




அல் – கிண்டி – (கி.மு. 801-873) மேற்கத்திய வரலாற்று அறிஞர்கள் இவரை அல் – ஹிந்துஸ் என்று அழைக்கின்றனர். இவர் ஒரு அரபு – ஈராக்கிய பல்துறை வல்லுனர் ஆவார். இவர் பின்வரும் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார் : இஸ்லாமிய தத்துவவியல், அறிவியல், வானியல், அண்டவியல் (Cosmology), வேதியியல், தர்க்கவியல், கணிதவியல், இயற்பியல், உளவியல், வானிலை அறிவியல் மற்றும் சங்கீதம் ஆகிய துறைகளில் பல கண்டுபிடிப்புக்கள் மற்றும் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
இஸ்லாத்தின் ஆரம்பகால வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த கிண்டா என்ற அரபு பழங்குடியினத்தில், கூஃபா நகரில் பிறந்தார். அவரது தந்தை இஸ்ஹாக் கூஃபாவின் ஆளுநராக இருந்தார். அல்-கிண்டி தனது ஆரம்பக் கல்வியை கூஃபாவில் பெற்றார். பின்னர் அவர் பாக்தாத்தில் தனது படிப்பை முடிக்கச் சென்றார், அங்கு அவர் அப்பாஸிட் கலீபாக்கள் அல்-மமுன் மற்றும் அல்-முத்தாசிம் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டார். அவரது கற்றல் மற்றும் படிப்புக்கான திறமை காரணமாக, அல்-மமுன் அவரை பாக்தாத்தில் கிரேக்க தத்துவ மற்றும் விஞ்ஞான நூல்களை மொழிபெயர்ப்பதற்காக நிறுவப்பட்ட பைத்துல் ஹிக்மாவில் நியமித்தார். தனது அழகிய கையெழுத்துக்காக ஒரு கட்டத்தில் அல்-முதவாக்கிலால் கையெழுத்துப் பிரதிநிதி (calligrapher) ஆக பணியமர்த்தப்பட்டார்.
அல்-மமுன் இறந்தபோது, அவரது சகோதரர் அல்-முத்தாசிம் கலீபா ஆனார். அல்-கிண்டி கலீபா அல் – முத்தாசிமின் மகனுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பாக்தாத்தில் அல்-முத்தமிட் ஆட்சியின் போது (கி.மு. 873) இறந்தார்.
அதற்கு பிறகு வந்த இஸ்லாமிய அறிஞர்களுக்கும் வரலாற்றாசிரியர்களுக்கும் கூட அல்-கிண்டியின் அறிவியல் மற்றும் தத்துவப் படைப்புகள் சரிவர கிடைக்கவில்லை. இதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் பல காரணங்களைத் தெரிவிக்கிறார் அல்-முத்தவாக்கிலின் போர்க்குணமிக்க மரபுவழி மற்றும் , மங்கோலியர்கள் தங்கள் படையெடுப்பின் போது எண்ணற்ற நூலகங்களையும் அழித்தனர். எவ்வாறாயினும், இதற்கு மிகவும் சாத்தியமான காரணம் என்னவென்றால், அவரது எழுத்துக்கள் அல்-ஃபராபி மற்றும் அவிசென்னா போன்ற செல்வாக்குமிக்க தத்துவஞானிகளிடையே ஒருபோதும் பிரபலமடையவில்லை.
சாதனைகள்
ஜெரோலாமோ கார்டானோ எனும் இத்தாலிய ஆய்வாளரின் கூற்று படி மத்திய காலத்தில் வாழ்ந்த பனிரெண்டு மிகப்பெரும் அறிஞர்களில் அல் – கிண்டியும் ஒருவராக கூறுகிறார் இப்னு அல் – நதீம் எனும் வரலாற்று ஆய்வாளரின் கூற்றுப்படி, அல்-கிண்டி குறைந்தது இருநூற்று அறுபது புத்தகங்களை எழுதியுள்ளார், இதில் வடிவியல் (முப்பத்திரண்டு புத்தகங்கள்), மருத்துவம் மற்றும் தத்துவம் (தலா இருபத்தி இரண்டு புத்தகங்கள்), தர்க்கம் (ஒன்பது புத்தகங்கள்) மற்றும் இயற்பியல் ( பன்னிரண்டு புத்தகங்கள்).
