போர் எனும் அரசியல் 

ஒரு போரின் போக்கு பல்வேறுவிதமான மரணங்கள், சிறுவர்கள், பெண்கள் மீதான அத்துமீறிய வன்முறைகள், வாழும் நாட்டை விட்டு அடைக்கலம் தேடும் அகதி வாழ்க்கை என ரணமான பல நிகழ்வுகளை மனித மனங்களில் ஆழப்பதித்துவிட்டுச் செல்கிறது. இந்த மனக்காயங்கள் ஆறுவதற்கு ஒரு சமூகம் பல நூற்றாண்டுகளைக் கடக்க வேண்டும்.

போர் சகஜமாக நடைபெறும் நாடுகளில் வாழும் பிள்ளைகள் வாழ்வில் “சகவாழ்வு, சமாதானம்” என்பது கானல் நீராகவே இருக்கிறது. கல்விக்கூடங்கள் தகர்த்தெறியப்பட்டு துப்பாக்கிகள் மட்டும் பேசுகிற ஓர் உலகில் அவர்கள் வாழ்கிறார்கள். 

டியூன்ஜா என்ற 14 வயது பெண் கூறுவது போல் “பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டு விட்டார்கள்… இனிமே பறவை பாடுற சத்தத்தையும் நீங்க கேட்க முடியாது, அம்மா அப்பா, அண்ணன் தங்கை என யாரோ ஒரு உறவை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் சத்தங்களே காதுகளை ஆகரமிக்கப்போகிறது.”

சிறுவர்கள், பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறை இராணுவ யுக்தியில் ஒன்றாக ஆகியிருக்கிறது. அவர்களின் இலக்கு எதிர்காலத்தின் மீது அச்சத்தை விதைப்பது, குடும்ப பந்தங்களை சீர்குலைப்பதாகும்.

பஞ்சமும் வியாதியுமே போரின் பலாபலன்கள். ஆப்பிரிக்க உள்நாட்டு சண்டையைப் பற்றிய ஓர் ஆய்வின்படி, பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதத்தினர் வியாதியால் இறந்தனர், 78 சதவீதத்தினர் பசியால் மடிந்தனர். ஆனால் சண்டைக்கு நேரடியாக பலியானவர்கள் வெறும் 2 சதவீதத்தினரே.

மக்கள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு ஓடும்படி பலவந்தப்படுத்தப்படுகிறார்கள். இப்போது உலகெங்கிலும் உள்ள நாடு கடந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் ஐந்து கோடி பேர் இருக்கிறார்கள்​ அவர்களில் பாதிப்பேர் சின்னஞ்சிறுசுகள்

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பின் அறிக்கைப்படி, கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே, போர்கள் மூலம் 20 லட்சம் பிள்ளைகளைக் கொல்லப்பட்டு, 40 லட்சத்திலிருந்து 50 லட்சம் பிள்ளைகளை ஊனமாக்கப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. போர் 10 லட்சத்துக்கும் அதிகமான பிள்ளைகளை அனாதைகளாகவும், 1.2 கோடி பிள்ளைகளை வீடற்றவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ ஒரு கோடிப் பிள்ளைகள் மன அதிர்ச்சி அடைந்திருப்பதற்கு போர்தான் காரணம்.

இன்று நடக்கும் போர்களுக்கும் அன்று நடந்த போர்களுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன! குறிப்பாக இன்று இராணுவ வீரர்களுக்கு மாறாக சாதாரண குடிமக்களே போரினால் பலியாகின்றனர். உதாரணத்திற்கு ஐ.நா. ரேடியோ ஒலிபரப்பிய நிகழ்ச்சியான “பர்ஸ்பெக்டிவ்”-ன் அறிக்கை., முதல் உலக யுத்தத்தின்போது வெறும் 5 சதவீத பொதுமக்களே தங்கள் உயிரை பறிகொடுத்தனர். ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின்போது உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 48 சதவீதத்தை எட்டியது. ஐ.நா. ரேடியோ தொடர்ந்து சொல்கிறது, இன்றோ “போரால் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் 90 சதவீதத்தினர் பொதுமக்கள்​. இவர்களில் பெரும்பாலோர் பெண்கள், பிள்ளைகள், வயதானவர்களே.”

உலகில் நடந்த அத்தனை போர்களும் வணிகத்திற்க்காகவும், நில ஆக்கிரமிப்புக்காவும், அடிமைகளைப் பெறுவதற்குக்காவும், தன் ஆளுமையை பரப்புவதற்காவும்தான் நடந்து இருக்கிறது. போரினால் அமைதியை நிலைநாட்ட முடியும் என்பது வெறும் அரசியல் நாடகம் மட்டுமே.

போர் என்பது “வேறு வழிமுறைகளில் நடக்கும் தொடர்ச்சியான அரசியல் ஊடுதொடர்பு”

கார்ல் வொன் குளோசவிட்ஸ்,  நூல் On War 

போர் என்பது ஒரு பண்பாட்டுக் கூறு. இது ஒரு குறிப்பிட்ட வகை அமைப்பினாலோ, சமூகத்தினாலோ மட்டும் நடத்தப்படுவது அல்ல. 

போர் என்பது, ஒரு உலகளாவிய தோற்றப்பாடு, அதை நடத்தும் சமூகத்தைப் பொறுத்து, அதன் வடிவமும், வீச்செல்லையும் வரையறுக்கப் படுகின்றன.

ஜான் கீகன்,  நூல் : போர்களின் வரலாறு (History Of Warfare)

…..