



ஐன்ஸ்டீன், நியூட்டன், பிளெமிங் …
இந்த பெயர்கள் எல்லாம், தமது சிறந்த கண்டுபிடிப்புக்களால் செல்வாக்குமிக்க விஞ்ஞானிகளாக உலகில் நன்கு அறியப்பட்டு வருகின்றன. ஆனால் இவர்களது அறிவுச் சிந்தனைகளுக்கெல்லாம் அடிப்படை ஆணிவேராக அல்லது உரமாக வாழ்ந்து மறைந்த அறிவியல் உலகில் முன்னோடிகளது பெயர்கள் பலவும் மறைக்கப்பட்டு அல்லது மறக்கடிக்கப்பட்டு உள்ளன.
நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னரே வடிகால் அமைத்திட்ட அந்த ஆரம்பகால விஞ்ஞானிகள் யார்???
ஆம். ஐரோப்பா, அதன் இருண்ட காலங்களில் இருந்தபோது, அறிவின் அற்புத உயரங்களை எட்டியவர்கள் பலரும் முஸ்லீம்கள் அறிஞர்கள் தான்.
அவற்றில் சிலர், நமது சிந்தனைகளுக்கு…
இப்னு சினா :
மேற்குலகில் அவிசென்னா (Avicenna) என்று அழைக்கப்படுகின்ற, பாரசீக பல்துறை அறிவுஜீவி, இவர் இஸ்லாமிய பொற்காலத்தின் இன்றியமையாத மருத்துவர்களில், வானியலாளர்களில், சிந்தனையாளர்களில் மற்றும் எழுத்தாளர்களில் மிக முக்கியமான ஒருவராக கருதப்படுகிறார். ஆரம்பகால நவீன மருத்துவத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற அவர் எழுதிய 450 படைப்புகளில், தத்துவம் சார்ந்த 150 படைப்புகள் மற்றும் மருத்துவம் சார்ந்த 40 படைப்புக்களை உள்ளடங்கிய சுமார் 240 படைப்புகள் மட்டுமே தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஹசன் இப்னுல் ஹெய்தம்
அல்-ஹேசன் என்று அழைக்கப்படும் இவர் ஒரு அரபு கணிதவியலாளர், வானியலாளர் மற்றும் இஸ்லாமிய பொற்காலத்தின் இயற்பியலாளர் ஆவார். குறிப்பாக ஒளியியல் (optics) மற்றும் காட்சி உணர்வின் (visual perception) கொள்கை, விளக்கங்களில் போற்றத்தக்க பங்களிப்புகளால், சில சமயங்களில் “நவீன ஒளியியலின் தந்தை” என்றும் அழைக்கப்படுகின்றார். 1011 – 1021 காலத்தில் எழுதப்பட்ட இவரது கிதாப் அல்-மனாளிர் (كتاب المناظر, “ஒளியியல் புத்தகம்”) மிகவும் செல்வாக்கு மிக்க படைப்பாகும். இது இலத்தீன் மொழியில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் தத்துவம், இறையியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்டவைகள் பற்றியும் எழுதியுள்ள இவர் ஒரு பல்துறை வித்தகர் ஆவார்.
ஒரு பொருளின் மீது ஒளிபட்டு சிதறி, நமது கண்களில் விழும் போது பார்வையை ஏற்படுத்துகின்றது என்பதனை முதலில் விளக்கியவர் இப்னுல் ஹெய்தாம் அவர்கள். நவீன விஞ்ஞானிகளுக்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே, உறுதிப்படுத்தக்கூடிய நடைமுறைகள் அல்லது கணித சான்றுகளின் அடிப்படையில் ஒரு கருதுகோள்(hypothesis) நிரூபிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தில் உறுதியாக ஆதரவு வைத்திருந்தார்.
