1991 வரை 94% அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளே இருந்தது. இன்று தனியார் பள்ளிகள் பல்கிப்பெருகி தனியார் பள்ளிகளே தரமானது என்று கருத்துருவாக்கத்தின் பின்னுள்ள காரணிகள் என்ன?
ஒரு மிகப்பெரிய சந்தையின் லாப வெறிதான் இதற்கு முக்கியமான காரணம். கற்றல் செயல்பாடு காலம் காலமாக மனிதர்களிடம் இயல்பாகவே இருக்கக்கூடிய ஒன்று. பள்ளி, கல்லூரி என்ற ஒரு அமைப்பு உருவாவதற்கு முன்பாகவே கற்றல் செயல்பாடு நிகழ்ந்திருக்கிறது.
நெருப்பின் ஆற்றலை மனிதர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள்? உருளியை எப்படி கண்டுபிடித்தார்கள்? உருளை தான் பானை முதற்கொண்டு வாகனங்கள் உட்பட பல பொருள்கள் உருவாக காரணமாக இருந்தது. இவைகள் கண்டுபிடிக்கப்பட்ட போது பள்ளிகள் எங்கே இருந்தன? கல்லூரிகள் எங்கே இருந்தன?
அதைவிட முக்கியமாக மண்ணிலிருந்து உலோகத்தை பிரித்தெடுப்பதைக் கற்றுக்கொண்டார்கள். இன்று அது மெட்டலர்ஜி – Metallurgy என்றழைக்கப்படுகிறது. வேதியல் என்பதை ஒரு துறையாக படிக்கிறோம். ஆதி மனிதர்களின் பயன்பாட்டில் அதுவும் இருந்தது.
மண் என்பது வெறும் மண்ணல்ல! என்று அன்றைக்கே மனிதன் கற்றுக்கொண்டான். மண்ணுக்குள் பல்வேறு பொருள்கள் இருக்கின்றன. மண்ணிலிருந்து பல பொருட்களை பிரித்து எடுக்கலாம்.
எப்படி பிரித்து எடுத்தால் ஒவ்வொரு பொருளுடைய தன்மைக்கும் தகுந்தவாறு பல்வேறு பயன்பாட்டிற்கு அதை உருவாக்கலாம் என்ற கற்றல் அன்றே நடந்தது. அதன் வழியாக மனித சமூகம் வளர்ந்தது. இந்த வளர்ச்சி கற்றல் செயல்பாட்டின் அடிப்படையில் தான் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.
வரி வடிவங்கள் மற்றும் எழுத்துக்கள் வந்ததற்குப் பிறகுதான் பள்ளிக்கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு முன்பாகவும் கற்றல் என்ற செயல்பாடு இருந்திருக்கிறது என்றாலும் அதுவரை உரையாடல் ரீதியாக அறிவு வளர்ந்து கொண்டிருந்தது.
எழுத்து வந்ததற்குப் பிறகு அறிவு பதிவு செய்யப்படும் முறை உருவானது. ஆயிரம் ஆண்டுகளின் நிகழ்வுகள், வரலாறு, அறிவியல் விசயங்கள் இவையெல்லாம் ஒரு புத்தகத்தில் தொகுத்து வைக்க முடியும்.
ஒரு நூலை வாசிக்கின்ற போது மனிதர்களால் ஆயிரம் ஆண்டு வரலாற்று நிகழ்வுகளை, அறிவியலை புரிந்து கொள்ள முடியும். இந்த சூழலில்தான் எழுத்தை கற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அன்று முதல் எழுத்தின் மூலமாக கற்றல் செயல்பாடு தொடங்குகிறது. முதலில் எழுத கற்றுக் கொண்டவர் எழுத்தைக் கற்றுக் கொள்ளாத மற்றவர்களுக்கு எழுத்தை கற்பித்தார். ஆரம்ப காலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்த ஒருவர் மற்றவர்களுக்கு அதைக் கற்றுக் கொடுப்பது “தானமாகத்தான்” இருந்திருக்கிறது.
உலகத்தின் எந்தப் பகுதியில் எந்த மொழியில் எடுத்துக் கொண்டாலும் அறிவை ஒருவருக்கொருவர் பகிர்ந்திருக்கிறார்கள்.
கற்பித்தல் செயல்பாட்டை ஆதி மனிதர்கள் தானமாக செய்திருக்கிறார்களே தவிர, வியாபாரமாகச் செய்யவில்லை.
எழுத்தின் காரணமாக கற்றல் செயல்பாடு நிறுவனமயமாக்கபட்டு பள்ளிகள் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. பெரும் பெரும் செல்வந்தர்கள் தங்களுடைய சொத்துக்களை பள்ளிக்கூடம் திறப்பதற்கு, கல்லூரிகள் திறப்பதற்கு வழங்கினார்கள்.
