செலவில்லா சித்த மருத்துவம் – நல்வாழ்விற்கு நல்ல குடிநீர் 

மனித உடம்பில் 70 சதவீதம் நீர் உள்ளது. ஊற்று மூலமாகும் வாய்க்கால் குளம் ஏரி ஆறு மற்றும் கிணறு அடிபம்பு மூலமாகவும் அருந்தும் நீரை மனிதர்கள் பெறுகிறார்கள். மழைநீராகவும் பெறுகிறார்கள்.

சில இடங்களில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. சில இடங்களில் நீர் கடினமாகவும் உப்பாகும் இருக்கிறது. இவ்வாறு நாம் பெறும் தண்ணீர் உப்பாகவோ விஷம் சம்பந்தமான கூட்டுப் பொருளாக இருக்கக் கூடாது.

தண்ணீரில் உப்புக்கள், கால்சியம் அல்லது மெக்னீசியம் கலந்துவிட்டால் தண்ணீர் கடினமாக மாறிவிடும். துணிக்கு சோப்பு கூட போட முடியாமல் ஆகிவிடும். குடி தண்ணீருக்கு உகந்ததாக இருக்காது.

தொழிற்சாலையில் உள்ள ரசாயன கழிவுப் பொருட்களை நிலத்தில் கொட்டுகிறார்கள். அவை நிலத்தில் உள்ள நீருடன் கலந்து அமிலத்தன்மை உள்ளதாக மாற்றிவிடுகிறது. எரிபொருளாக வரும் ரசாயன ஆவி மேக மண்டல ஆவிநீரில் கலந்து அமில  மழையாகக் கொட்டுகிறது. இந்த வகையில் மழை நீரும் தீங்குள்ளவையாக மாறிவிடுகிறது. 

இன்னும் சில விஷப் பொருள்களையும் குப்பைகளையும் நீர் நிலப் பகுதிகளில் கொட்டி விடுகிறோம். அந்தப் பகுதி நீரும் அசுத்தம் ஆகிவிடுகிறது.

கடலில் போகும் எண்ணெய் கப்பல், அமில கப்பல்கள் மோதி உடைவதால் கடல் நீரும் அசுத்தம் ஆகிவிடும் வாய்ப்பும் உருவாகிறது. அந்த கடல் நீர் ஆவியாகி மழையாக பொழியும்போது நச்சுத்தன்மையுடன் பொழியும்.

நிலப்பரப்பில் உள்ள உயிரினங்களும் நீரில் உள்ள மீன்களும் அந்த மழை நீரை அருந்துவதால் பாதிக்கப்படுகிறது. அந்த நிலத்தில் விளைந்த தாவர உணவுகளை, அந்த நீரிலுள்ள மீன்களையும் மனிதர்கள் சாப்பிடும்போது பல நோய்க்கு ஆளாகிறோம்.

மேலும் மனிதக் கழிவு, ஆலைக் கழிவு, உரக்கழிவு இவைகளால் தண்ணீர் மாசுபடுகிறது. இவ்வாறு அசுத்தம் நிறைந்த தண்ணீரை குடிப்பது காலரா, டைபாய்டு, சீதபேதி, வயிற்றுப் புழுக்கள், மஞ்சள் காமாலை, இளம்பிள்ளை வாதம், நரம்பு சிலந்தி, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ காரணமாகிறது.

ஆகவே நாம் குடிக்கும் நீர் சுத்தமாக இருக்க, கழிவுப் பொருள்களை நீர் நிலைகளுக்கு அப்பால், பாதுகாப்பாக வேறு இடத்தில் போட்டு வைக்கவேண்டும்.

கண்ட இடத்தில் சிறுநீர் கழிப்பது மலம் கழிப்பது மாற வேண்டும். எல்லோரும் பாதுகாக்கப்பட்ட கழிவறையை உபயோகிக்க வேண்டும். மகாத்மா காந்தி சொன்னார் : அவரவர் மலத்தை ஒரு குழியில் இட்டு அவரவரே மண்ணை இட்டு மூடி விட வேண்டும். பூனைகள் கூட எவ்வளவு புத்திசாலித்தனமாக அதனுடைய கழிவை ஒரு குழியில் இட்டு மூடுகிறது. இந்த விஷயத்தில் மனிதனைவிட பூனை எவ்வளவோ மேல்!

ருசியற்ற, விஷத்தன்மை உள்ள, நோய்க் கிருமிகள் கலந்த நீரை எவ்வாறு நாம் சுத்த நீராக மாற்றி உபயோகிக்க வேண்டும்? பெரிய அளவில் தொட்டிகள் கட்டி அதில் மணலைப் பரப்பி தண்ணீரை அதில் மெதுவாகப் பாயவிட்டு வடிகட்டி சுத்தமான நீரை பெறலாம். அந்த மணலில் சில பாக்டீரியாக்களும் பாசிகளும் ஏனைய தாவரக் கழிவுகளும் தங்கிவிடும்.

நீரில் கரையாத பொருள்களைப் பிரிக்க கொஞ்சம் படிகாரத் தூளை போட்டால் படிகாரம் அடியில் தங்கிவிடும் மேல் பகுதியில் நல்ல நீர் கிடைக்கும்.

  1. 1000 லிட்டர் நீருக்கு 5 முதல் 10 கிராம்?, 30% பிளீச்சிங் பவுடரை கரைத்து விட வேண்டும்.
  2. 10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் நீத்திய சுண்ணாம்பை போட்டால் சுத்தமான நீர் கிடைக்கும்.
  3. நீரில் உள்ள கலங்கல் தன்மையை மாற்ற தேத்தான் கொட்டையை உரைத்துப் போட்டால் நீர் மேலால் தெளிந்துவிடும். அவற்றை இறுத்திக் கொள்ளலாம்.

(நவீன விஞ்ஞான காலத்தில் ஓசோன் பியூரிபையர் (Purifier) கருவி மூலம் வைரஸ் பாக்டீரியா கிருமிகளை நீக்கி சுத்தமான நீரை பெறலாம்.)

  1. நீரில் உள்ள வைரஸ் கிருமிகளை நீக்க நன்கு காய்ச்சி வடிகட்டி உபயோகிக்க வேண்டும் இதுவே உயர்ந்த முறை.
  2. சித்த மருத்துவப்படி நீரில் துளசி புதினா இலைகளை மூன்று மணி நேரம் போட்டு வைத்திருந்தால் அதில் உள்ள வைரஸ் கிருமிகள் இறந்து விடும். தண்ணீர் சுத்தமாகவும் மணமாகவும் குடிப்பதற்கு சுவையாகவும் இருக்கும்.

விஷம் கலந்த தண்ணீரையோ அல்லது அசுத்தம் கலந்த தண்ணீரையோ நாம் தவறுதலாக குடித்துவிட்டால் உடனே 20 மொச்சையை நன்கு அரைத்து இரண்டு கிளாஸ் தண்ணீரில் கலக்கி குடித்தால் முன்பு குடித்த விஷம் கலந்த நீரை வெளியேற்றிவிடும்.

கோழி முட்டையின் வெண் கருவையும், கடுகை அரைத்தும் தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம்.

எல்லாம் வாந்தி மூலம் வெளியேறிய பின் அவுரி நீலி இலை அல்லது பருத்தி இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு வெற்றிலை சாறு தேன் இவைகளை சாப்பிட வேண்டும்.

ரூபாய் 150 அனுப்பி செலவில்லா சித்த மருத்துவ புத்தகத்தை பெற்று பயனடைவீர்.

மருத்துவர், கே.பி. பால்ராஜ்

 94 87 54 87 03