


புல், பூண்டு செடி கொடி மரம் என பல பரிணாமங்களை படம் பிடித்து காட்டும் தாவர இனம் ஏக இறைவனின் படைப்பாற்றலை உலகத்திற்கு உரக்க சொல்ல ஓங்கி வளர்ந்து நிற்கின்ற ஒரு அதிசய உயிரினமாகும்.
மனித சமூகம் மட்டுமின்றி அனைத்து வகை உயிரினங்கள் வாழ்வதற்கும் ,
தனது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் தாவர இனம் இன்றியமையாத ஒரு சக்தியாகவே திகழ்கின்றது.
புல் பூண்டு, செடி, கொடி, மரம் என்ற தாவர இனம் இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது.
உயிரினங்கள் என்பது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு, தானே நகரும் என்றில்லாமல் நகராமல் ஒரே இடத்திலும் இருக்கவும் செய்கின்றன. அவ்வாறு நகராமல் இருப்பதால் தாவரங்களுக்கு நிலைத்திணை என்ற தாவரவியல் பெயரும் உண்டு.
சுமார் 350,000 வகை தாவரங்கள் உலகில் உள்ளதாக தாவரவியல் வல்லுநர்களால், மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாவும் சொல்கின்றனர்.
சுவாசிக்கும் காற்று முதல் உண்ணுகின்ற உணவு வரை எழுதுகின்ற பென்சில் முதல் பாதுகாக்கும் காகிதம் வரை எல்லாமே தாவர இனத்தின் தொடர்பான மரத்தின் அன்பளிப்பே.
நாம் சுவாசிக்கும் காற்று என்ற ஆக்ஸிஜன் நமது உடலுக்குள் சென்று உள்ளே இருக்கும் ஒவ்வொரு செல்லுக்கும் உயிர் குடுக்கின்றது என்பதை ஆன்மீகம் பேசுபவர்கள் மட்டும் இல்லை நாத்திகம் பேசுபவரும் நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர்.
இறைவன் தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் : ‘ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம். உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம்’ என்று கூறுகிறான். (குர்ஆன் 15:19,20)
இந்த வசனம் சொல்லும் செய்திகளை நாம் ஆராய்ந்து சிந்தித்து பார்த்தால் தாவரங்களின் வழியாக இறைவனின் மகத்துவம் புரியும்.
உலகில் வாழும் ஜீவராசிகளுக்கு சுவாசிக்கும் தூய காற்றான ஆக்சிஜன் என்பது
தாவரங்களில் ஏற்படும் ஒளிச் சேர்க்கையின் போது தான் உண்டாகிறது
ஒளி சேர்க்கை என்பது பசுமையான இலைகளில் இருக்கின்ற பச்சையம், சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, மற்றும் நீர் இவற்றைக் கொண்டு உண்டாகும் ஸ்டார்ச்
என்னும் தாவர இனத்தின் ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்வின் போது தான் அனைவரும் சுவாசிக்கும் தூய காற்று வெளிபடுகின்றது.
போர்களில் மிகவும் ஆபத்தானது இயற்கை வளங்களை-தாவரங்களை அழிப்பதாகும். இறைவனின் கொடையான தாவர இனத்தை அழித்தாலே மனித இனம் பேரழிவை சந்திக்கும்.
தாவரங்கள் பல விதமாக நமக்கு பயன் அளிக்கிறது. அழகு மலர்கள், அதிசய காய்கள் இனிய கனிகள் அற்புத மூலிகைகள் எனவும், வெயிலுக்கு நிழலாக இதமான தென்றலின் குளிர்ச்சியாக, புத்தெளிச்சி தரும் மழைத் தேக்கியாகவும், காய்ந்த சருகுகளால் மண்ணுக்கு உரமாகவும், அபூர்வ மூலிகையாகவும், மருத்துவ எண்ணெய்களாகவும் இப்படி பலதை பட்டியலிட்டுக் கொண்டே செல்லாம்
நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை தாவரங்கள் தான் தருகிறது. புவி வெப்பமடையும் விளைவில் இருந்து உலகையும் அது காப்பாற்றுகிறது. பலமான வேரோக இருந்து, மண் அரிப்பைத் தடுத்து நிலச்சரிவுகளையும் தடுக்கிறது. மரங்களை சுற்றி நீர் சேகரமாவதால், உலகில் நிலத்தடி நீர் அதிகரிக்கவும் காரணம் ஆகிறது.
ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகாலம் பூமியில் இருந்தால் அது சுமார் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள சுத்தமான காற்றை நாம் சுவாசிக்கத் தருகிறது. அந்த மரம் சுமார் ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவை பல விதங்களில் தனது வாழ்நாளில் தருகிறது.
சுமார் ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது. தன் வாழ்நாளில் கார்பன் டை ஆக்சைடின் அளவை பல கிலோ அளவிற்கு உள் வாங்கி கொண்டு தூய காற்றை தருகிறது.
வானங்களையும் பூமியையும் இந்த இரண்டுக்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்க்காக நாம் படைக்கவில்லை. என திருக்குர்ஆனில் (44: 38.மற்றும் 21:16) இறைவன் சொல்கிறான்.
மரங்கள், நிறைந்த காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகளை நாம் சிந்தித்து ஆய்வு செய்ய வேண்டும். கோடையில் வீசும் அனல் காற்றால் நிலம் வறண்டு மேல் மண் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்தி விடுகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமலும் தடுக்கப்படுகிறது.
புயலின் போது ஏற்படும் சேதங்களை கட்டுப்படுத்தி புயலின் வேகத்தையும் அதனால் உண்டாகும் சேதங்களையும் மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் மரங்கள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் கடல் அலையின் வேகத்தையும் அது கட்டுப்படுததுகிறது.
இவைகள் மட்டும் என்று இல்லாமல் உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பிறகும் உலகிற்கு பெரும் நன்மைகளையே தாவரங்கள் தருகின்றன. வீடுகளில் விறகாக-எரிப்பொருளாக, பலகைகளாக, கதவு, ஜன்னலாக, கட்டுமானப் பொருட்களாக, அலங்காரப் பொருட்கள் போன்ற எண்ணற்ற அழகு பொருட்க்களாக மரங்கள் நமக்கு பயனளித்துக் கொண்டே இருக்கிறது.
இப்படி நேரடியாகவும் மறைமுகமாக தாவரங்களும் மரங்களும் எல்லோருக்கும் பயன் அளித்து வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான். உணவாக மட்டுமே தாவரங்கள் பயன் அளிக்கிறது என்று அதனுடைய அற்புதத்தை சுருக்கி விட முடியாது.
எல்லா உயிரினங்களுக்கும் உயிராதாரமாகவும், உணவாகவும் திகழ்கின்ற இந்தத் தாவர இனம் தனது உணவுக்கு என்ன செய்கின்றது? என்று நாம் சிந்தித்தால் இறைவனின் அற்புதத்தை எல்லோரும் உணரலாம்.
மற்ற அனைத்தும் இந்தத் தாவர இனத்தைச் சார்ந்து வாழுகின்ற பொழுது செடி, கொடி, மரங்கள் தன்னைச் சார்ந்த தனது உணவையே எடுத்துக் கொள்கிறது.
தாவர இனம் விடுகின்ற சுத்தமான காற்று ஆக்ஸிஜனை நாம் உள்வாங்கி நாம் வெளியே விடுகின்ற கார்பன் டை ஆக்ஸைடு என்னும் கெட்ட காற்றை தாவரங்கள் தனது உணவாக எடுத்துக் கொள்கின்றது என்றால் எவ்வளவு ஆச்சிரியம்.
இப்படி எல்லா விதத்திலும் பயன் அளிக்கின்ற தாவரங்களை பற்றியும்
மரங்கள் பற்றியும் அறிவதன் வழியாக அதனைப் படைத்த ஏக இறைவனின் ஆற்றலை. அவனின் கருணைகளை அறிந்து கொள்வோம். இதை அறியாத மக்களிடம் படைத்தவனின் ஆற்றலை எடுத்துச் சொல்லி படைத்தவனை வணங்கக்கூடிய மக்களாக அழைப்பு விடுகின்ற அழைப்பாளராகவும் நாம் செயல்பட வேண்டும்.
இன்ஷாஅல்லாஹ்… முயற்சி செய்வோம். அழைப்பு பணியை இனிமேலாவது செய்வோம்…



