முஹம்மத் இப்னு மூஸா அல்-ஹவாரிஸ்மி
அல்காரிதமி என லத்தீனில் அறியப்பட்ட பாரசீக அறிஞர் முஹம்மத் இப்னு மூஸா அல் -ஹவாரிஸ்மி அவர்கள் அப்பாஸிய பேரரசின் கலீபா அல்-மாமூனின் பேராதவுகளின் விளைவாக கணிதம், வானியல் மற்றும் புவியியல் ஆகியவற்றில் பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார். பாக்தாத்தில் அறிவுப்பணியாற்றி வந்த பைத்துல் ஹிக்மா (House of Wisdom) கல்வியகத்தின் வானியல் துறையிலும், நூலகத்தின் தலைவராகவும் கி.பி 820 களில் பணியாற்றி வந்துள்ளார்.
அல்-ஹவாரிஸ்மி பிரபல இயற்கணிதத்தைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை (நிறைவு மற்றும் சமநிலை மூலம் கணக்கீடு குறித்த பூரண குறிப்பு, சுமார் 813-833 CE) நேரியல் மற்றும் இருபடி சமன்பாடுகளின் முதல் முறையான தீர்வை வழங்கியது. இயற்கணிதத்தில் அவரது முக்கிய சாதனைகளில் ஒன்று, சதுரத்தை நிறைவு செய்வதன் மூலம் இருபடி சமன்பாடுகளை எவ்வாறு தீர்ப்பது என்பதற்கான வடிவியல் நியாயங்களை உள்ளாக்கிய அவரது நிரூபணமாகும்,
இயற்கணிதத்தை ஒரு சுயாதீனமான ஒழுக்கமாகக் கருதியதின் அடிப்படையில் உருவான “குறைப்பு” மற்றும் “சமநிலைப்படுத்துதல்” சமன்பாடு (கழித்த சொற்களை ஒரு சமன்பாட்டின் மறுபக்கத்திற்கு மாற்றுவது, அதாவது எதிர் பக்கங்களில் உள்ள ஒத்த சொற்களை ரத்து செய்தல்) அவரை இயற்கணிதத்தின் தந்தை அல்லது நிறுவனர் என்று விவரிக்கப்படச் செய்தது.
இயற்கணிதம் (அல்ஜீப்ரா) என்ற சொல் அவரது புத்தகத்தின் தலைப்பிலிருந்து வந்ததாகும் (குறிப்பாக அல்-ஜப்ர் என்ற வார்த்தையின் அர்த்தம் “நிறைவு” அல்லது “மீண்டும் இணைதல்”). அவரது பெயரே அல்கோரிஸம் மற்றும் அல்காரிதம் என்ற சொற்களுக்கு வழிவகுத்தது. மேலும் அவரது பெயரே ஸ்பானிஷ் மெழியில் அறியப்படும் ‘குவாரிஸ்மோ’ மற்றும் போர்த்துகீசிய மொழியில் அறியப்படுகின்ற ‘அல்காரிஸ்மோ’ ஆகிய இலக்கங்களை (digit) குறிக்கின்ற சொற்களுக்கு தோற்றமாகவும் அமைந்துள்ளது.
இது போன்ற நான்கு பிரபலமான இஸ்லாமிய அறிவியல் விஞ்ஞானிகளது பட்டியல் என்பது
வானியலாளர்கள்,
உயிரியலாளர்கள், நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் உளவியலாளர்கள்,
வேதியியலாளர்கள் மற்றும் இரசாயவியலாளர்கள்,
பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள்,
புவியியலாளர்கள் மற்றும் பூமி விஞ்ஞானிகள்,
கணிதவியலாளர்கள்,
தத்துவவாதிகள்,
மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள்
என பல்வேறு துறைகளிலும் பரவி விரிந்ததாக அமைந்துள்ளது என்பது நம்மிடமிருந்தும் கூட வெளிப்படுத்தப்படாமல், நவீன கால அறிவியல் உலகில் மறக்கடிக்கப்பட்டுள்ளது என்பதே வேதனை. . .



































