



மரியம் ஜமீலா நியூயார்க்கில் 1934 -ம் ஆண்டு, ஜெர்மானிய-யூத பூர்வீகக் குடும்பத்தில் பிறந்த ஓர் அமெரிக்கர். அவரது படிப்பு, முழு மதச்சார்பின்மையான அமெரிக்கப் பொதுப் பள்ளிக்கூடங்களில் அமைந்தது.
புத்திஜீவியாகவும், தாகமடங்காத புத்தகப்பிரியராகவும் இருந்தார்.
தனது பள்ளிக்கூடப் பாடங்களிளுக்கு அப்பால் வாசிப்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டார். பருவம் எய்தியபொழுது அவர் அனைத்துவித கேலிக் கூத்துகளையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு, மிகுந்த கவன உள்ளம் படைத்தவராக மாறினார்.
அவரது முக்கிய ஆர்வப் பாடங்கள்: சமயம், சித்தாந்தம், சரித்திரம், மனிதவியல், சமூகவியல், உளவியல் மற்றும் உயிரியல். அவருக்கு பள்ளிக்கூட மற்றும் உள்ளூர் சமூகப் பொது நூலகங்களும், பிறகு நியூ யார்க் பொது நூலகமும் இரண்டாம் இல்லமாக விளங்கலாயின.
அல்லாமா முஹம்மது அஸதின் இரண்டு நூல்கள் – அவரது சுயசரிதைத் தகவல்கள் அடங்கிய மக்காவுக்குச் செல்லும் பாதை மற்றும் நாற்சந்தியில் இஸ்லாம் ஆகியன – மரியமிற்கு இஸ்லாத்தின் பால் ஆர்வத்தீயை மூட்டியது. பின்னர், முஸ்லிம் நாடுகளில் சில பிரபல முஸ்லிம்களுடன் கடிதத் தொடர்பு கொண்ட பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.
1962 -ம் ஆண்டு மரியம் ஜமீலா பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து, முஹம்மது யூசுஃப் கானை மணந்தார்.
சமூகத் தளத்தில் மேம்படுத்தும் பல புத்தகங்களை பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். அவருடைய அநேக நூல்கள் மேல்நாட்டு நாகரிகத்தின் போலித்தன்மையை அம்பலப்படுத்துகின்றன.
2012 ஆம் மரணமடைந்தார்.
சகோதரி மரியம் ஜமீலா இந்தியாவின் ராம்பூரிலிருந்து வெளிவரும் ‘ஹிஜாப்’ என்ற மாதர் சஞ்சிகைக்கு 1980 களில் அளித்த பேட்டியின் சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.
…..
எத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் இளமைப் பருவத்தைக் கழித்தீர்கள்? அக்காலத்தில் நீங்கள் எத்தகைய கல்வியைப் பெற்றீர்கள்? அக்கல்வி உங்கள் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது?
எனது குழந்தைப் பருவத்தையும், வாலிபப் பருவத்தையும் அநேகமாக ‘லாச்மொன்ட்’ என்ற நியூ யார்க்கின் புறநகரிலேயே கழித்தேன். முழுக்க முழுக்க அமெரிச்கச் சூழலில், யூதக் குடும்பத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். யூதக் குடும்பமாயினும் அமெரிக்க வாழ்க்கை முறையை முற்றிலும் ஏற்றுக் கொண்ட ஒரு குடும்பம். எனினும், எங்களது குடும்பம் ஏனைய அமெரிக்கக் குடும்பங்களைவிட ஒரு விஷயத்தில் வேறுபட்டிருந்தது. அதுதான் நமது குடும்பம் வைத்திருந்த மிக நெருங்கிய பந்தத் தொடர்பாகும். விவாவ விலக்குகளோ, பிரிவினைகளோ எங்களது குடும்பத்தில் இருக்கவில்லை.
எனவே பெற்றோரும் தமக்கிடையேயும், தம் குழந்தைகளுடனும் மிகவும் பாசம் வைத்திருந் தனர். ‘கௌரவமான’ என்ற சொல்லுக்கு எல்லா வகையிலும் பொருந்தக்கூடிய வகையில் எனது குடும்பம் இருந்தது.
