நான் இந்தியாவின் தலைவர், முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல

இந்தியா சந்தித்த இருண்ட நாட்களில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரமும் சேர்ந்துள்ளது. இந்திய நாட்டின் தலைநகரம் டெல்லியின் மீது உலகத்தின் பார்வை திரும்பியிருந்த நாட்கள் அவை. அந்த நாட்களில் டெல்லியில் வாழும் முஸ்லிம்கள் மீது முழுமையான திட்டமிடப்பட்ட வன்முறை நிகழ்த்தப்பட்டு பல உயிர்கள், பல்லாயிரம் கோடி சொத்துக்கள் பறிபோயிருக்கிறது. 

இந்திய முஸ்லிம்கள் அல்லாஹ்வை பொறுப்பாளனாக முழுமையாக ஏற்றுக் கொண்டு பொறுமையாக கடக்க வேண்டிய நாட்கள் இவை. இப்போது அதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு வழி இல்லை. அல்லாஹ் பொறுமையாளர்களுக்கு வெற்றியைத் தர வாக்குறுதி அளித்திருக்கிறான்.

சுதந்திர இந்தியாவில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பெரும் பாரத்தோடு கடந்த நாட்கள் வரலாற்றில் உண்டு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை நாட்கள், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்பான நாட்கள், இப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதற்குப் பிறகான சமீபத்திய மாதங்கள்.

70 நாட்களுக்கும் மேலாக இந்தியாவின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் 20 நாட்களை கடந்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிகாரத்தில் இருப்போர் யாரும் இதுவரை இறங்கி வரவில்லை. இறங்கி வருவார்களா என்பதும் தெரியவில்லை.

இந்திய விடுதலைக்காக உயிர் பொருளை தியாகம் செய்ததில் முதல் வரிசையில் நின்ற முஸ்லிம் சமூகம், தங்களை இந்தியர்கள்தான் என்பதை நிரூபிக்க தெருவில் இறங்கி குரல் கொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை போலும். 

தங்களுக்கான இந்தியாவை உருவாக்க கொள்கை வகுத்து, செயல் திட்டம் போட்டு 96 ஆண்டுகள் தொடர் முயற்சி செய்தவர்கள் தான் இப்போது மத்திய ஆட்சியில் இருக்கிறார்கள்.

வரலாற்று இந்தியாவை மட்டுமல்ல! நவீன இந்தியாவையும் கட்டமைத்த தலைவர்களின் இன்றைய முஸ்லிம் தலைமுறைகளிடம் என்ன செயல் திட்டம் இருக்கிறது?

நவீன இந்தியாவில் முஸ்லிம்களின் முன்மாதிரிகள் யார் யார் என்பது இன்றைய முஸ்லிம் சமூகத்துக்குத் தெரியுமா? அந்த தலைவர்களிடம் இவர்கள் பாடம் பெற்றிருக்கிறார்களா? கேள்விகள் தான் நீளுகின்றன. 

நேரு நவீன இந்தியாவின் சிற்பி என்பதை அறிவோம். ஆனால், இந்த வரலாறு அவருக்கு மட்டும் சொந்தமல்ல. மௌலானா அபுல் கலாம் ஆசாத். நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் அவரது பங்களிப்பை இந்த தலைமுறை முஸ்லிம்கள் மட்டுமல்ல, கடந்த மூன்று தலைமுறை முஸ்லிம்களும் அறிந்திருக்கவில்லை. அந்த அறியாமையை இன்று ஆட்சிக் கட்டிலில் இருப்போர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள்.

1940ஆம் ஆண்டு மௌலானா ஆசாத் ஆற்றிய ஒரு உரையில் : “நான் இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன். இந்த உன்னதமான மாளிகைக்கு நான் மிகவும் இன்றியமையாதவன். நான் இல்லாமல் இந்த அற்புதமான அமைப்பு ஒருபோதும் முழுமையடையாது. இந்தியாவை உருவாக்கிய இன்றியமையாத உறுப்பாக நான் இருக்கிறேன். இந்த கூற்றை நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று தன்னை இந்தியச் சமூகத்துக்கு அறிமுகம் செய்கிறார்.

சிறையிலிருந்தவாறே இந்திய வரலாற்றை மட்டுமல்ல உலக வரலாற்றையும் மகள் இந்திராவுக்கு கடிதங்களாக எழுதிய ஜவஹர்லால் நேரு, தன் கடிதங்களில் மௌலானா ஆசாத் மீது தனக்கிருந்த நன்மதிப்பை இப்படி குறிப்பிடுகிறார், “மௌலானா ஒரு அசாதாரண, வசீகரமான மனிதர். நான் அவரை 21 வருடங்களுக்கும் மேலாக அறிவேன், அவரின் நினைவாற்றல் ஆச்சரியம் தரக்கூடியது. அவர் ஒரு தகவல் கலைக்களஞ்சியமாக விளங்குபவர்” என்றார். 

