

எஸ். பீட்டர் அல்போன்ஸ் B.L, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், சமூக செயல்பாட்டாளர். அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் காங்கிரஸ் கட்சியோடு தொடர்ந்து பயணித்து வருகிறது. அவரும் பெருந்தலைவர் காமராஜரின் சீடராக அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தவர். சட்டப் படிப்பை முடித்தவர்.
1996 நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராகவும், 1989, 1991 களில் தென்காசி, 2006 இல் கடையநல்லூர் தொகுதிகளின் சட்ட மன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.
தன் கருத்துக்களை நேரடியாகவும் தெளிவாகவும் பேசும் நேர்மையாளர். கட்சியிலும், காட்சி ஊடகங்களிலும் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை இடைவெளி விடாமல் பதிவு செய்து வருபவர்.
இந்தியா சந்திக்கும் நெருக்கடிளையும், அரசியல் கட்சிகளின் இன்றைய செயல்பாடுகளையும், இன்றைய சூழலில் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் விரிவாகவும், விமர்சனப் பூர்வமாகவும் தனது கருத்துக்களை இந்த நேர்காணலில் முன் வைக்கிறார்.
…
இந்திய அரசியலின் போக்கை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் இப்போது பெரும்பான்மை வாத அரசியலும், அடையாள அரசியலும் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் ஆட்சியை கைப்பற்றி வருகிறார்கள்.
அது அமெரிக்காவின் ட்ரெம்பில் தொடங்கி இந்தியாவின் மோடி, துருக்கியின் எர்துகான் வரை ஜனநாயக நாடுள் ஒவ்வொன்றிலும், ஜனநாயகத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மைவாதிகள் ஆட்சி செய்கிறார்கள்.
மற்ற நாடுகளில் ஒரே மொழி பேசக்கூடியவர்கள், பெரும்பாலும் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்தியா, பல காலமாக பன்முக கலாச்சாரத்தையும் பல மதங்களையும், பல மொழிகளையும் பல இனங்களையும் கொண்டவர்கள் வாழும் நாடு. நீக்ரோ, மங்கோலியர், ஆரியன் என உலகத்தில் உள்ள எல்லா வகையான வகையான மனிதர்களும் இங்கே இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இந்த நாட்டில் பெரும்பான்மை வாதம் முன்னெடுக்கப்பட்டு, தேர்தல் களத்தில் வெற்றியடைந்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கைப்பற்றி இருக்கிறது பா.ஜ.க. பா.ஜ.க. வெறும் முகம் மட்டுமே. அதற்குப் பின்னால் கடுமையாக உழைத்தது ஆர்.எஸ்.எஸ்.எஸ். இயக்கம். கடந்த 90 ஆண்டுகளாக புதிது புதிதாக பல்வேறு சூத்திரங்களை முன்வைத்து கடைசியில் இந்த பெரும்பான்மை வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.
இந்த வெற்றியின் மூலதனமே வெறுப்பு அரசியல் தான். எதிரிகள் இல்லை என்றாலும் கூட போலியாக எதிரிகளை உருவாக்கி மக்களுக்கு மத்தியில் இவர்கள் தான் உங்கள் எதிரிகள் என்று பிரச்சாரம் செய்து அதை உண்மை என்று நம்ப வைத்து, அதன் மூலம் மக்களை வெறுப்பு அரசியலுக்குள் தள்ளியுள்ளார்கள்.
வெறுப்பு அரசியல் இந்தியாவில் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்பதற்கு கடந்த 2019 பொதுத் தேர்தல் மிகப் பெரும் எடுத்துக் காட்டு. எல்ல முனைகளிலும் தோற்றுப் போன பிரதமர்.
பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் எந்த சாதனையும் செய்யாத ஒருவர். அத்தோடு ஏற்கனவே இருந்த சாதனைகளை, பொருளாதாரத்தை நிர்மூலமாக்கி பல கோடி மக்களின் வாழ்வாதரங்களை தனது அவசரத்தனமான நடவடிக்கையால் சீரழித்த பிரதமர் மோடி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுகிறார் என்று சொன்னால் “வெறுப்பு அரசியல்”தான் அதற்கு முக்கிய காரணம்.
இப்போதும் பொருளாதாரம் மிக மிக மோசமான நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களின் கவனமும், ஊடகங்களின் கவனமும், பொது அரசியல் தளங்களின் கவனமும் மக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சனைகளின் பக்கமோ, சீரழிவை நோக்கிச் செல்லும் பொருளாதாரப் பிரச்சனைகளின் பக்கமோ போய் விடக்கூடாது என்பதில் ஆர்.எஸ்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
…
இந்தியாவின் பிரதான எதிர்கட்சிகள், மாநிலக் கட்சிகளின் இன்றைய நிலை?
தேர்தல் வெற்றியே தேவையில்லை என்ற நிலைக்கு ஆர்.எஸ்.எஸ்.எஸ். இயக்கத்தினர் வந்துவிட்டார்கள். உதாரணத்திற்கு டெல்லியில் பா.ஜ.க.வின் தோல்வி குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் ஏறக்குறைய அவர்கள் மனநிலையை ஆதரிப்பவர்தான்.
இந்தியாவில் இருக்கின்ற பிரதான கட்சிகள் எதுவும் சிறுபான்மை சமூகங்களின் கோரிக்கைகளையோ அவர்களது நியாயத்தையோ, ஆதரவு நிலையையோ எடுக்கவே முடியாது, எடுத்தால் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்ற மனநிலையை எல்லா கட்சிகளுக்கும் உண்டாக்கியதுதான் ஆர்.எஸ்.எஸ்.எஸ்.சின் வெற்றி.
