




2020 ஆம் ஆண்டில், கோடீஸ்வரர்கள் கொள்ளைக்காரர்களைப் போல பெருகி வருகின்றனர். ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு 113 பில்லியன் டாலரில் இருந்து 184 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பிஸ்னெஸ் மேக்னெட், தொழில்துறை வடிவமைப்பாளர் மற்றும் பொறியாளர் எலோன் மஸ்கின் சொத்து மதிப்பு ஜெப் பெசோஸை தூக்கிச் சாப்பிடும் அளவில் உள்ளது. அவரின் சொத்து மதிப்பு 27 பில்லியன் டாலரிலிருந்து185 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்த பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்நாட்டு சந்தைகளில் செய்யும் ஆதிக்கங்கள் பல விமர்சனங்களைப் பெற்று விவாதிக்கப்பட்டுள்ளது. எனினும், உலகளவில் இந்த நிறுவங்களின் ஆதிக்கம் என்பது அரிதாகவே விவாதிக்கப்படுள்ளது, குறிப்பாக அமெரிக்க வல்லுநர்கள் இதைப் பற்றி குறைவாகவே விமர்சித்துள்ளனர்.
உண்மையில், இந்த பெரிய தொழில்நுட்ப நிறுவங்களின் அமைப்பு முறை அவற்றின் கொள்கைகளை ஆராய்ந்து பார்க்கும் போது உலகளவில் சந்தைப்படுத்துதலை மட்டும் அவர்கள் எண்ணமாக கொண்டது போல தெரியவில்லை. இந்த பெரிய-டெக் நிறுவனங்கள் அடிப்படையில் மனிதர்களின் இயல்புகளை, எண்ணங்களை காலனிப்படுத்துகின்றன (அடிமைப்படுத்துகின்றன) என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுவே “டிஜிட்டல் காலனித்துவம்”.
காலனித்துவம் எவ்வாறு முந்தைய நுற்றாண்டுகளில் உலகின் இரண்டாம் தர நாடுகளை அச்சுறுத்தியதோ இப்போது டிஜிட்டல் காலனித்துவம் அதே அச்சுறுத்தலை இரண்டாம் தர நாடுகளிடம் ஏற்படுத்துகிறது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளை.
இந்த தகவல்கள் சிலருக்கு புதிதாகத் தெரியலாம். வியப்பாகவும் இருக்கலாம். ஆனால் கடந்த காலங்களில் இவை மிக ஆழமாக வேரூன்றி விட்டன. இந்த கொள்கைகளை எதிர்ப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ ஒரு வலுவான அமைப்பு இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக மாறக் கூடும்.
உலக அளவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பெரும்பாலான சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. குறிப்பாக கூகுள் நிறுவனம். அவ்வாறெனில் அந்த நிறுவனத்திற்கான வருமானம் என்ன? கூகுள் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஒரு டிரில்லியன் டாலர்கள்.
சேவையை பயன்படுத்துபர்களிடம் இருந்து இந்த நிறுவனங்கள் பணம் வசூலிக்கவில்லை. ஆனால் இதன் சந்தை மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது எனில் எப்படி?
டிஜிட்டல் காலனித்துவம் என்றால் என்ன?
டிஜிட்டல் காலனித்துவம் என்பது ஒரு நாடு மற்றொரு நாட்டில் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக ஆதிக்கத்திற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகும்.
பண்டைய கால காலனித்துவத்தின் கீழ், ஐரோப்பியர்கள் வெளிநாட்டு நிலங்களை கைப்பற்றிக் குடியேறினர், இராணுவக் கோட்டைகளை, கடல் துறைமுகங்களை மற்றும் ரயில்வே போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை அவர்களின் தேவைக்காக காலனிப்படுத்தப்பட்ட நாட்டில் நிறுவிக்கொண்டனர்.
