முதலாளித்துவ அமெரிக்காவில் ஒரு சோஷியலிஸ்ட் – நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்காவில் இரண்டே அரசியல் கட்சிகள்தான். தேர்தல் சமயத்தில் ஏதாவது மூன்றாவது கட்சி தொடங்கப்பட்டு தேர்தலில் பங்கெடுத்துக்கொள்ளும். தேர்தல் முடிந்த பிறகு அந்தக் கட்சி அதோடு மறைந்துவிடும். மூன்றாவது கட்சி இதுவரை எந்தத் தேர்தலிலும் வெற்றிபெற்றதாகத் தெரியவில்லை. இருக்கும் இரண்டு கட்சிகளும் – குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி – அமெரிக்கா என்ற நாடு உருவான நாளிலிருந்தே (முன்னால் வேறு பெயர்கள், கொள்கைகள் இருந்தாலும்) இருந்து வருகின்றன. 

இந்தியாவில் கட்சித் தலைவர்தான் எல்லாமே. மத்திய அரசைப் பொறுத்தவரை ப.ஜ.க. தேர்தலில் வெற்றிபெற்றால் மோதிதான் பிரதம மந்திரி; அதைப்போல் தமிழ்நாட்டில் கருணாநிதி இருந்தவரை தி.மு.க.வின் தலைவர் அவர்தான்; அதுபோல் சந்தனப்பேழை அம்மையார்தான் அ.தி.மு.க.வின் தலைவர். இவர்கள்தான் முதல் மந்திரி பதவியையும் வகித்தார்கள். இவர்கள் இரண்டு பேரும் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, கட்சியில் எல்லாமே இவர்கள்தான். மற்ற கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் இவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள். 

அமெரிக்காவில் அப்படியில்லை. கட்சித் தலைவர்கள் நிரந்தரத் தலைவர்கள் அல்ல. கட்சி அலுவல்களைக் கவனிக்க வேண்டியது மட்டுமே இவர்களுடைய வேலை. கட்சிக்குள் சிலருக்கு அதிக அதிகாரம் இருக்கும். அவ்வளவே, பாராளுமன்ற வேட்பாளர்கள், ஜனாதிபதி வேட்பாளர் ஆகியோரை நியமிப்பது பல மாநிலங்களிலும் நடக்கும் முதல்நிலைத் தேர்தல்களைப் (primaries) பொறுத்து அமையும். மாநில அளவிலும் ஆளுநரிலிருந்து சட்டசபை உறுப்பினர்கள்வரை முதல்நிலைத் தேர்தல்கள் மூலம்தான் வேட்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கட்சித் தலைவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.   

ஒவ்வொரு மாநிலமும் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு முதல்நிலைத் தேர்தல் நடத்துவதில் தனக்கென்று சில விதிகளை வைத்திருக்கின்றன. அந்தக் கட்சியில் உறுப்பினராகப் பதிவு செய்திருப்பவர்கள் மட்டுமே முதல்நிலைத் தேர்தலில் வாக்களிக்கலாம். நியூ ஹேம்ஷயர் போன்ற சிறிய மாநிலங்களில் அதுவரை கட்சி உறுப்பினராகப் பதிவுசெய்திருக்காவிட்டாலும் தேர்தல் அன்று தேர்தல் நடக்கும் இடத்திற்குள் நுழைவதற்கு முன் உறுப்பினராகி வாக்களித்துவிட்டுப் பின் அதை ரத்துசெய்துகொள்ளலாம். 

பொதுத்தேர்தலில் போலவே அந்தந்த மாநில ஜனத்தொகையைப் பொறுத்து அந்த மாநிலத்தில் வென்றவருக்கு ஒரு எண்ணிக்கை கொடுக்கப்படும். ஐம்பது மாநிலங்களிலும் சேர்ந்து யாருக்கு அதிக எண்ணிக்கை கிடைக்கிறதோ அவர் அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் செய்யப்படுவார். எல்லா மாநிலங்களிலும் ஒரே நாளில் இந்த முதல்நிலைத் தேர்தல்கள் நடப்பதில்லை. அவரவர் வசதிக்கேற்ப தேதியை குறித்துக்கொள்வார்கள்; இந்தத் தேதிகள் காலங்காலமாக நடைமுறையில் உள்ளன.

