


“மக்கா நகரமும்…” தலையங்கம் படித்தவுடன் இதயம் காயமானது. இறுதி வேதத்தின் இணையற்ற சட்டங்களும்… இறுதித் தூதரின் உயர்ந்த வழிகாட்டலும் கிடைக்கப் பெற்ற இஸ்லாமியச் சமூகம் உலகிற்கே வழிகாட்டியாக வாழ்ந்த காலம்… அன்று… இன்று யார் யாரையோ பார்த்து வாழவேண்டும் என்ற அவல நிலைக்கு இந்த உம்மத் தள்ளப்பட்டிருப்பதின் காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் அல்லாஹ்வின் அருள் மறையை விட்டும் இறுதித் தூதரின் உயர்ந்த வழிகாட்டலை விட்டும் தடம் மாறி பயணிப்பதன் விளைவே இந்த நிலை. வாழ்க்கை முறைகளிலும் வணிக நெறிகளிலும் இறையச்சத்தோடு ஒற்றுமை எனும் கயிறை பற்றிப் பிடித்தால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் உயர்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டலாம்.
A.முஹம்மது ராஜா ஸ்டாலின், கொடைக்கானல்
முதல் தலைமுறை மனிதர்கள் தொடரில் கண்ணியம் வாய்ந்த மௌலானா அபுல் ஹஸன் ஷாதலி ஆலிம் அவர்களின் வாழ்க்கை வரலாறை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மார்க்கம் படித்த ஆலிம்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் சூழலில் மார்க்க அறிஞர் அபுல் ஹஸன் ஷாதலி அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு மார்க்க அறிஞராக, அரசியல், சமூக செயல்பாட்டாளராக, ஒரு பத்திரிக்கையாளராக என பல்வேறு பரினாமங்கள் வழியாக சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் செயல்பட்டுள்ளார் என்பதை அறிந்த போது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். மீனாட்சிபுர மத மாற்றத்தின் போது அரசு மற்றும் அதிகாரங்களின் அச்சுறுத்தலைத் தாண்டி இஸ்லாத்தை ஏற்ற அந்த மக்களோடு தோளோடு தோள் நின்ற ஆலிம் அவர்களின் செயல்பாடு போற்றுதலுக்குரியது. அல்லாஹ் அவருடைய மறுமை வாழ்க்கையை சுகப்படுத்துவானாக. ஆமீன்.
சு.ஜாஃபர் அலி, விருதாச்சலம்
இந்திய நாட்டின் பிரிவிணைக்குக் காரணம் முஸ்லிம்களே என இந்திய முஸ்லிம்களை குற்றவாளியாக்கும் போக்கு இந்தியா முழுவது இருக்கிறது. இந்தக் கருத்தை வலுவாக்கும் வரலாறே பொதுவெளியில் பதிவு செய்யப்பட்டும் வரும் நிலையில்… இந்தியாவை இருகூறாக பிரிக்க வேண்டாம். அதனால் முஸ்லிம்களே பாதிக்கப்படுவார்கள் என்ற தேவ்பந்த் மார்க்க அறிஞர்களிவ் வரலாற்றையும் கருத்துக்களையும் மறுபதிப்பு செய்த சமூகநீதி முரசு இதழுக்கு வாழ்த்துக்கள்.
நைனார் முஹம்மது, அறந்தாங்கி
அறிவுலகுக்கு இஸ்லாமியக் கலைக் களஞ்சியங்கள் சிறப்பான கட்டுரை. சமூகத்தில் ஆளுமைகளை உருவாக்கும் நோக்கத்தில் கலைக் களஞ்சியங்களை படைத்த அறிஞர்கள் போற்றுதலுக்குரியவர்கள். கட்டுரையை ஆக்கம் செய்த பேராசிரியர் அப்துர் ரஸ்ஸாக் அவர்களுக்கு நன்றி.
இமாமுதீன், மதுரை




































