சமீபத்தில் ThePrint என்னும் வலைதள ஊடகத்தில் வெளியான எழுத்தாளர்களின் கட்டுரையை தழுவி எழுதப்பட்ட கட்டுரை இது.
—————————————————————
Mr.Liberta (Pursuing LLB), A Docleeg Release
“முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக ஓரங்கட்டுவதற்காகவே” அச்சமூகத்தை கொடிய வைரஸோடு மிகத் துல்லியமாக தொடர்புபடுத்தும் சித்தரிக்கப்பட்ட பொய்கள் பரப்பப்படுகிறது என்று இணைப் பேராசிரியர் ஹிலால் அஹ்மது, Centre for the Study of Developing Societies (CSDS) என்கிறார்.
வார்த்தைகளை ஆய்ந்து அளந்து தெளிவாகப் பயன்படுத்துவதற்கு பெயர் பெற்ற இணைப் பேராசிரியர் காலச் சூழ்நிலை அறிந்து இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.
“கொரோனா வைரசுக்கு மதச் சாயம் பூசும் வகுப்புவாத அவலப் பிரச்சாரம் தொடருமானால், இரயில் நிலையங்களில் ஹிந்து தண்ணீர் கடை, முஸ்லிம் தண்ணீர் கடை என்று காணப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.”
இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு வாக்கியமாக தோன்றலாம். ஆனால் சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகள் வழியாகவும் பரப்பப்படும் வகுப்புவாத கருத்துக்கள் விஷமாக மாறியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. காற்றில் பரப்பப்பட்ட விஷ(ம)க்க கருத்துக்களின் வீரியம் மனித சிந்தனைகளை பாதித்துள்ளதன் வடுக்களை இன்று நாம் கண்கூடாக பார்க்கமுடிகிறது.
பின்வரும் சில நிகழ்வுகள் அதற்கு சான்று பகரும்.
1, ஹல்திவானியில் (உத்தரகாண்ட் மாநிலம்) முஸ்லிம்களோடு தொழில் செய்யக்கூடிய இந்து வியாபாரிகளை தவிர்த்துவிட்டு, காய்கறி பழ வியாபாரம் செய்யும் முஸ்லிம்களின் கடைகளை மூடச்சொல்லி அந்த ஊர் மக்கள் வற்புறுத்தியுள்ளனர்.
2, சில காலனி அசோசியேசன்கள் தங்கள் காலனிகளுக்குள் முஸ்லிம் வியாபாரிகள் வருவதை தடை செய்தனர்.
3, மங்களூரில் “கொரோனா முடியும் வரை முஸ்லிம் வியாபாரிகள் ஊருக்குள் வரக்கூடாது” என்று சுவரொட்டிகள் (போஸ்டர்) ஒட்டியுள்ளனர்.
4, அருணாச்சலப் பிரதேசத்தில் லாரி ஓட்டுநர்களில் முஸ்லிம்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
5, முஸ்லிம்களின் கையிலிருந்து பணம் வாங்குவதை வெறுக்கும் சில குடிமகன்கள்.
6, சில இடங்களில் அவசர சிகிச்சை (Casuality) அளிக்கப்பட வேண்டிய நோயாளிகளுக்கு கூட முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் கலெக்டரின் அனுமதிக்காக சில மருத்துவர்கள் காத்திருந்தனர்.(அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அல்லது முதலுதவி அளிக்கப்பட வேண்டும் என்பது விதி – (Parmanand Katara Vs the Union of India 1989).
இவ்வாறு பாரபட்சமாக நடத்தி ஓரங்கட்டப்பட்டு வன்கொடுமை செய்யப்படுவது புதிதல்ல! வரலாற்றில் இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. சீனாவின் உய்குர் முஸ்லிம்கள், பர்மாவின் ரோஹிங்கிய முஸ்லிம்கள், இவ்வாறு ஓரங்கட்டப்பட்டு வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்கள் சொந்த நாடுகளிலேயே அகதிகளாக்கப்படுவதும், அந்நிய நாடுகளில் தத்தளிக்கும் பரிதாபமும் வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்.
முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் பாதை :- முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியில் சொற்பமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் பல செய்திகளில் வெளிப்படாமல் மூடி மறைக்கப்படுகிறது. காரணம் ஊடகத்துறையில் அவர்களின் விகிதாசாரம் குறைவு. பசுப் பாதுகாப்பு, காஷ்மீர், சிஏஏ-என்ஆர்சி, டெல்லி கலவரம் போன்ற முஸ்லிம்களுக்கெதிரான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போது முஸ்லிம்கள் சந்திப்பது திட்டமிடப்பட்ட பொருளாதார முடக்கம். அது கொரோனா ஜிஹாத் என்ற பெயரில் நடத்தப்பட்டது.