குடும்பத்தில் சச்சரவுகள் மிகவும் குறைவாகவே இருந்தன; மோசமான வார்த்தைகள் குடும்பத்தில் ஒருபோதும் பயன்படுத்தப்பட்டது கிடையாது. குடும்பத்தில் நடந்த மிகப் பெரும்பாலான திருமணங்கள் வெற்றிகரமாகவும், சந்தோசமாகவும் அமைந்தன. குடும்பத்தில் குற்றச் செயல்களுக்காக யாரும் தண்டிக்கப்படவுமில்லை; சிறுவர்கள் யாரும் பால்ய குற்றவாளிகளாகவுமில்லை.
நான் சமூகத்தின் பொதுப் பள்ளிக் கூடத்தில் முழுக்கமுழுக்க மதசார்பற்ற அமெரிக்கக் கல்விமுறையில் பயிற்றுவிக்கப்பட்டேன். உயர் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு, எனது பதினெட்டாவது வயதில், நியூயார்க் சர்வ கலாசாலை(University)யில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்னால் படிக்க முடிந்தது. கடுஞ் சுகவீனம் காரணமாகப் படிப்பை இடைநிறுத்த வேண்டியேற்பட்டது. நான் படித்த பாடசாலைகள் சிறந்தவையாகக் கருதப்பட்டன; சுல்வி நிலை உயர்ந்ததாக இருந்தது; போதனா முறை மிகவும் பயன்தரக்கூடியதாகவும், கட்டுப்பாடு நியாயமான அளவு சிறந்ததாகவும் இருந்தது. எனினும். பாடத் திட்டத்தில் எத்தகைய சமயக் கல்வியும் சேர்க்கப்பட வில்லை.
நான் மொழிகள், இலக்கியம், வரலாறு, விஞ்ஞானம், கணிதம், கலைகள் பல படித்தேன். ஆனால், இறைவனைப் பற்றி எதுவுமே படிக்க வில்லை. எனினும் வீட்டில் கிடைத்த ஊக்குவிப்பும், எனது அறிவார்வமும், உயர்ந்த ஆன்மிக அறிவுத் தாகமும் பள்ளிக்கூடப் பாட நூல்களுக்கும் மேலாக என்னை அநேக நூல்களை வாசிக்கத் தூண்டின.
அல்லாஹ்வின் அருளால், இஸ்லாத்தைப் பற்றி ஓரளவாவது நான் பெற்ற அறிவும் முழுக்க முழுக்க எனது சொந்த முயற்சியினாலேயே பெறப்பட்டது.
உங்கள் பிற்கால வாழ்க்கையை உங்கள் சூழல் எவ்வாறு பாதித்தது? எந்த அளவுக்குப் பாதித்தது?
உண்மையைக் கூறுவதாயின், நான் வாழ்ந்த சூழலில் முழுக்க முழுக்கச் சிக்கியிருந்த போதிலும், ஒருபோதும் அதில் நான் சங்கமமாகிவிடவில்லை. உலகின் பல பாகங்களிலுமுள்ள ஏனைய கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் பற்றி நான் பரவலாக வாசித்ததன் பயனாக, என்னுடைய சொந்த கலாசாரத்தை நான் விமர்சன அடிப் படையிலேயே எப்போதும் நோக்கினேன். நான் மேலோட்டமான சிந்தனை, நயவஞ்சகத் தன்மை, பகட்டுத் தன்மை ஆகியவற்றை வெறுத் தொதுக்கி, உயர் ஆன்மிகக் கருத்துகளின் சிந்தனையால் ஏற்படுகின்ற எளிமையையும் அமைதியையும் வேண்டி நின்றேன்.
