காலநிலை மாற்றம் என்பது நம் கண் ணெதிரே நிகழ்ந்துகொண்டிருக்கும் பேரபாயமாக மாறியுள்ளது. புவி வெப்ப உயர்வு, கடல் சீற்றங்கள், புயல்கள், காட்டுத்தீ, பெருமழை, வெள்ளப்பெருக்கு, மேகவெடிப்பு என்று மனிதன் ஏற்படுத்தும் சீரழிவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இத்தருணத்தில் சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு ஸ்காட்லாந்தில் க்ளாஸ்கோ நகரில் மிக முக்கிய உச்சிமாநாடு நடைபெறுகிறது.
புவி வெப்ப உயர்வை தொழிற் புரட்சிக்கு முன்பிருந்த நிலையில் 1.5 டிகிரிகளுக்குள் கட்டுப்படுத்தவேண்டும் என்பதே மாநாட்டின் முக்கியக்குறிக்கோள். இதன் மூலம் காலநிலை மாற்றத்தினால் நிகழவிருக்கும் உயிர் பறிக்கும் வெப்பத்தாக்குதல், நீர்த் தட்டுப்பாடு, விளைச்சல் குறைவு, உயிரினங்களின் வாழிட இழப்பு போன்ற பேரழிவை ஏற்படுத்தும் அபாயத்தைத் தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீவிர புயற்காற்றுகள், காட்டுத்தீ, பெருமழை, பேரிடர் அழிவுகள் வரும் நாட்களில் பல மடங்கு நிகழும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மனிதகுலம் ஏற்கனவே 19ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி காலத்தில் இருந்ததை விட பூமியை 1.1 டிகிரிகள் சூடுபடுத்தியுள்ளது. வரும் பத்தாண்டுகளுக்குள் உலகத் தலைவர்கள் துணிச்சலாக முடிவுகள் எதையும் எடுக்காவிட்டால் இன்று உள்ளதைவிட பேரழிவுகள் ஏற்பட்டு பூமி அழியும் அபாயம் உள்ளது என்று அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 20,000 பேர் கலந்து கொள்கின்றனர். உலக நாடுகளின் தலைவர்கள் வெற்றுப் பேச்சுகளை விட்டுவிட்டு பூமியைக் காக்க உருப்படியாக முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பல போராட்ட ஊர்வலங்களை நடத்த சூழல் போராளிகள் திட்டமிட்டுள்ளனர்.
நவம்பர் 6 சூழல் நீதிக்கான நாளாக (Climate Justice day) கடைப்பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாட்டில் அரசுகளை ஆளும் தலைவர்கள் தங்கள் தனிமனித சுயலாபத்தை மனதில் வைத்து பொருளற்ற வீரவசனங்கள் பேசுவதை விட்டுவிட்டு உருப்படியாக முடிவெடுப்பார்களா?
– சிதம்பரம் இரவிச்சந்திரன்


































