குர்ஆன் – மனிதனின் பொறுப்பும் கடமையும்

அல் குர்ஆன் இறங்கிய ரமலான் மாதத்தில் குர்ஆனின் அற்புதம் குறித்தும் குர்ஆனுக்கும் மனித சமூகத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் அறிந்துகொள்வோம்.

அல் குர்அன் 1400வருடங்களுக்கு முன்னர் இறைத்தூதர்முஹம்மத் (ஸல்) அவர்கள் வழியாக உலகிற்கு அருளப்பட்டது. அதாவது ஏழாம் நூற்றாண்டில் தான் குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டு 23வருட காலப்பகுதியில் முழுமைப்படுத்தப்பட்டதோடு உலகில் நடைமுறைப்படுத்திக் காட்டவும் பட்டது.  

இனி உலகம் இருக்கும் வரையும் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்காகவும் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கபட்டிருக்கும் ஒரே இறைவழிகாட்டலாக விளங்கும் இக்குர்ஆனும் அதனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய வாழ்க்கை நெறியும் எல்லா காலம், இடம், நேரங்களுக்கும் ஏற்றதாகவும் நடைமுறைச் சாத்தியமானதாகவும் அல்லாஹ்வினால் வகுத்தளிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் அது உலகம் இருக்கும் வரையும் குர்ஆன் உயிரோட்டம் மிக்கதாவே இருக்கும்.  

அதேநேரம் குர்ஆன் அருளப்பட்ட காலப்பகுதி இன்று போன்று வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. அது எல்லா வழிகளிலும் பின்னடைந்து காணப்பட்டது. அப்படியான காலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மத்தியில் அருளப்பட்ட குர்ஆனை அவர்கள் விளங்கி புரிந்து கொண்டார்கள். அதற்கு ஏற்ப அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வழிபட்டு நடந்தார்கள். அதன் மூலம் உலகில் அதற்குமுன் ஏற்பட்டிராத பெரும் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் மாற்றத்தை குர்ஆன் ஏற்படுத்தியதோடு மனித வரலாற்று ஓட்டத்தின் திருப்புமுனைக்கும் மறுமலர்ச்சிக்கும் அடித்தளமாகவும் அமைந்தது.  

ஆனாலும் அக்காலப்பகுதியில் அருளப்பட்ட அல் குர்அன் அதே வடிவில் அதே ஒழங்கில் எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகாத வகையில் இன்று வரையும் இருக்குகின்றது. இதே ஒழுங்கில் தான் என்றும் உயிரோட்டத்துடன் இருக்கும்.  

‘குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் அறிவோடு எவ்வாறு ஒத்துப்போனதோ அதேபோன்று இன்றைய நவீன 21ஆம் நூற்றாண்டு மக்களின் அறிவோடும் ஒத்துப்போகின்றது. இதேபோன்று உலகம் இருக்கும் வரையும் தோன்றும் எல்லா கால மக்களது அறிவோடும் குர்ஆன் ஒத்துப்போகும். 

குர்ஆனின் வசனங்களை ஆரம்ப கால முஸ்லிம்கள் புரிந்து விளங்கி செயற்பட்டார்கள். அதேபோன்று இன்றும் புரிந்து விளங்கிக் கொள்கிறார்கள். நாளையும் இதேநிலை தான் தொடரும். ஆனால் அல் குர்ஆனிலிருந்து பெற்றுக்கொள்ளும் விளக்கம் தான் விரிந்து செல்லுகிறது. உலகம் இருக்கும் வரையும் தோன்றும் அத்தனை காலச் சூழ்நிலை மக்களாலும் அறிந்து புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தான் குர்ஆன் வகுத்தளிக்கப்பட்டிருக்கின்றது. 

அது தான் அல்லாஹ்வின் அற்புதம் சக்தி’ என்ற கருத்துப்பட இமாம் ஷஹ்ராவி (ரஹ்) அவர்கள் தம் அல் குர்ஆன் விளக்கவுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.  

அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் ஒரு தடவை ‘ஒவ்வொரு இறைத்தூதரும் அற்புதங்களுடன் அனுப்பபட்டனர். அந்த வகையில் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் அல் குர்ஆன் ஆகும்’ என்றார்கள்.  (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)  

ஆனால் அல்லாஹ்வின் சக்தியையும் குர்ஆனின் தன்மையையும் உரிய ஒழுங்கில் அறிந்து தெரிந்து கொள்ளாதவர்கள் இக்குர்ஆனை உரிய ஒழுங்கில் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிடுகின்றனர். அதன் விளைவாக எதிர்கொள்ளும் நஷ்டங்களும் இழப்புக்களும் தாக்கங்களும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. 

அதேநேரம் குர்ஆனை நம்மால் விளங்க முடியாது. அதற்கு தனியாகப் படிக்க வேண்டும் என்று கருதுபவர்களும் இன்றைய காலகட்டத்தில் உள்ளனர். அத்தோடு அல் குர்ஆன் உயரமான இடங்களில் வைத்து புனிதப்படுத்தப்பட வேண்டிய நூல் என்று நோக்குபவர்களும் கூட இருக்கின்றனர். ஆனால் இது அல் குர்ஆன் அருளப்பட்டதன் இலக்கு மற்றும் எதிர்ப்பார்ப்புக்கும் அல் குர்ஆனின் நோக்கத்திற்கும் முரணானதாகும்.  

