிறது.
ஆரம்ப கால ஊட்டச் சத்து உணவுத் தரம், சமூக பொருளாதார போன்ற வரலாற்று ரீதியான காரணிகள் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சனைகளில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.
உணவுச் சூழல்கள் விரைவாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் சில திட்டங்கள் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உடல் பருமன் மற்றும் உணவு தொடர்பான தொற்று – தொற்றா நோய்களை தற்செயலாக அதிகரிக்கலாம்.
சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் இரு வகையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம், அதே போல் தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையில் வெவ்வேறு புள்ளிகளில் பாதிக்கப்படுவார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
“நாம் புதியதொரு ஊட்டச்சத்து நடைமுறையை எதிர்கொள்கிறோம் குறைந்த வருமானமுள்ள ஊட்டச்சத்து பற்றாக்குறையுடைய நாடுகள், உயர் வருமானமுடைய உடல் பருமன் பிரச்சனையுள்ள நாடுகள் என்று இனிமேலும் நாடுகளை நம்மால் வகைப்படுத்த முடியாது. ஒட்டுமொத்தமாக உடல் பருமனை பற்றித்தான் கவலைப்பட வேண்டியுள்ளது” என்கிறார் பிரான்கா.
உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலில் தொடங்கி, வணிகம் மற்றும் விநியோகம், விலை நிர்ணயம், சந்தைப்படுத்துதல், நுகர்வு மற்றும் கழிவு மேம்பாடு வரை உள்ள உணவு அமைப்பு அனைத்திலும் மாற்றங்கள் அவசியமாகிறது என்கிறார்.
“உணவு தொடர்புடைய கொள்கைகள் மற்றும் முதலீடுகள் எல்லாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்” என்று அவர் தெரிவிக்கிறார்.
இருவிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் கையாள்வதில் தாய்ப்பால், சமூக நலம், விவசாயம், ஆரோக்கியமான உணவு என்பதை முதன்மை இலக்காகக் கொள்ள வேண்டும்.
இந்த அறிக்கையின்படி, ஆரோக்கிய உணவில் கீழ்கண்டவைகள் காணப்படுகிறது.
§குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடங்கள் பாலூட்டுவது அவசியம்
§ அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நார்சத்து. பருப்புகள் மற்றும் விதைகள்
§ குறைந்த அளவு இறைச்சி.
§ அதிக சக்தியை தரக்கூடிய, சக்கரை சேர்க்கப்பட்ட, அதிக மற்றும் குறைந்த கொழுப்புடைய இறைச்சி, உப்பு மிக குறைவான அளவு
உயர் தர உணவுகள் ஊட்டச்சத்து குறைவு ஏற்படும் ஆபத்தை அகற்றிவிடும். ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் வாழ்க்கை முழுவதும் உடலை நோய்கள் அணுகாமல் பாதுகாக்க இது உதவும்.
ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான வளர்ச்சியாகும். இப்படி வாழ்நாள் முழுவதும் நோய்களுக்கு எதிராக உடலை பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை குறைக்க முடியும்.


