சிறுபான்மை நலன் சார்ந்து இயங்கும் கட்சிகள் தேர்தலில் தொடர் தோல்வி என்ற நெருக்கடியை சந்திக்கும் போது அந்த கட்சிகளில் இருக்கும் ஒரு சாரார் “நமது அரசியல் செயல்பாடுகளை மாற்ற வேண்டும். மென்மையான இந்துத்துவா (soft hindutva) போக்கை செயல்படுத்த வேண்டும். நமக்கு தேர்தல் வெற்றி முக்கியம் என்று சொல்லத் துவங்கினார்கள்.
அதன் காரணமாக ஒவ்வொரு கட்சித் தலைவரும் தானும் ஒரு இந்து, இந்து மதத்தைச் சார்ந்தவன் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவும், அதன் மூலம் தேர்தல் சமயத்தில் ஆதாயம் பெறவும் தூண்டப்பட்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல! ஆர்.எஸ்.எஸ்.எஸ். இயக்கம் பா.ஜ.க.வுக்குள் மட்டுமல்ல! ஆர்.எஸ்.எஸ்.எஸ். சித்தாந்த மனநிலை உள்ளவர்கள் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளில் இருப்பது போல வெளிப்படையாக காட்டிக் கொண்டாலும், அவர்களது மனநிலை ஆர்.எஸ்.எஸ்.எஸ். நிலைபாட்டை ஆதரிப்பதுதான்.
இன்றைய சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவரவர்கள் இருக்கும் அரசியல் கட்சிகளை அந்த கட்சி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் எவ்வளவு அழுத்தமாக காவி வர்ணம் பூச முடியுமோ அது 5 அல்லது 10 சதவீத அளவுக்கு முடிந்தாலும் அதற்கு முயற்சி செய்கிறார்கள்.
எங்களைப் போன்றோர்கள் இந்த நிலையில் தான் மாறுபட்டோம். இந்து என்று ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது தவறே இல்லை. ஒரு உண்மையான இந்து தன்னை இந்து என்றோ ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் என்றோ ஒரு கிறித்தவர் தன்னை கிறித்தவர் என்றோ அடையாளப்படுத்திக் கொள்வது தவறே இல்லை.
இதற்கு நல்ல உதாரணம் தேசத் தந்தை மகாத்மா காந்தி. தன்னுடைய இந்து அடையாளத்தை எங்கேயும் எப்போதும் மறைத்ததே இல்லை. தன்னை ஒரு பரிசுத்தமான இந்து. உண்மையான இந்துத்துவம் ராமராஜ்ஜியம்தான். அந்த ராமராஜ்ஜியம்தான் என்னுடைய வாழ்வின் நோக்கம் என்று பகிரங்கமாக அறிவித்தவர் காந்தி.
சதா ராம நாமம் சொல்லிக் கொண்டிருந்த காந்தியைப் பார்த்துத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ்.எஸ். காரர்கள் பயந்தார்கள். காந்தி தன்னை இந்து என்று அறிவித்துக் கொண்டதுதான் அவர்களுக்கு அச்சத்தையும் பயத்தையும் தந்தது.
காந்தி மதவாத சக்திகளால் வெற்றி கொள்ள முடியாத ஒரு இந்துவாக இருந்தார். சுதந்திரமாக தன்னை இந்து என்று எப்படி அடையாளப்படுத்திக் கொண்டாரோ அது போன்ற சுதந்திரம் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மதத்தினருக்கும் இருக்கிறது என்று மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார் காந்தி.
இந்து என்பது ஆன்மீக அடையாளம் தானே தவிர, அது அரசியல் அடையாளம் அல்ல என்பதை பகிரங்கமாக தெரிவித்தார். இதுதான் ஆர்.எஸ்.எஸ்.எஸ்.காரர்களுக்கு பெரும் அச்சத்தை தந்தது.
இன்றைக்கிற வலதுசாரிகள் இந்து ராஷ்ட்ரத்தை அமைக்க முயற்சித்தால், அதை தடுக்க நினைக்கின்ற சமூக நல அரசியல் பேசுகிற கட்சிகள் மீண்டும் மகாத்மா காந்தியின் நிலைபாட்டைத்தான் எடுக்க வேண்டும். அது ஒன்றுதான் வழி. அதுதான் பொது அரசியல் களம். அரசியல் கட்சிகளை இந்த நிலை நோக்கி தள்ளும் அரசியலை சிறுபான்மை சமூகங்கள் முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம்.
….
NPR, NRC, CAA சட்டங்கள் முஸ்லிம்கள் எண்ணுவது போல குடியுரிமையை இழக்கச் செய்யுமா?
பாசிச அரசியலின் அணுகுமுறைகளில் ஒன்று மக்களை எப்போதும் ஏதாவதொரு பதட்டத்தில் வைத்திருப்பது. ஏனெனில் பதட்டத்திலேயே இருக்கும் மக்கள் ஆட்சியின் தரத்தைப் பற்றியும் ஆட்சியின் சாதனைகளைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.
பாசிச அரசியலின் இன்னொரு அடிப்படை இல்லாத ஒரு எதிரியை கட்டமைப்பது, தொடர்ந்து சதா சர்வ காலமும் தேடிக்கொண்டே இருப்பது Constant cost for enemy. அந்த அடிப்படையில் முதலில் முஸ்லிம்கள் இரண்டாவது கிறித்தவர்கள் என எதிரிகளை வரிசைப்படுத்தி இருக்கிறார்கள்.