பள்ளிக்கூடம் நடத்தி கல்விச்சாலைகள் நடத்தி அதன் வழியாக வரும் வருமானத்தை வைத்து தான் வாழ வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை இது உலகத்தின் பல பகுதிகளில் நடந்திருக்கிறது. இந்தியாவிலும் இது தான் நடந்தது.
சமய, சமூக வேறுபாடில்லாமல் எல்லோரும் இந்தப் பணியைச் செய்திருக்கிறார்கள். கல்வி நிலையங்களும் எல்லோருக்குமானதாக இருந்திருக்கின்றன.
தன்னிடமிருந்த கூடுதலான பணத்தைக் கொண்டு கல்வியை தொண்டாக, ஒரு பொதுச் சொத்தாகத் தான் சமூகம் வரலாறு முழுவதும் பார்த்து வந்திருக்கிறது
1980களில் தொழிலை, வணிகத்தை ஏன் அரசாங்கம் செய்ய வேண்டும்? தனியார்களே செய்யட்டும் என்கிற தாராளமய, தனியார்மயக் கொள்கை என்ற புதிய கோட்பாட்டுத் தாக்கம் உலகம் முழுக்க ஏற்படுகிறது. 1980 களிலேயே இந்தியாவிலும் அது எதிரொலித்தது.
80களில் உருவான இந்தக் கொள்கை 90 களுக்குப் பின்னால் வீரியம் பெற்றது. ஏனென்றால் 1991இல்தான் உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது. அது வரை, உற்பத்தியான பண்டங்கக்கு மட்டும் தான் ஒப்பந்தம் என்ற நிலை மாறி, கல்வி மருத்துவம் போன்ற சேவைத் துறைகளிலும் ஒப்பந்தம் போடத் தொடங்கினார்கள். எந்த நாடும் எந்த நாட்டோடும் வணிக மற்றும் தொழில் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளலாம் என்பதைத் தாண்டி யார் வேண்டுமானாலும் எந்த நாட்டில் வேண்டுமானாலும் பள்ளிக் கூடம் திறக்கலாம் கல்லூரிகள் திறக்கலாம், மருத்துவமனைகள் திறக்கலாம் மருத்துவ ஆராய்ச்சிகள் நடத்தலாம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்.
அதற்கு பின், கல்விக்கூடங்களை நாங்கள் திறக்கிறோம் எங்களுக்கு அனுமதி தாருங்கள் என்று உலகத்தில் இருந்த பெரும் பணக்காரர்கள் முதலாளிகள் மற்ற நாடுகளை நிர்ப்பந்திக்க ஆரம்பிக்கிறார்கள். பள்ளிக்கூடம் என்பது எந்த விதமான பெரும் முதலீடும் இல்லாமல் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஒரு கருத்தியல் அப்போது உருவானது.
தனியார் பள்ளிகளில் தொடக்கம் முதலே 100 சதவீத மதிப்பெண் எடுப்பதற்கே பயிற்சி கொடுக்கிறார்கள். இதைப் படித்தால் போதும், இந்த அளவு படித்தால் போதும், இதை திரும்பத் திரும்ப படி, இதை திரும்பத் திரும்ப எழுதிப் பார் என்பதுதான் தனியார் பள்ளிகளின் நடைமுறை. இதற்குப் பெயர் கற்றல் செயல்பாடா?
இளநீர் போன்றது அரசுப் பள்ளி. குளிர்பானம் போன்றது தனியார் பள்ளி. அரசுப் பள்ளியை குளிர்பானம் போன்று மாற்ற முயற்சி செய்தார்கள். அந்தப் போட்டியில் தான் அரசு பின்னடைவை சந்தித்தது. இதற்கு அரசின் தவறான கல்விக் கொள்கை, பள்ளி நடத்தும் பொறுப்பில் இருந்து 1980 களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டது. மட்டுமல்ல அரசே தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்தியதும் காரணம்.
எனவே மக்கள் அரசுக்கு வரி கட்டுவதோடு தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணத்தையும் கட்ட வேண்டும் என்ற சூழலை பொதுப்புத்தியில் ஏற்றினார்கள்.
அரசமைப்புச் சட்டம், சமூக வளர்ச்சியில் கல்வியின் பங்கு, கல்வி தருவதில் அரசாங்கத்தின் பங்காளிப்பு போன்றவை சரியான புரிதல் இல்லாத காலத்தில் உருவான நிலை என்பதால் மக்களும் அதை கேள்வி எழுப்பாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.































