வாழக் கற்றுக் கொடுப்போம் 

திசை காட்டி….

கை பிடித்து நடப்போம் 

இன்றைய நவநாகரீக மனிதன் தனக்குள்ளே இருக்கும் இன்பத்தை வெளியிலிருந்து பெறமுடியும் என்ற தேடல்களில் லயித்திருக்கிறான். இதன் விளைவாக தனக்குள் இருக்கும் வளங்கள் செல்வங்களை இனங்காணத் தவறிவிட்டான். இதுதான் இன்றைய மனிதனின் பல்வேறுபட்ட கவலைகள், துன்பங்கள், பதற்றங்கள். ஏக்கங்கள். தோல்விகள் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளின் மூல காரணங்களாகும்.

வெளியில் இருந்து கிடைப்பது தான் என் வாழ்வை வளப்படுத்தும் என்று கண்மூடித்தனமாக நம்பி அதன் விளைவாக நினைத்ததை அடைய முடியாமல் போனாலோ அல்லது போய்விடுமோ என்ற அச்சம் மேலோங்கும் சமயம் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொள்கிறான். இன்றைய பெரும்பாலான மாணவர்கள் ஏதோ ஒருவகை அழுத்தத்தை தன்னுடனேயே பிணைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். தனது இலட்சியம் என நிர்ணயம் செய்தது கிடைத்துவிட வேண்டும் என்பதில் அவர்கள் முனைப்புடன் செயல்படுகிறார்கள். இது தவறல்ல. ஆனால் லட்சியம் இடைநடுவில் கை நழுவும் போது அடுத்து எப்படி எழுவது? என்பது பற்றி நமது சமூகமும், கல்வி முறைகளும் போதிக்கத் தவறிவிட்டன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

ஆம் “இதைத்தான் கற்க வேண்டும். இதை கற்றால் தான் வாழ்வில் நிலைக்க முடியும்” என்று சமூகம் ஏதோ ஒன்றை இளம் தலைமுறையின் உள்ளங்களில் திணித்து வைத்திருக்கின்றது. இதை செய்ய இயலாத விடத்து நீ ஒரு தோல்வியின் சின்னம்” என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கின்றன. சமீபத்தைய தற்கொலைகள் கூட இதையே நிரூபிக்கின்றன. வெற்றியே வேண்டும், வீழ்த்துவதே குறிக்கோள் என்று வளர்க்கப்பட்ட இளம் சமூகத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

ஆனால் உயிர்கள் பெறுமதியானவை. தகுதிக்கும் தராதரத்துக்கும் கனவுகளுக்கும் உயிர்கள் அநியாயமாக பலியாக்கப் பட்டிருக்கின்றன.

இந்தப் பாடத் திட்டங்கள் தவறானவை, எல்லோராலும் அதன் செலவுகளை சுமக்க முடியாது, அரசாங்கத்தின் கல்விக் கொள்கை தவறானது என்று நமக்கு நாமே ஆறுதல் தான் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அது உண்மை அல்ல என்பதை நாமும் அறிவோம். பரீட்சைகள் ஆகட்டும், போட்டிகள் ஆகட்டும் வெற்றி பெற்றவனை கொண்டாடிவிட்டு தோல்வியுற்றவனை ஒதுக்கி வைத்தது நாம்தான். நமது சமூகம் தான். அப்போது பேசாது இருந்துவிட்டு இன்று தூற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு சிறுவன் அல்லது சிறுமி பாடசாலைக்குப் போகத் தொடங்கும்போதே ஏதோ பட்டங்களும், பல்லாயிரம் உழைக்கும் தொழில்களுமே வாழ்க்கை என்று சொல்லிக் கொடுத்து விடுகிறோம். இது தவறல்ல. ஆனால் கல்வி எதற்கானது? என்பதை அவர்களில் பதிய வைக்க தவறிவிடுகிறோம். அந்த பிஞ்சு மனங்கள் பசுமரத்தில் ஏற்றிய ஆணிகள் போல எதையோ தாங்கி பலப்படுத்தி உறுதியாக்கி 16 அல்லது 17 வருடங்களின் பின் அந்தப் பட்டங்களையும் தொழில்களையும் அடைய முடியாமல் போகின்ற போது தன்னை மாய்த்துக் கொள்வதில் விந்தைதான் ஏது?

“யாரோ போல வாழ வேண்டும், யாரோ போல சாதிக்க வேண்டும்” என்று அந்த வார்த்தைகளில் “உன்னை போல இருக்கும் ஒருவனை கொன்றுவிடு (வீழ்த்தி விடு) ” என்று கட்டளை இட்டது நாங்கள்தான். நாம் சார்ந்த சமூகம் தான். யாரோவாக கனவு கண்டவன், அதை தேடிக் காண இயலாமல் போன ஒரு பொழுதில் சுயத்தை கண்டபோது அந்த சுயத்தை  கொலை செய்துவிடுகிறான். 