உருக்குலைந்திருக்கும் தனது நாட்டை பாதுகாக்க பிச்சை பாத்திரத்தை ஏந்திக்கொண்டு (உதவி தேடி) உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானையும் எதிரியாக கட்டமைத்திருக்கிறார்கள். இப்படி கட்டமைப்பதற்கான வழிகளில் ஒன்றுதான் NPR, NRC, CAA சட்டங்கள். அவர்களால் இதன் மூலம் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.
என்றாலும் காஷ்மீர் சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்ட போது மக்கள் போராட வரவில்லை. முத்தலாக் தடையின் போதும் மக்கள் போராட்டம் செய்யவில்லை. பாபரி மஸ்ஜித் வழக்கில் சாதகமான தீர்ப்பு வராத போது ஒரு பிரச்சனை முடிந்தால் சரி என்று விட்டு விட்டார்கள். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அப்படி விட்டு விடமுடியவில்லை. மத்திய பா.ஜ.க. அரசின் முகத்தை தோலுரித்துக் காட்ட மக்களின் தன்னெழுச்சியான இந்த போராட்டங்கள் களம் அமைத்து தந்திருக்கின்றன. அதை நாம் மறுக்க முடியாது.
எனவே ஒரு நாட்டின் 20-30 கோடி மக்களை குடிமக்கள் இல்லை என்று சொல்லும் ஒரு நாடு ஒரு நாடாகவே இருக்காது. அது இந்தியாவை இன்னொரு பாகிஸ்தானுக்கும் மாற்றும் முயற்சியே..
…….
இந்தியாவில் பெரும்பான்மை வாத வலது சாரி போக்கை தடுத்து நிறுத்த என்ன வழி, இன்றைய போராட்டங்கள் அதற்கு உதவுமா?
90 ஆண்டுகள் நீரூற்றி உரம் போட்டு வளர்க்கப்பட்ட ஒரு விஷ மரத்தை 30 நாட்களிலோ, 90 நாட்களிலோ, நாம் நடுத்துகிற போராட்டங்கள் வழியாகவோ வீழ்த்தி விட முடியும் என்று நான் நம்பவில்லை.
இன்றைய கள யதார்த்தம் தான் சுதந்திர போராட்ட காலத்திலும் இருந்தது. அன்றைக்கும் இதே போலத்தான் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் வெறுப்பு ஊட்டி வளர்க்கப்பட்டது.
முஸ்லிம் – இந்து மத தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒரு இயக்கத்தை நடத்தினார்கள். அதை பொறுத்துக் கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசாங்கம் நீங்கள் எப்படி ஒன்று சேருவீர்கள் என்ற ஆத்திரத்தில் அவர்களை பிரிப்பதற்காக சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது. அதுதான் ஜாலியன் வாலபாக் படுகொலை.
சுதந்திர போராட்டம் போல ஒரு நீண்ட மீண்டும் ஒரு நெடிய போராட்டத்தை நாம் முன்னெடுப்பதன் மூலமாகத்தான் இன்றைய வெறுப்பு அரசியலின் முகத்தை மாற்ற முடியும்.
வெறுப்பு அரசியலின் முகத்தை அரசியல் தலைவர்களால் மட்டும் மாற்ற முடியும் என நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு சமூக தலைவர்களும், மத தலைவர்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
என்னை பொருத்த வரை இஸ்லாமிய சமூகத் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி “சமூகத்தின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.” CAA, NRC, NPR எதிர்ப்பு போராட்டங்கள் கூட ஒருமுனைப்படுத்தப்படாமல் ஆங்காங்கே பல இயக்கங்களால் அவர்களுக்கு தோன்றியவாறு நடத்தப்பட்டதாகவே நான் உணர்கிறேன்.
இது ஒரு சரியான திட்டமிடுதலோடு செயல்திட்டத்தோடு நடத்தப்பட்டிருக்க வேண்டும். பத்திரிக்கைகளில் எப்படி செய்தி வர வேண்டும். போராட்டங்களுக்கு தலைப்பு எப்படி கொடுப்பது. போராட்டத்துக்கு வருபவர்கள் எப்படி வருவது? உதாரணத்துக்கு தேசிய கொடியை உயர்த்திக் கொண்டு வருவது போன்ற நடைமுறைகள் ஆலோசித்து ஒருங்கிணைந்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
போராட்டக் களங்களில் நீங்கள் தூக்கிய தேசிய கொடியை கீழே இறக்கி விடாதீர்கள். அதுதான் உங்கள் கைகளில் கட்டியிருக்கும் தாயத்து. மோடியை அடக்குவதும் இந்த தேசிய கொடிதான். இரண்டு மூன்று கூட்டங்களில் இதை நான் முதலிலேயே வலியுறுத்தி பேசினேன். இது நல்லதொரு அரசியல் நடவடிக்கை.
இதுபோல ஒட்டுமொத்தமாக முடிவெடுக்க வேண்டிய விசயங்களை தீர்மானிக்கக் கூடிய ஒரு பொது அணுகுமுறையை இன்னும் உருவாக்கவில்லையோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.
அரசு ஊழியர்கள் பல சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு போராட்டம் என்று வருகிற போது ஜாக்டோ (Joint Action Committee of Teachers Organization) ஆசிரியர் அமைப்பினர், கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்கி அதற்கு ஒரு தலைவரையோ, ஒரு ஒருங்கிணைப்பாளரையோ தேர்வு செய்வார்கள். இந்த நடைமுறையை முஸ்லிம்கள் பின்பற்றலாம் என்று சமீபத்தில் முஸ்லிம்கள் நடத்திய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கூட சொன்னேன்.