2020 தேர்தலில் முதலில் பெர்னி சாண்டர்ஸ் தான் பல மாநிலங்களில் வெற்றிபெற்றுக்கொண்டு வந்தார். சில மாநிலங்களில் பைடனுக்கு இரண்டாவது இடம்கூட கிடைக்கவில்லை. ஆனால் தென்கரோலினா மாநிலத்தில் பைடனுக்கு வெற்றி கிடைக்கவும் அதைத் தொடர்ந்து முதல்நிலைத் தேர்தல் நடைபெற்ற கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் பைடன் வெற்றிபெற்று ஜனநாயக கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாதாரணமாக ஒரு வேட்பாளர் வெற்றிபெறுவார் என்று ஓரளவுக்குத் தெரிந்தவுடனேயே மற்ற வேட்பாளர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக்கொள்வார்கள்; ஆனால் பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து தன் கொள்கைகளை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்துகொண்டே இருந்தார்.

தன்னுடைய கொள்கைகளை ஆதரிப்பதற்குப் பலர் இருக்கிறார்கள் என்பதைப் பிறருக்கு உணர்த்துவதற்காக முதல்நிலைத் தேர்தலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். கட்சிக்குள் ஒற்றுமை வேண்டும் என்பதற்காக கட்சியில் செல்வாக்கு உள்ளவர்கள் பெர்னி சாண்டர்ஸை தன் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துவதை நிறுத்திக்கொள்ளும்படி வேண்டினர். பெர்னி சாண்டர்ஸும் தன்னுடைய கொள்கைகளை பைடன் ஏற்றுக்கொள்வார் என்ற நிலை ஏற்படும்வரை பிரச்சாரம் செய்துவிட்டுப் பின் பைடனைப் பொதுத்தேர்தலில் தேர்தெடுக்கும்படி தன் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

அன்று முதல் பெர்னி சாண்டர்ஸ் ட்ரம்பைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் பைடனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்கி அமெரிக்க ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் சேண்டர்ஸின் ஒரே குறிக்கோள். சேண்டர்ஸ் ஒரு உண்மையான சோஷியலிஸ்ட்; பைடனுக்கு ஆதரவு அளிக்கும்போதே பைடன் இவருடைய கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு ஓரளவு பார்த்துக்கொண்டார். பைடனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதன் மூலம் தன்னுடைய கொள்கைகளைப் பரப்புவதையும் சாதித்துக்கொண்டார். 

தேர்தல் முடிந்து பைடன் வெற்றிபெற்றதும் தனக்குத் தொழில்மந்திரி பதவி கிடைக்கும் என்று பெர்னி சாண்டர்ஸ் எதிர்பார்த்தார். அதன் மூலம்தான் தன்னுடைய தொழிலாளர் கொள்கைகளச் சட்டங்களாக ஆக்கலாம் என்று நினைத்தார். செனட்டில் இரண்டு கட்சிகளின் எண்ணிக்கையும் ஒன்றாக – 50, 50 – இருந்ததால் சேண்டர்ஸை தொழில்மந்திரியாக நியமித்தால் ஒரு செனட் பதவி ஜனநாயகக் கட்சிக்குக் குறைந்துவிடும் என்பதால் பைடன் அவரை நியமிக்கவில்லை. (சேண்டர்ஸ் இப்போது கட்சி சேராத (independent) வெர்மான்ட் செனட்டர்; ஆனால் பல நேரங்களில் ஜனநாயகக் கட்சி சார்பில்தான் ஓட்டுப் போடுவார்.)  பைடன் தன்னைத் தொழில் மந்திரியாக நியமிக்காவிட்டாலும் இப்போது மற்ற பல வழிகளில் தொழிலாளர் நலனுக்காகப் பாடுபட்டு வருகிறார்.