மௌலானா அபுல் கலாம் ஆசாதிடம் தொடர்ந்து ஆலோசனை கேட்பவராக நேரு இருந்தார் என்பதை வரலாற்றுப் பக்கங்கள் பதிவு செய்திருக்கிறது.

மகாத்மா காந்தியின் செயலாளர் மகாதேவ் தேசாய்: “மௌலானா ஆசாதைப் போல அவருக்குச் சமமான நுண்ணறிவுமிக்க ஆலோசகர். அவருக்குச் சமமாக காங்கிரஸில் வேறு யாரும் இல்லை” என்று எழுதியுள்ளார்.

மௌலானா ஆசாத் தவிர்க்க முடியாத, புறந்தள்ள முடியாத மிகச்சிறந்த ஆளுமையாக தன்னை வடிவமைத்துக் கொண்டார் என்பதை மறந்து விட வேண்டாம்.

குர் ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் அற்புதமான விளக்கவுரை எழுதியுள்ள மௌலானா ஆசாத், அறிவியல், கணிதம், தத்துவம் ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர். ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களைத் தொடங்கி இந்தியாவில் உலகத் தரமான கல்வி நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர் மௌலானா அபுல்கலாம் ஆசாத். அவர் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித் துறை அமைச்சர் மட்டுமல்ல; இந்தியாவே பெருமைகொள்ளும், அறிவியல், தொழிலக ஆய்வுக் கழகம் (சி.எஸ்.ஐ.ஆர்.) போன்ற பல்வேறு நவீனக் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கிய கல்விச் சிற்பியும் அவர்தான். இலவசக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தவர்; கோடிக் கணக்கான ஏழை மாணவர்களுக்குப் பல்கலைக்கழகக் கல்வியைச் சாத்தியப்படுத்தியது அந்தத் திட்டம்தான்.

அவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள்தான் இந்தியாவை நவீன இந்தியாவாக மாற்றியது. இவரை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய சமூகத்தை வளப்படுத்தும் எத்தனை தலைவர்கள், ஆளுமைகளை நாம் நமது சமூகத்தில் உருவாக்கி இருக்கிறோம்? 

மௌலானா ஆசாதைப் போல இன்னொருவர் ரஃபீ அஹ்மத் கித்வாய். இந்திய ஒருமைப்பாட்டின் உருவம் ரஃபி சாஹிப் என்று பலராலும் அழைக்கப்பட்ட கித்வாய்தான் சுதந்திர இந்தியாவின் முதல் தகவல்தொடர்புத் துறை அமைச்சர். இந்தியாவே உணவுப் பற்றாக்குறையில் இருந்த போது கித்வாயிடம் உணவு மற்றும் வேளாண் துறை ஒப்படைக்கப்பட்டது கித்வாய் மீது நேரு கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. 

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை கித்வாய் மிகச் சிறப்பாக நிறைவேற்றினார். அதனால்தான், வேளாண் துறையில் மகத்தான பங்களிப்பு செய்பவர்களைச் சிறப்பிப்பதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் கித்வாய் நினைவாக ஒரு விருதை ஏற்படுத்தியது. 

இவர்கள் இருவரும், தமிழ்நாட்டின் காயிதே மில்லத்தும் இந்திய முஸ்லிம் சமூகத்தின் சக வாழ்வு, ஒருமைப்பாடு ஆகியவற்றின் முன்னோடிகள். சகவாழ்வு, இந்திய சமூக ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீது இன்று தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 

இந்த தலைவர்களை முஸ்லிம் சமூகம் ஆழ்ந்து வாசிக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு இவர்கள் செய்துள்ள பங்களிப்புகள் பொதுச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952 இல் நடைபெறவிருந்தபோது, பிரதமர் ஜவஹர்லால் நேரு மௌலானா ஆசாத்திடம் உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் போட்டியிடச் சொன்னார். மௌலானா ஆர்வத்துடன் கேட்டார், “ஏன்?”.

ராம்பூர் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு பகுதி, நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நேரு நேர்மையாக பதிலளித்த போது மௌலானா அபுல் கலாம் ஆசாத் சொன்ன பதில் முஸ்லிம் சமூகம் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. 

மௌலானா அபுல் கலாம் ஆசாத் நேருவுக்கு பதில் சொன்னார் : “நான் இந்தியாவின் தலைவர் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல!” என்றார்.

இந்திய, தமிழக முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டங்களில் மிக முக்கியமானது முஸ்லிம்களிலிருந்து ஒட்டுமொத்த இந்திய சமூகம் சந்திக்கும் சிக்கல்களுக்கு வழிகாட்டும் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தில் கண்டெடுக்க வேண்டும்.