பல தலைவர்கள் இன்று அரசியல் களத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு மற்றவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என்றால் கூட அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூகம் மதிக்கக்கூடிய முன்னாள் நீதி அரசர்களையோ, அரசு அதிகாரிகளையோ, ஓய்வு பெற்ற அதிகாரிகளையோ ஒரு அமைப்பாக ஏற்படுத்தி அவர்கள் மூலமாக போராட்டாங்களை திட்டமிட்டு நடத்தலாம் என்று ஆலோசனை சொன்னேன். அதற்கான காலம் இப்போது வந்து விட்டதாகவே உணர்கிறேன்.
…..
ஒற்றை இந்தியா, பொது சிவில் சட்டம், அதையும் தாண்டி இந்தியாவை இந்து நாடாக அறிவித்தால் எப்படி எதிர்கொள்வது ?
காமன் சிவில் சட்டத்தை இவர்கள் கொண்டு வரத்தான் செய்வார்கள். இந்தியாவின் தற்போதைய நிலையில் பெரும்பான்மை இந்து மக்கள் இன்னும் ஆர்.எஸ்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வோடு முழுமையாக கலக்கவில்லை. நம்மையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவுமில்லை.
அந்த பெரும்பான்மை இந்து மக்கள் அவர்களோடு சேர்ந்து விடாமல் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதையும் தாண்டி இந்தியாவை இந்து நாடாக அவர்கள் அறிவித்தால் வெறொன்றும் ஆகப்போதில்லை “இந்தியா இன்னொரு பாகிஸ்தானாக மாறும்.”
இந்தியா இந்து ராஷ்டிரம் என்று அறிவித்தால் அதன் பாதிப்பு முஸ்லிம்களுக்கோ கிறித்தவர்களுக்கோ இல்லை. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும்தான். ஒரு நாட்டின் வளர்ச்சியையோ முன்னேற்றத்தையோ தீர்மானிப்பது அந்த நாட்டின் வளங்கள் மட்டுமே அல்ல! அரசியல் நிலைபாடும்தான்.
…..
வலுவான அனைத்து எதிர்க்கட்சிகளையும் BJP பலகீனப்படுத்திவிட்டது என்ற தோற்றம் சரியா?
புதிய கருத்துக்களைச் சொன்ன புரட்சியாளர்களை உலகின் பல நாடுகள் விரட்டியது. இத்தாலியில் கலிலியோவை மதவாதிகள் தூக்கில் போட்டார்கள். புதிய சிந்தனையை சொன்ன முகம்மது நபியை மக்காவில் கல்லால் அடித்தார்கள். மற்றநாடுகளில் யாரெல்லாம் முன்னர் இருந்த தத்துவங்கள் கருத்துக்கள் தவறு என்று புரட்சிகர கருத்துக்களை சொன்னார்களோ அவர்கள் பலிவாங்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள்.
இந்திய நிலம் இதற்கு விதி விலக்கானது. இந்தியாவில் புத்தர் ஒப்புக்கொள்ளப்பட்டார், ராமானுஜர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இந்திய மண்ணின் செழுமைக்கு காரணமே கருத்து மாறுபாடுகளையும், கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டதுதான்.
யூத மதத்தினர் இங்கு வந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகி விட்டது. இஸ்லாம் பிறந்த ஆண்டே இந்த நிலப்பரப்புக்கு வந்துவிட்டது. கிறித்தவமும் அதன் துவக்க காலத்திலேயே வந்துவிட்டது.
சௌராஷ்டிரத்தையும் அப்படித்தான் ஏற்றுக்கொண்டது. எல்லா மதங்களையும் இந்த மண் ஏற்றுக்கொண்டது. அதனால்தான் காந்தி சொன்னார் எல்லா மதங்களும் வந்த பிறகும் 80 விழுக்காடு மக்கள் இந்துக்களாகத்தான் இருக்கிறார்கள். பிறகு ஏன் பா.ஜ.க.வினர் மற்ற கட்சிகளை, மாற்றுக் கருத்துக்கள் கொண்டோர் மீது வெறுப்பை பரப்புகிறார்கள்.
அவர்களின் நோக்கமே அனைத்து அரசியல் கட்சிகளையும் செயல் இழக்கச் செய்வது முடக்குவது. அதனால்தான் அவர்கள் கழகங்கள் இல்லாத தமிழகம், காங்கிரஸ் இல்லாத, கம்யூனிஸ்ட் இல்லாத இந்தியா என்று சொல்லி இந்தியாவை ஒரு கட்சி ஆட்சி செய்யும் நாடாக ஒரு மத நாடாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். அரசியல் கட்சிகளே இல்லாமல் ஜனநாயகம் எப்படி செயல்படும்? அவர்களது பரப்புரைகளே ஜனநாயக விரோதமானவை.
………
காங்கிரஸின் பின்னடைவுக்கான காரணம் என்ன?
70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காரணத்தால், கட்சி, கட்சி கட்டமைப்பு ஆகியவற்றில் கவனத்தையும், பணிகளையும் குறைத்துக்கொண்டது.
கட்சியின் கொள்கை ரீதியான அணுகுமுறைகளை நீர்த்துப் போக அனுமதித்தது.
மாநிலக் கட்சிகளுக்கு முழுமையான சுதந்திரம் வழங்காமல் அதிகாரத்தை மத்தியிலேயே மையப்படுத்தியது. ஆகியவைகள் பெரிய காரணங்கள்.