முறை சார்ந்த துறைகளில் இருந்து (Formal sector) ஓரங்கட்டப்பட்ட நிலையில் முறைசாரா துறைகள் (Nonformal sector) மற்றும் சுய தொழிலை நம்பி இருந்தனர் முஸ்லிம்கள்.
NSSO ( National Sample Survey Office 2009-10) கணக்கெடுப்பு :-
- நகர்ப்புறங்களில் 50% முஸ்லிம்களின் வாழ்வாதாரம் சாலையோர வணிகம், கனரக ஓட்டுனர் ஊழியம் போன்ற சுய தொழில் சார்ந்தே உள்ளது. இதைத்தான் அந்தக் காலனி அசோசியேசனும், ஊர் மக்களும் முடக்கியுள்ளனர்.
- மாத ஊதியம் வாங்கும் துறைகளில் முஸ்லிம்கள் பங்கு 23 சதவீதம் மட்டுமே!
- முஸ்லிம் ஆண்களில் 30% மட்டுமே பட்டப்படிப்பு பயில்கின்றனர்.
- IPS துறைகளில் 4%மும் IAS துறைகளில் 3%மும் IFS துறைகளில் 2% சதவீதத்துக்கும் குறைவாகவே பங்கு வகிக்கின்றனர் என்கிறது சச்சார் கமிட்டி ரிப்போர்ட் (2006)
- UPSE வழியாக வருடாவருடம் அரசு துறைகளில் நுழையும் முஸ்லிம்களின் பங்கு 4 – 5% சதவீதம் மட்டுமே! மக்கள் தொகையில் 14% வகிக்கும் சமூகம் அரசு மற்றும் அதிகாரமிக்க வேலைவாய்ப்பில் அதன் பங்கு மிகவும் குறைவு.
- இந்தியாவிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட ரயில்வே துறையிலும் முஸ்லிம்களின் பங்கு வெறும் 4.5% மட்டும்தான்.
- கார்ப்பரேட் துறையில் முஸ்லிம்களின் பங்கு வெறும் 3 சதவீதம் மட்டுமே.
சமூக வளர்ச்சிப் பாதை :-
கவலையளிக்கும் விசயம் என்னவெனில் முஸ்லிம்களின் சமூக இயக்கம் (Social Mobility) குறைந்து கொண்டே வருகிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் சமூக இயக்கம் கணிசமான அளவு வளர்ந்துள்ளது. இச்சூழலில் உழைக்கும் (தொழில் முனையும்) முஸ்லிம்களுக்கு எதிரான வெறுத்து ஒதுக்கும் தீண்டாமை வளருமெனில் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.
நகர்ப்புறங்களில், இந்துக்களும் முஸ்லிம்களும் வெவ்வேறு இடங்களில் கூட்டமாக வாழும் சூழலில் அவர்களுக்கு மத்தியில் பிணைப்பை ஏற்படுத்துவது வியாபாரம் போன்ற கொடுக்கல் வாங்கல் தான். பிணைக்கும் அந்த கயிறும் அறுந்துவிட்டால் மதச்சார்பற்ற இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தீண்டாமைக் அரங்கேறிவிடும்.
”இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறி” இந்த வார்த்தை சிலருக்கு விசித்திரமாக தெரியலாம். ஆனால் இச்சிந்தனை இந்திய மக்கள் மூளைகளில் வேரூன்றி, இரு மதத்தினரின் மனநிலையையும் மாற்றியுள்ளது. சிந்தனை, உணர்ச்சி, எண்ணம் ஆகியவை ஒரு சாதாரண இந்துவிற்கும் சாதாரண முஸ்லிமுக்கும் இடையில் இரு துருவங்களைப் போன்று வேறுபட்டுள்ளது.
மனநிலையில் ஏற்பட்டுள்ள இந்த வேறுபாடு சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் ஊடுருவி விடாது என்று எப்படி உறுதிகூறமுடியும்? ஒரு சமூகத்திற்கு எதிரான வெறுப்பு – வெறி உடல் ரீதியான தீண்டாமையில் வளர்ந்தது அல்ல! மாறாக சிந்தனை வேறுபாட்டினால் வளர்ந்தது. வளர்த்தெடுக்கப்பட்டது.