ஏன் இதைவிட்டால் இந்த பூமியில் உனக்கு வேறு வழி இருக்கின்றது என்ற நம்பிக்கையை நாம் விதைக்கவில்லை? இது தான் சந்தோஷம் என்று யாரோ வரைந்த வட்டத்திற்குள் அவர்களை சிக்கவைத்து, “இது கிடைக்காவிட்டாலும் உனக்கான சந்தோஷங்கள் பூமி எங்கும் பரந்து இருக்கின்றன” என்பதை காட்டிக்கொடுக்க தவறியது என்னை – மதிப்பெண்ணை மையப்படுத்திய  இந்த சமூகம் தானே ? கல்வியை சுமையாக்கி அதன் ஒவ்வொரு படியிலும் இன்னும் இன்னும் பலம் – சுமை ஏற்றி அசைய முடியாமல் அந்த மாணவர்களை அழுத்தி வைத்து விட்டு எரிமலைகள் குமுறும் போது எங்கோ வீசிய காற்றை இழுத்து வந்து குற்றம் சுமத்துகிறோம்.

சிறுவயதில் ஜீரணிக்க முடியாத ஏதோ ஒன்றை திணித்துவிட்டு ஆரோக்கியமான சந்ததியை அடைய முடியாது. கல்வியின் நோக்கம் என்ன? அதன் அடைவுகள் என்ன? அதன் மூலம் நீங்கள் சாதிக்கப் போவது என்ன ? என்ற பரந்துபட்ட வினாக்களுக்கு விடை தேடும் மாணவர்களை ஒரு சிறிய வட்டத்திற்குள் கட்டுப்படுத்தி வைத்ததன் விளைவுகள் காலம் தாழ்த்தி வெளிவருகின்றன. 

சிறுவர்களை சிறுவர்களாக வாழ விடுங்கள் கல்வியை சுமையாக்கத் தேவையில்லை. எமது கனவுகளுக்குள் பிள்ளைகளை திணிக்கவும் தேவையில்லை. இலக்கே இல்லாத ஓட்டப் பந்தயங்களில் அவர்களை சேர்த்து விடவும் தேவையில்லை. அவர்களுக்கு நடக்கச் சொல்லி கொடுப்போம். எல்லைகளைக் காட்டி கொடுப்போம். இலக்குகளை தீர்மானிக்கும் வலிமை கொடுப்போம். இனி அவர்களாக ஓடிக் கொள்வார்கள்.

இயந்திரங்கள் மனிதர்களுடன் வாழும் இந்த பூமியில் ஏற்கனவே ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையான மன அழுத்தத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். ஆனால் அதற்கான தீர்வுகள் எம்மிடம் இல்லை. 

இன்னும் இன்னும் அழுத்தத்தை அதிகரிக்காமல் இருக்கும் வல்லமை மட்டும் என்னிடம் இருக்கின்றது. பெற்றோராக இருக்கலாம், உறவினர்களாக இருக்கலாம், ஆசிரியர்களாக பாடசாலை நிர்வாகம், ஏன் தினம் சந்திக்கும் யாரோ ஒருவராக இன்றைய மாணவர்களை உறுதிப்படுத்தும் தலையாய பொறுப்பு எம் அனைவரிடமும் உண்டு. அதை சரிவர செய்வதன் மூலம் இத்தகைய அகால மரணங்களை தவிர்த்துக் கொள்ளலாம். தீர்வு வழங்குபவராக யாரும் இருக்க தேவையில்லை, தட்டிக் கொடுப்பவராக செவி சாய்ப்பவராக இருந்தாலே போதுமானதாக இருக்கும்.

வாழச் சொல்லிக் கொடுப்போம். வாழ்வதற்கான பாதையை அவர்களே தேர்ந்தெடுக்கட்டும். வலிந்த போட்டிக்குள் தள்ளாமல் விடுவோம். தேவையென்றால் அவர்களுக்கான போட்டிகளில் இணைந்து கொள்ளட்டும். வேரூன்ற செய்வதை சரியாக செய்திடுவோம். அந்த வேர்கள் எங்கே போய் தன்னை போஷிக்க வேண்டும் ? என்ற பாதையை அவை கண்டு கொள்ளும்.

பௌசுனா இஸ்ஸதீன், BSC Psychology,

NLP Practitioner,

உளவியலாளர்,இலங்கை.