பொருளாதார ஊடுருவல் மற்றும் இராணுவ வெற்றிக்காக துப்பாக்கி தாங்கிய கப்பல்களைக்கொண்டு வந்தனர்; மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க கனரக இயந்திரங்களையும் தொழிலாளர்களையும் பயன்படுத்தி கொண்டனர்.
மேம்பட்ட பொருளாதார சுரண்டலுக்கு தேவையான பொறியாளர்களும் கொண்டுவரப்பட்டனர் (எ.கா. கனிமங்களை பிரித்தெடுப்பதற்கான வேதியியலாளர்கள்) மலிவான உற்பத்தி பொருட்களை உலகின் இரண்டாம் மூன்றாம் தர நாடுகளின் சந்தையில் குறைந்த மதிப்பிற்கு விற்றனர்.
இந்த செயல்முறை பல நூற்றாண்டுகளாக உருவானது, புதிய தொழில்நுட்பங்கள் வந்தவுடன் அவை அதற்கேற்றார் போல மாற்றிக்கொள்ளப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நீர் மூழ்கிக் கப்பல்களின் கேபிள்கள் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு தந்தி எனும் தகவல் தொடர்பு எளிதாக்கப்பட்டது.
தகவல்களைப் பதிவு செய்தல், காப்பகப்படுத்துதல் மற்றும் ஒழுங்கமைத்தல் ஆகியவற்றில் புதிய முன்னேற்றங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டின் வெற்றிக்கு பிறகு அமெரிக்க இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டது..
நிக் கோல்டரி (Nick Couldry), யுலிஸஸ் மேஜியாஸ் (Ulises A. Mejias) என்ற இரண்டு அமெரிக்க எழுத்தாளர்கள் தங்களது புத்தகமான The Costs of Connection: How Data Is Colonizing Human Life and Appropriating It for Capitalism (Culture and Economic Life) இல் இணையதள சூழல் அமைப்பு எவ்வாறு பெரிய டெக் நிறுவனங்களால் கட்டுப்படுத்தபடுகிறது என்று விரிவாக கூறியுள்ளனர்.
ஐரோப்பிய காலனித்துவ காலத்தில் பயன்படுத்தபட்ட சில கருவிகளும் பொருட்களும் இன்றைய டிஜிட்டல் காலனித்துவ காலகட்டத்தில் மாற்றமடைந்துள்ளன. ஆனால் அவற்றின் வேலைகள் இன்றளவும் மாறவில்லை. அவற்றுள் சில உதாரணங்கள் :
அன்றைய கனரக இயந்திரங்களுக்குப் பதிலாக இன்றைய மேகக்கணி சேவையகங்கள் (cloud servers). இவை பெரும்பாலும் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களால் கட்டுப் படுத்தப் படுகின்றன. இவை பெரிய தரவுகளை சேகரிக்கவும், சேமிக்கவும், செயலாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
அன்றைய அமெரிக்க சாம்ராஜ்யத்திற்கான இராணுவத் தளங்களைப் போல இன்றைய பொறியாளர்கள் தாராளமான சம்பளத்துடன் உயர் அடுக்கு புரோக்ராமிங் கார்ப்பரேட் படைகளாக செயல்படுகின்றனர்.
அன்று காங்கோ மற்றும் லத்தீன்அமெரிக்காவில் உள்ள கனிமங்களை பிரித்தெடுப்பதற்கு மலிவான விலைக்கு தொழிலாளர்கள் கிடைத்தனர். இன்று இந்தியா மற்றும் ஆபிரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேகக்கணினி(cloud computing)களுக்குத் தேவையான தரவுகள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன.
மேற்கண்ட உதாரணங்களில் தரவு (Data) என்ற சொல் மிக முக்கியமாக இடம் பெற்றுள்ளது. தரவு என்றால் என்ன அவை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்ற கேள்வி நமக்குள் எழக்கூடும்.
