



மனித வரலாற்றில் நோய்க்கு பெரிய இடம் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியம் கிடையாது. நோய்கள் புதுப்புது பெயர்களில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. .
‘சார்ஸ்’, ‘மெர்ஸ்’ போல் காசநோயும் பெரும் கொள்ளை நோயாக ஒரு காலத்தில் மக்களை அழித்து கொண்டும் அச்சுறுத்தி கொண்டும் இருந்தது.
அதற்கு மருத்துவ உலகமும் புதுப்புது பெயர்களைச் சூட்டியும் புது புது மருந்துகளைக் கண்டு பிடித்தும் வாழ்க்கை முறைகளில் பல மாற்றங்களை கடைபிடிக்க செய்தும் கொடிய நோய்களை பரவாமல் பார்த்து கொண்டு தான் இருக்கிறது.
இப்படி நோய்கள் பரவும் காலத்தில் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? என்பதை இன்ஷாஅல்லாஹ் சுருக்கமாகப் பார்ப்போம்
சுத்தம், ஒழுக்க விழுமங்கள், நல்ல உணவு முறைகள், ஆரோக்கியமான முன்னேற்பாடுகள், மன நிம்மதி தரும் இறை வழிபாடுகள் ஆகிய அனைத்தும் ஆரோக்கியத்துடன் தொடர்புள்ளதாகவே இருந்து வருகின்றது.
தொற்று நோய்களைத் தடுக்க இன்றைய மருத்துவ உலகம் தூய்மையைத் தான் முதன்மையாக பரிந்துரை செய்கிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.
அதுவும் உடல் உறுப்புக்களைச் சுத்தம் செய்வதை வலியுறுத்தும் விளம்பரங்கள் நமக்கு சாட்சியாகவே தெரிகின்றன.
மனிதருக்கு வழிகாட்டும் இஸ்லாம், தொழுகை என்ற இறை வழிபாட்டுக்கு உடல். உடை, இடம் சுத்தம் அவசியம் என்கிறது. அதன் ஒரு பகுதியாக தண்ணீரால் உறுப்புக்களைச் சுத்தம் செய்வதை ‘உளு’ என்ற பெயரில் அழைக்கிறது. உளு என்று சொல்லப்படும் தூய்மை தொழுகைக்கு மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
‘உளு’ செய்யும் போது பல் துலக்குவதும், கைகளை நன்றாக கழுவுவதும், வாய் கொப்பளித்து பின்பு மூக்கிற்கு தண்ணீர் செலுத்தி சுத்தம் செய்வதும், முகம் மற்றும் தாடியைக் கோதிக் கழுவி எல்லா விரல்களையும் முறையாக அழுத்தித் தேய்த்துக் கழுவ வேண்டும் என்பது கட்டாயமாகும்.
நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் இந்தச் செய் முறையில் வலியுறுத்தப்படுகின்றது என்பது கவனிக்கத்தக்கது.
ஒரு இறை நம்பிக்கையாளன் எப்பொழுதும் உடல், மன சுத்தம் உடையவனாகத்தான் இருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஏனெனில் சுத்தம் இறை நம்பிக்கையோடு தொடர்புடையது.
கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. ஓர் ஊரில் தொற்று நோய் தோன்றி விட்டால் அது வேறோரு இடத்திற்குப் பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் சிறந்த வழி முறை.
இதை மனித சமூகத்திற்கு வழிகாட்டியாக வந்த இறுதி இறைத் தூதர் தமது வாழ்க்கையின் மூலம் நமக்கு காட்டிச் சென்றுள்ளார்கள்.
“நோயுற்ற மனிதரை ஆரோக்கியமானவருக்குப் பக்கத்தில் கொண்டு வரவேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்) என்று சொல்லி, தொற்று நோய் இருப்பவர் மற்றவர்களுடன் தங்குவதைத் தடை செய்யவேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
எந்த ஒரு தனி நபரும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படுத்தக்கூடாது. (அல்லாஹ்வின் நாட்டப்படி) நோயாளியின் கிருமி மற்றவர்களுக்கு தொற்றும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் தாம் தும்மினால் கூட உம்மத்தின் படிப்பினைக்காக கையையோ அல்லது துணியையோ வாயருகில் வைத்துக்கொள்வார்கள்.