காங்கிரஸை பொறுத்தவரை காங்கிரஸ்காரர்கள், கங்கிரஸ் கட்சியினர் என இரண்டு வகையான மனிதர்களை பார்க்கலாம். என்னைப் போன்றவர்கள் பிறப்பால் வளர்ப்பால் வாழ்க்கையால் காங்கிரஸ்காரர்கள். நாங்கள் தமிழ்நாடு காங்கிரஸில் இருந்தாலும் கொள்கை கோட்பாடு ஒன்றுதான்.
காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வேறு கட்சிகளில் இருந்து வருவார்கள் பதவி பெறுவார்கள், பின்னர் போவார்கள்.
காங்கிரஸின் கொள்கை கோட்பாடுகளை தனிப்பட்ட வகுப்புகள், பயிற்சிகள், கருத்தரங்குகள் மூலம் இளைய தலைமுறைகளிடம் திரும்பவும் முன்னெடுத்துச் செல்ல தவறிவிட்டதும் மிக முக்கியமான காரணம்.
இரண்டாவது ஒரு உதாரணத்தை சொல்லலாம் : நோக்கியா கம்பெனியை மைக்ரோ சாஃப்ட் கம்பெனி வாங்கியது. அதன் பிரிவுபசார விழாவில் நோக்கியாவின் சி.இ.ஓ. “நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் தோற்றுப் போனோம்” என்றார்.
நோக்கியா போன்கள் நல்ல தயாரிப்புதான், அதன் ஊழியர்கள் சிறப்பாக பணி செய்தார்கள் தான். ஆனால் வெளியில் உள்ள போட்டியாளர்கள் ஆப்பிளும், சாம்சங்கும் தன்னை விட வேகமாகவும் வேறு புதிய யுக்திகளோடும் சந்தைக்கு வந்துவிட்டதை நோக்கியா கம்பெனி உணரத் தவறி விட்டது.
மற்ற வண்டிகளின் வேகத்துக்கும் யுக்திக்கும் முகம் கொடுக்க இயலாத ஒருவன் நான் வைத்திருப்பது நல்ல வண்டிதான் என்று புதிய, அதிவேகமான வண்டிகளுக்கு இடையே ரோட்டில் ஓட்டிச் சென்றால் விபத்துக்குள்ளாவதை தவிர்க்க இயலாது. காங்கிரசுக்கும் இதுதான் நேர்ந்தது.
காங்கிரஸ் பலவீனமடைவது, தோல்வியடைவது நாட்டுக்கு நல்லதல்ல. காங்கிரஸ் போன்ற கட்சிகளை இனிமேல் உருவாக்குவது சாத்தியமில்லாதது. இந்தியாவின் எந்த ஒரு சிறிய கிராமத்திற்குச் சென்றாலும் ஒரு காங்கிரஸ்காரரை பார்க்கமுடியும். எனவேதான் காங்கிரஸின் கருவை இயக்கத்தை அழித்து விட்டால் நாம் நினைத்தை செய்ய முடியும் என்று ஆர்.எஸ்.எஸ்.எஸ்சும் பா.ஜ.க.வும் நினைக்கின்றன.
மாநில கட்சிகள் பலவற்றை செயலிழக்கச் செய்து விட்டார்கள். “ஒன்று எங்களோடு இருங்கள் அல்லது எங்களை எதிர்க்காமல் இருங்கள்” என்ற இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் தான் மற்ற கட்சிகளின் ஆட்சியை அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் தி.மு.க. இவைகளைத் தவிர மற்ற கட்சிகள் மோடி அமித்ஷாவோடு ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்துகொள்கின்றன. இந்த நேரத்தில் காங்கிரஸை பலவீனமடையாமல் பார்த்துக்கொள்வது காங்கிரசுக்கு மட்டுமல்ல சமூகநீதி, பாராளுமன்ற ஜனநாயகம், மதச்சார்பின்மையை காக்க நினைக்கின்ற எல்லோருக்குமான பொறுப்பு.
காங்கிரஸ் கட்சியும் தான் தவறவிட்ட இடங்களை, குறைபாடுகளை கண்டறிந்து அதை களத்தில் சீரமைக்கும் பணியை செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் இருப்பே கேள்விக்குரியாகும்
….
காங்கிரஸ், இடது சாரிகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, போன்ற கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய முயற்சிகள் தொடர்கின்றதா?
ஒன்றிணைய வேண்டும். என்னை பொறுத்த அளவில் பா.ஜ.க.வின் கொள்கைகளையும் ஆர்.எஸ்.எஸ்.எஸ். சித்தாந்தங்களையும் எதிர்க்கிற கட்சிகளுக்கு இடையே உள்ள சுவர்கள் இடிக்கப்பட வேண்டும்.
இந்த கட்சிகள் ஒரே அரசியல் சக்தியாக திரள வேண்டும். அப்படி திரண்டால்தான் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.எஸ் சின் பெரும்பான்மைவாத அரசியலை தடுத்து நிறுத்த முடியும். அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். அது காலத்தின் கட்டாயம்.
….
சமூக அரசியல் தளங்களில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இன்றைய நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்வது ?
சிறுபான்மை மக்கள் குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் “ஜனநாயகம் என்பது பெரும்பான்மை அடிப்படையில் தான் செயல்படும்.” ஆனால் அதில் மைனாரிட்டியின் நலன்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும். பெரும்பான்மை ஆள வேண்டும் சிறுபான்மை வாழ வேண்டும் என்பார்கள்.
இரண்டு விழுக்காடு இருக்கும் பிராமன சகோதரர்களை இங்கே நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். அவர்கள் சரியாக திட்டமிட்டு பலவிதமான அணுகுறைகளை கையாண்டு எப்போதும் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்கிறார்கள். அதற்கு அவர்களது அரசியல் செயல்திட்டங்கள் மிக முக்கியமான காரணம்.
