


“கீழக்கரை வரலாறு” அண்மையில் வெளிவந்துள்ள ஒரு உள்ளூர் வரலாற்று நூல். ஏற்கனவே 2017ஆம் ஆண்டு “கீழக்கரை நினைவலைகள்” என்ற கட்டுரைத் தொகுதியும் 1980ஆம் ஆண்டு “கீர்த்திமிகு கீழக்கரை” என்ற நூலும் வெளிவந்துள்ள நிலையில் இந்நூல் அந்த வரிசையில் வந்துள்ள மூன்றாவது நூல் எனலாம்.
அண்மைக் காலமாக தமிழ் முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கின்ற ஊர்களிலிருந்து பல உள்ளூர் வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த “காலப் பெட்டகம்” கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்று நூலாகும். அதன் பின்னர், காயல்பட்டினம், முத்துப்பேட்டை, இளையான்குடி, நம்புதாளை, கடையநல்லூர், மேலப்பாளையம், பரங்கிப் பேட்டை ஆகிய ஊர்களில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களின் உள்ளூர் வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன.
கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார முஸ்லிம்களைப் பற்றிக் கூறுகின்ற ஒரு வரலாற்றுத் தொகுதியும் வெளிவந்துள்ளது. முஸ்லிம்களின் வீர, தியாக வரலாற்றை இருட்டடிப்புச் செய்யவும், இந்திய சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், கலை, இலக்கியம், நடை, உடைபாவனைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் இஸ்லாம் ஏற்படுத்திய தாக்கத்தை மறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்தக் கால கட்டத்தில் இது போன்ற உள்ளூர் வரலாற்றைத் தொகுத்து வெளியிடுவது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருக்கின்ற கீழக்கரைக்கு மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பர்யம் உண்டு. பாண்டியர், சோழர், சேர, மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும், அதன் பின்னர் சோனகர், யவனர், ரோமானியர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கிழக்குக் கடற்கரையில் நிலை பெற்றிருந்த போதும், கீழக்கரை மிகச் சிறந்த ஒரு துறைமுகப் பட்டிணமாக விளங்கி வந்துள்ளது.
தற்போதய கீழக்கரை, அன்றைய நாட்களில் அந்துபார், தென்மதுரை, கொற்கை, வருதாபுரி, பவித்திர மாணிக்கப்பட்டினம் ஆகிய பெயர்களில் விளங்கி வந்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். 19ஆம் நூற்றாண்டில், இராமநாதபுரத்தை விடவும் கீழக்கரை மக்கள் தொகை அதிகம் கொண்ட நகராக விளங்கியதாகவும் பார்த்திபனூர் மிகப் பெரிய முத்து வணிகச் சந்தையாக விளங்கியதாகவும் நூலாசிரியர் குறிப்பிடும்போது வியப்பு மேலிடுகிறது.
கீழக்கரை மக்களின் அனைத்து விஷயங்களையும் இந்த நூல் பேசுகிறது. கீழக்கரையில் செய்யப்படுகின்ற சிறப்பு அல்வா “துதல்” தொடங்கி கடற்கரையில் கிடைக்கும் பல்வேறு வகையான மீன்கள், அதன் செய்முறை, ருசி ஆகியன குறித்துப் பேசுகின்ற நூலாசிரியர், 1970ஆம் ஆண்டுகளில் கீழக்கரையில் செயல்பட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களையும் பட்டியலிட்டுள்ளார். கீழக்கரை முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையில் புழக்கத்திலிருந்து வருகின்ற வழக்குச் சொற்களையும் சுருக்கப் பெயர்களையும் தொகுத்திருப்பது நூலுக்கு மேலும் அணி சேர்க்கிறது.
பல இலக்கியச் செல்வர்களையும், சமய ஞானிகளையும், புரவலர்களையும், கல்வியாளர்களையும், தொழிலதிபர்களையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தந்த ஊர் கீழக்கரை.