மதுபான வகைகளையோ போதை வஸ்துகளையோ நான் என்றுமே ஆசித்ததில்லை. எதிர்பாலாருடன் திருமணத்திற்கு முன் நெருங்கிப் பழகுவதை வெறுத்தொதுக்கினேன். நான் தனிமையிலிருந்தாலும், சந்தோசமாக இருக்கக்கூடிய போதிய ஆன்மபலம் என்னிடமிருந்தபடியால், அநேகமாக நவீன இளைய தலைமுறையினர் போன்று பொழுது போக்கிற்காகவும், இன்பத்திற்காகவும் சினிமா, வானொலி, டெலிவிசன், நாடக அரங்கு, நடனக் கச்சேரிகள் போன்றவற்றை நம்பியிருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
உங்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற மறக்க முடியாத சம்பவங்கள் ஏதும் உண்டா?
எனது வாழ்க்கையில் மறக்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி, எனது பத்தொன்பதாம் வயதில் அதாவது 1953ல் எனக்கேற்பட்ட நோயும், அத்தோடு நான் திருக்குர்ஆனை இனங்கண்டு கொண்டதுமாகும்.
இந்நிகழ்ச்சி, எனது கண்களை ஆன்மீக உண்மையின் பால் திறந்துவிட்டது. இன்றைய மருத்துவ அடிப்படையில் குணப்படுத்த முடியாததெனக் கருதப்பட்ட எனது நோயும், அதே நேரத்தில் குர்ஆனை நான் அறிந்து கொண்டதுமான நிகழ்ச்சியும் எனக்கு என்றுமே மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்றுத் தந்தது. இந்த உலகில் பரிபூரணத்துவம் வாய்ந்தது என்று கருதக்கூடியது ஒன்றுமில்லையென்பதும், ‘வெற்றி’ என்று கருதப்படுபவை யாவும் மரணத் தோடு முடிவடையும் ஒரு மாயை என்பதுமே அப்பாடமாகும்.
மனிதனுக்குள்ள ஒரே நம்பிக்கை இறைவன்பால் உள்ளதுதான். நோய் போன்றவற்றால் துன்பமுறுபவன் இறைவனிடம், கருணைக்காக இறைஞ்சுவதையும், செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி மன்றாடுவதையும், நல்ல ஆத்மாக்களுடன் சேர்த்து எம்மையும் ‘ஜன்னத்’தில் சேர்க்கும்படி கேட்பதையும் விடச் சிறந்தது வேறேதுமில்லை. குர்ஆன் கூறுவது போன்று, “நிச்சயமாக அல்லாஹ்வின் ஞாபகத்தி(நினைவி)ல்தான் நெஞ்சங்கள் அமைதி யடைகின்றன.”
பர்தா அணிவதால் அல்லது அணியாமலிருப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை நீங்கள் எவ்வாறு தீர்த்துக் கொண்டீர்கள்?
நான் 1961ல் அமெரிக்காவில் இஸ்லாத்தைத் தழுவியதும் என்னால் இயன்றளவு எளிமையாகவும், ஒழுங்காகவும் உடையணிய முயற்சி செய்தேன்:
தேவையற்ற ஆபரணங்கள், உதட்டுச் சாயம், ஏனைய அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை உபயோகிப்பதை நிறுத்திக் கொண்டதுமல்லாமல், அந்நிய ஆடவருடன் கலந்துறவாடுவதையும் நிறுத்திக் கொண்டேன். எனினும், என்னால் அங்கு முழுமையாகப் பர்தா முறையை அனுஷ்டிக்க முடியவில்லை. எதிர்பாலாருடன் இஸ்லாம் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபடவும், அவர்களுடன் தொழில் தொடர்புகள் வைத்துக்கொள்ளவும் செய்தேன்.
முழுமையான பர்தா முறையை பாகிஸ்தானுக்கு வந்த பின்னர்தான் நடைமுறைப்படுத்தினேன். தற்போது வெளியே செல்ல நேரும் போதெல்லாம் நான் பர்தாவுடன் தான் செல்கின்றேன். வீட் டுக்கு வெளியே பர்தா இன்றிச் செல்வது நிர்வாணமாகச் செல்வதற்குச் சமம் என உணர்கின்றேன்.
எங்களுடைய வீட்டில் வேலையாட்கள் இல்லாததால் கடைத்தெருவுக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கி வரவும், அருகிலுள்ள சிநேகிதர்களைக் காணவும் அடிக்கடி வெளியே செல்வதுண்டு.