தும்மலின் சப்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்.(அபூதாவூத் 4374) நபி (ஸல்) அவர்கள் தும்மலின் போது தெறிக்கும் நீர் யார்மீதும் பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள்.
காலரா, அம்மை போன்ற கொடிய நோய் ஒரு ஊரில் பரவலாக இருந்தால் நீங்கள் வராதீர்கள். நீங்கள் அந்த ஊரில் இருந்தால் அவ்வூரை விட்டும் வெளியேறாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நோயுற்ற கால்நடைகளை ஆரோக்கியமாக உள்ள கால்நடைகளுக்கு அருகே சென்று தண்ணீர் குடிக்க வைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்” (புகாரி)
எல்லாம் இங்கு காரணங்களின் அடிப்படையில் தான் இயங்குகிறது. எனவே நோய்க்கிருமி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சென்றுவிட்டால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவருக்கும் அதே நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே அந்த ஊருக்கு செல்லாமல் அந்த நோய் வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும்.என்றும் நபி (ஸல்) சொல்லியுள்ளார்கள்.
அறியாமைக் காலத்தில் யாருக்கும் இந்த விஞ்ஞான அறிவெல்லாம் இருந்தது கிடையாது.
19 ஆம் நூற்றாண்டின் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மருத்துவக் கொள்கையை 6-ம் நூற்றாண்டிலேயே நபி (ஸல்) அவர்கள் உலகுக்கு அறிவித்துள்ளது சிந்திக்க வேண்டிய ஒன்று.
சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக நபியவர்களும் நபித்தோழர்களும் தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். தோட்டங்களில் தொழுவதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரியப்பட்டிருக்கிறார்கள். (திர்மிதீ)
சாப்பாட்டுக்கு முன்பு கை கழுவிக்கொள்ள வேண்டுமென்பதும் இஸ்லாம் போதிக்கும் சுகாதாரக் கொள்கைகளில் ஒன்று. உணவருந்தும் முன்பும் பின்பும் கை கழுவிக் கொள்வது சாப்பாட்டில் அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத்)
நக இடுக்குகளில் அழுக்குப் படிந்து அது உணவருந்தும் போது உடலுக்குள் சென்று உடல் நலத்ததைக் கெடுக்கக் கூடும். எனவே, நகத்தை வெட்டுவதையும் இடுக்குகளில் உள்ள முடிகளைக் கலைவைதையும் மனிதனுடைய இயல்பான காரியங்களில் உள்ளவை என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
தண்ணீர் பாத்திரத்தை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பையைக் கட்டி வையுங்கள். தூங்கிவிழித்தால் தண்ணீர்ப் பாத்திரத்திற்குள் கைகளை நுழைப்பதற்கு முன் கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள் இரவு நேரங்களில் கரங்கள் (அசுத்தமான இடங்களில்) உலாவிஇருப்பதை அவன் அறியமாட்டான் என்று கூறி தூய்மையைப் பேணுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்,
ஒரு முறை அல்லாஹ்வின் தூதரே! ஆரோக்கியத்துடன் துள்ளித்திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?” என்று நபியிடம் ஒருவர் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?” என்று அவரிடம் திருப்பிக் கேட்டார்கள். இதை அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.
முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபி (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள். இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதையும் உணர்த்துகின்றார்கள்.
ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்பிக்கை வேண்டும்.
ஒருவர் இவருடைய கண்ணைப் பார்த்ததால் தான் எனக்குக் கண் வலி வந்து விட்டது என்று கூறுவது இறைவனின் விதியை மறுப்பதைப் போன்றதாகும
இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று மறுப்பது இல்லை.
எனவே நோயின் தாக்கத்தை உணர்ந்து அதை போக்கும் வழி முறையை கடைப்பிடித்து வாழ்ந்தோமானால். எல்லாம் சரியாகும். இன்ஷா அல்லாஹ்.


