அன்றைய நிலப்பரப்புக்கு ஈடாக இன்றைய தரவு (Data) வை நாம் ஒப்பிடலாம். அன்றைய காலனித்துவத்தில் எவ்வளவு நிலப்பரப்பை ஒரு சாம்ராஜ்யம் கொண்டுள்ளதோ அதைக் கொண்டே அதன் மதிப்பு வரையறுக்கப்படும். இன்றைய டிஜிட்டல் காலனித்துவத்தில் ஒரு நிறுவனம் எவ்வளவு தரவையும் தரவை உருவாக்க கூடிய பயனர்களை கொண்டுள்ளதோ அதற்கேற்றாற் போல அதன் மதிப்பு கணக்கிடப்படுகிறது.
டிஜிட்டல்காலனித்துவத்தின் கட்டமைப்பு
அன்றைய காலனித்துவதில் பல சாம்ராஜ்யங்கள் நாடு பிடிக்கும் ஆசையில் ஈடுபட்டிருந்தன உதாரணமாக கிழக்கிந்திய கம்பெனி, பிரித்தானியப் பேரரசு. தற்போது டிஜிட்டல் காலனித்துவதில் இரண்டு சாம்ராஜ்யங்குளுக்கு மத்தியில் மிகப்பெரும் பணிப் போர் நிகழ்த்து வருகிறது. அவை அமெரிக்கா மற்றும் சீனா.
உலகளவில் இருக்கும் பத்தில் எட்டு யூனிக்கான்கள்(ஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை கொண்ட ஸ்டார்ட் – அப் நிறுவனங்கள்) இந்த இரண்டு நாடுகளைச் சேர்ந்தவை.
அன்று நாடுகள் கைப்பற்ற பட்டன இன்று தகவல்கள் கைப்பற்றப்படுகின்றன.
எவ்வாறு நாடுகளைக் கைப்பற்றுவதற்கு அவர்களிடம் வர்த்தகம் செய்வது போல வந்து அந்த நாட்டின் அரசருக்கு பல பரிசுகளை வழங்கி நட்புடன் பழகி வஞ்சகமாக அந்த நாட்டை கைப்பற்றியதோ அதே போன்று தான் இன்றும் இந்த பெரிய டெக் – நிறுவனங்கள் ஈடுபடுகின்றன
உதாரணமாக : தென் ஆப்பிரிக்கா பகுதியில் உள்ள நாடான கென்யாவில், சீனாவின் ஹவாய் டெக்னாலஜிஸ் நிறுவனம் அந்த நாட்டின் தொழில்நுட்ப அமைச்சகமான (ICTA) உடன் இணைந்து நாட்டின் தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பொதுமக்களை கண்காணிக்கும் சி.சி.டிவி தொழில்நுட்பம் போன்றவற்றிற்கு பெரிதும் உதவி வருகிறது. சி.சி.டிவி காட்சிகளின் தரவுகளை(பதிவுகளை) அந்த நாட்டில் உள்ள மின்னணு சேவையகங்களில் (server) வைக்கப்படுமா என்பது கேள்விக்குரியதே…
இது போன்ற சந்தேகங்கள் மக்களுக்கு எழும் போதெல்லாம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கூறும் பதில்கள் ஒன்றே ஒன்று மட்டுமே. “நாங்கள் இந்த தரவுகளை எங்களின் சேவையயை மேம்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். இதனை நாங்கள் வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவில்லை” என்பார்கள். இது சற்று நகைப்புக்குரியது.
நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்கள் இருக்கும் போது இது போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் வேறு ஒரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தத் துடிப்பது டிஜிட்டல் காலனித்துவம் அன்றி வேறில்லை.
டிஜிட்டல் காலனித்துவதின் இந்திய பாதிப்பு அதற்கான தீர்வு குறித்து வரும் கட்டுரைகளில் தொடர்வோம்.
- ரா. முஹம்மது அனஸ் B.E (ECE), B.Sc (Psy)


