குர்ஆன் அருளப்பட்ட முதலாவது சமுதாயத்தினர் அதாவது நபி(ஸல்) அவர்களது தோழர்கள் குர்ஆனை ஒரு நூலாகப் பார்க்கவில்லை. ஏனெனில் அது ஒரு போதும் நூல் வடிவில் அருளப்படவில்லை. மாறாக ஒலி வடிவில் தான் அல்லாஹ் அல் குர்ஆன் வசனங்களை அருளினான். அதனால் அவர்கள் அல்குர்ஆன் வசனங்களை அல்லாஹ்வின் குரலாகவே நோக்கினார்கள். இறைவனின் கட்டளையாக உணர்ந்து செயற்பட்டார்கள். அவர்கள் ஒருபோதும் இக்குர்ஆனை நம்மால் விளங்கிட முடியாது. இதற்காக சிறப்பாகக் கற்க வேண்டுமென அவர்கள் ஒருபோதும் கூறவில்லை.  

ஏனெனில் எந்த அறிவுமட்டத்தினரும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் தான் அல்லாஹ் தன் குர்ஆனை வகுத்தளித்திருக்கின்றான். இதனை தன் அருள்மறையில் அல்லாஹ் ‘(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி இருக்கின்றோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?’   (அல் குர்அன் 54:17)  

அது தான் உண்மை. குர்ஆன் வசனங்கள் ஊடாக அல்லாஹ் தம்முடன் உரையாடுவதாகவே ஸஹாபாக்கள் நோக்கினார்கள். அவ்வமைப்பில் தான் இக்குர்ஆன் வசன அமைப்பு காணப்படுகின்றது. நபி(ஸல்) அவர்களின் உதடுகள் ஊடாக அல்லாஹ் நம்முடன் உரையாடுகின்றான் என்றே அவர்கள் கருதினர். 

அதில் அவர்களுக்கு எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை. அதனால் அவர்களது உள்ளங்களை குர்ஆன் வசப்படுத்திக் கொண்டது. அவர்களது உணர்வும் சிந்தனைகளும் குர்ஆனாகவே இருந்தது. அதனால் அவர்களது வாழ்வு குர்ஆன் ஆனது’ என்று குர்ராம் முராத் (ரஹ்) தம் நூலொனறில் குறிப்பிட்டிருக்கின்றார். 

குர்ஆனானது அற்புதமாக விளங்குகின்ற அதேநேரம் மனிதனின் ஈருலக வாழ்வின் விடுதலைக்காகவும், செழிப்புக்காகவும் நேர்வழிகாட்டும் தெளிவான இறைவழிகாட்டலாகவும் திகழுகின்றது.  

முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக அருளப்பட்ட சூரா அலக்கின் ஐந்து வசனங்களையும் எடுத்துப்பார்த்தால் அங்கு ஓதுவீராக! படிப்பீராக என்ற சொல் இரண்டு தடவைகள் இடம்பெற்றிருப்பதை கவனிக்கலாம். இது குறித்து குர்துபி (ரஹ்) போன்றவர்கள் ‘வாசிப்பு எனும் வணக்கத்தை வலியுறுத்தவே ஒதுவீராக என்ற சொல் இரு தடவைகள் இடம்பெற்றுள்ளது’ என்றுள்ளனர். அதேநேரம் இமாம் ராஸி (ரஹ்) போன்றவர்கள் ‘அல் குர்ஆனின் ஒவ்வொரு சொல்லும் புதியதொரு கருத்தைத் தருவதாக வாதிடுகின்றனர். இதே கருத்தை முனைவர் தாஹா ஜாபீர் அலவானி (ரஹ்) போன்ற அறிஞர்கள் ஆதரிக்கின்றனர்.  

அதனால் இந்த ஐந்து வசனங்களையும் எடுத்து நோக்கும் போது இரு தடவைகள் இடம்பெற்றுள்ள இச்சொல் இரு விசயங்களை வலியுறுத்தக்கூடியதாக இருப்பதை கவனிக்கலாம். ஒன்று அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு தான் படிக்கவோ ஒதவோ ஆரம்பிக்க வேண்டும். அவனது பெயரைக் கொண்டு தான் எந்தவொரு காரியத்தையும் தொடங்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுகின்றது.  

மற்றொன்று அல்லாஹ் மாபெரும் கொடையாளி. அவன்தான் எழுதுகோளைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றை எல்லாம் கற்று கொடுத்திருக்கின்றான். அதனால் அவை தொடர்பில் படிக்க வேண்டும். ஆராய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.  

இவை இரண்டும் மனிதனை ஒரே இலக்கை நோக்கி நகர்த்தும் அற்புதத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. அது தான் அல்லாஹ்வின் நினைவிலிருந்து மனிதன் விலகிச் செல்லாமலிருக்க வழிவகுத்திருக்கின்றது. அதாவது மனிதனிடம் இறையச்சம் மேலோங்குவதற்கான ஏற்பாடாக அமைந்திருக்கின்றது.  

இவ்வாறு எண்ணிலடங்காத அற்புதங்களைக் கொண்டதாக விளங்கும் அல் குர்ஆனின் மகத்துவத்தையும் சிறப்பையும் கொண்டு பயனடைந்திட வேண்டியதே மனிதனின் கடமையும் பொறுப்புமாகும்.