இனவாதத்தின் கட்டமைப்பு, கோட்பாடு மற்றும் தீண்டாமை பற்றி பல அறிஞர்களின் ஒருமித்த கருத்து பின்வருமாறு : “இனவாத கட்டமைப்பின் காரணமும் விளைவும் இனவாத பாரபட்சமே (Racial Prejudice). சமூகத்தில் பாரபட்சங்களை உருவாக்குவதே இனவாத கட்டமைப்பை நியாயப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதற்கான வழி.”
அரசியலில் ஓரம் கட்டுதல் :-
அரசியலில் முஸ்லிம்களை ஓரங்கட்டி முடக்குவதே இந்துத்துவாவின் தலையாய நோக்கங்களில் ஒன்று. ஆனால், சில வலதுசாரி இந்து தலைவர்களோ முஸ்லிம்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளப்படுத்த தாங்கள் உழைப்பதாக வெற்று வார்த்தைகளை கூறுகின்றனர்.
2014 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சொற்ப இடங்களில் மட்டுமே முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இன்றைய தலைமை அமைச்சர் மோடி தன்னை ஒரு இந்து தேசியவாதியாக ஒப்புக்கொண்டார்.
முஸ்லிம்கள் அதிக பங்கு வகிக்கும் சிறு தொழில் செழித்து வளர தன் ஆட்சி எவ்வாறு உதவியது என்பதை ஒரு பேட்டியில் : “எல்லோருக்கும் பாதுகாப்பு, சம உரிமை, செழிப்பு” என்பதே என் லட்சியம் என்று மோடி கூறினார்.
வருடத்திற்கு 30 – 35 கோடி மட்டுமே விற்பனை அளவு (Turnover) இருந்த பட்டம் (Kita) தொழில், தற்போது வளர்ந்து வருடத்திற்கு 700 கோடியை தொட்டு (Turnover) முஸ்லிம் சமூகத்தை செழிப்பாக்கியது என்றார் மோடி.
இரண்டாவது முறையாகவும் பொறுப்பேற்றுக்கொண்ட மோடி, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (Scholarship) வழங்க இருப்பதாகச் சொன்னார். பின்பு வழக்கம் போல் முத்தலாக்கிற்கு எதிரான சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, முஸ்லிம்களின் குடியுரிமையை சோதிக்கும் CAA, NRC சட்டங்கள் என அடுத்தடுத்து முஸ்லிம்களுக்கு இடிகளை இறக்கினார்.
சமூக – பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பங்களிப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. முஸ்லிம்கள் அரசியலில் பங்களித்தால் மட்டுமே அவர்களது சமூக பொருளாதார முன்னேற்றம் சாத்தியம்.
பல்லாயிரம் ஆண்டுகள் சாதியக் கட்டமைப்பின் பிடியிலேயே வாழ்ந்து பழகிவிட்ட இந்தியச் சமூக அமைப்பில் இனவாத பாரபட்சங்களைக் காட்டி பொருளாதார முடக்கத்தை ஏற்படுத்துவது கடினமானது அல்ல”
நாடாளுமன்ற உறுப்பினர் அசதுத்தீன் உவைசி சொல்வார் ‘இந்த சமூக-பொருளாதார முன்னேற்றத்தை நனவாக்க ஒரே ஆயுதம் “அரசியல் ஆளுமையே” என்று. பட்டதாரி முஸ்லிம் இளைஞர்களை அரசியலுக்கு அழைப்பதன் ஒரே நோக்கம் இந்த அரசியல் ஆளுமையை பெருவதற்காகத்தான்.
ஒருபுறம் வலதுசாரி இந்துக்கள், தலித்துகளை இந்து மதத்தோடு இணைக்க முயல்கின்றனர். மறுபுறம் தலித்துகள் கொஞ்சம் கொஞ்சமாக வலதுசாரி கட்சிகளுக்கு வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் முஸ்லிம்கள் இந்த சமூகத்தை விட்டு ஓரம் கட்டப்படும் நேரம் வந்து விட்டதோ என்ற சந்தேகம் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.
மக்கள் இரு தேசங்களாக பிரிக்கப்பட்டது போல் இப்போது இரு சமூகமாக பிரிக்கப்படுகின்றனர். அது நடந்து விட்டால் “இரு தேசக் கோட்பாடு” எனும் ஜின்னாவின் கனவு நினைவாகி விடுமோ?
































