“ஐஎல்&எப்எஸ் (IL&FS) மற்றும் ‘யெஸ்’ (YES) வங்கிகளின் தோல்விகள் நம்கண் முன் உள்ளன. வங்கியியலில், கார்ப்பரேட் ஈடுபாடு குறித்து நாம் முன்பே பரிசோதித்து பார்த்து விட்டோம். ஆனால், அந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. பல வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகி வருவதுடன், வராக்கடனிலும் சிக்கித் தவிக்கும் நிலையில், இப்போது எதற்காக இந்த முடிவு? நிறைய வங்கிகளைத் திறப்பது அரசாங்கத்துக்கு அவசியமானது என்றாலும் தொழில் நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதிப்பது புத்திசாலித்தனமான யோசனை அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி நடத்தும் உரிமங்கள் வழங்கப்பட்டால், அந்நிறுவனங்களிடம் பொருளாதார அதிகாரங்கள் குவிக்கப்படும். இந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை நிறுவனங்களே கடனில்தான் இருக்கின்றன. தற்போது அந்த நிறுவனங்களே வங்கிகளை நடத்தும்போது, தங்களுக்கு தேவையான கடன்களை, எந்தக் கேள்வியுமின்றி, தங்களுடைய வங்கிகளிலிருந்தே அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். ஒரு கடனாளரால் நடத்தப்படும் வங்கியானது, எப்படி ஒரு நல்ல கடனை வழங்கமுடியும்?
ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கி அமைப்புகளுக்கு அனைத்து விதமான தகவல்கள், உலக நாடுகளின் பொருளாதார புள்ளிவிவரங்கள் தெரிந்த நிலையிலும் கூட, அந்த வங்கிகள் கொடுக்கும் மோசமான கடனை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், தொழில் நிறுவனங்களையே வங்கிகள் நடத்த அனுமதிப்பது, முறையற்ற கடன்கள் மற்றும் பல்வேறு மோசடிகளுக்கே வழிவகுக்கும்.
ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர். விரால் ஆச்சார்யா, முன்னாள் துணை ஆளுநர்


