பெரும்பான்மை ஜனநாயகத்தில் சிறுபான்மை அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இயலாது. ஓரிரு எம்.எல்.ஏ., எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற முடியும் அவ்வளவுதான். அவர்களால் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தி விட இயலாது. நாடாளுமன்றத்தில் உங்களது முஸ்லிம்களது விழுக்காட்டிற்கு ஏற்ப பிரதிநிகள் இல்லை ஏன்? 45 – 50 நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும், கிறித்தவர்களை விட குறைவாக இருப்பது ஏன்?
பொதுத் தளங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்புடைமை (Acceptability) போதிய அளவு இல்லை. முஸ்லிம்களில் சமூகத்துக்கு வேலை செய்பவர்கள் வேலை செய்யட்டும். மார்க்கத்திற்கு வேலை செய்பவர்கள் மார்க்கத்திற்கு வேலை செய்யட்டும்.
இந்தியாவில் மட்டுமல்ல! உலகத்தில் அழைத்தவுடன் 1000 பேர்களுக்கு மேல் மக்களை, பெண்களை திரட்டுகிற சக்தி யாருக்கு இருக்கிறது? கிறித்தவர்களால், இந்துக்களால் அவ்வளவு மக்கள் திரளை ஒன்று கூட்டி உட்கார வைத்து விட முடியுமா?
உங்களால் – முஸ்லிம்களால் முடியும். என்றால் நீங்கள் எவ்வளவு பொறுப்பாக இருக்க வேண்டும். உங்களை நம்புகிற மக்களுக்கு நீங்கள் எவ்வளவு கடமைப்பட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்? அதில் தனிப்பட்ட சுயநலம் அறவே இருக்கக்கூடாது.
இரண்டாவது அதிகப்படியான மத அறிவுறுத்தல்கள் தேவையா?
முழுமையான மத அடையாளங்களுடன் முஸ்லிம்கள் தோற்றம் தருவதை அரசியலாக்கி மற்ற மதத்தவர்களும் அவர்களது மத அடையாளங்களுடன் எதிர் அரசியல் செய்ய தூண்டப்படுகிறார்கள்.
தேர்தல் அரசியலில் எல்லா மக்களோடு சேர்ந்து அரசியல் செய்ய வேண்டும். வெகுஜன அரசியல் கட்சிகளில் முஸ்லிம் இளைஞர்கள் அதிகம் சேர வேண்டும். சிறுபான்மையாக இருக்கும் நம்முடைய கருத்தை, அணுகுமுறையை பெரும்பான்மை கருத்தாக, பெரும்பான்மை அணுகுமுறையாக எப்படி மாற்றுவது என்பதைத்தான் இப்போது நாம் யோசிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் இயக்கம் நடத்தக்கூடாது என்பது இதன் பொருளல்ல! சமுதாயத்தை வழி நடத்துகிற இயக்கங்களும் தலைவர்களும் தேர்தல் அரசியலில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
….
பா.ஜ.க.வினர் எப்படி இந்திய அரசியலை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள்?
ஊடகங்கள் அதற்கு மிக முக்கியமான கருவியாக பயன்படுத்தப்பட்டன. ஒரு உதாரணம் : மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 ரூபாய். இப்போது 32 டாலராக விலை குறைந்திருக்கிறது. மோடி 2014 இல் பிரதமராக பதவியேற்ற போதும் 31 டாலராகத்தான் இருந்தது. ஆனால் இன்றைக்கும் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 76 ரூபாய்தான்.
அன்றைக்கு பெட்ரோல் விலையில் ஒரு ரூபாய் ஏற்றத்துக்காக பொது மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாக்கப்பட்டார் மன்மோகன் சிங். ஊடகங்களும் அதை பெரிதுபடுத்தின. ஆனால் இன்றைய பெட்ரோல் விலை மக்களின் கவனத்தை பெறவுமில்லை. ஊடகங்களால் விவாதிக்கப்படவுமில்லை. இந்த சூழலை தங்களது கைக்கு அடக்கமான ஊடகங்களை வைத்துக் கொண்டு செய்கிறார்கள். இந்த ஊடகங்கள் தான் மக்கள் எதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற முடிவுகளை எடுக்கிறது.
மோடிக்கு அனுசரணையாக ஆட்சியையும் அதிகாரத்தையும் (கம்பெனி) நடத்துவதுதான் ஊடகங்கள், பெரு முதலாளிகளுக்கு ஆதாயம். அதன் காரணமாக தவறான, பொய் தகவல்களையும், தேவையற்ற செய்திகளையும் கருத்துக்களையும் குறிப்பாக பிரிவினைகளை வெறுப்பை விரோதத்தை மக்கள் மத்தியில் வளர்க்கின்ற செய்திகளையும் தொடர்ந்து பொதுத் தளங்களில் ஊடகங்கள் வைத்துக் கொண்டே இருப்பதால், மக்கள் உண்மையான பிரச்சனைகளை நோக்கி திரும்பாமல் இருக்கிறார்கள்.
இதை விட மிகவும் ஆபத்தானது இந்தியா எதிர்கொண்டு வரும் புதிய பரிணாமம். ஆர்.எஸ்.எஸ்.எஸ். போன்ற வலதுசாரி பெரும்பான்மை வாதத்தை தட்டிக் கேட்க வேண்டிய ஜனநாயக நிறுவனங்கள் – உச்சநீதி மன்றம், ஊடகங்கள், அதிகார வர்க்கம் (bureaucrats), குடிமைச் சமூகம் (civil society) ஆகியவைகள் கூட தைரியம் இல்லாமலோ, விருப்பம் இல்லாமலோ அல்லது இந்த பெரும்பான்மைவாதத்துக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற மனோபாவமோ வளர்ந்திருப்பது மிக மிக ஆபத்தானது. இதுதான் நமக்கான எச்சரிக்கை.
