தலையங்கம் – நம் பிள்ளைகளின் நிலை 

சமுதாயத்தின் கல்விநிலை குறித்து வெறுமனே கவலைப்படுவதை விட, மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட தான் சார்ந்துள்ள மஹல்லா மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்திடும் அறக்கட்டளைகள் அமைப்புகள் நலச்சங்கங்கள் உள்ளிட்டோரின் கல்விச்சேவைகள் மிகவும் அவசியமானது. 

இதில் ஒரு சிறிய மாற்றத்தை கொண்டு வந்தால் சிறப்பான விளைவுகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமான இயற்கை அறிவியல் துறைகள் சார்ந்த படிப்புகளிலும் ஆராய்ச்சிக் கல்வியை மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் ஆராய்ச்சி காலம் முழுமைக்கும் நிதியுதவி என்ற ஒரு திட்டத்தையும் இணைத்துக் கொண்டால் சமுதாயத்தில் வியக்கத்தக்க மாற்றங்கள் உண்டாகும். 

இயற்கை அறிவியல் (Natural Sciences) துறைகளில் ஆர்வமுடைய மாணவர்களை வாழ்நாள் முழுவதும் தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தும் கல்விமுறையையும் அதற்கான நிதி கட்டமைப்பையும் அமெரிக்கா பிரிட்டன் சீன உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகளும் அங்கே வாழும் சில தனிப்பட்ட இனக் குழுக்களும் மிக நேர்த்தியாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
 

இதன் மூலம் அண்டத்தின் இயற்பியல் வேதியியல் விதிகள் மற்றும் பூமியின் உயிர்கள் பற்றிய புதிய புதிய கோட்பாடுகளை அவர்கள் அறிந்து கொள்கின்றனர்.

இந்த கோட்பாடுகளையும் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவர்கள் உருவாக்கும் புதிய புதிய தொழில் நுட்பங்களையும் எங்கே எந்த நாட்டிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வரலாறு சமூகவியல் அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட தத்துவக்கல்வியில் (Philosophical Studies) நுண்ணறிவு பெற்ற அறிவுஜிவிகள் முடிவு செய்கின்றனர்.

ஆராய்ச்சி சிந்தனையை இளம் தலைமுறையின் இயல்பாக மாற்றும் வல்லாதிக்க நாடுகளின் இந்த கல்வி முறைதான் பிற நாடுகளை தங்களது பிடியின் கீழ் கொண்டு வருவதற்கு அவர்களுக்கு பேருபகாரம் புரிகிறது.

நம் நாட்டின் கல்விமுறையையும் நம் பிள்ளைகளின் இன்றைய கல்வி இலக்கையும் அவர்களுடன் கொஞ்சம் ஒப்பீடு செய்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம். 

அறிவியல் ஆர்வமுடைய மாணவர்களும் சரி தத்துவக்கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களும் சரி ஒரு பட்டப்படிப்பு முடிந்தவுடன் ஏதாவது ஒரு ஐடி கம்பெனியில் அல்லது ஒரு பகாசுர கார்ப்பரேட் நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டால் வாழ்நாள் இலக்கை அடைந்துவிட்டதாக பெருமிதம் கொள்கின்றனர்.
 

சிரமப்பட்டு செலவுசெய்து படிக்க வைத்ததற்கான பலன் கிடைத்து விட்டதாக பெற்றோர்கள் பெருமைபட்டுக் கொள்கின்றனர். இந்தநிலை தொடருகின்ற வரை நாம் அடிமைகளாகவே தான் இருக்க முடியும். 

அறிவியல் ஆராய்ச்சிகளின் உட்புறம் ஒளிந்துள்ள அதிகாரங்களையும் அது கொண்டுவந்து குவிக்கும் செல்வ வளத்தையும் நம் பிள்ளைகள் எப்போது அடைவது….?

அல்குர்ஆன் உறுதியாக அடிக்கோடிட்டு காட்டும் படைப்புகளின் தன்மைகளை ஆராய்ச்சி செய்ய உம்மத்தின் (உங்கள்) பிள்ளைகளை எப்போது தூண்டப் போகிறோம்….?

நாம் முன்னெடுக்கும் இந்த ஒரு முயற்சியின் மூலம் இந்திய நாட்டின் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வளிக்கும் சிறப்பான அறிஞர்களை முஸ்லிம் சமூகத்திலிருந்து நிச்சயம் உருவாக்க முடியும். 


மேலும் இஸ்லாம் முன்னிறுத்தும் அறிவுத்துறை இலக்கை நோக்கி நாம் பயணிப்பதற்கும் இது பெரிதும் உதவி செய்யும்.


உலகத்தின் சமூக அறிவியல் மாற்றங்களை மஹல்லா தெருக்களில் விவாதித்து அதற்கான தீர்வுகளை தரும் அறிஞர்களை அங்கிருந்தே உருவாக்கும் திட்டங்கள் மூலம் எதிர்காலத் தலைமுறையிடம் சிறப்பான மாற்றங்களை கொண்டு வர முடியும்.