பர்தா முறையில் மிகவும் உறுதியான நம்பிக்கையுடையவள் நான். ஏனைய மதங்களைவிட இஸ்லாத்தை உயர்வாகக் காட்டும் ஓர் அம்சம் என்ன வென்றால், அது மானக்கேடான காரியங்களை விலக்குவதோடு மட்டும் நில்லாமல், அத்தகைய மானக்கேடான காரியங்கள் பால் இட்டுச் செல்லக்கூடிய எல்லா வழிகளையும் அடைத்தும் விடுகின்றது.
ஆண்-பெண் உறவு முறையில் விதித்துள்ள கட்டுப்பாடும், ஒழுங்காக உடையணிவதில் காட்டும் கரிசனையும் இஸ்லாமிய கலாசாரம், ஒழுக்கக் கட்டுக்கோப்பு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பதில் முக்கியமானவை.
அதே நேரத்தில், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பர்தா, பாரம்பரியக் குடும்பங்களில் மிகவும் கடுமையாக அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் இது சில சமங்களில் ஷரீஅத் வேண்டி நிற்கும் கட்டுப்பாடுகளையும் விட மிகமிகக் கடுமையானவை என்பதையும் நாம் மறத்தலாகாது.
பெருமானார் (ஸல்) அவர்கள், பெண் ஒழுங்காக உடையணிந்து சென்று தம் அலுவல்களைக் கவனிப்பதற்கு மிகவும் தெளிவாக அனுமதியளித்திருக்கின்றார்கள். பெண்கள் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காகச் செல்வதை ஹதீஸ் அனுமதிக்கின்றது. எனினும், அவர்கள் • வீட்டில் தொழுவதுதான் ஏற்புடையது. தமது வீட்டுக் கடமைகளைச் செவ்வனே முடித்துவிட்டு, வெளியே தம் நண்பர்களைக் காணச் செல்வதையோ. விருந்துகளில் கலந்துகொள்வதையோ ஷரீஅத் விலக்கவில்லை.
இப்போது எவ்வாறு வாழ்வைக் கழிக்கின்றீர்கள்? அதில் திருப்தி காண்கின்றீர்களா?
என்னுடைய நேரத்தை எழுதுவதிலும், வாசிப்பதிலும், எனது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதிலும், வீட்டுப்பணிகளில் ஈடுபடுவதிலுமே செலவழிக்கின்றேன். அநேகமான வானொலி நிகழ்ச்சிகள் கீழ்த் தரமானவையாகவும், நேரத்தை வீணாக்குபவையாகவும் இருப்பதால் அவற்றை வெறுத்தொதுக்குகின்றேன்.
நான் பாகிஸ்தானில் வசிக்கும் இவ்வளவு காலத்திலும், ஒரு நாள் கூட சினிமாவுக்குப் போனது கிடையாது. பொழுது போக்கு என்ற பெயரில் நடைபெறும் இந்தத் தரங்கெட்ட நிகழ்ச்சியில் பங்குகொள்ள எனக்கு ஆசையுமில்லை.
உயிர்த்துடிப்பும், குறும் புத்தனமுமுள்ள சுகதேகிகளான மூன்று குழந்தைகள் தாயை இருபத்தி நான்கு மணி நேரமும் பொழுதுபோக்குவிக்கவும், மகிழ்விக்கவும் போதுமானவர்கள் என்பது எனது கருத்து. இதற்கும் மேலாகச் சிறிது வேடிக்கை வேண்டுமென்றால், ஒன்பது வயதான கிளிப்பிள்ளையொன்று என்னிடமுள்ளது; இதைக் கடந்த எட்டு வருடங்களாக நான் வளர்த்து வருகின்றேன்.
எனக்கேற்பட்ட பெருநோயின் பின்னரும் எனது கணவருடனும், குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக வாழவும், என்னுடைய மார்க்கத்திற்காக எழுத்துத் துறையில் ஈடுபடவும் எனக்கு உதவியளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நான் என்றும் நன்றியுடையவளாவேன்.
ஒரு மனைவியைப் பொறுத்தமட் டில் அவளோடு திருப்தியடைந்து வாழும் ஒரு கணவனைப் பெற்றிருத்தல் போன்று வேறொன்றுமில்லை.
