நாம் வாழுகின்ற தகவல் தொழில்நுட்ப யுகத்தில் தொலைத் தொடர்புச் சாதனங்கள், வெகுஜன ஊடகங்களை விடவும் சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் ஊடுருவி ஆதிக்கம் செலுத்துகின்றன.
எனவே இந்த யுகத்தின் சவால்களை கருத்தில் கொண்டு ஒரு முஸ்லிம் எவ்வாறு சமூக ஊடகங்களைக் கையாள்வது என்பதை தெரிந்து வைத்துக்கொள்வதோடு புதிய தலைமுறையினரை அறிவுறுத்தி உரிய வழிகாட்டல்களை வழங்குவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல மார்க்கக் கடமையும் கூட்டுப் பொறுப்புமாகும்.
சிலர் எடுத்த எடுப்பிலேயே சமூக ஊடகங்கள் பொழுதுபோக்கிற்கு உரியவை அங்கு சீர்திருத்தங்கள், சமூக மாற்றங்கள், இலட்சிய போராட்டங்கள், அரசியல், மார்க்கம் என எதையும் கொண்டுவராதீர்கள் என்று கூறுவார்கள், அவ்வாறான குறுகிய பார்வையைக் கொண்டவர்கள் ஒருவிஷயத்தை தெளிவாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும், எங்கெல்லாம் மனித ஆளுமைகளில் ஷைத்தான் செல்வாக்கு செலுத்த இடம் இருக்கின்றதோ அங்கெல்லாம் நன்மையை ஏவி தீமையை விலக்குகின்ற பணி இடம்பெறுவது விதிக்கப்பட்ட கடமையாகும்.
ஒரு மனிதனின் பண்பாடுகள் விருப்பு, வெறுப்புக்கள், நடத்தைகள், அங்கீகாரங்கள், ஆதரவுகள் எல்லாம் அவரது ஆளுமையினை பிரதிபலிக்கின்றன, அதுபோன்றே சமூக ஊடகங்களிலும் நமது நடவடிக்கைகள் நமது தராதரங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்ற தப்பபிப்பிராயங்கள், காழ்ப்புணர்வுப் பரப்புரைகள், அல்லது பிழையான தகவல்கள், வதந்திகள் செய்திகள், இருப்பு, பாதுகாப்பிற்கு விடப்படுகின்ற அச்சுறுத்தல்கள் என சமூக ஊடகங்கள் தவறான மனிதர்களால் கையாளப்படுகின்ற போது கூட்டுப் பொறுப்புடனும், அறிவுப் பூர்வமாகவும் அவற்றுக்கு முகம் கொடுப்பது நம்மீது கடமையாகும்.
சமூக நல்லுறவுக்கும், தேசத்தில் சமாதான சகவாழ்வுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற பிணக்குகளை தோற்றுவிக்கின்ற முரண்பாடுகளை ஏற்படுத்துகின்ற பதிவுகளை நாம் தவிர்ந்து கொள்வதும் தவிர்த்துக் கொள்வதும் எவ்வாறு கடமையாகின்றதோ அவ்வாறே ஏனைய தீய சக்திகள் திட்டமிட்டு மேற்கொள்ளும் பரப்புரைகளுக்கு உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுவதும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
ஒரு சமூகத்தின், தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த செய்திகளை எவ்வாறு கையாள வேண்டும் என அல்-குர்ஆன் சொல்லித் தருகின்றது, ஒரு கூட்டத்தார் பிறிதொரு கூட்டத்தாரை ஏளனம் செய்வது குறித்து கண்டனம் செய்கின்றது, கோள் மூட்டுதல், புறம் பேசுதல், இட்டுக் கட்டுதல், கிண்டல் மொழி, நையாண்டி, குரலை உயர்த்திப் பேசுதல், மற்றொருவரது உள்ளத்தை காயப்படுத்தல் போன்ற சகல நடவடிக்கைகளும் குர்ஆனிலும் மற்றும் நபிமொழிகளிலும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.
அழகிய இஸ்லாமியப் பெயர்களை வைத்துக் கொண்டு நாம் பதிவேற்றுகின்ற அடையாளப்படங்கள், பகிர்ந்து கொள்கின்ற ஆபாசங்கள், வார்த்தைப் பிரயோகங்கள் சிலவேளைகளில் நாம் சார்ந்த சமூகத்திற்கும், சன்மார்க்கத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தி விடலாம், அவற்றை நாம் கட்டாயம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே நமது கருத்துச் சுதந்திரம் என்பது நமது ஆன்மீக பண்பாட்டுக் கலாசார விழுமியங்களை வரைமுறைகளை தகர்த்தெறிகின்ற கருத்தியல் வன்முறைகளாக, துஷ்பிரயோகங்களாக இருக்க முடியாது.
ஒரு மனிதர் அல்லது கூட்டத்தினர் மீதுள்ள அன்போ அல்லது வெறுப்போ அவர்களுக்கு நீதி வழங்குவதிலிருந்து ஒரு விசுவாசியை தடுக்க முடியாது, ஒரு சாராருக்கு ஆதரவாகவும், மற்றுமொரு சாராருக்கு எதிராகவும் எழுதுவதும், பேசுவதும் கூட ஆன்மீக அளவுகோள்களை தாண்டி விடக்கூடாது.
பரஸ்பரம் அன்பு பாராட்டாத ஒரு சமூகத்தில் வெறும் கொள்கைகளும், கோட்பாடுகளும், கருத்தாடல்களும் முரண்பாடுகளையே தோற்றுவிக்கின்றன. “தக்வா” எனும் இறையுணர்வு ஒன்று மாத்திதிரமே நம்மை, நமது குடும்பங்களை சீரழிவுகளில், சிதைவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்.
சமூக ஊடகங்களை பயன்படுத்தும் விசுவாசிகள் எல்லா நிலையிலும் எங்கு இருந்தாலும் அல்லாஹ்வை மனதில் கொள்ள வேண்டும், வாழ்வின் ஏனைய விசயங்களில் எவ்வாறு ஹலால், ஹராம், ஆகுமானவை, ஆகாதவை, கடமையனவை, தடுக்கப்பட்டவை, விரும்பத்தக்கவை விரும்பத்தகாதவை என வரைமுறைகள் இருக்கின்றனவோ அவைகள் சமூக ஊடக நடத்தைகளிலும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் நமது பிடரி நாளங்களை விடவும் அல்லாஹ் நமக்கு அருகாமையில் இருக்கிறான்.

