கீழக்கரை என்றதும் வள்ளல் சீதக்காதியும், இறை நேசர் சதக்கத்துல்லா அப்பாவும் நமது நினைவுக்கு வருவர். முந்தைய மற்றும் தற்போதைய தலை முறையினரில் கல்வியாளரும் தொழிலதிபருமான மர்ஹும் பி.எஸ்.அப்துல் ரஹ்மான், கல்வியாளர் மர்ஹும் செ.மு.ஹமீது அப்துல் காதர், வரலாற்று ஆய்வாளர்கள் பசுங்கதிர் எம்.கே.இ. மௌலானா மற்றும் இத்ரீஸ் மரைக்காயர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் அனைவரைப் பற்றிய விரிவான குறிப்புகளும், இன்னும் கீழக்கரை மக்களின் சமய, சமூக கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்ட பல பெருமக்களைப் பற்றிய தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
34 அத்தியாயங்களைக் கொண்டுள்ள இந்த நூலில் “மேற்கத்திய ஆவணங்களில் கீழக்கரை” என்ற கடைசி அத்தியாயம் பல வரலாற்றுத் தகவல்களை சான்றாதாரங்களுடன் தருகின்றது. உண்மையில் இந்த அத்தியாயம் தான் நூலின் முதல் அத்தியாயமாக வந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அதில் காணப்படும் சில வரலாற்றுத் தகவல்கள் இதோ…
கி.பி.16ம் நூற்றாண்டு தொடங்கி, 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரையிலும் கீழக்கரை முஸ்லிம் மரைக்காயர்கள் முத்து வணிகத்தில் கொடி கட்டிப் பறந்தனர். ஆனாலும் தமிழக கடல் வளத்தைக் கொள்ளையடிக்க வந்த போர்த்துக்கீசியர்கள் கீழக்கரை வணிகர்களுக்குப் பல்வேறு வகைகளிலும் தொல்லைகள் கொடுத்தனர். இதனால் கீழக்கரை மரைக்காயர்கள் அவர்களின் ஆதிக்கத்தைத் தகர்த்திட குஞ்சாலி மரைக்காயரின் உதவியை நாடினர். அவரது மாப்பிள்ளை வீரர்கள் கி.பி.1538ஆம் ஆண்டு கீழக்கரைக்கு வந்து போர்த்துக்கீசியர்களுடன் போரிட்டனர். எனினும் மாப்பிள்ளை வீரர்களால் போர்த்துக் கீசியர்களை வெல்ல முடியவில்லை. நூற்றுக்கணக்கான மாப்பிள்ளை வீரர்கள் இப் போரில் மரணமடைந்தனர். குஞ்சாலி மரைக்காயரின் தம்பி அலீ இப்ராகிம் போரில் படுகாயமுற்று கள்ளிக் கோட்டை செல்லும் வழியில் மரணமுற்றார். இதனால், கிழக்குக் கடற்கரையில் கீழக்கரை மரைக்காயர்களின் வணிகம் வீழ்ச்சியடைந்தது. எனினும் டச்சுக்காரரர்களின் வருகைக்குப் பின்னர், இம்மக்களின் கடல் வணிகம் மெல்ல மெல்ல பழைய நிலைக்குத் திரும்பியது.
கி.பி. 17, 18 நூற்றாண்டுகளில் கீழக்கரை மரைக்காயர்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினர். சீதக்காதி மரைக்காயரின் முன்னோர்கள், சீதக்காதி மரைக்காயர், ஆதம் லெப்பை, வருசை இப்ராகிம், லெப்பை நெய்னா, அவ்வக்காறு மரைக்காயர், மவுலாத் தம்பி, ஹபீப் அரசர், லெப்பை தம்பி மரைக்காயர், அப்துல் காதிர், பட்டத்து சுல்தான் அப்துல் காதிர் மரைக்காயர் ஆகியோர் அன்றைய காலத்து குறிப்பிடத்தக்க கடல் வணிகர்களாவர்.
கீழக்கரையில் மிகப் பெரிய கப்பல் கட்டும் தளம் இருந்தது. கப்பல்களில் ஏற்படுகின்ற பழுதுகளைச் சரி செய்ய இந்த கப்பல் தளத்திற்கு கப்பல் வணிகர்கள் பெருமளவு வந்தனர்.
இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களுடன், கீழக்கரை மரைக்காயர்கள் பெரிதும் நல்லுறவு கொண்டிருந்தனர். டச்சுக்காரர்களுக்கும், இராமநாதபுரம் மன்னர்களுக்கும் பிரச்னைகள் ஏற்பட்ட போதெல்லாம், மரைக்காயர்கள் தலையிட்டுப் பேசி சமாதானத் தீர்வு கண்டனர்.
இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதியின் அமைச்சராகவும், ஆலோசகராகவும் சீதக்காதி மரைக்காயர் இருந்தார். மேலும் மன்னர் சேதுபதியின் அரசவையில் லெப்பை நெய்னா மரைக்காயர், அவ்வக்காறு மரைக்காயர் ஆகியோர் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்தனர். சேதுபதி மன்னர்கள் கீழக்கரை மரைக்காயர்களுக்குப் பல அரசவைப் பட்டங்களை வழங்கி கௌரவித்தனர். மேலும் கீழக்கரையில் பல தொழுகைப் பள்ளிகளுக்கும், தர்காக்களுக்கும் பல நிலக் கொடைகளை வழங்கினார்.
இந்த வரலாற்று நூலின் ஆசிரியர் எஸ்.மஹ்மூது நெய்னா, கீழக்கரையின் பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தில் வந்தவர் என்பது அவரது குறிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் மிகவும் முயன்று சான்றாதாரங்களையும் தகவல்களையும் திரட்டி இந்த நூலை எழுதியுள்ளார். கீழக்கரை முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள் இந்நூலில் பெருமளவு இடம் பெறவில்லை. நூலாசிரியர் அவை குறித்தும் எழுதிட வேண்டும். நூலின் அட்டை வடிவமைப்பிலும், காகிதத்தின் தரத்திலும் அவர் இன்னும் சிறிது கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எனினும் நூலாசிரியரின் முயற்சி பாராட்டிற்குரியது. அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
இந்நூலை “இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை” வெளியிட்டுள்ளது, அதன் முகவரி
“இப்போது” , S.A.அபிராமி கோரல் வியூ,
30, லிங்க் ரோடு, மடுவங்கரை, கிண்டி, சென்னை – 600032, செல்.. 98843 60505
இது போன்ற முஸ்லிம்களின் பல உள்ளூர் வரலாற்ற நூல்கள் வெளிவரவேண்டும் என்பதே நம் பேரவா.




