ஒருவரது வாழ்வின் பணிகளை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் என்ற திருப்தியுடன் மரணிப்பதுதான் வாழ்வின் உயர் இலட்சியமாக அமைதல் வேண்டும். இதை வேண்டியே நான் அல்லும் பகலும் அவனைப் பிரார்த்திக்கின்றேன்.
உங்களது குழந்தைகளுக்கு எத்தகைய கல்வியை அளிக்கின்றீர்கள்? அக்கல்வி முறை குழந்தைகளின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றிக் கூற முடியுமா?
எனது குழந்தைகளின் கல்வியும், அவர்கள் மீது அதன் எதிர்காலப் பாதிப்பும் பற்றியே நான் அதிகம் சிந்திக்கின்றேன். அதுபற்றியே நான் ஆழ்ந்த கவலையும் கொண்டிருக்கின்றேன். அவர்கள் கல்வி பயிலும் உருது மொழிப் பள்ளிக்கூடங்கள் பற்றியோ, ஆங்கிலமொழிப் பள்ளிக்கூடங்களைப் பற்றியோ எனக்குப் பூரண திருப்தி கிடையாது. இவையிரண்டும் போதிய தரமற்றவையாகவும், மதசார்பற்ற கல்வி முறையைக் கொண்டதாகவும் இருக்கின்றன. நான் என்ன கருத்துக்களைப் போதனை மூலமும், எனது நடத்தை மூலமும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க விரும்புகின்றேனோ அவற்றுக்கு நேர்முரணாகவே கல்வி முறை அமைந்திருக்கின்றது.
இங்கு (பாகிஸ்தானில்) இன்றைய தேவைகளுக்கேற்ப நவீன கல்வியுடன் இஸ்லாத்தையும் போதிக்கக்கூடிய பாடசாலைகள் மிகவும் சொற்பமே இருக்கின்றன, என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாகவே இருக்கின்றது. எனது கணவர் ஜமாஅதே இஸ்லாமியின் முழுநேர ஊழியராக இருப்பதாலும், இரவு பகலாக அவரது சேவை அதற்குத் தேவைப்படுவதாலும், குழந்தைகளின் போதனையும் பயிற்சியும் என் பொறுப்பிலேயே உள்ளன.
இப்பொறுப்பைச் செல்வனே நிறைவேற்ற அல்லாஹ் எனக்குத் தேவையான சக்தியை அளிப்பானாக!
‘இன்றுள்ள கல்விமுறையின் பாதிப்பிலிருந்து அவனே எமது குழந்தைகளையும் காப்பானாக!
உங்களது முஸ்லிம் சகோதரிகளுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
அவசியமாகவும், அவசரமாகவும் உள்ள தற்போதைய தேவை என்ன வென்றால், அறிவுக்கூர்மையும், தகுதியும், உணர்ச்சித் துடிப்புமுள்ள, உளப் பரிசுத்தத்துடன் செயல்படக்கூடிய சகோதரிகள் ஒன்றுகூடி, மாதர்களுக்கான ஓர் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அத்தோடு தமது பெண் பிள்ளைகளையும் அதில் சேர்ந்துழைக்கப் பழக்க வேண்டும். தம் பிள்ளைகளுக்கு உருப்படியான இஸ்லாமிய பயிற்சியளித்து, வீட்டுக்கு வெளியேயுள்ள இஸ்லாமிய எதிர்ப்புச் சக்திகளின் தாக்கத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது தனிப்பட்ட தாய்மார்களால் மட்டும் முடிந்த காரியமன்று; இதற்கு கூட்டு முயற்சி கட்டாயமாகத் தேவைப்படுகின்றது.