இப்போது கோவிட்-19 அமெரிக்காவைத் தாக்க ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. பல கடைகள், பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலர் வேலையிழந்தனர். அமெரிக்காவில் வேலையிழந்தவர்களுக்கு ஆறு மாதம்வரை வேலையிழப்புக்கான உதவித்தொகையை அந்தந்த மாநில அரசு கொடுக்கும். வைரஸின் பாதிப்பால் பலர் தொடர்ந்து பல மாதங்கள் வேலையில்லாமல் இருந்தனர். அதனால் ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் கீழ் வருமானம் பெற்றுவந்தவர்களுக்கு மத்திய அரசு கொஞ்சம் தொகை கொடுப்பதாக முடிவுசெய்தது.

 ட்ரம்ப் அந்தத் திட்டத்திற்கு பல வழிகளில் முட்டுக்கட்டை போட்டுவந்தார். கடைசியாக ஒரு முறை அம்மாதிரியான குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு 1200 டாலர் வீதம் கொடுக்கப்பட்டது; அதன் பிறகு இன்னொரு முறை ஒரு நபருக்கு 600 டாலர் கொடுக்கப்பட்டது. பைடன் பதவிக்கு வந்ததும் வறுமையில் வாடும் எல்லோருக்கும் உதவுவதற்கும் கோவிட்-19 தடுப்பு ஊசியை எல்லா அமெரிக்கர்களுக்கும் போடுவதற்கும் இன்னும் கோவிட்-19 சம்பந்தப்பட்ட எல்லாச் செலவுகளுக்கும் 1.9 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு பன்னிரெண்டு பூஜ்யங்கள் கொண்டது -1,000,000,000,000;) டாலர்கள் காங்கிரஸிடம் கேட்டார்.  

அதில் எல்லோருக்கும் குறைந்த அளவு சம்பளமாக மணிக்கு 15 டாலர் கொடுப்பதைச் சட்டமாக்க வேண்டும் என்றும் அந்தத் திட்டத்தை இந்த இரண்டு ட்ரில்லியன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் பெர்னி சாண்டர்ஸ் மிகவும் முயற்சி செய்தார். இப்போதைக்கு அது முடியவில்லை. இப்போது சராசரியாக பத்து டாலருக்கும் முறைவாக இருந்துவருகிறது  இனி வரும் சட்டங்களில் எப்படியாவது  அதைப் பதினைந்து டாலராக மாற்ற வேண்டும் என்று பெர்னி சாண்டர்ஸ் போன்றவர்கள் முயன்றுவந்தனர். பைடன் காலத்திலாவது அதை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டும் என்று பெர்னி சாண்டர்ஸ் முயன்று வருகிறார்.

சேண்டர்ஸ் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அவரால் ட்ரம்ப்பை வெற்றிகொண்டிருக்க முடியாது என்று பலர் பயந்ததால் தீவிர இடதுசாரியாக இல்லாத பைடனைத் தேர்ந்தெடுத்தனர். அமெரிக்காவில் இடதுசாரிக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பலருக்கு இல்லை.  மிகப்பெரும் பழமைவாதியான, அமெரிக்கா அமெரிக்க வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்று கூறிக்கொண்டிருந்த ட்ரம்ப்புக்கு 7.3 கோடி அமெரிக்கர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.  இத்தனை பழமைவாய்ந்த, சுயநலவாதிகள் அமெரிக்காவில் இருக்கும்வரை சேண்டர்ஸ் போன்றவர்கள் அமெரிக்காவில் ஜனாதிபதியாக வர முடியாது.  இருப்பினும் தன்னால் முடிந்த அளவு பெர்னி சாண்டர்ஸ் அமெரிக்க மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டு வருகிறார்.