இந்தியப் பிரிவிணையின் போது நடந்த கலவரத்தை தடுத்து நிறுத்துவதற்காக உண்ணாவிரதம் இருந்த தேசத் தந்தை காந்தி கலவரம் முடிந்து தனது உண்ணாவிரதத்தை 1948 ஜனவரியில் முடித்தார். அதை அன்றைய பிரதமர் நேருவுக்கு கடிதம் எழுதி அதில் “இப்போது பிரதமர் சாப்பிடலாம்” என்று குறிப்பிட்டார். காந்தி உண்ணாவிரதம் இருந்த காலங்களில் நேருவும் உண்ணாவிரதம் இருந்தார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நேருதான் நாட்டை கெடுத்தார் என்று சொல்லி ஊடகங்களின் வழியாக வரலாற்றை திரிக்கிறார்கள் அமித்ஷாவும் மோடியும்.
பிரதான ஊடகங்கள் நமக்கு கை கொடுக்காத இன்றைய சூழலில், சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். வலதுசாரிகள் ஏற்படுத்தும் வெறுப்பு அரசியலின் கவனத்திலிருந்து, யதார்த்தப் பிரச்சனைகள், உண்மைகளின் பக்கம் பொது மக்களின் கவனம் திரும்பச் செய்ய வேண்டும்.
இந்த பிரச்சனைகளை யாரும் பேசக்கூடாது, நாம் நம்முடைய தனிப் பிரச்சனைகளின் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் நோக்கம். CAA, கொரோனா என்று அவர்கள் நமது கவனத்தை திசை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
எனவே அந்த நோக்கத்திற்கு மாற்றமாக அவர்கள் பொதுப் பிரச்சனைகளை பேசும்படி நாம் நிர்பந்திக்க வேண்டும்.
….
பொது வாழ்வில் முஸ்லிம் சமூகத்தின் பங்கு (Role) என்னவாக இருக்கிறது என்று நீங்கள் உணர்கிறீர்கள்?
ஒரு விசயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். எல்லாவற்றுக்கும் ஆர்.எஸ்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது. அவர்கள், முஸ்லிம்கள் மீது மட்டுமல்ல கிறித்தவர்கள் மீதும் இந்து மக்களிடம் வெறுப்பை வளர்த்து விடுவதற்கு எப்படி இடம் தருகிறோம்? என்பதையும் நாமும் யோசிக்க வேண்டும்.
கிறித்தவர்களோ, முஸ்லிம்களோ எந்த அளவுக்கு ஆன்மீக அடையாளங்களுக்கு முக்கியத்துவம் வழங்கினார்களோ அதே அளவுக்கு தேசிய அடையாளத்துக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை.
நாம் நமது மதக் கடமைகளை செய்வதில் ஒன்றுமில்லை. கலாச்சார நடை உடை பாவனைகளில் இந்திய அடையாளங்களை வெளிப்படுத்தினால் என்ன? பொதுத் தளங்களில் நமது மதக் கருத்துக்களையோ, இறை வேண்டுதல்களையோ செய்யும் போது எதற்காக அரபி மொழியை பயன்படுத்த வேண்டும்.
ஏன் ஒவ்வொரு ஊரிலும் ஒன்றிரண்டு தெருக்களில் மட்டும் தனித்து அடர்த்தியாக வாழ வேண்டும்? அதற்கு “சமூக பாதுகாப்பு” என்ற காரணம் சொல்லப்பட்டாலும், அதிலிருந்து வெளிவந்து மாற்று சமூக மக்களோடு கலந்து பழகும் சூழலை உருவாக்க வேண்டும். “பன்முக சமூகத்தில் எல்லோருடனும் இணைந்து வாழ்வதற்கு பயிற்றுவிக்கும் கல்வி”யை மக்களுக்கு நாம் கொடுக்க வேண்டும்.
கலை, இலக்கியம் தான் மக்களை ஒன்று சேர்க்கும். அந்த தளங்களில் முஸ்லிம் இளைய தலைமுறைகள் நுழைய வேண்டும். அந்த தளங்கள் தான் பொது மக்களின் கவனத்தையும், கற்பனையையும் ஈர்க்கும்.
பொது மீடியா, பத்திரிக்கை துறைகளில், அதை கையாளும் ஆசிரியர்கள், தொகுப்பாளர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒன்றிரண்டு பேர் இருந்தாலும் அந்த எண்ணிக்கை பரவலாக வேண்டும். அந்த துறையில் கிறித்தவர்கள் அளவு கூட முஸ்லிம்கள் இல்லை என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.
நான் முஸ்லிம்களுக்கு சொல்ல நினைப்பது, இந்த சமூகம் தன்னை திறந்துகொள்ள வேண்டும். மாற்று மதத்தினரின் கலாச்சார பங்கேற்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு உதாரணம் வேறெங்கும் செல்ல வேண்டாம். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மதீனாவுக்குச் சென்ற போது அங்கு வாழ்ந்த சிறுபான்மை சமூகமான கிறித்தவ சமூகத்தோடு செய்த உடன்படிக்கையே போதுமானது. அந்த உடன் படிக்கையில் சொல்லப்பட்ட விசயங்களை பின்பற்றினாலே மற்ற சமூகங்களுக்கு நெருக்கமானவர்களாக முஸ்லிம்கள் மாறிவிடுவார்கள்.