ஓர் இஸ்லாமிய மறுமலர்ச்சியை வேண்டி நிற்கும் ஒவ்வோர் இஸ்லாமியத் தாயும் தம் பிள்ளைகளை இத்தகையதோர் அமைப்பில் சேர்ப்பதைத் தம் முதல் கடமையாகக் கொள்ள வேண்டும். நாம் என்னென்ன கருத்துக்களை உயிரினும் மேலாக மதிக்கின்றோமோ, அவையாவற்றிற்கும் எதிராகக் கலகம் செய்யும் மனப்பாங்கைத்தான் பள்ளிக்கூடத்திலும் வீட்டுக்கு வெளியேயும் நமது பிள்ளைகள் பெறுகின்றனர். இந்நிலையில், இஸ்லாத்தின் மீது அன்புள்ளவர்களாக அவர்கள் எவ்வாறு வளர்வார்கள்?
இக்காரியத்தைச் சாதிப்பதில் நின்றும் தப்பித்துக் கொள்ள வீட்டுவேலை, நேரமின்மை போன்று சாக்குப்போக்குகளைக் நாம் கூறிக்கொகொண்டே இருப்போமானால், நமது குழந்தைகள் வளர்ச்சியடையும் போது அவர்களுடைய முழு கவனமும் நவீன மோஸ்தர்களிலும், சினிமா, பாப் பாடகர்கள், ஆபாசப் பொழுதுச்போக்குகள், வீண் விளையாட்டுக்களிலும்தான் செல்லுமே தவிர. இஸ்லாத்தின் பக்கமல்ல என்பதை நாம் உணரவேண்டும்.
இவற்றில் நமது குழந்தைகள் பிரியம் வைக்கக் காரணம், அவர்கள் அடிப்படையிலேயே மோசமானவர்கள் என்பதால் அல்ல; நாம் உருப்படியானவற்றைக் கற்றுக் கொடுக்காவிட்டால் அவர்களுடைய சூழல் இவற்றைத்தான் கற்றுக் கொடுக்கும்.
இத்தகைய தீமைகளை ஒழித்துக்கட்ட வேண்டுமானால், உண்மையாகவே இஸ்லாமிய மறுமலர்ச்சியை வேண்டி நிற்கும் சகோதரிகள் ஒன்றுகூடி, நமது குழந்தைகளுக்கு குர்ஆனையும், பெருமானார் (ஸல்) அவர்களின் ஸுன்னாவையும், நமது பாரம்பரிய வரலாறுகளையும், அரபு மொழியின் அடிப்படைகளையாவது போதிப்பதற்கான வழி வகைகளை அமைக்க வேண்டும். மேலும், இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்றும் முறைகளை – வுழு, தொழுகை ஆகியவற்றின் ஒழுங்குகள் போன்றவற்றை சம்பிரதாயப்பூர்வமாக் மட்டுமன்றி, அவற்றில் ஆர்வமும், ஆசையும் ஏற்படும் வகையிலும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இத்தகைய பயிற்சி முறைகளுக்குப் பெரிய செலவினங்களொன்றும் ஏற்பட்டுவிடாது. இதற்கான பாடப் புத்தகங்களைப் பெற்று, வீடுகளிலேயே வகுப்புகளை நடத்தலாம். தேவைப்படுவதெல்லாம் சிறந்த இயக்க அமைப்பும், நேரமும், உற்சாகமுமாகும். எத்தனையோ தாய்மார்கள் பக்தி சிரத்தையுடன் தொழுகையை நிறைவேற்றி, ஏனைய கடமை களையும் செய்கின்றனர். ஆனால், தம் பிள்ளைகளுக்கு அவற்றை முறையாகக் கற்றுக் கொடுப்பதில்லை. பக்தி சிரத்தையுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் செய்யும் பெரும் தவறு அவர்கள் குர்ஆனை ஓதுவதை வெறுமனே ஒரு சடங்காகச் செய்து வருகின்றார்களே தவிர, அதன் கருத்தை விளங்கி தமது வாழ்வில் பின்பற்றும் ஒன்றாகக் கருதுவதில்லை. முஸ்லிம்கள் குர்ஆனை விளங்கி, அதனை செயலிலும் கொண்டு வருவார்களானால் இவ்வுலகம் இதுவரை காணாத மாபெரும் புரட்சியொன்றைக் காணுமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
(தமிழில்: ‘முஹாஜிர்’)
நன்றி : இஸ்லாமிய சிந்தனை



