அவரது பெரும்பாலான புத்தகங்கள் பல நூற்றாண்டுகளாக இழந்திருந்தாலும், சில கிரெமோனாவின் ஜெரார்ட் எழுதிய லத்தீன் மொழிபெயர்ப்பு வடிவத்தில் தப்பிப்பிழைத்தன, மற்றவை அரபு கையெழுத்துப் பிரதிகளில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன மிக முக்கியமாக, அவரது இழந்த படைப்புகளில் இருபத்தி நான்கு படைப்புகள் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒரு துருக்கிய நூலகத்தில் கிடைத்துள்ளது
ஒளியியலில்…
பழங்காலத்திற்குப் பிறகு ஒளியியலில் துறை பற்றிய முதல் பெரிய எழுத்தாளர் அல்-கிண்டி ஆவார். டோலமிக்குப் பிறகு ரோஜர் பேகன் அவரை முதல் தரவரிசையில் ஒரு தலைவராக நியமிக்கிறார்.
அல்-கிண்டி “உலகில் உள்ள அனைத்தும் … ஒவ்வொரு திசையிலும் கதிர்களை வெளியிடுகிறது, இது உலகம் முழுவதையும் நிரப்புகிறது” என்ற கோட்பாட்டையும் முன்மொழிந்துள்ளார். இந்த ஒளியியல் கோட்பாடு பிற்கால அறிஞர்களான இப்னுல்-ஹெய்தாம், ராபர்ட் க்ரோசெட்டெஸ்டே மற்றும் ரோஜர் பேகன் மீதும் கூட தாக்கத்தை ஏற்படுத்தின.
அல்-கிண்டியின் முதன்மை ஒளியியல் கட்டுரை “டி ஆஸ்பெக்டிபஸ்” பின்னர் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. மேலும் இத்துடன் அல்ஹாசன், டோலமி மற்றும் யூக்லிட்டின் அரபு மொழிபெயர்ப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டது. ஐரோப்பாவில் ஒளியியல் துறையின் வளர்ச்சியில் இவரின் அரபு நூல்கள் முக்கிய பங்காற்றின.
மருத்துவத் துறையில்…
மருத்துவத் துறையில் அல்-கிண்டி முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி உள்ளார், இந்த துறையில் அவரது மிக முக்கியமான பங்களிப்பு அவர் எழுதிய “டீ – கிராடிபஸ் (De Gradibus)” எனும் புத்தகம் ஆகும், இதில் அவர் கணிதத்தை மருத்துவத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று கூறியுள்ளார், குறிப்பாக மருந்தியல் துறையில் மருந்தின் வலிமையைக் கணக்கிடுவதற்கான ஒரு கணித அளவை அவர் உருவாக்கியுள்ளார் .
மேலும் சந்திரனின் நாட்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பையும் அவர் உருவாக்கியுள்ளார் இதன் மூலம் நோயாளிக்கு நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்கும் மிக முக்கியமான நாட்களை ஒரு மருத்துவர் முன்கூட்டியே தீர்மானிக்க முடியும் . ப்ளினியோ பிரியோரெச்சியின் எனும் மருத்துவ வரலாற்று ஆய்வாளரின் கூற்றுப்படி, இதுவே மருத்துவ துறையில் நோயின் தீவிரத்தன்மை குறித்து அறிவதற்கான முதல் அளவீட்டு முறையாக கருதுகிறார்.
வேதியியலில்…
ஒரு மேம்பட்ட வேதியியலாளராக, அல்-கிண்டியும் ரசவாதத்தை எதிர்துள்ளார் எளிமையாக, அடிப்படை உலோகங்களை தங்கம் அல்லது வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களாக மாற்ற முடியும் என்ற கட்டுக்கதையை அவர் நிராகரித்தார்.