பன்முக சமூகச் சூழலை கையாள்வது இஸ்லாத்திற்கு புதிய விடயம் அல்ல. இஸ்லாமியர்கள் அந்த நடைமுறைகளை கைவிட்டதுதான் முஸ்லிம்களுக்கு பிரச்சனை.
…..
முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு எந்த நிலையில் உள்ளது? அதில் முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
கல்வி பந்தயத்தில் முஸ்லிம்கள் பின் தங்கியே இருக்கிறீர்கள். உங்களை விட முன்னேறிச் சென்றவர்களை நீங்கள் எட்ட வேண்டுமானால் இரட்டை எஞ்சின் கொண்டு அதி வேகமாக போக வேண்டும். போட்டித் தேர்வுகள், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றில் வெற்றி பெற முஸ்லிம் சமூகம் அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பெண் கல்வி. பெண், கல்வி பெறாத எந்த சமூகமும் வேறு என்ன செய்தாலும் முன்னேறாது. உலகத்தின் வேகத்தையும் வீச்சையும் அவர்களால் புரிந்துகொள்ள இயலாமல் போகும்.
ஒரு ஒப்புவமையைப் பார்க்கலாம், மதரசா – கான்வெண்ட் இரண்டின் தன்மையும் ஒன்றுதான். சர்ச்சுடன் இணைந்த பள்ளிக்கூடம் கான்வெண்ட். பள்ளிவாசலுடன் இணைந்த பள்ளிக்கூடம் மதரஸா.
கான்வெண்டில் படிப்பதை பெருமையாக நினைக்கும் மக்கள் ஏன் மதரஸாவில் படிப்பதை அப்படி நினைப்பதில்லை. அப்படிப்பட்ட மதரஸாக்கள் ஏன் இல்லை? என்ன காரணத்தால் உருவாக்கப்படவில்லை. அதற்கு நாம் இந்துக்களை குறை சொல்ல முடியாது.
750 ஆண்டுகள் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த முஸ்லிம்கள் கல்வி, சமூகம், பொருளாதாரத் தளத்தில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை விட மிக மோசமாக (பல மாநிலங்களில்) இருப்பதற்கு யார் பொறுப்பு?
அரசு, அரசாங்க ரீதியில் முஸ்லிம்களுக்கு நெருக்கடி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு எத்தனை நாட்களுக்கு அரசாங்கத்துக்கு வெளியே இருக்க முடிடியும்?
காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை, கம்யூனிஸ்ட்கள் எதுவும் செய்யவில்லை என இன்றைக்கு இருக்கின்ற அரசியல் கட்சிகளை மட்டும் குறை சொல்ல முடியுமா? அதற்கான பொறுப்பு முஸ்லிம்களின் மத, சமூக தலைவர்களுக்கு இல்லையா?
கூடுமானவரை முஸ்லிம்கள் இந்திய நிலப்பரப்பின் தன்மைகளை கொண்டதாக இஸ்லாத்தை (இந்தியமயமாக்கப்பட்ட) வெளிப்படுத்துங்கள். இந்திய மொழிகளோடு, இந்திய மரபுகளோடு இஸ்லாமிய சமூகத்தை வளர்த்தெடுப்பது எப்படி என்பதை யோசிக்க வேண்டும்.
தனித்தன்மையாக இருப்பது வேறு, தனித்திருப்பது வேறு. இரண்டையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
..
முஸ்லிம்களின் பொருளாதார நிலை குறித்து பார்வை என்ன? அது குறித்த ஆலோசனை எதுவும் உங்களிடம் உள்ளதா?
இந்தியாவின் பெருமையே இந்தியாவின் நடுத்தட்டு வர்க்கம். அதிகாரிகள்(Buerucaraets), மருத்துவர்கள், நீதிபதிகள், கணக்காளர்கள், வழக்குறைஞர்கள், பொறியியலாளர்கள் நிறைந்த குடும்பங்கள்தான் நடுத்தட்டு வர்க்கம்.
இதில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன?
முஸ்லிம் சமூகத்தில் சிறு வியாபாரிகள் அதிகம் இருக்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான மரியாதை என்ன? அவர்களால் அதிகாரத்தில் என்ன பங்களிப்பு செய்ய முடியும்? ஒரு பிரச்சனை என்றால் முதலில் பாதிக்கப்படுவதும் அவர்கள்(சிறு வியாபாரிகள்)தான்.
இப்போது தேவை, முஸ்லிம் சமூகத்தின் இளைய தலைமுறை, ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஐ.பி.எஸ்.அதிகாரிகள், காவல் துறையினர், அரசு அதிகாரிகளாக உருவாக்க ஐ.ஏ.எஸ். அகாடமிகள் பொதுப் பெயரில் உருவாக்கப்பட வேண்டும். நீதிபதிகள் மருத்துவர்கள் முஸ்லிம் சமூகத்தில் அதிகமாக உருவாக வேண்டும். நடுத்தட்டு வர்க்கமாக முஸ்லிம் சமூகம் தரம் உயர வேண்டும். இது அத்தனையும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் இதற்கும் எதிர் வினையாக மற்றொரு சமூகம் தூண்டப்படும்.
மக்களின் தேவைகள் அறிந்து புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குங்கள். அதில் அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்குங்கள். பொதுத்தளத்தில் தவிர்க்க முடியாதவர்களாக முஸ்லிம்கள் – நீங்கள் உங்களை ஆக்கிக்கொள்ளுங்கள். அப்படித்தான் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.





