அல் – கிண்டி கிதாப் அல்-தாராஃபுக் ஃபை அல்-ஐத்ர் (வாசனை திரவியங்கள் மற்றும் வடிகட்டுதல்களின் வேதியியலின் புத்தகம்) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தில், வடிகட்டுதலுக்குத் தேவையான முறை மற்றும் எந்திரத்தை விவரித்துள்ளார். அதே புத்தகத்தில், ரோஜா எண்ணெய்களைப் பிரித்தெடுப்பதற்கான வடிகட்டுதல் செயல்முறையையும் அவர் விவரிக்கிறார், மேலும் 107 வகையான வாசனை திரவியங்களுக்கான தயாரிப்பு முறைகளையும் குறிப்புகளையும் வழங்கியுள்ளார்.
கணிதத்தில்…
எண்கணிதம், வடிவியல், இந்திய எண்கள், எண்களின் இணக்கம், கோடுகள் மற்றும் எண்களுடன் பெருக்கல், விகிதத்தையும் நேரத்தையும் அளவிடுதல், மற்றும் எண் நடைமுறைகள் உள்ளிட்ட பல முக்கியமான கணித பாடங்களை அல்-கிண்டி எழுதியுள்ளார். மத்திய கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் இந்திய எண்கணித முறை பரவுவதற்கு பெரிதும் பங்களித்து இந்திய எண்களின் பயன்பாடு (கெதாப் ஃபை இஸ்திமால் அல்-ஆதாத் அல்-இந்தி) என்ற நான்கு தொகுதிகளையும் அவர் எழுதியுள்ளார்.
ஒரு தத்துவஞானியாக அவர் கணிதத்தைப் பயன்படுத்திய வழிகளில் ஒன்று, உண்மையான முடிவிலி(Infinity – ∞)யை கணித மற்றும் தர்க்கரீதியாக தவறானது என்று நிரூபிப்பதன் மூலம் உலகின் நித்தியத்தை நிரூபிக்க முயற்சித்தது.
குறியாகவியலில்…( Cryptography & cryptanalysis)
அல்-கிண்டியின் புத்தகம் குறியாக்கவியலின் பிறப்புக்கு வழிவகுத்தது, இவர் குறியாகவியலில் இருந்த பழமையான சைபர் பயன்படுத்தும் முறையை உடைத்து புதிய முறைகளை தோற்றுவித்தார் குறிப்பாக அதிர்வெண் பகுப்பாய்வு முறை
அக்காலத்தில் எழுதப்படும் முக்கியமான கடிதங்களின் தகவல்களை பிறர் படிக்க இயலாவண்ணம் அந்த தகவல்களை கணித முறை மூலம் மறைப்பதற்கான அதிர்வெண் பகுப்பாய்வு (frequency analysis) எனும் முறையை கண்டு பிடித்தார்
(ரிசலா ஃபா இஸ்திக்ராஜ் அல்-குதுப் அல்-முஅம்ஹ்) என்ற தலைப்பில் அவரது குறியாக்கவியல் பற்றிய கட்டுரைகலை தொகுத்து புத்தகமாக வழங்கியுள்ளார்
“குறியாகவியலில் பயன்பாட்டிற்கு ஒரு சமூகம் மூன்று பிரிவுகளில் உயர் தர வளர்ச்சியை எட்டி இருக்க வேண்டும்,அது மொழியியல், புள்ளியியல் மற்றும் கணிதம் அல் – கிண்டி அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த மூன்று துறையும் வளர்ச்சி அடைத்திருந்தது அவர் இந்த அவர் இந்த மூன்று துறை மட்டுமின்றி மேலும் பலவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தார்” என்று டாக்டர். சைமன் சிங் 1999 ஆம் வருடம் தான் எழுதிய The Code Book எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்
இன்று நாம் பயன்படுத்தும் தகவல் தொழில் நுட்ப சாதனைகள் அனைத்திலும் encryption மற்றும் decryption எனும் தகவல் பாதுகாப்பு முறைகள் பயன்படுத்தபடுகின்றன அவற்றிற்கு அடித்தளம் இட்டவர் அல் – கிண்டி ஆவர்.
– முஹம்மது அனஸ் இப்னு ரபீக் அஹமது




































